விடுதலைப் போரின் வீரமரபு! – 20

தொடர்ச்சி…

முட்டாள்தனமான பிரகடனத்தின் பின்னால் உள்ள அவர்களின் நோக்கம் என்ன என்று பாருங்கள், அதை அம்பலப்படுத்துங்கள். எச்சரிக்கையாக இருங்கள்!” என்று தன் மக்களுக்கும் சிப்பாய்களுக்கும் அறிவித்தார் ஹஸ்ரத். போராடித் தோற்ற பிறகும் எதிரியின் கரங்களில் சிக்கிவிடக் கூடாதென்று இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் மகனோடு அலைந்து திரிந்து, 15 ஆண்டுகள் எளிய வாழ்க்கை வாழ்ந்து இறந்தார்.

சென்னை மாகாணத்திலிருந்து பைசாபாத் சென்று மக்கள் மத்தியில் ஆயுதப்புரட்சியைப் பிரச்சாரம் செய்து அணிதிரட்டி, 1857-இலேயே பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்கொண்டு தோற்கடித்தவர் மவுல்வி அகமதுல்லா. சிப்பாய்ப் புரட்சி அவரை மாபெரும் தலைவராக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியால் சொத்து பறிக்கப்பட்ட ஜமீன்தாரான குன்வர் சிங்கின் வயது 80. எழுச்சிக்குத் தலைமை வகித்து களத்திலேயே வீர மரணமடைந்த அவரைப் பற்றிப் பல தாலாட்டுகள், கதைப்பாடல்கள். குன்வர் சிங் இன்னமும் மக்களின் நாவில் பாட்டாய் நடக்கிறான்.

இளம் அரசியான ஜான்சி ராணி லட்சுமிபாய், ஒரு ஆண் பிள்ளையைத் தத்து எடுத்து தன் வாரிசாக நியமிக்க விரும்பியதைத் தடுத்து, ஜான்சியை கவர்ந்து கொண்டது பிரிட்டிஷ் அரசு. சிப்பாய்கள் மத்தியில் கலகத்தைத் தூண்டுவதாகவும் லட்சுமிபாய் மீது குற்றமும் சாட்டியது. போரில் இணைந்து கொள்ள முதலில் சற்றுத் தயக்கம் காட்டிய லட்சுமிபாய், களத்தில் இறங்கிய பின் இறுதிவரை வழிநடத்தினார். “நம் கைகளால் நம் சுயராச்சியத்தை என்றும் புதைக்க படையை மாட்டோம்” என்று அவருடைய தலைமையில் உறுதிமொழி எடுத்தனர் சிப்பாய்கள்.

அவரது படையில் பெண்கள் பீரங்கிகளை இயக்கினார்கள், குண்டுகளையும் போர்க்கலன்களையும் சுமந்து சென்று வீரர்களுக்கு விநியோகித்தார்கள். தாந்தியா தோப்பின் உதவியுடன் குவாலியரைக் கைப்பற்றினார் லட்சுமிபாய். மன்னன் சிந்தியாவின் 20,000 வீரர்கள் லட்சுமிபாயுடன் சேர்ந்து கொள்ளவே, ஆக்ராவிற்குத் தப்பியோடி வெள்ளையரிடம் தஞ்சம் புகுந்தான் சிந்தியா. சிப்பாயின் உடையணிந்து குதிரை மீது அமர்ந்தபடி ஜூன் 1858இல் போர்க்களத்தில் உயிர் நீத்தார் ஜான்சி ராணி. அவருடைய உயிர்த்தோழியான முசுலிம் பெண்ணும் அவருடன் போர்க்களத்திலேயே மடிந்தார். சிப்பாய்களுக்குச் சிறந்த உணவையும், தனக்கு எளிய உணவையும் கொடுக்க கட்டளையிட்டார் ஜான்சி ராணி. களத்தில் உயிர்நீத்த சமயத்தில், தன் செல்வங்களை எல்லாம் தன் வீரர்களிடம் கொடுத்துவிடச் சொன்னார். ‘எங்கள் கண் இமைகளில் உன்னைக் காப்பாற்றுவோம் ஜான்சி ராணி…’ என்று தொடங்கும் நாட்டுப்புறப் பாடல் இன்னமும் உயிர் வாழ்கிறது.

1857 சிப்பாய்ப் புரட்சி தோற்றுவித்த வீரப்புதல்வர்கள் ஏராளம். தனித்தனிப் போர்க்களங்களில் அவர்கள் காட்டிய வீரமும், போர்த்திறனும் வியக்கத்தக்கவையாக இருந்தன. டெல்லியில் வீட்டுக்கு வீடு போர் நடந்தது. “ஆயிரம் அடி தொலைவில் இருந்த டெல்லி கோட்டையைப் பிடிக்க, பிரிட்டிஷாரின் பீரங்கிப் படைக்கு 10 நாட்கள் பிடித்தது என்றால் அது இராணுவ அதிசயம்.. கோட்டையின் மதில் மேலிருந்து சிப்பாய்கள் முறையான பீரங்கித் தாக்குதல் நடத்தியிருந்தால் ஆங்கிலேயர்கள் தலையால் தண்ணீர் குடித்திருப்பர்” என்று டெல்லிப் போரை வருணித்தார் எங்கெல்ஸ்.

எனினும் செப்டம்பர் 1857-இல் டெல்லியைக் கைப்பற்றியது பிரிட்டிஷ் படை. பகதூர் ஷாவின் இரண்டு மகன்களை ஹோட்ஸன் என்ற இராணுவ அதிகாரி நேருக்குநேர் சுட்டுக் கொன்றான். பகதூர் ஷா பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். குன்வர்சிங், அகமதுல்லா போன்ற பல தலைவர்கள் 1859-இல் கொல்லப்பட்டனர். சரணடைய மறுத்த நானா சாகிப் நேபாளத்துக்குத் தப்பிச் சென்றார். இறுதிவரை கொரில்லாப் போர் தொடுத்த தாந்தியா தோப், தூங்கும்போது துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். தலைமையை இழந்த பின்னரும் 1859 வரை போர் தொடர்ந்தது. அவத் சமஸ்தானத்தில் கொல்லப்பட்ட 1.5 லட்சம் பேரில், 50,000 பேர் மட்டுமே சிப்பாய்கள், ஏனையோர் மக்கள் என்ற விவரம் இந்த எழுச்சியின் மக்கள்திரள் தன்மைக்குச் சான்று கூறுகிறது.

எரிமலையாய் வெடித்து எரிந்த புரட்சி, மெல்ல அவிந்து அடங்கியது. கோடிக்கணக்கான மக்களைத் தன் பக்கம் ஈர்த்த போதிலும் இது நாடு தழுவிய எழுச்சியாக விரியவில்லை. பெரும்பாலான மன்னர்கள் இதனை ஆதரிக்கவில்லை என்பதுடன், படை அனுப்பி எழுச்சியை ஒடுக்க பிரிட்டிஷாருக்கு உதவினார்கள். குவாலியரின் சிந்தியா, இந்தூரின் ஹோல்கர், ஐதராபாத் நிஜாம், சீக்கிய, ராஜபுதன மன்னர்கள், ஜோத்பூர், பாட்டியாலா, காஷ்மீர் மற்றும் நேபாள மன்னர்கள்… என்று துரோகிகளின் பட்டியல் மிகவும் பெரிது. “மன்னர்கள் மட்டும் தடுப்பரண்களாகச் செயல்பட்டிருக்கவில்லை என்றால், இந்தச் சூறாவளியின் பேரலை நம்மைத் தூக்கி வீசியிருக்கும்… என்றான் கவர்னர் ஜெனரல் கானிங்.

கந்து வட்டிக்காரர்களும், புதிய ஜமீன்தார்களும், சென்னை, பம்பாய், கல்கத்தாவைச் சேர்ந்த பெருவணிகர்களும் புரட்சியை எதிர்ப்பதில் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் துணை நின்றார்கள். உலகெங்கும் காலனிகளைக் கொள்ளையடித்த செல்வமும், முதலாளித்துவப் பொருளாதாரம் வழங்கிய வலிமையும், தொழில்முறையில் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவமும் பிரிட்டனின் வெற்றியை எளிதாக்கின. இருப்பினும், இன்னொரு எழுச்சி தோன்றிவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாகக் கும்பனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியாவின் நிர்வாகத்தை நேரடியாக தன் கையில் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசு.

1857-இன் சிப்பாய்களிடம் வீரம் இருந்தது, தியாக உணர்ச்சி இருந்தது. ஆனால், நவீன ஆயுதங்களோ, ஒருங்கிணைந்த இராணுவத் திட்டமோ இல்லை. கிளர்ச்சி செய்த விவசாயிகள் புதிய ஜமீன்தார்களை விரட்டினார்கள், கந்துவட்டிக் கணக்குகளைக் கொளுத்தினார்கள், ஆனால் அதன்பின் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். ஆம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முழு வலிமை பற்றிய புரிதல் அவர்களுக்கு இல்லை. அதனை அகற்றியபின் நிறுவப்போகும் அரசமைப்பு குறித்த தெளிவும் இல்லை. எனவே காலனியாதிக்க எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கூறுகளைக் கொண்டிருந்த போதிலும் அந்த எழுச்சி தேங்கி நின்றது.ஆயினும், மன்னர்களும் பிரபுக்குலமும் தமது போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் தகுதியிழந்து விட்டார்கள் என்பதை சிப்பாய்களும் மக்களும் தமது அனுபவத்தில் புரிந்து கொண்டார்கள். புதியதொரு அதிகார அமைப்பை உருவாக்கத் தொடங்கினார்கள். 6 சிப்பாய்களும் 4 சிவிலியன்களும் இணைந்த ஒரு நிர்வாக கமிட்டியொன்று டெல்லியில் உருவாக்கப்பட்டது. நிர்வாகம் மற்றும் இராணுவம் தொடர்பான எல்லா முடிவுகளையும் ஒட்டெடுப்பு நடத்தி”கலகத்தை உடனே அடக்கவில்லை என்றால், நாம் புதிய பாத்திரங்களை மேடையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று பிரிட்டிஷ் அரசை எச்சரித்தான் டிஸ்ரேலி. அத்தகைய புதிய பாத்திரங்கள் உடனே தோன்றி விடவில்லை. டிஸ்ரேலியின் அச்சம் மெய்ப் பிக்கப்படுவதற்கு இந்தியா மேலும் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. விடுதலைப் போராட்ட மரபின் வீரியமனைத்தையும் உட்செரித்துக் கொண்ட வீரனுக்காக, ‘காலனியாதிக்கத்தை அதன் உயிர் நிலையில் தாக்க வல்லது கம்யூனிசமே’ என்று முழங்கத் தெரிந்த மாவீரன் பகத்சிங்கிற்காக, இந்தியா மேலும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

  • குப்பண்ணன்

முந்தைய பதிவு:

விடுதலைப் போரின் வீரமரபு! – 20 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here