
சென்னை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் மீது திமுகவின் போலீசு காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு ஒடுக்கியது. இப்போராட்டம் தொடங்கியது முதலே திமுக ஆதரவாளர்கள், அதன் ஊடகத் துறையினர், பார்ப்பனச் சங்கிகள் மற்றும் திராவிட எதிர்ப்பாளர்கள் என்று இதுகுறித்து மாறுபட்ட கருத்துகளை வெளிபடுத்தி வந்தனர். பாஜகவின் அடிமை எடப்பாடி ஆட்சியில் இருந்த போதே பத்து மண்டலங்களில் ஒப்பந்த முறை புகுத்தப்பட்ட நிலையில் இரண்டு மண்டலங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டுதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இப்போது திடீரென போராடவில்லை. நீண்டகாலமாக போராடுகின்றனர். சிபிஐ எம்.எல் (லிபரேஷன்) ஆதரவில் தொடர்ச்சியாகவும், சமரசமின்றியும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். பாஜகவின் அடிமை எடப்பாடி ஆட்சியிலும் போராடினார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும், மு.க.ஸ்டாலினும் அதற்கு ஆதரவு கொடுத்தனர். இரண்டு மண்டலத்திலும் திமுக, இடதுசாரிகள் ஆதரவை பெற்றிருந்ததால்தான் பழைய தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் (NULM) நடைமுறை நீடித்து வந்தது.
திமுக அரசு ஏற்கனவே சாம்சங் தொழிலாளர் போராட்டத்திலும், தொழிலாளர் விரோத 12 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த முயன்றபோதும், தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கிக் கொண்டது. துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவர வழிவகை இருந்த போதும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் சேகர்பாபு முறுகல் நிலையை உருவாக்கினார் என்பதே உண்மை.
அமைச்சர் சேகர்பாபுவையும், திமுக வழக்கறிஞர் குழுவையும் திமுக கட்சியினரும் தமிழக முதல்வரும் வேண்டுமானால் நம்பலாம். மக்கள் நலனிலும், பார்ப்பன மேலாதிக்க -சாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட எவரும் இவர்களை நம்பவே முடியாது. அனைத்துசாதி அர்ச்சகர்கள் நியமன அனுபவம் இதையே நமக்கு உணர்த்துகிறது.
திமுக ஆதரவாளர்கள் கூறுவதுபோல மத்திய அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தத்தையும், ஒப்பந்த முறையையும் காரணம் காட்டி போராட்டத்தைக் கொச்சை படுத்துவதையோ, தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை பின்னுக்கு இழுப்பதையோ ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. அதுபோலவே திமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு என்ற நிலையில் நின்று இப்போராட்டத்தை பரிசீலிக்க முடியாது.
ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் இருந்த போர்க்குணமிக்க அகில இந்திய வேலை நிறுத்தங்கள் இப்போது சடங்குதனமாக மாறிவிட்டது. தொழிலாளர்கள், விவசாயிகளிடம் எழும் இயல்பான போர்க்குணமிக்க போராட்டங்களிலிருந்து தொழிற்சங்கங்களோ, இடதுசாரிகளோ படிப்பினை பெறவில்லை. தூய்மைப் பணியாளர்களின் 13 நாள் போராட்டத்தில் பெரும்பான்மை இடதுசாரிகள் அடையாள எதிர்ப்பை மட்டும் காட்டியதால் ஆர்எஸ்எஸ், பிஜேபி, திராவிட எதிர்ப்பாளர்கள் கைகளுக்கு இப்போராட்டம் சென்று விட்டது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ(எம்) கட்சி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது வரவேற்பிற்குரியது.
தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தோழர் அதியமான் ஆகிய இருவரும் அறிவித்திருப்பது தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தை பலவீனமாக்குவது மட்டுமல்ல, 90 சதவிதத்தினருக்கு மேல் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள, அருந்ததியர் சமூகத்திற்கு உள்ளேயே உள்ள உட்பிரிவு மக்களை பாதிக்கும் ஒரு நடவடிக்கையும் ஆகும்.
பெரும்பாலும் படிப்பறிவு குறைந்த நாற்பது வயதைக் கடந்தவர்களும், பெண்களுமே அதிகம் இப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களை உடனடியாக வேறு பணிக்கு மாற்றுவது என்பது நடைமுறை சாத்தியமற்றது.
படிக்க: தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!
அரசு வேலைகள் அனைத்தும் நவீனமயம் ஆக்கப்பட்டதாலும், ஒப்பந்த ஊழியர் முறைக்கு மாற்றப்பட்டு விட்டதாலும் அரசுப்பணி அற்றுபோய் விட்டது. தூய்மைப் பணியாளர்களுக்கு வேறுபணி வழங்குவது என்பது தற்போதைய நிலையில் குதிரைக்கொம்புதான். அப்படியே வாய்ப்பு உருவாக்கினால் ஏற்கனவே அந்தந்தத் துறையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இதற்கு இடையூறாக குறுக்கே நிற்பார்கள். இந்நிலையில் இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முயற்சிக்க முடியாது.
பணி நிரந்தரம் செய் என்பது எல்லா பணிகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கான அடிப்படை பொது கோரிக்கையாகும். எனவே குறைந்தபட்சம் எட்டு ஆண்டு அல்லது பத்தாண்டு பணிசெய்த தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கை சரியானதுதான். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்கள் நிரந்தர அரசுப்பணியில் வேலை செய்தால் உத்திரவாதமான சம்பளம்; நிலையான வேலை ஆகியவற்றால் அவர்களது குடும்ப எதிர்காலம் மற்றும் அடுத்த தலைமுறையினரின் மேல் படிப்பு ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டும் என்பது கற்பனையல்ல நடைமுறை உண்மை.
தூய்மைப் பணியை நவீனப்படுத்தினால் அதற்கு தடையாக யாரும் குறுக்கே நிற்கப்போவதில்லை. கலைஞர் கருணாநிதியின் தொடக்ககால ஆட்சியில் மனிதனை மனிதன் சுமந்து இழுக்கும் கை ரிக்சாவை ஒழித்து அன்றைய நவீனமான சைக்கிள் ரிக்சா கொண்டுவரப்பட்டது. அதுபோல தூய்மைப் பணியில் நவீனத்தை புகுத்த ஸ்டாலின் முயன்றார் என்றால் அதற்கு பார்ப்பனர்கள், சாதி, ஆதிக்கவாதிகள் தவிர யாரும் குறுக்கே நிற்க மாட்டார்கள். அத்தகைய நடவடிக்கைகளை வரவேற்க காத்திருக்கிறோம்.
படிக்க: தூய்மை பணிக்கு நவீன கருவிகள் பயன்படுத்த கோரி மக்கள் அதிகாரம் மனு!
தூய்மைப்பணி ஒப்பந்த முறைக்கு மாற்றப்படும்போது ஒவ்வொரு பகுதியிலும் வேறுவேறு ஒப்பந்ததாரர்களின் கீழ் தூய்மை பணியாளர்களின் கூலி மாறுபடும். படிப்படியாக குறையும். ஏற்கனவே ஒப்பந்த முறை அமல்படுத்தப்பட்ட இடங்களில் இதுதான் நிலை. இந்த ஒப்பந்த முறை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் கீழ்நிலைக்கு கொண்டு செல்லும்.
தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாகவும், தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற நடவடிக்கை இருந்தது புதிய விடயம் அல்ல. நீதிமன்றமானது தொடர்ந்து தொழிலாளர் விரோத தீர்ப்புகளையே வழங்கி வந்துகொண்டிருக்கிறது.
இங்கு வாழ்வாதாரமா? சுயமரியாதையா? என்ற கேள்வி எழும்புகிறது. இக்கேள்வியை எதிர் எதிராக நிறுத்துவது மூலம் தூய்மை பணியாளர்களை கார்ப்பரேட் அடிமைகளாக்க உதவிசெய்யுமே தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு உதவாது பாதிக்கவே செய்யும். தூய்மை பணியாளர்களை ஒப்பந்ததாரர் அடிமைகளாக்குவது மூலம் மீண்டும் சமுகத்தின் கடைக்கோடி மக்களாக்கும். இப்போராட்டத்தில் சமுகத்தில் உள்ள சாதிய உள்முரண்பாட்டை பட்டைதீட்டி ஒன்றுக்கு எதிராக ஒன்றை நிறுத்தி பார்ப்பன பனியா கும்பல் வெற்றி பெற்றுள்ளது என்றே கூறவேண்டும்.
தூய்மைப் பணியாளர் வேலையை நிரந்தரப் படுத்தாமல் தனியாரிடம் ஒப்படைத்தால் சாதி இழிவு போகாது. இந்தியாவில் சாதி உற்பத்தியோடு தொடர்புடையது என்பதால் உற்பத்தி முறையை மாற்றாமல் சாதியை முற்றிலுமாக ஒழிக்கவும் முடியாது.
படிக்க: பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்! முதல் பலி தொழிலாளிதான்! சமீபத்திய உதாரணம்- Air India!
சாதி இழிவை போக்குவதாக நினைத்துக் கொண்டு தொழிலாளர்களின் அடிப்படை உரிமை வேண்டாம் என்பது தனியார்மயத்திற்கும், கார்ப்பரேட் முதலாளித்துவத்திற்குமே சேவை செய்யவே உதவும்.பார்ப்பனியம் உருவாக்கி வைத்துள்ள சாதி அடிப்படையிலான வேலை பிரிவினையை பாதுகாக்கவே செய்யும்.
தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட 35 ஆண்டுகளில் அனைத்து துறைகளையும், தனியாரிடம் தாரைவார்த்து விட்டனர். இதன் விளைவு பேராசிரியர்கள், மருத்துவர்கள் முதல் சாதாரண கடைநிலை ஊழியர் வரையும், தனியார் தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் நிரந்தர வேலை முறை என்பது அருகி வருகிறது. தனியார் மயத்தின் மற்றொரு கோர விளைவு தீவிர உழைப்புச் சுரண்டல் மற்றும் கொத்தடிமை வேலை முறையாகும். ஆகவே, சாதிய இழிவை நீடிக்க விடக்கூடாது என்று நினைத்து உழைப்பு சுரண்டலையும், கொத்தடிமை வேலைமுறையையும் ஆதரிப்பது வர்க்க கண்ணோட்டத்தை மறுத்து சாதியக் கண்ணோட்டத்தில் அணுகும் முறையாகும். சாதி இழிவு-உழைப்பு சுரண்டல் இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாகும்.
பாசிச மோடி அரசு, கார்ப்பரேட் நலன்களுக்காக தொழிலாளர் சட்டங்களை மாற்றி விட்டது. இதற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராடி வருகிறது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல உரிமைகள் தொழிலாளர்களுக்கு மறுக்கிறது பாசிச மோடி அரசு கொண்டு வந்துள்ள 04 சட்ட தொகுப்பு. இந்த சூழலில் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை தேவையற்றது என்பது மறைமுகமாக பாசிச மோடி அரசின் சட்டத்தொகுப்பை ஆதரிப்பதாகவே முடியும்.
தொழிலாளர்கள் உரிமையும் பெறப்பட வேண்டும். சாதி இழிவும் மாற்றப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் கோரிக்கைகள் வைத்து போராடுவதே தற்போதைய தீர்வாக இருக்கும்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே தூய்மைப் பணியை செய்யும் முறை மாற்றப்பட வேண்டும். அதற்கான வழிவகைகளை யோசித்து வேலை பிரிவினை அடிப்படையில் சாதி கட்டமைப்பு தகர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ள தூய்மைப் பணி அதி நவீன முறையில் மாற்றப்பட வேண்டும்.
தூய்மை பணி என்பது அரசுப்பணியாகவும் நிரந்தரப் பணியாகவும் மாற்றுவது வர்க்க கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கும் தொழிலாளரக தொழிலாளர்கள் உரிமையை பாதுகாப்பதற்கும் உதவும். மேற்கண்ட கண்ணோட்டத்திலேயே நாம் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தர கோரிக்கையை அணுக வேண்டும் என கருதுகிறோம்
இந்தியப் பொருளாதாரமும், அதனை சார்ந்து நிற்கும் தமிழ்நாட்டுப் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கின்ற வேலையில் கூலி அடிமைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார வாழ்வை பறிப்பது மேலும் மோசமான நிலைக்கே அவர்களை கொண்டு செல்லும். இந்த நிலையை விரைவுபடுத்துவதுவது இந்திய உழைக்கும் மக்களை சுரண்டிக்கொழுக்கும் கார்பரேட்டுகள், பார்ப்பன – பனியா கும்பலுக்கு சேவை செய்வதாகவே இருக்க முடியும்.
எனவே, தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்கின்ற கருத்து முற்றிலும் தவறானதாகும். அதுமட்டுமல்ல சாதியக் கட்டமைப்பை பாதுகாக்கும் ஆதிக்க சாதிகள், கார்ப்பரேட் கும்பலின் சுரண்டலை மனமுவந்து ஏற்கச்செய்யும் விபரீதமான செயலாகும்.
- வீரையன்
நன்றி: புதிய கலாச்சாரம் செய்திகள்