இருமல் மருந்து விஷமானது 14 குழந்தைகள் பலி! மருந்து நிறுவன முதலாளியை கொலை வழக்கில் கைது செய்!

த்திய பிரதேசத்தில் சிந்துபாராவின் பட்டூய் பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது சிறுமி யோகிதா சிறுநீரக செயலிழப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் நாக்பூரில் இறந்தார். கடந்த மாதத்தில் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த 11 வது குழந்தை இதுவாகும். அதன் பின்பு மேலும் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் முதல் தகவல் அறிக்கையில் அரசு மருத்துவமனை மருத்துவர் பிரவீன் சோனி மற்றும் ஸ்ரீசன் என்ற இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

எஃப்.ஐ.ஆர் படி கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் தொந்தரவினால் பாராசியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பலருக்கும் மருத்துவர் சோனி இருமல் மருந்து உள்ளிட்ட மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். சில நாட்கள் கழித்து குழந்தைகளுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை முகவீக்கம் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. ஆய்வில் இருமல் மருந்தினால் அவர்களுக்கு சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்துள்ளது என பிபிசி தமிழ் செய்தி கூறுகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீசன் பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் ஆபத்தான டை-எத்தலின் கிளைக்கால் இருந்தது தெரியவந்தது. இந்த மருந்து தான் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என எஃப் ஐ ஆர் மேலும் கூறுகிறது

மருத்துவரை மட்டும் குற்றவாளியாக்குவது நியாயமா?

ஸ்ரீசன் ஃபார்மா சூட்டிக்கல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ளது. இந்நிறுவனம் தான் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தயாரித்துள்ளது. இம்மருந்தை 11 குழந்தைகள் இறந்தபின்பு  மத்திய பிரதேச அரசு தடை செய்துள்ளது அடுத்த தமிழ்நாடு குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் மருந்தை பரிந்துரைக்கக் கூடாது என தடைவித்துள்ளது மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இருமல் சிரப் மட்டுமல்லாமல் அந்நிறுவனத்தின் பிற தயாரிப்புகளையும் தடை செய்துள்ளார். விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தி அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு காம்பியா நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்புகளைக் குடித்ததால் 70 குழந்தைகள் உயிரிழந்தனர். பல நாடுகளில் இந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன. இந்தியாவிலும் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்தை பரிந்துரைக்க கூடாது என டிசம்பர் 18, 2023 அன்று சுகாதார சேவைகள் இயக்குனரகம்(DGHS) அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குளோர்பெனிரைமன் IP 2 mg plus, ஃபீனைல்ஃப்ரைன் HCL 5mg  கொடுக்கக் கூடாது என்றும் இந்த எச்சரிக்கை மருந்து லேபிளில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையிலும் சிந்த்பாராவில் மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படி ஆபத்து நிறைந்திருக்கும் சூழலில் இந்த அந்த மருந்தை முன்னரே தடை செய்திருக்க வேண்டும்.

படிக்க: மருந்து நிறுவனங்களிடம் நிதிப் பெற்ற பாஜக, மக்களே உஷார்!

தடைசெய்யப்படாததன் விளைவு ஏதுமரியாத அப்பாவி குழந்தைகள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதற்கு ஒன்றிய சுகாதாரத்துறை முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்நிறுவனத்தின் மேலாளர்கள் மீது வழக்கு பதிந்தால் மட்டும் போதுமா? உண்மையான குற்றவாளிகள் என்றால் அது ஸ்ரீசன் ஃபார்மா சூட்டிக்கல்ஸ் முதலாளி தான். ஆனால் இது குறித்து எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை. பல ஊடகங்கள் நிறுவனத்தின் பெயரை கூட உச்சரிக்காமல் தனது  முதலாளித்துவ விசுவாசத்தை காட்டுகின்றன.

இந்தியாவில் மருத்துவத்துறை பல்லாயிரம் கோடி லாபம்  கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது. இந்தியாவானது உலகில் “ஜெனெரிக் மருந்துகளின் தலைநகரம்” என அழைக்கப்படுகிறது. முக்கிய மருந்து நிறுவனங்களான (Pharma): Sun Pharma, Dr. Reddy’s, Cipla, Lupin, Zydus லாப விகிதம் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் மருத்துவ தொழிலின் மொத்த சந்தை மதிப்பு 15 லட்சம் கோடியிலிருந்து 17 லட்சம் கோடியாக உள்ளது. இதன் வளர்ச்சி வருடத்திற்கு 15லிருந்து 18 சதவீதம் வரை உள்ளது.  இந்திய மருத்துவத் துறையின் மொத்த நிகர லாபம் ≈ ₹1.8–2 லட்சம் கோடி.  இது இந்தியாவின் GDP-இன் சுமார் 5% அளவில் பங்களிக்கிறது.

படிக்க: மருந்து மாபியாக்களின் கட்டுப்பாட்டில் உலக நாடுகள்!

இந்தளவுக்கு லாபம் உள்ள தொழிலாக தான் மருத்துவதுறை  உள்ளது. மக்களிடம் உள்ள அறியாமை பயம் ஆகியவற்றை பயன்படுத்தியே இந்ததுறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததற்கான காரணம் எனலாம். காசு உள்ளவனுக்கே மருத்துவம் என்ற நிலைக்கு இந்தியா பயணித்துக் கொண்டிருக்கையில் தான் இப்படியான சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இந்த கொலைகார மருந்து நிறுவனங்களினால்  போக வாய்ப்புள்ளது.

14 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமான சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் முதலாளியை கொலைவழக்கில் கைது செய்ய வேண்டும். அதன் சொத்துக்களை கையகப்படுத்தி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அந்த மருந்தை விற்பனைக்கு அங்கீகரித்த மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here