“ஆத்தா வையும்” அண்ணாமலையின்! அழுகுணி கண்ணீர் அரசியல்.!
‘கழகங்கள் இல்லாத தமிழகம் களங்கம் இல்லாத தமிழகம்’ என்றெல்லாம் வீர வசனம் பேசிய திருவாளர் அண்ணாமலை அதிமுகவில் இருந்து வெளியேறிய திடீர் பணக்காரராக அரசியல் ரவுடிகளில் ஒருவரான திருவாளர் நயினார் நாகேந்திரனை பற்றி முதலில் விமர்சனம் செய்துவிட்டு பிறகு சமரசமானார்.

“சந்தைக்கு போகணும், ஆத்தா வையும் காசு கொடு! என்று 16 வயதினிலே படத்தில் சப்பானி அழத் துவங்கியது போல, “எங்க அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுகிறேன்” என்று அழத் துவங்கி விட்டார் அண்ணாமலை.

தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவராகவும், கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராகவும் தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு வலம் வந்துக் கொண்டிருந்த திருவாளர் அண்ணாமலை தனது பதவிக்காலத்தில் பேசாத பேச்சுகள் கிடையாது.

ஐபிஎஸ் பட்டம் பெற்ற அவர் தனது காவல்துறை பதவியை தூக்கி எறிந்து விட்டு அரசியலுக்கு வந்ததாக பெருமை பீற்றிக் கொண்டிருந்தார். அரசியலில் ஒரு ரெக்ரூட்டான அவர் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருந்த கட்சிகள் பற்றியும், கட்சி தலைவர்கள் பற்றியும் வாயில் வந்ததை எல்லாம் பேசி ஆர்எஸ்எஸ் பாஜக அரைவேக்காடுகளிடம் புகழ்பெற்று திகழ்ந்து கொண்டிருந்தார்.

கொங்கு மண்டலத்தில் உள்ள கவுண்டர்கள் ஆதிக்கத்தின் கீழ் தமிழகத்தின் அரசியலை கொண்டு வர முயற்சிக்கின்ற தென்னிந்திய முதலாளிகள் கூட்டமைப்பில் உள்ள கவுண்டர் சாதியினர் அண்ணாமலையை முன்னிறுத்தி தமிழக அரசியலை கட்டமைக்க முயற்சி செய்தார்கள்.

அவரது பிரச்சாரங்களின் பலனால் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை என்ற போதிலும் இருக்கின்ற செல்வாக்கையும் இழக்கின்ற நிலையை பாஜக வந்தடைந்தது என்ற நிலைமையில் அவரை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கினார்கள். தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை இறக்கப்பட்ட நாள் முதலே, அவர் ஒரு வகையான அதிருப்தியுடன் செயல்பட்டு வந்தார்.

முதலில் பாஜக கூட்டணி ஆட்சி என்று அதிமுகவை வம்பிழுத்த அண்ணாமலை பின்னர் தனது பேச்சை மாற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் பாஜக தலைமையினால் உருவாக்கப்பட்டது.

அதுபோலவே அதிமுகவின் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஒரு தற்குறி என்று விமர்சனம் செய்த அண்ணாமலை பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று அமித்ஷா முன்னிலையில் கூற வேண்டிய நிலைக்கு ஆளானார்.

‘கழகங்கள் இல்லாத தமிழகம் களங்கம் இல்லாத தமிழகம்’ என்றெல்லாம் வீர வசனம் பேசிய திருவாளர் அண்ணாமலை அதிமுகவில் இருந்து வெளியேறிய திடீர் பணக்காரராக அரசியல் ரவுடிகளில் ஒருவரான திருவாளர் நயினார் நாகேந்திரனை பற்றி முதலில் விமர்சனம் செய்துவிட்டு பிறகு சமரசமானார். இதன்பின் நயினார் நாகேந்திரனுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வந்தது.

நயினார் நாகேந்திரன் தமிழகத்தின் பாஜக தலைவராக மாறிய பிறகு மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு கொண்டு வரப்பட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள், கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வந்தனர். அதேபோல் வார் ரூம் என்ற பெயரில் அண்ணாமலை செய்த சம்பவங்களை பட்டியலிட்டு அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் சமர்ப்பித்தார். இதுவும் அண்ணாமலைக்கு எதிராக திரும்பியது என்று செய்திகள் வெளியாகின.

மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை தூக்கப்பட்ட பிறகு மத்திய அளவில் ஏதோ பதவி தரப் போவதாகவும், அதனால் தான் அவரை மாநில பொறுப்பில் இருந்து விலக்கியதாகவும் ஆர்எஸ்எஸ் பாஜக வட்டாரங்கள் பொய் செய்திகளை சோசியல் இன்ஜினியரிங் மூலம் பரப்பினர்.

படிக்க:

 தமிழகத்தின் கல்வி நிலைமை பற்றி ஆர்எஸ்எஸ் அண்ணாமலையின் பித்தலாட்டம்!

 தெரிந்தே புளுகும் RSS, BJP அண்ணாமலை பின்னால் ஓடாதே!

குறிப்பாக கந்தன்மலை காமெடி ஹீரோ திருவாளர் எச்.ராஜா, “பதவியைப் பற்றி கவலைப்படாதவர் அண்ணாமலை” என்று உசுப்பேற்றினார். உண்மையில். பாஜகவின் தலைவர்களில் ஒருவராக இருந்த கே.டி.ராகவனை பாலியல் ஜல்சா கேஸ் மூலம் பதவி நீக்கம் செய்ததற்கு பொருத்தமான நேரத்தில் பதிலடி கொடுப்பதற்கு காத்திருந்த பார்ப்பன கும்பலில் ஒருவரான எச். ராஜா தருணம் பார்த்து நக்கலடித்தது தமிழக அரசியலில் நாறியது.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு அந்தக் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. என்று சொல்லப்படுகிறது. மாநிலத் தலைவர் தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் கர்நாடகத்தின் தேர்தல் பொறுப்பாளர் என்றெல்லாம் பொறுப்புகளை வகித்த ஒருவருக்கு ஆறு தொகுதிகளின் பொறுப்பு என்று மட்டையடியாக கீழே இறக்கியது அவரது அரசியல் பின்னடைவுக்கு வழிவகுத்தது.

அதேபோல் தமிழக பாஜக சார்பாக அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிலும் அண்ணாமலை இடம்பெறவில்லை. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பெயர் இடம்பெற்ற போதும், அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவையெல்லாம் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுக்குள் நிலவுகின்ற பார்ப்பன மற்றும் பிற மேல் சாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

‘ நாம் அனைவரும் இந்துக்கள், இந்து சாம்ராஜ்யத்தை அமைப்போம்’ என்றெல்லாம் ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங் பரிவார கும்பல் முன் வைத்தாலும், கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பார்ப்பனக் கும்பலின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதில் முதுகெலும்பற்ற கருப்பு பார்ப்பனர்கள் நிரம்பி வழிந்து உள்ள கட்சி தான் பாஜக என்பதை அண்ணாமலையின் அரசியல் பின்னடைவு பளிச்சென அறிவிக்கின்றது.

இதனை எல்லாம் தனது ரசவாத கண்ணீர் அரசியல் மூலம் மூடி மறைக்க நினைக்கின்ற திருவாளர் அண்ணாமலையின் கதை 16 வயதினிலே சப்பானியின், “ஆத்தா வையும்” என்று அழுகின்ற காட்சியை நினைவுபடுத்துவது போலவே உள்ளது.

மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here