
டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹானி பாபுவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் சென்ற வாரம் 4-ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2018- ஆம் ஆண்டு பீமா கொரேகான் நிகழ்வில் பொய் வழக்கில் கைதாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறை கொட்டடியில் வாடிய ஹானி பாபு அவர்களுக்கு இப்போதுதான் பிணை கிடைத்துள்ளது.
இப்படி நீண்ட காலமாக எவ்வித விசாரணையுமின்றி, பிணையும் மறுக்கப்பட்டு வந்த இவருக்கு நீதிபதிகள் ஏ எஸ் கட்கரி மற்றும் ரஞ்சித் சின்ஹா போன்சாலே அடங்கிய அமர்வு, ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் அன்று மும்பை என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பிணை வழங்கியுள்ளது. என்ஐஏ- வின் சிறப்பு நீதிபதியின் அனுமதி இல்லாமல் மும்பை எல்லையை விட்டு எங்கும் வெளியேறக் கூடாது என்பது கூடுதல் நிபந்தனையாகும்.
“எவ்வித விசாரணையும் இன்றி நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படுவது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 -ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குற்றவாளியின் உரிமையை மீறுவதாகும். நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவதாலும், உரிய காலத்திற்குள் விசாரணை மேற்கொள்ளப்படாத நிலையிலும் அல்லது எதிர்காலத்தில் முடிவடையும் சாத்தியமின்மை காரணமாகவும் இந்த விசாரணைக் கைதியை பிணையில் விடுவிக்கிறோம்” என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு ஆதாரமாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டு வழக்குகளில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்புகளை நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். கே.ஏ. நஜீப் எதிர் ஒன்றிய அரசு வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் பிரிவு 43D(5) போன்ற சட்டபூர்வ கட்டுப்பாடுகள் மற்றும் அரசியலமைப்பின் பகுதி 3 – ஐ அரசு மீறியதற்காக பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்.
அடுத்து ஜாவித் குலாம் நபி எதிர் மகாராஷ்டிரா அரசு வழக்கில் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் படி குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமையை மீறும் விதமாக அரசோ, வழக்கு தொடுக்கும் நிறுவனமோ நடக்கக்கூடாது என்றும், குற்றம் எவ்வளவு தீவிரமானதாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவரின் பிணையை எதிர்க்கக் கூடாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
ஹானிபாபு வழக்கில் அரசு தரப்பு 363 சாட்சிகளை மேற்கோள் காட்டியுள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கை 20 ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமாக உள்ளது. இந்த விசாரணை விரைவில் தொடங்கப்பட வாய்ப்பு இல்லை. எனவே முடிவடையும் சாத்தியமும் இப்போதைக்கு இல்லை என்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பாஜக அரசால் புனையப்பட்ட பொய் வழக்கு!
டிசம்பர் 31, 2017 புனேவுக்கு அருகில் எல்கர் பரிஷத் (உரத்த பிரச்சாரத்திற்கான ஒன்று கூடல்) என்ற நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து அறிவுஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அடுத்த நாள் பீமா கொரேகான் எனுமிடத்தில் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மஹர் (தலித்) மக்கள் ஒன்று கூடி பார்ப்பனர்களுக்கு எதிரான தமது வெற்றியின் 200 – ஆம் ஆண்டு தினத்தை கொண்டாடினர்.
இதை சகித்துக் கொள்ள முடியாத இந்துமதவெறி கும்பல் அக்கூட்டத்தில் புகுந்து கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. இந்த வன்முறைக்கு காரணம் முந்தைய நாள் நிகழ்ச்சியில் பேசியவர்கள் தான் என்று கூறி அடுத்தடுத்து 16 பேரை போலியாக புனையப்பட்ட வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது பாசிச பாஜக அரசு.
இவர்களில் 12 பேர் இதுவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரக் கவிஞர் வரவர ராவுக்கு பிப் – 22, 2021 -ல் பிணை கிடைத்தது. டிசம்பர் 1, 2021 அன்று மும்பை உயர்நீதிமன்றம் சுதா பரத்வாஜுக்கும், நவம்பர் 18, 2022 ஆனந்த் தெல்தும்டேவுக்கும் பிணை வழங்கியது. ஜூலை 26, 2023 அன்று வெர்னான் கன்சல்வேஸ் மற்றும் அருண் ஃபெரேரா, ஏப்ரல் 5, 2024 ஷோபா சென், மே 14 2024 கௌதம் நவ்லக்கா, ஜனவரி 2025 ரோனா வில்சன் மற்றும் சுதிர் தவாலே ஆகியோர் சிறைக் கொட்டடியில் இருந்து விடுவிக்கப் பட்டனர்.
படிக்க:
♦ சமூக செயற்பாட்டாளர் உமர் காலித்துக்கு பிணை மனு நிகாரிப்பு!
♦ செயற்பாட்டாளர்களை முடக்கும் மோடி அரசு! பாசிஸ்டுகளின் ஆட்சியில் பிணை கிடைப்பதே பெரும்பாடாகிறது!
சமீபத்தில் ஜோதி ஜக்தாப் மற்றும் மகேஷ் ராவத் ஆகியோருக்கும் பிணை கிடைத்தது. இன்னும் சுரேந்திர காட்லிங், சாகர் கோர்கே மற்றும் ரமேஷ் கெய்ச்சார் ஆகியோரது பிணை மனுக்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. காட்லிங் 2018-ல் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டேன் ஸ்வாமி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, நீர் அருந்துவதற்கு உறிஞ்சு குழல் டம்ளர் கூட வழங்காமல் கொடுமைக்கு உள்ளாகி, மருத்துவப் பிணை கூட மறுக்கப்பட்டு ஜூலை 5, 2021 – ல் சிறையிலேயே மரணம் அடைந்தார்.
“ஜாமீன் என்பது விதி; சிறைச்சாலை விதிவிலக்கு” என்ற அடிப்படை சட்டக் கொள்கையை உச்ச நீதிமன்றம் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த வழக்கில் கைதான 16 பேரும் குறைந்தது மூன்று ஆண்டுகளும், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை எவ்வித விசாரணையும் இன்றி சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்.
இப்படித்தான் பாசிச பாஜக அரசு அமைந்ததில் இருந்தே இந்துத்துவ கருத்துகளுக்கு எதிராகப் பேசியும், எழுதியும், களத்தில் போராடியும் வருபவர்களுக்கு எதிராக கடும் அடக்குமுறை ஏவப்படுகிறது.
இந்த பாசிஸ்டுகளுக்கு பாடம் புகட்டி பதவியில் இருந்து அகற்ற வேண்டும் எனில் ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும். மாறாக இவர்களைத் தேர்தல்கள் மூலமோ, நீதித்துறை மூலமோ வீழ்த்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இதை உணர்ந்து ஆக்கப் பூர்வமாக அனைவரும் செயல்படுவோம்.
- குரு






