ஒவ்வொரு ஆண்டும் பனிக்காலத்தில் தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டின் கோரத்தை எதிர்கொள்கிறது. அது இந்த ஆண்டில் மேலும் கடுமையாக உள்ளது.
காற்று மாசுபாட்டை தவிர்க்கும் விதமாக, டெல்லியில் டிசம்பா 18 முதல் பழைய கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று முதல் மாசுகட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த BS-VI வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. BS-II, BS-III மற்றும் BS-IV ரக வாகனங்கள் தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.மின்சாரம் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி பணத்தை வசூலித்துக் கொண்டு அனுப்புவதால் அதிக நேரங்கள் பயனற்ற முறையில் என்ஜின்கள் இயங்கி கார்பன் உணவை அதிகப்படுத்துகின்றன. எனவே தற்காலிகமாக டெல்லியின் நுழைவாயில்களில் உள்ள சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்கவும் மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை (ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல்), கட்டுமானத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை தரும் சீனா
சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங், தனது ட்விட்டரில் பெய்ஜிங் மற்றும் டெல்லியின் காற்றுத் தர நிலைகளைக் காட்டும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் காற்றின் தரம் 68, அதாவது “திருப்திகரமானது” என்ற பிரிவில் இருக்கிறது. மறுபுறம் டெல்லியில் காற்றின் தரம் 447, அதாவது கடுமையானது என்று இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளைச் சீனா எடுத்ததாகவும் இதன் காரணமாகவே காற்றின் தரம் மேம்பட்டு இருப்பதாகவும், இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாகவும் யு ஜிங் தெரிவித்தார்.
படிக்க:
♦ மூச்சுத் திணறுகிறது டெல்லி; முதற்காரணம் முதலாளித்துவம்!
♦ டெல்லி : பனியும் குளிரும் போர்த்திய உடல்கள் !
தீர்வே காண முடியாத இடியாப்ப சிக்கல்களைப் போலவே அரசாங்கங்களும் நீதிமன்றங்களும் போலி நாடகம் ஆடுகின்றன. விவசாயிகள் வைக்கோல்களை எரிப்பதால் தான் பிரச்சனை என்றார்கள். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது தான் சிக்கல் என்றார்கள்.
இப்பொழுதுதான் டெல்லிக்குள்ளேயே பிரச்சனை என்பதாக சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்திருக்கிறார்கள். இதுவும் சிக்கலை முழுமையாக தீர்க்க உதவாது என்று கடந்த ஆண்டுகளிலேயே தோற்றவை தான்.
இயல்பாக சுவாசிப்பது எப்படி?
மேட்டுக்குடிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் பயன்படுத்தும் சொகுசு கார்களை முழுமையாக தடுத்து விட்டு, குழுவாக பயணிக்கும் பேருந்து, ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சைக்கிள்களை பயன்படுத்த ஊக்குவிக்கவும் வேண்டும்.
தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு அருகிலேயே குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலேயே படிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் காலை மாலை இரு வேளைகளில் லட்சக்கணக்கானோர் பல கிலோமீட்டர் அலைவதை தடுக்கலாம். இதன் மூலம் நேரத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் தொலைப்பதும் குறைக்கப்படும்.
கட்டுப்படுமா கார்ப்பரேட்?
இந்த நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் தொழில் நிறுவனங்களையோ, கல்வி நிறுவனங்களையோ அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும். மாசு ஏற்படுத்தும் ஆலைகளை கடலோர பகுதிகளுக்கு விரட்ட வேண்டும்.
இதை எல்லாம் செய்வதற்கு ஒன்றிய அரசனது, டெல்லியை ஆளும் அரசாங்கமானது, கார்ப்பரேட் விசுவாசிகளாக இல்லாமல், மக்கள் நலனுக்காக சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும்.
அதிகார வர்க்கத்தினரும் கூட தாம் மக்களின் வரிப்பணத்தில் மாத சம்பளம் வாங்குகிறோம் என்பதை உணர்ந்தவர்களாகவும், அத்தகைய சம்பளத்திற்கு நேர்மையாக வேலை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். நீதிமான்கள் உண்மையிலேயே உழைக்கும் மக்களின் நலனிலிருந்து சிந்தித்து தீர்ப்பளிப்பவர்களாக மாற வேண்டும். அல்லது, மாற்றப்பட வேண்டும்.
கார்ப்பரேட்டுகளை வீழ்த்தாமல் விடிவு உண்டா?
துரதிஷ்டவசமாக டெல்லியை ஆள்பவர்களோ இந்திய ஒன்றியத்தை ஆள்பவர்களோ மக்களின் நலனுக்கானவர்களாக இல்லாமல் கார்ப்பரேட் அடியார்களாகவே உள்ளனர். எனவே கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்கு ஊறு விளைவிக்கும் எத்தகைய நடவடிக்கைகளையும் மோடி அமித்ஷா தலைமையிலான கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகள் எடுக்க மாட்டார்கள்.
எனவே மூச்சுத் திணறல் இருந்து தலைநகர் தப்பிக்க வேண்டும் என்றால், முதலில் இத்தகைய மக்கள் விரோத அரசாங்கங்களை வீழ்த்தி ஆக வேண்டும். மக்கள் விரோத அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் இருந்து விரட்டி அடித்தாக வேண்டும். இதற்கு பாதிக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடியாக வேண்டும்.
- இளமாறன்






