கோவையில் இரு தினங்களுக்கு முன் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மூன்று பேரை கோவை காவல்துறை காலில் சுட்டு பிடித்துள்ளது. இது பரபரப்பு செய்தியாக மீடியாக்களில் பகிரப்படுகிறது.
“மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கிறார். தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்திவரும் 25 வயதான இளைஞருடன் சமூக வலைதளம் வாயிலாக மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து, வெளியே சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், மாணவியும், இளைஞரும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி, உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், காரின் கதவை திறக்க சொல்லி மிரட்டியுள்ளனர். அவர்கள் கையில் அரிவாள் இருந்ததைப்பார்த்ததும் இருவரும் கார் கதவை திறக்கவில்லை. ஆத்திரமடைந்த மூவரும், அரிவாளால் காரின் முன்புற கண்ணாடியை வெட்டி உடைத்தனர்” என்று சமூக வலைத்தளங்களில் நடந்த சம்பவங்களை விவரித்து செய்திகள் வெளிவந்துள்ளன.
பிரச்சனை முடிந்து விட்டதா!
கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரமும், அதை தீவிரமாக கணக்கில் எடுத்த காவல்துறை தனிப்படைகளை அமைத்து தேடியதும், விரைவாக குற்றவாளிகள் என்று அடையாளம் கண்ட மூவரை காலில் சுட்டு பிடித்துள்ளதும் பிரச்சனையை முடிவு கொண்டு வர போதுமானதா? போதுமானது இல்லை.
இந்த பிரச்சனையின் மையம் அரசின், காவல்துறையின் பாதுகாப்பு குறைபாட்டில் அடங்கியுள்ளதா? அல்லது கோவையில் எத்தகைய கலாச்சாரங்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன? யாரால் திணிக்கப்படுகின்றன? என்ற உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா? இது குறித்து நாம் விரிவாக பார்ப்போம்.
குற்றங்களைத் தடுப்பதும் அரசின் பொறுப்பு தான்!
சமூக குற்றங்களை தடுப்பதற்கும், குறைப்பதற்கும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் முதன்மையானவை முக்கியமானவை . அரசின் காவல்துறையின் நடவடிக்கைகள் பெரும்பாலும் குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை தேடி பிடித்து தண்டிப்பதாகவே அமைகிறது. அதற்கு மாறாக, குற்றம் நடப்பதற்கான சூழல் உள்ள இடங்களை கண்காணிப்பது, குற்றவாளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது ஆகிய பணிகளை அது செய்தே தீரவேண்டும்.
அதுவும் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் குற்றம் நடந்த இடம் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ள இடம் என்பதும் இதில் காவல்துறையின் பொறுப்பை அதிகமாக்குகிறது.
அதே சமயம், பாஜகவின் வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் இப்பிரச்சினை கையில் எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வக்கற்ற தமிழக அரசு, திமுக அரசு என்று வசை பாடுவதை எப்படி எடுத்துக் கொள்வது? குத்துச்சண்டை வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரிஜ் பூஷன் போன்ற பொறுக்கிகளை தனது கட்சியில் வைத்து பாதுகாக்கும் பாஜக சங்கி கும்பலுக்கு எந்த தகுதியும் இல்லை மலிவான ஓட்டு அரசியல் என்றுதான் பார்க்க வேண்டும்.
படிக்க:
♦ பிரிஜ் பூஷன் சரண்சிங் எனும் கிரிமினலை பாதுகாக்கும் பாஜக!
♦ நிம்மியின் பாசிச திமிரும்; வானதியின் திசை திருப்பல்களும்!
தொழில் நகரங்களில் குவியும் மக்கள்!
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் மிக விரைவாக வளர்ச்சியடைந்து பலரையும் ஈர்க்கின்றன. சர்வதேச தரத்திலான கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட மாணவர்களை கவர்ந்திழுக்கின்றன.
மாணவர்கள் தங்குவதற்கு தனியார் விடுதிகள் முளைக்கின்றன. மாணவர்களை குறி வைத்து உணவகங்கள், மால்கள் தொடங்கி பார் வரை என பலதும் கட்டி எழுப்பப்படுகின்றன. அப்படி வேகமாக வளர்ந்து வரும் கோவைக்கு மதுரையிலிருந்து வந்தவர்தான் தற்போது பாதிக்கப்பட்டு இருக்கும் கல்லூரி மாணவி.

அடுத்ததாக தொழில் துறையின் வளர்ச்சி காரணமாக நாடு எங்கும் இருந்தும் தொழிலாளர்கள் அதாவது மூளை உழைப்பாளர்களாக இருக்கும் ஐடி இன்ஜினியர்கள் முதல், அல்லது உடல் உழைப்பு தொழிலாளர்களாக இருக்கும் வட மாநில தொழிலாளர்களாக வரை இவர்கள் அனைவரும் தொழில் நகரங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர் .
அரசின் முயற்சிகளால் உருவாக்கப்படும் உள்கட்டமைப்பு வளர்ச்சியாலும், குறிப்பிட்ட நகரை மையப்படுத்தி பல்லாயிரம் கோடிகளை ஒதுக்கி ஐ டி பூங்கா, சிப்காட், தொழிற்பேட்டை என முன்னெடுக்கும் திட்டங்களாலும் தொழில் நிறுவனங்கள் ஈர்க்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் கூட தமது கிளைகளை கோவை போன்ற தொழில் நகரங்களில் தொடங்கி விரிவாக்குகின்றனர் .
தொழில் நகரங்கள் எதிர்கொள்ளும் புதிய கலாச்சாரங்கள்!
வட மாநிலத் தொழிலாளர்கள் பான்பராக்கை போட்டு கண்ட இடங்களில் எல்லாம் துப்பி வைக்கிறார்கள். சுத்தமாக இருக்கத் தெரியவில்லை என்று நம்மில் பலரும் முகம் சுளிப்பதுண்டு. அதே நேரம் நம்மில் சிலர் அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்டு இருக்கும் பான்பராக்குகளை வாங்கி போடவும் ஆரம்பிக்கின்றனர்.
25 வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ”மாவா” புகையிலை கடைகள் குறிப்பிட்ட ஏரியாக்களில் முளைத்தன. அது வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் சப்ளை செய்யவில்லை; நம்மவர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் போதையாக அமைந்தது. மாவா போடுபவர்களுக்கு உணவு தேவை இல்லை. நிற்காமல் நான்கு மணி நேரம் 5 மணி நேரம் கடுமையாக உழைக்கும் ஆற்றலை – போதையை இந்த மாவா தந்து வந்தது. மீண்டும் ஒரு பாக்கெட்டை வாயில் கொட்டினால் அடுத்த நான்கு மணி நேரத்திற்கு நிற்காமல் ஓடுவார்கள்.
தற்போது மாவா விற்பனை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தாலும், அவையே இன்று நவீன வடிவில், உயர்தர பேக்கிங்கில் “கூல் லிப்” களாக ரகசியமாக (அரசுக்கு – காவல்துறைக்கு தெரிந்தே அதாவது முறையாக கப்பம் கட்டி ) விற்கப்படுகிறது.
சாதாரண உழைக்கும் மக்கள் புகையிலையை பயன்படுத்தியதில் இருந்து தொடங்கிய பழக்கமானது இன்று இளம் தலைமுறையை சீரழிக்கிறது. நவீன வடிவில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்களும் கூட இந்த கூல்லிப்பை வாயில் அடைகின்றனர். இப்பொழுதும் கூட பீடா கடைகளில் ஸ்வீட் பீடாக்கள் மட்டுமின்றி ஜர்தா பீடாக்கள் 320, 420 என்று பெயரிட்டு புகையிலைகள் சேர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன.
ஐடி நிறுவனங்கள் வாரம் முழுவதும் தமது ஊழியர்களை சக்கைகளை போல பிழிந்து எடுத்து விடுகின்றன. அவர்கள் அமர்ந்திருப்பது ஏசி ஹால் ஆக இருக்கலாம்; அவர்கள் உண்ணும் உணவு மிகவும் ‘நாகரிகமானதாக’ இருக்கலாம்; அவர்கள் வாழும் வீடுகள் கேட்டடு கம்யூனிட்டி எனப்படும் வேலி இடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பிளாட்டுக்களில் காற்றோட்டமாகவும் வசதியாகவும் அமைந்ததாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்களில் இதை இயல்பாக அனுபவிக்கும் சூழல் ஐடி வல்லுனர்களுக்கு அமையப்பெறுவதில்லை .
இது எல்லாம் போதாமல், தமது ஊழியர்களை போதையில் திளைக்க வைக்க வேண்டிய நிர்ப்பந்தங்களில் ஐடி நிறுவனங்கள் உள்ளன. அந்த அளவு வேலைக்கான இலக்குகளை டார்கெட்டுகளை வைத்து, விரட்டி விரட்டி தமது ஊழியர்களின் சிந்தனையாற்றலை உறிஞ்சி எடுத்து துப்பி விடுகின்றன.
ஐடிகள் பெற்றுப்போட்ட ஈசிஆர் கலாச்சாரம் !
பல்வேறு துறையில் படித்தவர்களையும் தம்மை நோக்கி கவர்ந்திழுக்கும் ஐடி நிறுவனங்கள் தமது ஈவிரக்கமற்ற சுரண்டலின் உப விளைவாக சனி இரவுகளில் ஈசிஆர் இல் உள்ள ரிசார்டுகளில் விடிய விடிய போதை ஏற்றிக்கொண்டு குத்தாட்டம் போடுங்கள் என்று ஒரு புதிய கலாச்சாரத்தை பரப்பி விட்டன. இந்த வார இறுதி கொண்டாட்டங்கள் என்பவை ஐடி ஊழியர்களுடன் நிற்கவில்லை; அது சென்னையில் தங்கி படிக்கும் மாணவர்களையும் கவர்ந்திழுத்து தம் பங்கிற்கு சீரழிவை பரப்பி வருகிறது.
மகாபலிபுரம் சாலையில் இசிஆரில் நடக்கும் விபத்துகளுக்கு மரணங்களுக்கு இத்தகைய போதை பார்ட்டிகளே அடிப்படை. சினிமா நடிகர்கள், நடிகைகள் கூட இத்தகைய போதை கொண்டாட்டங்களில் திளைத்து விபத்துகளை ஏற்படுத்துவதை நாம் செய்திகளில் பார்த்தே வருகிறோம்.
தற்போது கோவையில் ஐடி நிறுவனங்கள் பெருக ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே பி எஸ் ஜி, காருண்யா போன்ற கல்வி நிறுவனங்கள் கடை விரித்துள்ளன. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கூட மாணவர்கள் படிப்பதற்காக வந்து தங்குகின்றனர். ஏகாதிபத்திய சீரழிவு கலாச்சாரமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஏகாதிபத்திய கலாச்சாரத் தாக்குதல்களில் தப்பி பிழைப்பது எப்படி ?
முன்னேற்றத்தின் அடையாளமாக முன் நிறுத்தப்படும் தொழில் நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களோ பல்கி பெருகி பரவுவதற்கு ஏற்ப புதிய பழக்கவழக்கங்கள் நகரத்திற்குள் தலையெடுக்கின்றன. புதிதாக வரும் மாற்றங்களை எதிர்கொள்ள – லிவிங் டுகெதர் வாழ்க்கை, டேட்டிங் செயலிகள் போன்றவற்றை எப்படி அணுக வேண்டும்? எது சரி – எது தவறு? என்பது பற்றிய திறந்த வெளிப்படையான விவாதங்களை பெரும்பாலும் யாரும் நடத்துவதில்லை .
புதியனவற்றால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் அதனை சொந்த அனுபவத்தால் மதிப்பிடவே விரும்புகின்றனர். தவறு என தெரிந்தும் ஒரு முறை போய் தான் பார்ப்போம் என துணிகின்றனர். எனவேதான் கவர்ந்திழுக்கும் அம்சங்கள் உணவு பழக்கமாகட்டும்; அல்லது போதை கலாச்சாரமாகட்டும்; அல்லது லிவிங்டுகெதர் போன்ற பழக்க வழக்கங்கள் ஆகட்டும், இவை எதையும் செய்வதற்கு துணிச்சலை இப்போதைய சூழல் உருவாக்கித் தருகிறது. இளமைப் பருவ வேட்கையின் உந்துதல்களும், “எதுவும் தவறில்லை” என்று ஊக்குவிக்கும் சூழலும் ஒருங்கே அமையும் போது, அது சமூகத்தில் ஒரு விளைவை ஏற்படுத்துவதாக மாறுகிறது.
நுகர்வுவெறி போதை கலாச்சாரம் எந்த அளவு பெருகுகிறதோ, அதற்கேற்ப அதை நுகர விரும்பும் அனுபவிக்க விரும்பும் நபர்கள் அது தனது கைக்கெட்டாமல் போகும்பொழுது அதை எந்தவிதத்திலாவது அடைந்து தீர வேண்டும் என்று வெறிபிடித்தவர்களாக சமூக விரோதிகளாக சீரழிவதும் நடக்கவே செய்கிறது. இத்தகைய புதிய கிரிமினல் குற்ற கும்பல்கள் உதிரித் தொழிலில் உத்திரவாதம் அற்ற வாழ்க்கை வாழும் இளைஞர்களிடமிருந்து உருவாகி நகரையே அச்சுறுத்துகிறது. அடித்தட்டு வர்க்கங்களில் இருந்து உருவாகும் இவர்களை (தற்போது குணா, சதீஷ், கார்த்தியை) காவல்துறையால் எளிதாக சுட்டுத் தள்ளவும் முடிகிறது. ஆனால் பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் காவல்துறை துப்பாக்கியை மறந்தும் தொடவில்லை. ஏனெனில் அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் மேட்டுக்குடிகளின் குலக்கொழுந்துகள்.
சமூக விரோத குற்றங்களை தடுப்பது எப்படி?
எவ்வளவுதான் சிசிடிவிகளை பொருத்தினாலும், காவல்துறையின் ரோந்து வாகனங்கள் சுற்றி வந்தாலும், இத்தகைய குற்றங்களை 100% தடுக்க முடியாது. அதை குறைக்க வேண்டும் என்றால், இத்தகைய சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என்றால், இப்பிரச்சினை குறித்த திறந்த விவாதங்கள் அவசியம். குறிப்பாக மாணவர்களிடமிருந்து தொடங்க வேண்டியது மிகவும் அவசியம்.
எது தமக்கான உரிமை? எது முன்னேற்றம்? எது நாகரீகம்? என்பது குறித்து இளம் தலைமுறையினருடன் திறந்த வாதங்களை பெற்றோர்களும் உறவினர்களும் நடத்த வேண்டும். சீரழிந்த ஏகாதிபத்திய கலாச்சாரங்களை, நுகர்வு வெறியை, பாலியல் வக்கிரங்களை, போதை கலாச்சாரத்தை, கட்டற்ற வாழ்க்கை முறையை தனித்து எதிர்க்க முடியாது. நாம் விரும்பும் நாகரீக வளர்ச்சியுடன், சர்வதேச தரத்திலான தொழில் பெருக்கத்துடன், அதன் துணைவிளைவுகளாக இத்தகைய கேடுகளும் வந்து தீரும்.
ஐந்து அல்லது ஆறு இலக்க சம்பளங்களைத் ( மாதத்திற்கு லட்சங்களில் சம்பளத்தை) தரும் அத்தகைய தொழில் நிறுவனங்கள் தேவை என்றால், அவை இத்தகைய சீரழிவுகளையும் சேர்த்துதான் கொண்டு வரும். சர்வதேச தரத்திலான கல்வி நிறுவனங்கள் வந்தால், உலகம் முழுவதிலும் இருந்து படிப்பதற்கு கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் கோவைக்கு வந்தால், அந்த மாணவர்களை இலக்கு வைத்து சர்வதேச போதை கும்பலும் வரவே செய்யும். புதிய புதிய போதைகள் மலிவாக புழங்கவே செய்யும் . அரசு இத்தகைய போதை கிரிமினல் மாஃபியாக்களை கண்டறிந்து தடுக்க தவறுகிறது என்பது நீண்ட காலமாக நாம் அறிந்துள்ள விஷயமே.
எனவே, ஒரு பிரச்சனையின் இரு பக்கத்தையும் பார்த்து குறைபாடுள்ள அம்சங்களை எச்சரிக்கையுடன் கையாளுவதற்கான விழிப்புணர்வை உருவாக்குவது தான் முதன்மையானது.
பொது சமூகத்தின் பங்கு என்ன?
தேர்தல் திருவிழா தொடங்கியவுடன் கையில் காப்பு கட்டிக்கொண்டு அரசியல் கட்சிகளின் பின்னே உதிரிகளான இளைஞர்கள் அணி திரட்டப்படுகின்றனர். சுமார் இரண்டு மூன்று மாத காலம் சரக்கு, பிரியாணி என்று வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். தேர்தல் முடிந்த பின் ஓட்டு கட்சிகள் இத்தகைய இளைஞர்களை அதாவது திடீர் தொண்டர்களை கை கழுவி கழட்டி விட்டு விடுகிறது. இனி கோட்டருக்கும் பிரியாணிக்கும் அவர்கள் எங்கே செல்வார்கள் ? கையில் தீப்பந்தம் ஏந்தி நீதி கேட்கும் பாஜகவின் வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களிடம் இதற்கு பதில் இருக்காது.

பாலியல் வெறியை தூண்டாத சினிமாக்களோ, இளைஞர்களை உசுப்பேத்தும் படி நடிக்காத ஹீரோக்களோ பெரும்பாலும் இல்லை எனலாம். பெண்களை அனுபவிக்க வேண்டிய போகப்பொருளாகவே ஏகாதிபத்தியங்கள் முன்னிறுத்தி தமது சரக்குகளை விளம்பரப்படுத்துகின்றன. இத்தகைய படைப்பாளிகளின் மூலம், தமது ‘தரமான’ கலை படைப்புகளின் மூலம், காட்டில் பசியோடு அலையும் வேட்டை விலங்குகளை போலத்தான் நாட்டிற்குள் வெறியேற்றப்பட்ட இளைஞர்கள் அலைந்தது திரியும் போக்கு வளர்த்தெடுக்கப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்களில் சிலர் அக்கட்சியினராலேயே உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். வெளியில் சொல்ல முடியாதபடி பாலியல் அத்துமீறல்களை சந்தித்துள்ளனர்.
தற்போது கோவையில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிக்கிய மூன்று இளைஞர்களை காலில் சுட்டாகிவிட்டது. இந்த இளைஞர்களை இப்படி வெறிபிடித்தவர்களாக கிரிமினல்களாக வளர்த்தெடுத்தவர்களை சுடப்போவது யார்?
கிரிமினல்களை உருவாக்குவதும் கிரிமினல் குற்றம் தான்!
தான் பழக்கமாக்கி கொண்டு விட்ட பழைய வாழ்க்கையை நாட, அல்லது தமக்கு எட்டாக்கனியாக இருக்கும் ‘சொர்க்கத்தை’ அனுபவிக்க என்று பலதரப்பட்ட நபர்களும் தெரிந்தே அத்துமீறுகின்றனர். தனது பலவீனத்தால் குற்றத்தை செய்யவும் துணிகின்றனர் அல்லது தள்ளப்படுகின்றனர். இவர்களில் சிலர் தொழில் முறை கிரிமினல்களாக வளர்ந்தும் விடுகின்றனர்.
நாகரிக வளர்ச்சிக்காகவும், தொழில் முன்னேற்றத்திற்காகவும் நாம் யாரை மேடை ஏற்றி விருது தந்து கௌரவிக்கிறோமோ அவர்கள் தான் இத்தகைய குற்றங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். வளர்ச்சியின் பின்னே உள்ள இருண்ட பக்கத்தையும் நாம் அம்பலப்படுத்தி காட்ட வேண்டும்
குற்றம் நடப்பதற்கான சூழலை, அத்தகைய பண்பாட்டை ஊக்குவிக்கும் சமூக காரணிகளை நாம் சரியாக இனம் காண்போம். எதை போற்ற வேண்டுமோ, எதை கைக்கொள்ள வேண்டுமோ, அதை தெளிவாக பிரித்துக் காட்டுவோம். எதை விலக்க வேண்டுமோ, எதை ஒழிக்க வேண்டுமோ, அதை இலக்கு வைத்து ஒன்றுபட்டு தாக்குவோம். கிரிமினல் குற்றக்கும்பல்கள் உருவாவதையோ, உள் நுழைவதையோ, நிழல் சாம்ராஜ்யங்களை கட்டமைப்பதையோ அரசும் காவல்துறையும் தடுக்க வேண்டும். நாம் திட்டமிட்டு சீரழிவு கலாச்சாரங்களை பரப்புபவர்களை, திணிப்பவர்களை, பராமரிப்பவர்களை எதிர்த்து மோதுவோம். இதுவே சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் ஒன்றிணைந்து செய்ய வேண்டிய முதன்மைப்பணி ஆகும்.
- இளமாறன்







கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கிரிமினல்களை நாம் என்ன செய்ய வேண்டும்?
கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி தனது காதலனுடன் காரில் பேசிக் கொண்டிருக்கும்போது மூன்று பேர் கொண்ட கிரிமினல்கள் கார் கண்ணாடி உடைத்து காதலனை வெட்டி அந்த மாணவியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்கள் என்ற செய்தியும் தமிழகத்தில் பணதி சீனிவாசன் தீபந்தம் ஏந்தி இதற்காக போராடுவது குறித்து பிஜேபி கட்சியில் பிரண்ட்ஸ் பூசன் என்ற விளையாட்டுத் துறை மந்திரி பளுத்தூக்கும் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஆடை அறியும் என்ற செய்தியும் அதன் பிறகு குற்றத்தை தடுக்க வேண்டியது அரசும் காவல் துறை தான் அதை சரியாக செய்யாதது அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற செய்தியும் மற்றும் இன்று சென்னை கோவை போன்ற நகரங்களில் ஐ டி கம்பெனிகள் அதிகம் பெருக்கெடுத்து உள்ளது ஐடி துறையால் புதிய கலாச்சார சீதேவி உருவானது அது சென்னை போன்ற நகரங்களில் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் உல்லாசமாக அனுபவிக்க பல விடுதிகள் இரவும் பகலும் செயல்படுவது அதேபோல் பல கல்லூரிகள் அதிகரித்து அதன் மூலம் கல்லா கட்டும் விடுதிகள் ஹோட்டல்கள் பல்கிப் பெருகி உள்ளது என்றும் குற்றம் அதிகரிக்க பல நகரங்களில் தொழிலாளர்கள் ஒன்று குவிக்கப்பட்டு வேலை நேரம் அதிகரித்து பிழிந்து எடுக்கப்படுகிறார்கள் முதலாளிகள் தொழிலாளர்கள் இந்த சுரண்டலுக்கு எதிராக போராடாமல் இருக்க மாவா ஹான்ஸ் பான் ப்ராக் கஞ்சா மது போன்ற போதைகளுக்கு ஆளாகிறார்கள் இதன் விளைவாக சென்னை கோவை போன்ற தொழில் நகரங்களில் குற்றங்கள் அதிகரிக்கவே செய்கின்றன இந்த குற்றத்தை சாதாரண தொழிலாளர்கள் செய்யும்போது காவல்துறை காலில் சுட்டு பிடிப்பதை செய்கிறது அதேபோல் மேட்டுக்குடி வர்க்கம் இந்த தவறை செய்தால் தன்னுடைய துப்பாக்கி மறைத்துக் கொண்டு சேவை செய்கிறது என்ற தகவலையும் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும் அதற்கான விவாதங்களையும் நடத்தாமல் பெற்றோர்களும் அருவி ஜீவிகளும் இருப்பதனாலே இளைஞர்களுக்கு எந்த விதமான விழிப்புணர்வும் இல்லாமல் பல குற்றங்களில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது ஆகவே குற்றம் செய்பவனை விட குற்றத்தை தூண்டும் அது போதை கலாச்சாரம் இவை அனைத்தையும் ஊக்கிவிக்கும் அரசு மற்றும் அதிகாரிகள் போலீசே காரணம் இவர்கள்தான் குற்றவாளிகள் என்று கட்டுரை ஆசிரியர் தோழர் இளமாறன் அவர்கள் சிறப்பாக பல உதாரணங்களை ஒப்பிட்டு சிறப்பாக எழுதி உள்ளார் தோழருக்கு நன்றி
கோவை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ள கொடும் சம்பவத்தை மேலோட்டமாக அல்லாமல் அதன் அடி நாதத்தை துல்லியமான முறையில் இப் பிரச்சனையை எப்படி அணுகுவது எப்படி நிரந்தரமாக தீர்க்க முடியும் என்பது பற்றி கட்டுரையாளர் தோழர் இளமாறன் சிறப்புற வாதங்களை எடுத்து வைத்துள்ளார். தமிழ்நாடு அரசோ, காவல்துறையோ விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கட்டுரை தெளிவாக்குகிறது.
எனினும் வானதி போன்ற கழிசடைகள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவதும், ஆட்டுக்குட்டி அண்ணாமலை, தமிழிசை, நயினார் நாகேந்திரன், பாஜகவின் அல்லக்கைகள் அதிமுக எடப்பாடி, பாமக அன்புமணி உள்ளிட்ட சகலரும் கோவை மாணவி பாலியல் வன்புணர்வு தொடர்பான குற்றச் செயல்களுக்கு எதிராக நாக்கை சுழற்றி பேசுவதற்கு எள்ளின் முனையளவும் அருகதை அற்றவர்கள் என்பதை நாம். புரிந்து கொள்ள வேண்டும். மணிப்பூர், குஜராத், உ.பி., ம.பி., அரியானா உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் நிமிடத்திற்கு நிமிடம் நடக்கும் கொலை
கொள்ளை பாலியல் வன்புணர்வு சாதி மத வெறி ஊட்டி கலவரங்கள்… என அனைத்
தையும் அமல்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக இவர்கள் என்றுமே வாய் திறந்ததில்லை. எடப்பாடி காலத்தில் பொள்ளாச்சி உட்பட எண்ணற்ற இடங்களில் நடந்த பாலியல் வன்புணர்வு களும், ஏனைய கொலைபாதக செயல்களும்
ஏராளம்! ஏராளம்! எனவே எடப்பாடி நயினார் வானதி அண்ணாமலை கும்பல் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டு கொள்வதே சாலச் சிறந்ததாகும்.
கட்டுரையாளர் குறிப்பிட்டது போல தமிழ்நாடு அரசும் காவல்துறையும் வந்தபின் கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றும் முன் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்திடாமல் தடுப்பதற்கான முன்னெடுப்புகளை உணர்வு பூர்வமாக விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்வதே சாலச் சிறந்தது என்பதை உணர வேண்டும்.