சென்னை மாநகரின் சில பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு வரை சுறுசுறுப்பாக ஓடி நகரை தூய்மைப்படுத்தியவர்கள் இன்று தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நோய் பரவும் அபாயம் உள்ளது, துர்நாற்றத்தால் வசிக்க முடியவில்லை என புலம்பும் மக்கள் இவ்வளவு நாள் அந்த குப்பைகளோடு தங்கள் வாழ்வினை கழித்து, மக்களையும் நகரத்தையும் நோய்களிலிருந்து காப்பாற்றியவர்களை கண்டு கொள்ள மறுப்பது எவ்வளவு கொடுமையானது.
அரசியல் கட்சிகள் தங்கள் பிழைப்புக்காக, தேர்தலுக்காக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து செல்கிறார்கள். அவர்கள் நாளை ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் திமுகவை போல் அந்த தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கான பணி பாதுகாப்பும் ஒன்று. கவர்ச்சி வாக்குறுதிகளை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முக்கியமான இரண்டு பணியாளர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சமூகத்தின் நல்வாழ்விற்கு எவ்வளவு அவசியமானவர்கள்?!
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ராயபுரம், திருவிக நகர் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் வேலைப்பார்த்து வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு வெளியில் ரோட்டோரத்தில் இன்று வரை (ஆகஸ்ட் 11) போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை என்ன?
கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வேலைக்குச் சென்ற தூய்மை பணியாளர்களை இன்று முதல் உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்றும் வேலை வேண்டும் என்றால் தனியார் நிறுவனத்திடம் வேலைக்கு சேர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர். சென்னை பெருநகராட்சியில் மண்டலம் 5 மற்றும் மண்டலம் 6 ஆகிய இரண்டு பகுதிகளை தனியார் நிறுவனமான ஆந்திராவைச் சேர்ந்த ராம்கி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது சென்னை மாநகராட்சி. இதன் காரணமாக தங்களுக்கு தனியார் மயம் தேவையில்லை என்றும் தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் 10 நாட்களாக கொளுத்தும் வெயிலிலும், நேற்று பெய்த மழையிலும் சென்னை மாநகராட்சி சாலையோரம் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இந்த வேலையில் பெரும்பாலும் பெண்களே பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் பலர் கணவனை இழந்தவர்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் 15 வருடங்களுக்கு மேலாக NULM-ல் பணிபுரிந்து வருகிறார்கள் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று அனைவரும் 23,000 சம்பளம் பெறுகிறார்கள்.
தற்போது திடீரென தங்களை தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் உறுதியாக நின்று போராடுகிறார்கள். இதுநாள் வரை 23,000 சம்பளம் பெற்று வந்த தூய்மை பணியாளர்கள் இன்று தனியாருக்கு சென்றால் 16000 ரூபாய் தான் சம்பளம் இ.எஸ்.ஐ, பி.எஃப் எல்லாம் பிடித்தம் போக 12 ஆயிரம் ரூபாய் தான் கையில் கிடைக்கும். இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும் அதுவும் சென்னை போன்ற மாநகரங்களில் சாத்தியமே இல்லை.
தனியார்மயமாக்கமும் திமுகவின் வர்க்க பாசமும்
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களுக்கு முக்கியமான வாக்குறுதியாக, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தார். இந்த வாக்குறுதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தது. மேலும், 2021-ல் அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டதால் 700 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதி, பணி நீக்கப்பட்டவர்களில் 90% பட்டியலினத்தவர் என்பதால் அவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் இன்று நடப்பது வேறாக உள்ளது. இன்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்களை கோபத்துடன் அணுகியுள்ளார். “தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்னு தேர்தல் வாக்குறுதி கொடுத்தீங்களே…’ என ஒரு பத்திரிகையாளர் கேட்க, ‘இல்ல…நீங்க கொடுங்க..நாங்க கொடுத்த வாக்குறுதியை கொடுங்க…கொடுங்க…கொடுங்க…’ என அந்த பத்திரிகையாளர் மீது பாய்ந்தார். ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தாரே…’ என இன்னொரு செய்தியாளர் அதே கேள்வியை கேட்க அதற்கும் சேகர் பாபு டென்ஷன் ஆனார். ‘வாக்குறுதி கொடுக்கலை…நீங்க எந்த பிரஸ்ஸூ’ என கேட்டார். அவர், ‘நீலம்’ என சொல்ல, ‘நான் பத்திரிகையாளர்களைதான் சந்திக்கிறேன். உங்களை சந்திக்கலை…’ என வெடுக்கென கேள்வியை கட் செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியது. மாற்றத்திற்கான ஊடக மையம் மற்றும் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் தங்கள் சேகர்பாபுவின் திமிர் பேச்சுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
படிக்க: தூய்மை பணிக்கு நவீன கருவிகள் பயன்படுத்த கோரி மக்கள் அதிகாரம் மனு!
அதிமுக ஆட்சி காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு கொடுத்த அதே தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் 115 மற்றும் 152 என்ற இரண்டு அரசாணையை கொண்டு வந்தது. ஏற்கனவே சென்னை கோவை மாவட்டங்கள் மட்டுமே தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்கிய நிலையில், மீண்டும் சென்னையில் 5 மற்றும் 6 ஆகிய இரு மண்டலங்களையும் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மேலும் அடுத்தகட்டமாக 4 மற்றும் 8 ஆகிய இரு மண்டலத்தையும் தனியார்மயமாக்கும் பணியை மாநகராட்சி செய்துவருகிறது. இதன் மூலம் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உழைக்கும் தொழிலாளி வர்க்கம் பாதிக்கப்படுமே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லை.
பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, இரண்டு நாட்களுக்கு முன்பு போராட்டத்தை ஒடுக்க காவல்துறையை கொண்டு மிரட்டிப் பார்த்தார்கள். யாரும் அசைய வில்லை. நேற்று இரவு POLICE என பலகையிட்ட பேருந்தை கொண்டு வந்து மிரட்டல் தொடர்ந்தது. 20 ஆண்டுகள் வரை வேலைப்பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு எந்த அடிப்படை சலுகைகளும் வழங்கவில்லை. இ.எஸ்.ஐ, பி.எஃப் போன்ற சலுகைகள் இல்லாத காரணத்தினால் தற்போது ஏதுமற்றவர்களாக நிர்கதியற்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நான்கு ஆண்டுகால திமுக ஆட்சி கார்ப்பரேட் சேவையை சமரசமின்றி செய்து வருகிறது. இதன் காரணமாக அன்றாடம் உழைக்கும் மக்களே பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே காவி பாசிச கும்பலின் கார்ப்பரேட் பொருளாதார கொள்கையால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் மக்கள் திமுகவின் தனியார்மய நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் தங்கள் வேலைக்கு உரிய ஊதியத்தை கோருகிறார்கள். ஆனால் அவர்களை குண்டாந்தடிகளை வைத்து மிரட்டி போராட்டத்தை கலைத்து விடலாம் கனவு காண்கிறது திமுக அரசு. உழைக்கும் வர்க்கம் அடக்குமுறைக்கு அஞ்சாது என்பதே வரலாறு.
- நந்தன்.
சென்னையில் இரு மண்டலத் தூய்மைப் பணியாளர்களால் ஆகஸ்ட் 1 முதல் தொடர்ச்சியாக நாளது தேதி வரை நடைபெறும் போராட்டத்தின் நியாயங்கள், மற்றும் அரசின் இழிவான அணுகுமுறை அனைத்தையும் ஒன்று சேர்த்து கட்டுரையாளர் நந்தன் சிறப்பாகவே அம்பலப்படுத்தி எழுதியுள்ளார். தோழருக்கு வாழ்த்துக்கள்.
‘ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை’ என்பதற்கு அடித்தட்டு வர்க்கமான தூய்மைப் பணியாளர்களின்
இப் போராட்டம் சாட்சியமாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சியாக இருக்கின்ற காலத்தில் இதே மு க ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக மாநகராட்சிக்கும் அரசுக்கும் எழுதிய கடிதங்களை சாட்சியமாக கட்டுரையாளர் காட்சிப் படுத்திருப்பது பொருத்தமான ஒன்று. அப்படியானால் எதிர்க்கட்சியாக இருந்தால் ஆட்சி கட்டிலை பிடிக்க ஒரு அணுகுமுறை; ஆளுங்கட்சியாக மாறிவிட்டால் வேறொரு அணுகுமுறை. இப்படிப்பட்ட கேவலங்கெட்ட சூழ்நிலை இந்த வர்க்க அமைப்பு சமூகத்தில் நீடிக்கவே செய்யும் என்பதனை மு க ஸ்டாலினே அம்பலப்படுத்திக் கொள்கிறார்.
2021 ஆட்சி கட்டிலில் அமர்ந்த முக ஸ்டாலின் ஆவடி பகுதியில் வசிக்கும் அன்றைய பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மூலமாக ஆவடி பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் அடிப்படை வர்க்கமான நரிக்குறவர்கள் சமூகப் பெண்களிடமும் சிறுமிகளிடமும் அலைபேசி வாயிலாக பேசிய காட்சிகளை எல்லாம் பார்த்தோம். ‘நான் உங்கள் வீட்டிற்கு வரலாமா; வந்தால் சாப்பாடு போடுவீர்களா’ என்று முதல்வர் கேட்க அந்த அப்பாவி பெண்கள்/சிறுமிகள்
‘ஐயா வாங்கய்யா வாங்க’ என்று பரவசப்பட,
முதல்வரும் ‘உறுதியாக வருகிறேன்’ என்று கூற, அதன்படி ஒரு நாள் நரிக்குறவர் சமூகம் வாழ்கின்ற ஆவடிப் பகுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, அலவளாவிச் சென்ற காட்சிகளை எல்லாம் கூட நாம் பார்த்தோம்.
அவர்களது மிகச் சிற்சில கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்ததையும் காட்சி ஊடகங்கள் மூலமாக ‘கண்டு களித்தோம்’.
இப்போது ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கக் கூடிய அளவிற்கு அரசு தனியார் மயக் கொள்கைகள் மூலமாக வயிற்றில் அடிக்க முயற்சிக்கின்ற பொழுது ஆவடி நிகழ்வுகள் எல்லாம் ‘நாடகம்’ தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
எனவே ‘சமூக நீதி அரசு’,
‘திராவிட மாடல் அரசு’ என்று பீற்றிக் கொள்வதில் உண்மையான அர்த்தம் உள்ளது என காண்பித்துக் கொள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு விரும்புமே யானால் இச்சமூகத்தில் யாருமே இந்த வேலையைப் பார்ப்பதற்கு முகம் சுழிக்கும் சூழலில், இவ்வளவு ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களாம் தொழிலாளர்கள் மேற்கொண்டு இருக்கின்ற பொழுது அவர்களது நியாயமான கோரிக்கைகளை சண்டித்தனம் செய்யாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவர்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினால் விஷத்தைக் கக்குவது போல் அமைச்சர் சேகர்பாபு பதில் அளிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தூய்மைப் பணியாளர்களின் நியாயமான போராட்டம் நீடிக்கும் வரை உழைக்கும் மக்கள் அனைவரும் அவர்களோடு கரம் கோர்த்து நிற்போம்! வெற்றியினை ஈட்டுவோம்.
அந்த வகையில் கட்டுரையாளர் நந்தன் அவர்களது அம்பலப்படுத்தும் இக்கட்டுரை
சிறப்பாக அமைந்துள்ளது. மீண்டும் வாழ்த்துக்கள்.