வி.எச்.பி கூட்டத்தில் மதவெறியைக் கக்கிய உயர்நீதிமன்ற நீதிபதி மீது  நடவடிக்கை எடு!

ஒரு நீதிபதியே பொதுவெளியில் இப்படி துணிந்து பேசுகிறார் என்றால், இதைக் கண்டு எவ்வித மனச்சஞ்சலமும் இன்றி இந்திய சமூகம் கடந்து செல்கிறது என்றால்,  இந்திய சமூகம் பாசிசமயம் ஆகிவருகிறது என்றுதான் அர்த்தம்.

0
விஹெச்பி கூட்டத்தில் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் நீதிபதி சேகர் குமார் யாதவ்

த்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் சேகர் குமார் யாதவ் (Shekhar Kumar Yadav) டிசம்பர் 8 அன்று விசுவ இந்து பரிசத் நடத்திய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இந்து மதவெறியை கக்கியுள்ளார்.

இந்து மதவெறி தலைக்கு ஏறிய ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினரின் பேச்சுக்கும் அந்தக் கூட்டத்தில் பேசிய இந்த நீதிபதியின் பேச்சுக்கும் இடையில் வேறுபாட்டை கண்டறிவது மிக மிகக் கடினம்.

“முஸ்லிம்களின் குழந்தைகள் ஆரம்பத்திலிருந்து விலங்குகளை கொல்வதற்கு பழக்கப் படுத்தப்படுவதால் அவர்கள் சகிப்புத்தன்மையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது” என்று முஸ்லிம்களின் மீது வெறுப்பைக் கக்கியுள்ளார்.

“இந்துக்களுக்கு சிறுவயதில் இருந்தே அகிம்சை கற்பிக்கப்படுவதால் அவர்களின் குழந்தைகளிடம் அகிம்சையும் சகிப்புத்தன்மையும் வேறூன்றி இருக்கிறது” என்றும் “இந்துக்கள் சிறுவயது முதலே எரும்பு போன்ற சிறு உயிர்களைக் கூட கொல்லக்கூடாது என்று கற்பிக்கப்பட்டு இருக்கிறார்கள்” என்றும் புளுகித் தள்ளியுள்ளார்.

ஐயா நீதிபதி அவர்களே, புளுகுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

வேத மந்திரங்கள் ஓதப்படுவதை காதால் கேட்கும் சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் வேத மந்திரங்களை உச்சரிக்கும் சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும்  மனுதர்ம விதி வகுத்து செயல்படுத்தியது இந்து மதம் தானே?

சூத்திரனாக பிறந்த சம்புகன் கடவுளை நோக்கி தவம் இருந்தான் என்ற ஒரே காரணத்திற்காக அவனை கொன்ற ராமன் இந்துக்களின் கடவுள் தானே?

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை படுகொலை செய்பவர்களும் தங்களை இந்துக்கள் என்றுதானே சொல்லிக் கொள்கிறார்கள்? குஜராத்தில் 3000 இஸ்லாமியர்களை கொன்றவர்களும் இந்துக்கள் தானே?


படிக்க: 2002 குஜராத்தில் என்ன நடந்தது? | கருத்தரங்கம் || தோழர் பாலன்


என்பது போன்ற ஆயிரம் கேள்விகளை நம்மால் கேட்க முடியும். ஆனால் இது போன்ற கேள்விகள் இந்த நீதிபதியின் மனதில் ஒரு சிறு சஞ்சலத்தைக் கூட ஏற்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

ஒரு ஆர் எஸ் எஸ் உறுப்பினரைப் போல பொது மேடையில் நின்று கொண்டு இப்படிப்பட்ட மதவெறி நஞ்சைக் கக்கும்  ஒருவரிடம் மனிதாபிமானத்தையும் நீதியையும் நேர்மையையும் எதிர்பார்ப்பது அடி முட்டாள்தனம் என்பது நாம் அறியாத ஒன்று அல்ல.

இந்த உயர் நீதிமன்ற நீதிபதி தன்னுடைய 34 நிமிட பேச்சில் தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். இஸ்லாமியர்களை தன்னிலிருந்து வேறுபடுத்தி அவர்கள் என்று கூறுகிறார். இந்த நீதிபதியின் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சு ஜனநாயக உணர்வு படைத்த எவர் ஒருவராலும் சகித்துக் கொள்ளவே முடியாத அளவிற்கு உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக அவரின் பேச்சில் சிலவற்றை பார்ப்போம்.

..… “இவை அனைத்தும் நமக்கு கற்பிக்கப்படுகிறது.   அதனால்தான் நாம் சகிப்புத் தன்மையுடன் இருக்கிறோம். பிறருடைய வலியைப் பார்த்து நாம் வேதனைப்படுகிறோம்.  ஆனால் நீங்கள் (முஸ்லிம்கள்) அதை உணரவில்லை.  ஏன்?  நம் குழந்தைகள் பிறந்தது முதல் கடவுளை நோக்கித் தள்ளப்படுவதால், அவர்கள் மந்திரங்களையும் வேதங்களையும் ஓதுகிறார்கள், அகிம்சையைப் பற்றி பேசுகிறார்கள்.  ஆனால் உங்கள் கலாச்சாரத்தில், குழந்தைகள், தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே, விலங்குகளை  படுகொலை செய்வதற்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். உங்கள் குழந்தைகள் சகிப்புத்தன்மையும், தாராள மனப்பான்மையும் கொண்டிருக்கும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்” என்று இந்த நீதிபதி கேட்கிறார்.


படிக்க: இந்திய நீதித்துறையின் அவலமும்  பாசிசக் காவிக் கூட்டத்தின் ஆட்டமும்!


….”அவர்கள் நாட்டிற்கு ஆபத்தானவர்கள்.  பொதுமக்களை தூண்டி விடுபவர்கள், நாட்டை முன்னேற விடாமல் தடுப்பவர்கள்.  அத்தகையவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் “இந்துக்கள் சகிப்புத் தன்மையுடனும் அன்புடனும் இருப்பதால் அவர்களை கோழைகள் என்று நினைத்து விடக்கூடாது” என்றும் நீதிபதி முழங்கியுள்ளார்

படத்தை கிளிக் செய்து வாட்சப் சேனலில் இணைந்துக் கொள்ளுங்கள்

இஸ்லாமியர்களின் மனங்களில் குழந்தை பருவத்திலிருந்து வன்முறை வளர்க்கப்படுகிறது என்றும் இஸ்லாமியர்கள் ஆபத்தானவர்கள், நாட்டு முன்னேற்றத்தை தடுப்பவர்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும்  வெறுப்பை கக்கும் நீதிபதி, “இந்துக்களை கோழைகள் என்று நினைத்து விடாதீர்கள்” என்று எச்சரிக்கும் வார்த்தைகளின் மூலமாக இந்துக்களை கொம்பு சீவிவிடுகிறார் என்பதுதான் உண்மை.

இந்த நீதிபதியின் மதவெறி பேச்சை குறித்து எழுதுவதற்கு பக்கங்கள் போதாது என்பதால் அவரது பேச்சில் மேலும் ஒரு பகுதியை எடுத்துக் கூறுவதுடன் முடித்துக் கொள்வோம்.

…. “அயோத்தியில் ராமர் கோவில் நமது முன்னோர்களின் பல்லாண்டு தியாகத்தால் கட்டப்பட்டதைப் போல பொது சிவில் சட்டமும் விரைவில் நடைமுறை உண்மையாகி விடும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை”…. என்று தனது ஆசையையும் நம்பிக்கையும் ஒருங்கே வெளியிடுகிறார்.

இப்படி கூறுவதன் மூலம் ரத யாத்திரை நடத்தி முஸ்லிம்களை கொன்று இரத்த ஆறு ஓடவிட்டு, பிறகு கடப்பாரை (கர)சேவை நடத்தி பாபர் மசூதியை இடித்து அதன் பிறகு நீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பை பெற்று ராமர் கோவில் கட்டியதைப் போன்ற வழியில் பொது சிவில் சட்டம் வரும் என்கிறாரா?

ஒரு நீதிபதியே பொதுவெளியில் இப்படி துணிந்து பேசுகிறார் என்றால், இதைக் கண்டு எவ்வித மனச்சஞ்சலமும் இன்றி இந்திய சமூகம் கடந்து செல்கிறது என்றால்,  இந்திய சமூகம் பாசிசமயம் ஆகிவருகிறது என்றுதான் அர்த்தம்.

மக்களின் மனங்களில் ஏறி வரும் பாசிச விசத்தை அழிப்பதற்கு ஜனநாயக சக்திகளும் புரட்சிகர சக்திகளும் தங்கள் பணிகளை பல மடங்கு அதிகரிக்க வேண்டும். இதன் மூலம்தான்  பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கான பாதையில் நாம் முன்னேற முடியும். முதற்கட்டமாக, நாட்டில் கலவரத்தைத் தூண்டக்கூடிய வெறுப்புப் பேச்சுப் பேசிய நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராடுவோம்.

தங்கசாமி

செய்தி ஆதாரம்: Thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here