2008 ஆம் ஆண்டு நடந்த ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக ஆட்சி முறையை ஒழித்து கட்டி வருகிறது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று முன்வைத்து மக்களை ஏமாற்றி வந்த முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக முறையை முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நேர்மாறாக பாசிச பயங்கரவாத ஆட்சியை முன்னெடுத்துகிறது என்பதை தொடர்ந்து புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தி வருகிறது.
1930 களில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தம் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் பாசிச சர்வாதிகாரமாக உருவெடுத்தது, அது இத்தாலியில் முசோலினியையும், ஜெர்மனியில் ஹிட்லரையும் ஜப்பானில் ஹிரோடோ வையும் பெற்றெடுத்தது.
அதன் பிறகு இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட கடுமையான தோல்விக்கு பின்னர் பாசிசம் தனது வாலை சுருட்டி கொண்டிருந்தது. அதே சமயத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டு எழுவதற்கான தருணத்தை பார்த்துக் கொண்டிருந்தது.
அத்தகைய ஒரு தருணத்தை 2008 உலகப் பொருளாதார நெருக்கடி உருவாக்கியது. இதன் உப விளைவாக ஐரோப்பிய நாடுகள் பலவிலும் வலதுசாரி என்று அழைக்கப்படுகின்ற பாசிச பயங்கரவாத ஆட்சி தலைவிரித்து ஆடுகிறது. அது தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் வரை நீடிக்கிறது.
2024 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏறக்குறைய 56 நாடுகளில் 400 கோடி மக்கள் தேர்தல்களில் பங்கெடுக்க உள்ளனர் என்ற சூழலில், சமீபத்தில் ஐரோப்பாவில் நடைபெற்ற தேர்தல்கள் ஜூன் 6 துவங்கிய ஜூன் 9 வரை நடந்து முடிந்தது.
இந்த தேர்தல்களின் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளில் பாசிச பயங்கரவாதிகள், அதிதீவிர வலதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது சமகாலத்தில் நிலவுகின்ற வெறுக்கத்தக்க செய்தியாகும்.
ஐரோப்பிய நாடுகளில் ஹங்கேரி, இத்தாலி, ஸ்வீடன், பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தீவிர வலதுசாரி அமைப்புகள் அதாவது பாசிச அமைப்புகள் நேரடியாகவோ அல்லது அதன் கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
படிக்க:
♦ சரிந்து வீழும் ஏகாதிபத்திய முதலாளித்துவம்! விளைவு ; வேலை இழப்பு, பொருளாதார மந்தநிலை!
♦ ஏகாதிபத்தியங்களின் காயலான் கடையாக மாற்றப்படும் இந்தியா!
இந்த சூழ்நிலையில் பெல்ஜியம் நாடாளுமன்றத்திற்கான தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதை தவிர சைபீரியா, ஜெர்மன் அயர்லாந்து இத்தாலி மால்டா, ஸ்வீடன், ருமேனியா ஆகிய நாடுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றது.
இந்தத் தேர்தல்களில் பல பாசிச பயங்கரவாத அமைப்புகளோ அல்லது அதன் கூட்டணி அமைப்புகளோ பல்வேறு இடங்களில் பெரும்பான்மையான வெற்றி பெற்றுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகி கொண்டுள்ளது.
இதில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மிக மோசமான பின்னடைவை எதிர்கொண்டுள்ளார் என்றே தெரிய வருகிறது.
பிரான்சின் அதிபர் மெக்ரானின் மறுமலர்ச்சி கட்சி தோல்வி அடைந்து தேசிய பேரணி கட்சி மரைன் லி பென் வெற்றி பெற்றுள்ளார். இத்தாலியின் மெலோனியின் நீதிக்கட்சி, ருமேனியாவின் மைய இடது/ மத்திய வலது கூட்டணி ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.
இந்தியாவில் பாசிச பயங்கரவாதியான மோடி ஆர் எஸ் எஸ் பாஜக வெற்றி பெற்றுள்ள சூழலில் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் வலதுசாரி பிற்போக்கு சக்திகள், குறிப்பாக பாசிச பயங்கரவாத சக்திகள் வெற்றி பெற்றுள்ளது உலகின் சமாதானத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும், உலகில் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரானதாகவும் மாறியுள்ளது.
ஏனென்றால் ஐரோப்பாவில் வெற்றி பெற்றுள்ள பாசிச கட்சிகள் அனைத்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் வெறித்தனமான தாக்குதலை ஆதரிப்பவர்களாகவும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களை ஆதரிப்பவர்களாகவும் உள்ளனர்.
இதற்கு எதிராக ஐரோப்பாவின் பல்கலைக்கழகங்களில் போராடுகின்ற மாணவர்களை கடுமையாக ஒடுக்குகின்ற, பயங்கரவாத அடக்குமுறைகளை ஏவுகின்ற நபர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே உலக அளவில் பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் அனைவரையும் ஒரு அணியின் கீழ் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இத்தகைய மகத்தான கடமையை நிறைவேற்றுவதற்கு சர்வதேச பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைந்து நாமும் செயலாற்றுவோம்.
- ஆல்பர்ட்.






