MRB செவிலியர்கள் போராட்டமும், தமிழக அரசின் துரோகமும்!
செவிலியர்கள் போராட்டத்தை அரசியலாக்கப் பார்க்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். போராடுவது அவர்கள் உரிமை என்றும் ஆனால் போராடுவதற்கு முன்னர் என்னை அழைத்து பேசியிருக்க வேண்டும் என்றும் தேர்தல் நேரத்தில் யாருடைய தூண்டுதலின் பேர் பேரில் போராடுகிறார்கள் என்றும் பேசுகிறார்.

மிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் தங்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 18 ஆம் தேதி பணி நிரந்தரம் வேண்டியும் காலிப்பணியிடங்களை அதிகரிக்கக் கோரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையின் சிவானந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் கலைந்து செல்ல மறுத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்திருந்தனர்.

போராடியவர்களை பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இறக்கிவிட்டனர். பேருந்து நிலையத்தில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்த செவிலியர்கள் நள்ளிரவு வரை போராடினர். வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) அதிகாலையில் அவர்களை கைது செய்த காவல்துறை, மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தது.

செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனைகளின் தேவைக்கேற்பவும், நோயாளிகள் அதிகரிப்பதற்கு ஏற்பவும் காலிப்பணியிடங்களை அதிகரிப்பதும், ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியில் இருக்கும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் இதுவே போராடும் செவிலியர்களின் முதன்மையான கோரிக்கை. அப்படி செய்யாமல் காலிப்பணியிடங்கள் இல்லை என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

போராடும் செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் விகடனுக்கு அளித்த பேட்டியில், ‘மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக வருடா வருடம் தேர்வு நடத்தி ஆட்களை எடுக்க வேண்டும். இவர்கள் அதை செய்வதே இல்லை. இந்த அரசாங்கம் வந்த பிறகு செவிலியர் பணியில் காலிப்பணியிடங்கள் உருவாக்கப்படவே இல்லை. ஆனால், மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது.

9 நோயாளிகளை கொண்ட ஒரு பொது வார்டுக்கு ஒரு நாளைக்கு 3 செவிலியர்கள் தேவை. ஆனால், நம்மிடம் 0.48 என்ற வீதத்தில்தான் இருக்கிறார்கள். நிறைய தேவை இருந்தும் இவர்கள் காலிப்பணியிடங்களை உருவாக்கவே இல்லை. மாறாக, மருத்துவத்துறையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ போன்ற புதிய புதிய திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடிக்கொண்டே இருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு செவிலியர்களை நியமிப்பதாக அரசாணை வெளியிட்டிருந்தார்கள்.

இப்போது பணி நிரந்தரம் வேண்டி தமிழகம் முழுவதும் 8000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். காலிப்பணியிடங்கள் வரும் போது எங்களை இட்டு நிரப்புவோம் என்கிறார்கள். ஆனால், ஒரு முறைக்கு அதிகபட்சமாக 150 காலிப்பணியிடங்கள்தான் வருகிறது. மற்றவர்களெல்லாம் நீண்ட கால காத்திருப்பில் மட்டுமே இருக்கிறோம். போராடும் எங்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையை வைத்து அடக்கப் பார்க்கிறார்கள். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்கிறார் உறுதியாக.

செவிலியர்கள் போராட்டத்தை அரசியலாக்கப் பார்க்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். போராடுவது அவர்கள் உரிமை என்றும் ஆனால் போராடுவதற்கு முன்னர் என்னை அழைத்து பேசியிருக்க வேண்டும் என்றும் தேர்தல் நேரத்தில் யாருடைய தூண்டுதலின் பேர் பேரில் போராடுகிறார்கள் என்றும் பேசுகிறார்.

படிக்க:

 MRB செவிலியர்கள் போராட்டமும், தமிழக அரசின் துரோகமும்!

 தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!

அதே நேரத்தில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற கேள்விக்கு, “தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? நீங்க சொல்ற புள்ளிவிவரங்களை எல்லாம் ஏத்துக்க முடியாது. இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான். நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க?” என்று பேசுவதாக செவிலியர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அமைச்சர் பெருமையாக பேசிக் கொண்டே செவிலியர்களுக்கு அரசு காலிப்பணியிடங்கள் இல்லை என்று சொல்வது எவ்விதத்திலும் நியாயமில்லை‌.

தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சுகாதார கட்டமைப்பு ஓரளவு நன்றாகவே உள்ளது. கடை நிலையில் வேலை பார்க்கக் கூடிய செவிலியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கொரோனா காலங்களில் தன்னுயிர் என பாராமல் உயிரை துச்சம் என நினைத்து பணியாற்றியவர்கள் இந்த செவிலியர்கள்.

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், மகப்பேறு விடுப்பு, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை மீண்டும் பணிக்கு எடுப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தியே கடந்த 5 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் போராடிய இதே எம்ஆர்பி செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த திமுக தான் இன்று ஆட்சிக்கு வந்த பின்பு அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல சுகாதார மையங்கள் செவிலியர்களின் உழைப்பில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழக மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் செவிலியர்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது.

தேர்தல் காலத்தில் போராடக் கூடாதா என்ன? இல்லை, இப்போது மட்டும்தான் செவிலியர்கள் கோரிக்கை வைக்கிறார்களா? கடந்த 9 ஆண்டுகளாகவே ஆண்ட அதிமுகவோ ஆளுகின்ற திமுகவும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்பதே உண்மை. செவிலியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மக்கள் அதிகாரமும் அதன் தோழமை அமைப்புகளும் எப்போதும் துணை நிற்கும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here