டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் இல்லாமல் அழிகிறது! திமுக அரசே முதன்மை குற்றவாளி?

ஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்டு 10 மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கடந்த ஒரு வார காலமாக தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. வழக்கமாக பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து விட்டதாக ஆளுகின்ற திமுக அரசு தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது, இந்த பருவ மழையினால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

மழைக்கு முன்னதாகவே தீவிர படுத்தப்பட்ட குறுவை நெல் சாகுபடி திட்டமிட்ட காலத்திற்குள் முடிப்பதற்குள், வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட 70% மற்றும் வயலில் தேங்கியுள்ள 30% நெல் ஆகியவை அனைத்தும் முறையான கொள்முதல் வசதி அன்றி கடும் நெருக்கடிக்குள் சிக்கி உள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் 6.13 லட்சம் ஏக்கர் பரப்பில் சுமார் 70% அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அவ்வாறு அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில் 40% அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 60% நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளிகளில் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வயல்களில் நெற்பயிர் மூழ்கிக் கிடப்பது மட்டுமின்றி அறுவடை செய்த நெற்பயிரும் முறையான கொள்முதல் இல்லாமல் முளைத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு விவசாயி இரவு, பகல் கண் விழித்து விளைவித்த நெல் உரிய கொள்முதல் இன்றி அழிந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் திமுக அரசினால் உரிய காலத்தில் போதிய எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததேயாகும்.

10 காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இரு மடங்கு, அதாவது 1805 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கொள்முதல் நிலையத்தில் சுமார் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. உண்மையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இம்மாவட்டங்களில் 2156 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன; 2022-23 ஆம் ஆண்டில் 2094 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் கிட்டத்தட்ட 350 கொள்முதல் நிலையங்கள் குறைவாகவே திறக்கப்பட்டுள்ளன.

தற்போது திறக்கப்பட்டுள்ள நெல் முதல் நிலையங்களிலும் போதிய ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் இன்றி பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலையே நீடிக்கின்றது. மேற்கு வங்கத்திலிருந்து சணல் சாக்குகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு கூறிக் கொண்டுள்ள நிலையில் சாக்குகள் இல்லை; அடுக்கி வைப்பதற்கு போதுமான இடமில்லை; போதிய ஊழியர்கள் இல்லை; கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைக் கொண்டு செல்ல லாரி இல்லை என்ற நிலைமையே டெல்டா மாவட்டங்களில் நீடிக்கிறது.

அதுமட்டுமின்றி விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூபாய் 40 ரூபாய் என்ற வகையில் கொள்ளையடிப்பதால் ஏற்கனவே கடுமையான பாதிப்பில் உள்ள விவசாயிகள் மேலும் கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இவ்வாறு கொள்ளையடிக்கப்படும் தொகை நேரடி கொள்முதல் நிலையங்களில் பணிபுரிகின்ற ஊழியர்கள் முதல் துறை சார்ந்த அதிகாரிகள் மற்ற அமைச்சர்கள் வரை செல்கிறது என்பது சொல்லப்படாத விதியாகவே உள்ளது.

”வருமுன் காவாதான் வாழ்க்கை” எப்படி எரிந்து போகும் என்று வள்ளுவர் கூறுகிறார். ஆனால் திராவிட ஆட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக ஆட்சி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு பதிலாக வாய்ச்சவடால்களையும், வெற்று அறிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

இதன் காரணமாகவே டெல்டாவில் தற்போது கடுமையான பாதிப்பு உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி அம்பலமான பிறகு விழித்துக் கொண்ட திமுகவின் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

அத்துடன், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக தளர்த்தி வழங்கும் முன்மொழிவை, தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார் என்கிறது அந்தச் செய்தி.

இவையெல்லாம் பாதிப்புகளுக்கு பின்னால் எடுக்கப்படும் காலங்கடந்த நடவடிக்கைகள் தான்! ஆனால் விவசாயத்தில் இருந்து விவசாயிகளை விரட்டுவதற்கு நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்படும் கார்ப்பரேட் விவசாயக் கொள்கை, நெல் மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவுப் பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து அதிலிருந்து விரட்டி அடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கருதப்படுகின்ற தஞ்சை மாவட்டத்தில் மூன்று போகங்களிலும் நடந்து வந்த விவசாயம் படிப்படியாக சுருங்கிக் கொண்டுள்ளது என்பது மட்டுமின்றி சாகுபடி செய்யும் பரப்பளவும் சுருங்கிக் கொண்டிருக்கிறது என்று ஏற்கனவே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலால் (ICSSR) நிதியளிக்கப்பட்ட இந்த ஆய்வு, 2014 மற்றும் 2016 க்கு இடையில் நடத்தப்பட்டது மற்றும் 1970 களில் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு தசாப்த காலத்தை உள்ளடக்கியது. மே 2014 க்கான புவியியல் தகவல் அமைப்பு (GIS) படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தேசிய தொலைதூர உணர்திறன் மையத்திலிருந்து பெறப்பட்ட 1971 இடவியல் தாளுடன் ஒப்பிடுவதன் மூலம், ஆராய்ச்சியாளர் நில பயன்பாடு மற்றும் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து, விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக நிலத்தை திசைதிருப்புதல் போன்ற மானுடவியல் காரணிகளாலும், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய காரணிகளாலும் டெல்டா பகுதி 20% சுருங்கிவிட்டதைக் சுட்டிக்காட்டியுள்ளார் மெட்ராஸ் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தின் (MIDS) ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்.

படிக்க: 

செப்டம்பர் 30: தோழர் சீனிவாச ராவ் நினைவு தினத்தை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!

 மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் நடைபயணத்தைத் தடை செய்த திமுக.

இத்தகைய சூழலில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பருவத்தில், நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு மிகவும் குறைவாகவே இருந்தது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 3.2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு வெறும் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டிருந்தது.

தற்போது நடைபெற்று வரும் குறுவை நெல் சாகுபடியும் இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் விவசாயிகளின் நிலைமை மேலும், மேலும் மோசமாகி கொண்டே வருகிறது.. இதனால் விவசாயிகள், விவசாயக் கூலிகள் இயல்பாகவே கிராமங்களில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு வேலை தேடி செல்வது, இதனால் நகரமயமாவது என்ற நிலைமை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

விவசாயிகள் விளைவிக்கின்ற விளைபொருளுக்கு உரிய ஆதார விலை கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றது; இந்த நிலையில் தமிழகத்தை ஆளுகின்ற திமுக அரசும் ஒன்றிய அரசின் கொள்கையுடன் இணங்குகின்ற வகையில் செயல்படுகிறதே ஒழிய இதற்கு மாற்றாக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படவில்லை என்பதையே டெல்டா மாவட்ட விவசாயிகளின் அவல நிலைமை நமக்கு காட்டுகிறது.

வழக்கம்போல சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்களை காட்டி திக்கு முக்காட செய்வதில் திமுகவினர் எப்போதுமே வல்லவர்களாக உள்ளனர் என்பதும், திமுகவின் மீது எந்த விமர்சனமும் வந்து விடக்கூடாது என்று நாவன்மையில் ’வல்லவர்களாக’ நடமாடுகின்ற ஊடகங்களும், சமூக ஊடகங்களும் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் சமகாலத்திய உண்மை.

  • கணேசன்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. தமிழ் நாடு கொள்ளையர்கள் வாழு நாடு இங்கு நல அவர்கள் வழ முடியாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here