கோவை குற்றாலம் : ஒரு விபத்தும், முன்னேற்பாடின்மையும்!

மார்ச் முதல் வாரம்.  வெயில் எத்தனை அடித்தாலும், கோவை குற்றாலம் என அழைக்கப்படுகிற சிறுவாணி அருவியின் குளிர்ச்சியை குறைக்கவேமுடியவில்லை.  அத்தனை குளிர்ச்சியாக இருந்தது. எந்த அருவியிலும் இத்தனை குளிர்ச்சியை நான் உணர்ந்ததில்லை.  அருவி நீர் அத்தனை சுவையாக இருக்கிறதே எனக் கேட்டால், உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் என ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

காவிரியாற்றின் துணை நதியான பவானி ஆற்றின் ஒரு கிளை ஆறாக உள்ளது சிறுவாணி.  கோவையின் ஒரு சுற்றுலாத்தலமாகவும்,  இயற்கை சூழலோடும், அமைதியான இடமாகவும் உள்ளது சிறுவாணி.

கொரனா பாதிப்பால் குற்றாலத்தைப் போலவே இங்கும் மக்களை அனுமதிக்கவில்லையாம்.  பிறகு கடந்த டிசம்பரில் தான் வரம்பிட்டு மக்களை அனுப்பியிருக்கிறார்கள். இப்பொழுது கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.

கோவையிலிருந்து 37 கி.மீ தூரத்தில் இருக்கிறது அருவி உள்ள பகுதி காடு என்பதால், நம் கொண்டு அனைத்து பொருட்களையும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.  யானைகள் கூட்டமாக கடந்து செல்லும் பாதை என்பதால், மூன்று கிலோமீட்டர் தூரத்தை வனத்துறை வேன் வைத்து மக்களை அழைத்து செல்கிறது. ஒரு வேனில் 15 பேர் வரை செல்லக்கூடியதாக இருக்கிறது.  ஐந்து நிமிடத்திலிருந்து அதிகப்பட்சம் பத்து நிமிடங்களுக்குள் கொண்டு போய் இறக்கிவிட்டுவிட்டார்கள். இராஜா பாடல்கள் வேனில் ஒலித்தது. இறக்கிவிட்ட இடத்திலிருந்து இரண்டு கிமீ தூரம் நடக்கவேண்டும் என்றார்கள். கதை பேசிக்கொண்டே சென்றோம்.

பக்கத்தில் அருவி விழும் சத்தம் கேட்கிறது.  அருவியை நெருங்கும் பொழுது, ஒரு இளைஞனை ஆறு பேர் சேர்ந்து சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். முழு மயக்கத்திலிருந்தான். வாயில் ரத்த கலரில் நுரை தள்ளியிருந்தது. அருவி தண்ணீர் விழும் இடத்தில் இருந்து ஒரு சின்ன குளம் போல இருக்கிறது. அருகிலுள்ள பாறையில் இருந்து குதித்ததில் தான் அடிப்பட்டதாக தகவல் சொன்னார்கள்.

தமிழ்நாடு வனத்துறை சார்பாக கூட்டத்தை ஒழுங்குப்படுத்த என இரண்டு பேர் மட்டுமே கண்ணில்பட்டனர். சனிக்கிழமை என்பதால், மக்கள் கூட்டம் அதிகம்.  அந்த இளைஞனின் உயரத்தையும், உடலையும் கணித்தால் எப்படியும் 70 கிலோ நிச்சயம் இருப்பான். அந்த இளைஞனை தூக்கி செல்வதற்கு குறைந்தப்பட்சம் ஒரு ஸ்டெரக்சர் கூட இல்லை.  அவனுடைய நண்பர்கள் அவனை காப்பாற்றியே தீரவேண்டும் என்ற துடிப்பில் தூக்கிக்கொண்டு கிட்டத்தட்ட மெதுஓட்டமாய் ஒடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த இளைஞனுக்கு அடிப்பட்ட விவரம் தெரிந்து, நாங்கள் குளித்து திரும்பும் பொழுது, கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு இன்னும் இருவர் வேகமாக அருவியை நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள்.  திரும்பும் பொழுது அந்த வயதான ஓட்டுநரிடம் கேட்டேன். “ஒரு பையனுக்கு அடிப்பட்டுச்சே! என்ன ஆச்சுன்னு?” என்றேன். ”அவனை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை”  என்றார் ஓட்டுநர்.

அருவியில் மக்கள் கூட்டம் கூட்டமாக வரும் பொழுது, இப்படி அடிப்படை வசதிகள் கூட செய்து தராதது வனத்துறையின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது. இந்த பையனுக்கு அடிப்பட்டுவிட்டது. அந்த பையனின் தவறென்றே வைத்துக்கொள்வோம். ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்தால் என்ன செய்வது? நான்கு பேர் சேர்ந்து தூக்கி செல்லும் பொழுதே செத்தே போய்விடுவாரே!

இந்தச் சம்பவத்தைப் பார்த்த பொழுது, குற்றாலத்தில் செண்பகாதேவி அருவி நினைவுக்கு வருகிறது. கீழே அடிவாரத்தில் இருந்து, செண்பகதேவி அருவி போகும் தூரம் 2 கிமீட்டரை விட கொஞ்சம் அதிகம் இருக்கும்.  முழுக்க காட்டுப்பாதை தான்.  அத்தனை குளிர்ச்சியாக இருக்கும்.

செண்பகதேவி அருவி அத்தனை எழிலோடு பாய்ந்து அருவிக்கொட்டிக்கொண்டு இருக்கும்.  அங்கு இருக்கும் உயரமான பாறையில் இருந்து குதித்து குதித்து விளையாடுவாது அத்தனை உற்சாகம் தரும். அது தான் ஆபத்தையும் தந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு போயிருந்த பொழுது, எங்களோடு வந்தவன் மேலிருந்து குதித்தான். திரும்ப மேலே வரவேயில்லை. பிறகு ஒரு பாறைக்குள் சிக்கிக்கொண்டிருந்தவனை வெளியே கொண்டுவந்தார்கள்.  இப்படி பல சம்பவங்கள். அதற்கு பிறகு செண்பக தேவிக்கு செல்வதையே தடை விதித்துவிட்டார்கள். மொத்தத்தில் மக்களுக்கு தான் இழப்பு.

கோவையைச் சுற்றி உள்ள மக்களும், பிற மாவட்டத்து மக்களும் கூட்டம் கூட்டமாய் வரும் கோவை குற்றாலத்தில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வனத்துறை ஏற்பாடு செய்துதரவேண்டும்! அதில் அலட்சியமும், மேலும் தாமதமும் காட்டக்கூடாது!.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here