அவர மட்டும் பத்திரமா இட்னு போனீங்களே?!

கருவறைக்கும் கல்லறைக்கும்
இடைப்பட்ட தூரத்தை
கடக்கும் முன்,
பனையூர் பண்ணையாரின்
பதவி ஆசைக்கு
பலியாகி கிடக்கிறது
கரூர் பிணங்கள்….
கேரவன் டயரின்
எலுமிச்சம் பழங்கள்.
திரை பிரபலத்தின்
முதலீட்டில்,
ரசிக மனங்களில்
ஆசை காட்டி,
கோட்டைக்கு
வழி கேட்கும்
வேட்டைக்காரனின்
நர வேட்டைக்கு
நாற்பது பிணங்கள்.
கரியரின் உச்சத்தில்
இருந்து வந்து
கரூரில் ரத்தத்தில்
கை நனைத்திருக்கும்
அரசியல் வியாதி.
அரசியல் ஆதாயத்திற்கு
காலம் கடத்தி,
ஊடகங்களை ஓத விட்டு,
கேரவன் லைட்டை
ஆன் – ஆஃப் செய்து,
அணில் குஞ்சுகளின்
சத்தத்தில் கிறங்கி
கூட்டப்பட்ட கூட்டத்தில்
சொல்லெரிந்து
அரசியல்
அறுவடைக்கு காத்திருந்த
அரசியல் ஓநாயின்
பேச்சுக்கு மூச்சடைத்து
செத்து விழுந்தது
ரசிகப் பிணங்கள்!
கரண்ட் கம்பிகளிலும்
கட்டடக் கூரைகளிலும் ஏறி
வித்தை பார்க்க வந்த
அணில் குஞ்சுகள்
அப்போதே நம்மை எச்சரித்தன,.
தற்குறிகளின் குறியீட்டை
தவறாக மதிப்பிட்டோம்,
சனிக்கிழமை சைக்கோவின்
சாவு வண்டிக்கு
வழிவிட்டோம்!
தலைமறைவில் இருக்கும்
தற்குறி தலைவர்களே,
அவரை இட்னு வந்து
அவர மட்டும் பத்திரமா
இட்னு போனீங்களே?
எங்கள மட்டும்
சுடுகாட்டுல
வுட்டுட்டு பூட்டிங்களே?
பிஞ்சுக் குழந்தைகளின்
பிணத்தின் மேல்
பின்னங்கால் பிடறியில் அடிக்க
சென்னைக்கு ஓடியவனை
மறுபடி அழைத்து வாருங்கள்
மிச்சமிருக்கிறது
ஒரு பிய்ந்த செருப்பு!
- இளமதி






