பாசிச பாஜக தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு தனக்கு  எதிராக சிந்திப்பவர்களையும் பேசுபவர்களையும் ஒடுக்குமுறை சட்டங்களை ஏவி அவர்களின் கருத்துரிமைக்கு முட்டுக்கட்டை போடுகிறது.  தற்போது உலக புகழ்ப்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராய் மீது ஊபா சட்டத்தை ஏவியுள்ளது.

எழுத்தாளர் அருந்ததி ராய் இவரைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை இருந்தாலும் ஒரு சிறிய அறிமுகத்துடன் தொடங்கலாம். 

60 வயதைக் கடந்த எழுத்தாளர் அருந்ததிராய் கடந்த காலத்தில் மேதா பட்கருடன் இணைந்து நர்மதை அணை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்றவர். மாவோயிசம், முதலாளித்துவ சுரண்டல்,  காஷ்மீர் பிரச்சினை, பாசிச பயங்கரவாதம் குறித்தும் தொடர்ச்சியாகவும் வெளிப்படையாகவும் எதிரிகள் அஞ்சக் கூடிய வகையில் தனது கருத்தை பேச  கூடியவர். 1997ல் ஆங்கில நாவல்களுக்கு  வழங்கப்படும் உயரிய விருதான புக்கர் பரிசை “தி காட் ஆப் சுமால் திங்ஸ்” என்ற நாவலுக்காக பெற்றார் அருந்ததிராய். 

2015 ஆம் ஆண்டில் மத சகிப்புத் தன்மை மற்றும் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிராக,  ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ என்ற படத்தில் சிறந்த திரைக்கதைக்காக 1989 ஆம் ஆண்டில் பெற்ற தேசிய விருதை திருப்பியளித்தார்.   அருந்ததிராய் எழுதிய “தோழர்களுடன் ஒரு நடை பயணம்” என்ற நூல் மாவோயிஸ்டுகளுடன் காடுகளில் பயணித்த அனுபவத்தை நமக்கு எடுத்துக் கூறும். 

கடந்த 2019 ஆம் ஆண்டு “அடக்குமுறை தான் ஜனநாயகமா எதிர்த்து நில்” என்ற தலைப்பில் எமது அமைப்பான மக்கள் அதிகாரம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார்.

எதற்காக அவர் மீது ஊபா வழக்கு?

கடந்த 21.10.2010 அன்று Azadi The only way (விடுதலை ஒன்றே ஒரே வழி) என்ற தலைப்பில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான கமிட்டி ஏற்பாடு செய்த கூட்டத்தில்   எழுத்தாளர் அருந்ததிராய், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் சர்வதேச சட்ட பேராசிரியர் டாக்டர் ஷேக் சௌகத் ஹூசைன் மற்றும் கவிஞர் வரவரராவ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அருந்ததி ராய் பேசும் போது ‘காஷ்மீர் இந்தியாவின்  ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை என்றும் இந்திய ஆயுதப் படையால் காஷ்மீர் வலுக்கட்டயமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசிடமிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுதந்திரத்திற்காக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று அருந்ததிராயும், அதே கருத்தை ஹூசைனும் பேசினார்.

இதனை அடுத்து காஷ்மீரை சேர்ந்த சமூக (பாஜக) ஆர்வலர் சுஷில் பண்டிட் புகாரின் பேரில் புதுடெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நவம்பர் 27 2010 திலக் மார்க் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டது. அக்டோபர் 21 அன்று அரசியல் கைதிகளை விடிவிப்பதற்கான குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் அருந்ததிராய் மற்றும் பேராசிரியர் ஹுசைன் உள்ளிட்டோர் எழுச்சியை தூண்டும் வகையில் உரை நிகழ்த்தியதாக புகார் கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 153ஏ, 153பி, 504, 505 மற்றும் UAPA  பிரிவு 13 ஆகியவற்றின் கீழ் டெல்லி காவல்துறை வழக்கு தொடர அனுமதி கோரியது. 153A, 153B மற்றும் 505 ஆகிய மூன்று IPC விதிகளின் கீழ் வழக்கு பதிய டெல்லி லெப்டினன்ட் கவர்னர் கடந்தாண்டு அனுமதி அளித்தார். இது குறித்து நமது மக்கள் அதிகாரம் இணையதளத்தில் பாசிஸ்டுகளின் அடுத்த குறி அருந்ததிராய் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தோம்.

ஆனால் இந்த வழக்கு நிற்காது என அறிந்த காவிப் பாசிஸ்டுகள் தனது அதிகார மையங்களை பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், பிரிவு 45(1)  இன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வெள்ளிக்கிழமை டெல்லி லெப்டினன்ட் கவர்னர்  வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இழந்த பாஜக பாசிசத்தை தீவிரமாக அமல்படுத்த எத்தனிக்கிறது என்பதையே அருந்ததிராயின் மீது பதிவு செய்யப்பட்ட UAPA வழக்கின் மூலம் உணரமுடிகிறது. 

தேர்தலுக்கு முன்பு எல்கர் பரிஷத்-  பீமாகோரேகான் வழக்கில் ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா, ஸ்டேன் ஸ்வாமி, ரோனா வில்சன், வரவரராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையிலடைத்தது. சரியான ஆதாரங்கள் இல்லாமல் இருந்தாலும் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டது நீதிமன்றம். 2018 ஆம் இவர்கள் மீதும் ஊபா சட்டத்தின் பிரிவுகளின் கீழ் புனே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின்  தோல்விக்கு அருந்ததி ராய் உள்ளிட்ட பாசிசத்திற்கு எதிரான கருத்தை எந்தவித சமரசமும் இன்றி மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியவர்களும் ஒரு காரணம். 2024 தேர்தலுக்கு முன்பு அவர்களது இலக்கில் யாரெல்லாம் மிச்சம் இருந்தார்களோ அவர்களை கூட்டணி ஆட்சி அமைந்த உடன் இப்போது வேட்டையாடத் தொடங்கியுள்ளது பாசிச பாஜக.

காஷ்மீர் குறித்து அருந்ததிராய் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர் கூறியபடியே காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆயுதப்படைகளின் மூலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை சட்டப்பிரிவு 370 நீக்கியதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்துள்ளது என்று கூறலாம்.

இன்றும் அங்குள்ள மக்கள் ராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் சுதந்திரம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். திறந்தவெளி சிறை கூடாரம் போலவே காஷ்மீர் இன்றும் காட்சியளிக்கிறது. அவர்கள் நீண்ட காலமாக தங்களது சுய நிர்ணய உரிமைக்காக போராடி வருகிறார்கள்.

படிக்க:

♦ பாசிஸ்ட்டுகளின் அடுத்த குறி அருந்ததிராய்!

♦ நியூஸ் கிளிக் ஆசிரியர் சட்ட விரோத கைதும், விடுதலையும்!

கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுக்கு 14 வருடம் கழித்து இப்போது ஊபா வழக்கு பதிந்ததன் மூலம் பாசிச பாஜக மற்றும் அவர்களின் முதலாளிகளான அம்பானி அதானி இவர்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்களையும், போராடுபவர்களையும் வாழ்நாள் சிறையில் தள்ள அதிகாரத்தை கேடாய் பயன்படுத்துகிறது.

ஒருவேளை பாசிச பாஜக தேர்தலில் தோற்று இருந்தாலும் கூட அரசு அதிகார மையங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் கும்பலை பயன்படுத்தி இடதுசாரிகளையும், முற்போக்கு எழுத்தாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் ஒடுக்க முயன்றிருக்கும். ஆகையால் நாம் போராட வேண்டியது தெருவில் என்பதை உணர்த்துகிறது பாசிச கும்பல். 

பாசிஸ்டுகளுக்கு எதிராக களமாடுபவர்கள் அவர்களின் அடக்குமுறைக்கு அஞ்சுவதில்லை என்பதே வரலாறு. அரசின்  அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு ஊபா சட்ட பிரிவுகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட  பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா 90 சதவிகித உடல் இயங்காத நிலையிலும் உறுதியாக நின்று போராடினார்.

ஜி.என்.சாய்பாபாவின் கைதை கண்டித்து அருந்ததிராய் அவுட்லுக்கில் எழுதிய கட்டுரைக்காக criminal contempt நோட்டீஸ் அனுப்பியது மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை.

ஆகையால் அருந்ததிராய் உள்ளிட்டவர்கள்  தான் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே தான் அழுத்தமாக தனது கருத்துக்களை பேசுகிறார்கள். இதைக் கண்டுதான் பாசிசம் அஞ்சுகிறது. 

எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு ஆதரவாய் நிற்போம். மக்கள் செல்வாக்கு இல்லாமல், மக்களால் புறக்கணிக்கப்பட்டு அதிகாரத்தில் அமர்ந்திருக்கும்  பாஜக தனது பாசிச கரங்களின் மூலம் கருத்துரிமையை நசுக்குவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. அதற்கு எதிராக போராடி வெல்வோம்.

 

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here