வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையிட மேலாதிக்க போர் வெறியுடன் நள்ளிரவில் வெனிசுலா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!
அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் கைது, நாடு கடத்தல்!
கண்டன செய்தி!
தென் அமெரிக்கா கண்டத்து நாடுகளின் மீதான அமெரிக்க மேல்நிலை வல்லரசு தொடுத்து வரும் அரசியல், பொருளாதாரத் தாக்குதல்கள் கியூபாவிற்கு அடுத்து சின்னஞ்சிறிய நாடான வெனிசுலாவின் மீது நடத்தியுள்ளது.
அமெரிக்க மேல்நிலை வல்லரசை எதிர்த்து போராடிய ஹியூகோ சாவேஸ் என்ற தேசபக்த அதிபரின் ஆட்சியின் கீழ் வெனிசூலாவின் எண்ணெய் வளங்கள் அனைத்தையும் தேச உடமையாக்கியது, அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு மிகப்பெரும் எரிச்சலை உண்டாக்கி இருந்தது.
வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை, அவர்கள் அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்வது என்பது மட்டுமல்ல. அதுவரை வெனிசூலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து வந்த அமெரிக்காவின் மிகப்பெரும் பன்னாட்டு எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனங்களான எக்ஸான், மொபில் மற்றும் சோனோகோ பிலிப்ஸ் போன்ற நிறுவனங்களில் சொத்துக்களையும் எந்தவிதமான நிபந்தனையுமின்றி பறிமுதல் செய்தது மேலும் ஆத்திரத்தை தூண்டி இருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவிற்குள் நுழைந்து வெளியேறும் தடை செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களைத் தடுப்பதாக டிசம்பர் மாதம் அறிவித்தார். தனது ட்ரூத் சோஷியலில், வெனிசுலாவில் நடக்கும் மதுரோ ஆட்சியை “ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு” என்று அறிவித்தார். அந்த ஆட்சியில் சொத்துக்கள் திருட்டு, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் போன்றவை அதிகரித்திருப்பதாக பொய்யான செய்திகளை கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வந்தார். மதுரோவின் அரசாங்கம் பற்றி எவ்வித அடிப்படை ஆதாரங்களையும் முன்வைக்காமல், “கார்டெல் ஆஃப் தி சன்ஸ்” குற்றவியல் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக வாஷிங்டன் குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்காவின் புவிசார் அரசியலின் அக்கம் பக்கமாகவே தென் அமெரிக்கா கண்டத்தில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு எதிர்ப்பு என்ற பெயரில் உருவான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கங்கள் அல்லது சொல்லிக் கொள்ளப்படும் இடதுசாரி அரசாங்கங்கள் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாது என்ற அரசியல் ரீதியான திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது டிரம்ப் அரசாங்கம்.
இதற்காக USS Gerald R. Ford விமானம் தாங்கிக் கப்பலை தயார் செய்து அதில் ஏவுகணைகள் மற்றும் வெடி மருந்துகள் அடங்கிய பல்வேறு போர் ஆயுதங்களை ஏற்றி வைத்துக் கொண்டு தற்போது அந்த பிராந்தியத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. இதன் மூலம் வெனிசுலாவில் அதிபரான மதுரோ ஆட்சிக்கு நிர்பந்தம் கொடுப்பது மற்றும் அவரை ஆட்சியில் இருந்து தூக்கியெறிந்து விட்டு அமெரிக்கக் கைக்கூலி ஒருவரை அதிபராகக் கொண்டு வருவது என்ற திட்டத்துடன் 02/01/2026 காலை வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் குண்டு வீசி தாக்குதலை தொடங்கின. ராணுவ தளங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
படிக்க:
♦ வெனிசுலா அதிபர் மதுரோ கடத்தல்! | புதிய ஜனநாயகம்
♦ வெனிசுலா: அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் தென்அமெரிக்க கண்டத்தின் நட்சத்திரம்!
இதுவரை பல நாடுகளில் அமைதியை நிலைநாட்டினேன் என்று பெருமை பீற்றிக் கொண்ட ட்ரம்ப், தற்போது வெனிசுலா மீது நேரடி தாக்குதலை நடத்தியுள்ளதுடன் “வெற்றிகரமான தாக்குதல் நடத்தி அதிபரை வெளியேற்றிவிட்டோம். வெனிசுலா நாட்டை நாங்களே ஆளப்போகிறோம். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலா சென்று, பில்லியன் டாலர்களை செலவழித்து, சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பைச் சரிசெய்யும். இதன் மூலம் அமெரிக்காவுக்கான வருவாய் கிடைக்கும். அமெரிக்கக் கோரிக்கைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் வரை, அனைத்துப் படைகளும் அங்கேயே இருக்கும். இனி அங்கே உள்ள எண்ணெயை வர்த்தகம் செய்யும் வரை, அதை பயன்படுத்தும் வரை சில முதல் பல காலங்களுக்கு நாங்கள் வெனிசுலா நாட்டை ஆளப்போகிறோம்.” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்து உள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவை கைது செய்த நிலையில் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் சவுதியை விட அதிக எண்ணெய் வளம் கொண்ட உலகின் மிகப்பெரிய எண்ணெய் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசம் கொண்டு வந்துள்ளது.
மேலாதிக்க வெறிகொண்டு அலையும் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல், அவர்கள் சொல்லிக்கொள்ளும் ஐ.நா விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி சர்வதேச அமைதியை குலைக்கும் செயல் ஆகும்.
உலகை சூறையாடுவதற்கு தனக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்று கொக்கரித்துக் கொண்டுள்ள அமெரிக்க மேல்நிலை வல்லரசின் பாசிச தாக்குதல்களையும், வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்கா கண்டத்து மக்கள் மீதான தாக்குதல்களையும் கண்டிக்கின்றோம். இதனை கண்டித்து வரும் 08.01.2026 எமது அரங்கு செயல்படும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
கண்டனங்களுடன்
தோழர் லோகநாதன்
மாநிலபொதுச்செயலாளர்,
தமிழ்நாடு – புதுச்சேரி.







