2024  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரவர பாசிஸ்ட்டுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு செய்கிறார்கள். அதில் முக்கியமாக பாசிச கும்பலை பொதுத் தளத்தில் அம்பலப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து தாக்குவது அதிகரித்துள்ளது. ஏற்கனவே பீமா கோரேகான் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களை பொய் வழக்கு புனைந்து சிறையிலடைத்துள்ளார்கள். மீதமிருப்பவர்களையும் எப்படியாவது ஒழித்துக் கட்டுவதே இவர்களது இலக்காக உள்ளது.

அந்த லிஸ்டில் தற்போது இடம்பிடித்துள்ளவர் உலகறிந்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராய். இவர் தொடர்ந்து மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பேசி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 145-வது ஐரோப்பிய கட்டுரைக்கான பரிசைப் பெற்றுக் கொண்டு இந்தியாவில் நிலவும் பாசிசத்தை பற்றி அந்த மேடையில் பேசினார்.

இது பல இணையதளங்களிலும் கட்டுரையாக்கப்பட்டு வாசகர்களை சென்றடைந்தது. நமது மக்கள் அதிகாரம் இணையதளமும் தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டிருந்தோம். (படிக்காத வாசகர்கள் கீழுள்ள லிங்கை பயன்படுத்திக் கொள்ளவும்). சரியான நேரம் பார்த்த சங்பரிவார் கும்பல் அருந்ததிராய்க்கு குறிவைத்துள்ளது..

காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்கும் வகையில் 2010 ஆம் ஆண்டு  பேசியதாக அருந்ததிராய் மீதும், காஷ்மீர்  பேராசிரியர்   ஷேக் ஷோகத் ஹூசைன் மீதும் அதே ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தூசித் தட்டி எடுத்துள்ள பாசிச கும்பல் டெல்லி லெப்டினண்ட் கவர்னர் வி.கே.சக்சேனா மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் கொடுத்த புகாரின் அடிப்படையில் நவம்பர் 29, 2010 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அக்டோபர் 21, 2010 அன்று ‘விடுதலையே ஒரே வழி’ என்ற பதாகையின் கீழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழு (CRPP) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலகம் ஏற்படுத்தும் பேச்சுக்களை பேசியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் புகார்தாரர் மனுவில் கூறியிருந்தார்.

இதனடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 153A, 153B மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்கள் செய்ததற்காக முதல்நிலை வழக்கு (prima facie) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சக்சேனாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவு 153A  மத, இன, பிறந்த இடம் மற்றும் வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமை ஊக்குவிப்பது தொடர்பான குற்றங்களை கையாளும் அதே வேளையில், பிரிவு 153 B தேசிய ஒருமைப்பாட்டுக்கு தொடர்பான கூற்றுக்கள் தொடர்பானது, பிரிவு 505 தவறான அறிக்கைகள், வதந்திகள் அல்லது இராணுவ பணியாளர்களுக்கிடையே கலகம் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அரசுக்கு எதிரான குற்றத்தை தூண்டுவது பொதுஅமைதியை குலைப்பது தொடர்பான குற்றங்களை உள்ளடக்கியது.

எஃப்ஐஆரில் குறிப்பிட்டிருந்த ஐபிசி பிரிவுகளில் ஒன்றான தேசத்துரோகத்தின் கீழ்  (124ஏ) குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கப்படவில்லை என்பதையும் அதிகாரப்பூர்வ குறிப்பு தெளிவுப்படுத்துகிறது.

உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய முக்கிய தீர்ப்பில் ஏற்கனவே நிலுவையில் இருந்த தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் உள்ள விசாரணைகள், மேல்முறையீடுகள், நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கூறியது. அதனால் பாசிஸ்டுகளால் தேசத்துரோக வழக்கு பதிய முடியவில்லை.

மேலும் அதே கூட்டத்தில் பேசியிருந்த அருந்ததிராய், “காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒர் பகுதியாக இருந்ததில்லை என்றும், இந்தியாவின் ஆயுதப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் இந்தியாவில் இருந்து ஜம்மு – காஷ்மீர் மாநிலம் விடுதலைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்றும் பேசியிருந்தார்.

அருந்ததிராய் பேசியதில் எந்த தவறும் இல்லை என்பது காஷ்மீர் வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த வழக்கை பதிந்துள்ள பாசிச அரசாங்கதிற்கும் நன்றாகவே தெரியும். அதனால் தான் 370ஏ சட்டப்பிரிவை நீக்கியது. காஷ்மீரை இரண்டாக உடைத்தது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை பறித்தது. இதெல்லாம் கடந்த கால வரலாறு.

ஆனால் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்னர் பதியப்பட்ட எஃப்ஐஆரை தோண்டியெடுத்து இப்போது வழக்கு தொடர்ந்துள்ள சூட்சமத்தை நாம் உணர வேண்டும். உடலளவில் செயல்படாத நிலையில் இருந்த வரவரராவ், ஸ்டேன்ஸ்வாமி, சாய்பாபா உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களை கண்டு அஞ்சிய 56 இன்ச் மோடி களத்தில் செயல்படும் அருந்ததிராயை கண்டு அஞ்சியதில் ஆச்சரியமில்லை. அதற்காக நாம் இதனை எளிதில் கடந்துப் போய் விட முடியாது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக பாசிச வேட்டையை தொடங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ் –  பாஜக  பாசிச கும்பல். ஹிட்லர் தனக்கு எதிரானவர்களை எப்படி தேடி வேட்டையாடினானோ அதுபோல் களத்தில் இறங்கிவிட்டார்கள் இவர்கள். செயல்பாட்டாளர்கள் கைது, பத்திரிக்கையாளர்கள் கைது, எதிர்கட்சிகளை முடக்கும் விதமாக அமலாக்கத்துறை ரெய்டு, கைது என்று நீள்கிறது.

அருந்ததிராய் போன்ற செயல்பாட்டாளர்களின் கைதுக்கான நடவடிக்கையை நாம் ஒரு போது அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு ஆதரவாய் களத்தில் ஒன்றுபட்டு பாசிஸ்டுகளை மோதி வீழ்த்துவோம்.

  • நலன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here