”இன்பத்திற்காக வாழ்ந்தோம்!
இன்பத்திற்காக போர்க்களம் புகுந்தோம்!
இன்பத்திற்காகவே இப்போது இறந்து கொண்டிருக்கின்றோம்!
ஆகவே
துன்பம் எங்கள் பெயரோடு
என்றும் இணைக்கப்பட வேண்டாம்”.
ஜூலியஸ் பூசிக் தம்பதிகள் ஹிட்லரின் சித்தரவதை முகாமில் நாஜிக்கள் கொடுத்த நரக வேதனையை அனுபவித்துக் கொண்டு உலகிற்கு அறிவித்த இறுதியான இதய கீதம்.
பாசிசத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் சமரசமும், ஊசலாட்டமும் இல்லாமல் இறுதிவரை தனது லட்சியத்திற்காக போராடுகின்ற போது எந்த வகையான தியாகத்தையும் மேற்கொள்வதற்கு தயாராக வேண்டும் என்பதை உணர்த்துகின்ற உன்னதமான வரிகள் ஜூலியஸ் பூசிக் முன் வைத்தது.
பாசிச எதிர்ப்பு போர் மட்டுமல்ல, நாடு தழுவிய அளவில் புதிய ஜனநாயகப் புரட்சி என்ற மகத்தான புரட்சிக்கடமையை, நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்டு களமாடுகின்ற ஆயிரக்கணக்கான தோழர்களின் வாழ்க்கையும், அவர்கள் மீது தொடுக்கப்படுகின்ற அரசு பயங்கரவாத அடக்குமுறைகளும் நமக்கு கற்றுக் கொடுப்பது என்ன?
பாசிசத்தை எதிர்த்து நின்று போராடுவதற்கு மனத்துணிவு மட்டும் அல்ல. தியாக மனப்பான்மையும் வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதனைக் கற்றுக் கொடுக்கிறது ஜூலியஸ் பூசிக் வாழ்க்கை.
பாசிசத்தை வீழ்த்துகின்ற சித்தாந்தம் கம்யூனிசம் மட்டுமே என்பதில் இரட்டை நிலைப்பாடு எடுத்தால்தான் ஊசலாட்டம் மிகுந்த, உத்தரவாதமான குட்டி முதலாளிக்கு வாழ்க்கையின் மீது ஏக்கமும், சமரசப்படுத்தி கொண்டு கொஞ்சக் காலம் வாழ்ந்து விடலாம் என்ற வாழ்க்கையில் இருந்து சறுக்கிப் போகின்ற நடைமுறையும் உருவாகும்.
எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்று வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்து மறைகின்ற உன்னதமான வாழ்க்கையை உயர்த்திப் பிடிக்கின்ற கம்யூனிஸ்டுகள்; அதுவும் கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேரமாக பணியாற்றுகின்ற செயல் வீரர்கள் பற்றி சமீபத்தில் இலங்கையில் நடந்த விவாதம் ஒன்றை சுருக்கமாக முன் வைக்கின்றோம்.
நகர்ப்புற கொரில்லாவாதத்தையும், சாகச வழிமுறைகளில் புரட்சி நடத்த முடியும் என்பதையும் முன்வைத்த சேகுவாராவின் வழிமுறையை உயர்த்திப் பிடித்த ஜேவிபி இயக்கமானது தனது இயக்கத்தில் ஆள் எடுக்கும் போது கையாண்ட வழிமுறைகளை பற்றி குறிப்பிடுகின்றார் முன்னாள் ஜேவிபி இயக்கத்தைச் சார்ந்த தோழர் ஒருவர்.
”காலாவதியாகிப்போன; அரசியல் எதிர்காலம் சூனியத்தை அடைந்துவிட்ட; வலதுசாரி தேசியவாத எதிர்க்கட்சியினர் ஜே.வி.பி.யின் மீது தொடர்ந்து பரப்பிவரும் கதையுண்டு. “அவர்கள் உடுத்தும் உடைகள் மக்கள் கொடுத்தது. சட்டை. காற்சட்டை, காலணி உள்ளிட்ட எல்லாமே மக்களிடம் இருந்து வாங்குகிற பிச்சையே என்கின்றனர். அது ஒரு பிச்சைக்காரக் கட்சி. என்கின்றனர்.”
அதுமட்டுமல்ல “மக்களிடம் இருந்து பணம் அறவிடுவதற்காக லஞ்ச ஊழல் விசாரணை செய்வதாயின் அவர்களும் மக்களிடம் இருந்து பணம் பெறுபவர்களே, அவர்களும் இலஞ்சத்துக்காக தண்டிக்கப்படவேண்டும்” என்கிறார் மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி. “நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் இவை, ஜேவிபியை போல களுசானையும், பெல்டையும், சட்டையையும் மற்றவர் காசில் வாங்குகிறவர்கள் அல்ல” என்கிறார் ஊழல் லஞ்ச விசாரணைக்கு அடிக்கடி ஆளாகிவரும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்.
ஆளுங்கட்சி பெண் உறுப்பினரான லக்மாலி ஹேமச்சந்திரவிடம் நேரடி ரூபவாஹினி தொலைக்காட்சி நேர்காணலில் நேரடியாகவே “நீங்கள் சில்லறைகளை சேர்த்து கட்சி நடத்துகிற ஒரு வறிய பிச்சைக்கார மனநிலையைக் கொண்ட கட்சி அல்லவா” என்கிறார் முன்னாள் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் எம்.பி நிஷாந்த வர்ணசிங்க. அதற்கு லக்மாலி அவர்கள்;
“ஆம் இந்த வகை அவமானப்படுத்தல்கள் தொடர்ச்சியாக எங்களை நோக்கி வீசப்படும் போதெல்லாம் அலட்சியமாக கடந்திருக்கிறோம். ஆனால் நான் நினைக்கிறேன் இதற்கு பதில் அளித்தாகவேண்டும்! வறியவர் தான் உழைத்து தனது வாழ்க்கையை நடத்துபவர். அந்த வறிய உழைப்பாளர்கள் மீது எங்களுக்கு பெரும் மரியாதை இருக்கிறது. தன்னிடம் செலவுக்கு கையில் காசில்லை என்பதால் கையேந்தி மற்றவர்களிடம் கேட்டு வாங்குகிற யாசகருக்கு கூட அந்த மரியாதையைக் கொடுக்கலாம். ஆனால் திருடனுக்கு அந்த மரியாதை கிடையாது. பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்து தனிப்பட அதனை எடுத்து பயன்படுத்தும் கொள்ளைக்கார அரசியல்வாதிகளுக்கு அந்த கௌரவத்தை வழங்க முடியாது.” என்று பதிலடி கொடுத்தார்.
மக்கள் உதவிகளில் தான் இடதுசாரிக் கட்சிகள் பெரும்பாலும் இயங்குகின்றன. தமக்காக எதையும் செய்துகொள்ளாமல், சேர்த்துக் கொள்ளாமல் மக்கள் நலனுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இடதுசாரி முழுநேர ஊழியர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறார்கள் என்பது வலதுசாரி கட்சிகளுக்கு ஆச்சரியம் வரத்தானே செய்யும்.
இலங்கையில் மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச கும்பலும் கம்யூனிஸ்டுகள் மீதும், நக்சல்பாரி அரசியலை ஏற்றுக்கொண்டு போராடுகின்ற இயக்கங்களின் மீதும் பல்வேறு அவதூறுகளை வாரி இறைப்பது மட்டுமின்றி, அரசியலையே தனது வாழ்வாக கொண்டு போராடுகின்ற முழுநேர ஊழியர்கள் மீதும் பொய் பிரச்சாரங்களையும், அவதூறுகளையும் அள்ளித் தெளிக்கின்றனர்.
இவர்களுக்கு இணையாகவே புரட்சிகர அமைப்புகளில் செயல்பட்டு தாக்குப் பிடிக்க முடியாமல் சொந்த வாழ்க்கையில் மூழ்கி போன சில பிற்போக்கு கழிசடைகளும் கட்சியின் மீதும் முழுநேர ஊழியர்களின் மீதும் நா கூசாமல் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
படிக்க: ஜூலியஸ் பூசிக் நினைவு நாளில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக உறுதி ஏற்போம்!
ஆனால் இத்தகைய அவதூறுகளையும், அடக்குமுறைகளையும், பொய் பிரச்சாரங்களையும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒருபோதும் சட்டை செய்வதில்லை. ஏனென்றால் நாங்கள் ஜூலியஸ் பூசிக் முன்வைத்த வாழ்க்கை முறையை நேசிப்பவர்கள்.
”கம்யூனிஸ்டுகள் ஆகிய நாங்கள் வாழ்க்கையை நேசிக்கின்றோம். எனவே தான் மகிழ்ச்சியும், நிறைவும், சுதந்திரமும் கூடிய இலட்சிய வாழ்வுக்கான பாதையை அமைக்கும் பொழுது குறிப்பிடும் தடைகளை தகர்த்தெறிவதில் எங்கள் உயிரையும் தியாகம் செய்ய எந்நேரத்திலும் நாங்கள் தயங்குவதில்லை.
அடிமைத்தனம், சுரண்டல் எனும் சங்கிலிகளால் பிணைக்க பெற்று முழந்தாலிட்டு வாழ்தல் வாழ்க்கை ஆகாது; தாவரங்களைப் போல வாழ்வது வாழ்க்கை அல்ல. அது மனிதன் என்ற பெயருக்கு அவமானம் ஆகும். இந்த அவல வாழ்வில் ஒரு கம்யூனிஸ்ட், ஒரு உண்மையான மனிதன் திருப்தி அடைய அவனுக்கு உரிமை இருக்கிறதா? சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் அடிபணிய அவனுக்கு உரிமை இருக்கிறதா? இல்லை. ஒருபோதும் இல்லை.
எனவேதான், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் உண்மையான வாழ்வுக்காக மனிதத் தன்மையோடு கூடிய வாழ்வுக்காக நடைபெறும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய பின்வாங்குவதில்லை” என்கிறார் கம்யூனிஸ்டுகளின் லட்சிய வாழ்க்கையைப் பற்றி பூசிக்..
படிக்க: கம்யூனிசக் கொடியின் கீழ்
பாட்டாளி வர்க்க லட்சியத்திற்காக இறுதிவரை போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவு தினத்தை போற்றுவது வெறும் சடங்காகவும், புரட்சியாளர்களை பூஜையறையில் பூட்டி வைத்துவிட்டு சொந்த வாழ்க்கையில் நேர் எதிராக வாழ்ந்து கொண்டே கம்யூனிச இலக்கியத்தை பற்றி கதை அளக்கின்ற ரெட்டை நாக்கு பேர்வழிகள்; ரெட்டை வாழ்க்கை பேர்வழிகள் அதிகரித்துள்ள இந்த சூழலில் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இன்றி ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக இறுதிவரை தியாகம் செய்த அற்புதமான பாசிச எதிர்ப்பு போராளி ஜூலியஸ் பூசிக் முன் வைத்தப் போதனைகளை கற்றுக் கொள்வோம்.
”சமீப காலம் வரை எங்களைப் பற்றி அறிந்து கொள்ளாதவர்களுக்கும், எங்கள் கட்சியை சந்தேகத்துடன் பார்த்து வந்தவர்களுக்கும், ஹிட்லரின் நாசக்கார கும்பலை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நின்றவர்களுக்கும் இது பொருந்தும்.
நீங்கள் மிக உன்னிப்பாக எங்களை கவனித்து வருகிறீர்கள்; எங்கள் செயல்களை கூர்ந்து கவனிக்கிறீர்கள். ஆம் வெகு நுட்பமாக கவனியுங்கள்! எங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பாருங்கள். எங்களுடைய ஒவ்வொரு செயலையும் அலசி அலசி ஆராயுங்கள்! விமர்சியுங்கள்! உங்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டியது ஒன்றுமில்லை. மக்களுக்கு தெரியாமல் மூடி மறைக்க வேண்டியது யாதொன்றும் எங்களுக்கு இல்லை. உங்களுக்கு முன்னால் நாட்டு மக்களுக்கு முன்னால் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மிகக் கடுமையான அக்கினி பரிட்சையில் நாங்கள் இறங்கி இருக்கின்றோம். நாங்கள் போரில் புறமுதுகு காட்டினோம் என்றோ ஏதோ ஒன்றில் தவறினோம் என்றோ எங்களின் நேர்மையற்ற விரோதிகள் கூட சொல்ல துணிய மாட்டான், என்கிறார் பூசிக்.
அதே சமயத்தில் எமது லட்சியத்திற்கு போராடுகின்ற போது எமது வாழ்க்கை முறையில் ஏற்படுகின்ற தவறுகள் பற்றியும் எங்களுடன் நெருக்கமாக இருக்கின்ற நண்பர்களும், உறவினர்களும் தோழர்களும், விமர்சியுங்கள் என்பதையும் நேர்மையாக முன்வைக்கின்றோம்.
இத்தகைய போதனைகளை நாங்கள் தோழர் லெனின், ஸ்டாலின் மற்றும் தோழர் மாவோவின் கட்சி கட்டும் வழிமுறைகளிலிருந்து கற்றுக் கொண்ட உண்மைகள். இதிலிருந்து பாட்டாளி வர்க்க கட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை போதித்த தோழர் லெனின் அதனை வழி நடத்திய ஸ்டாலின் படை வரிசையில் நாமும் ஒரு தொண்டன் என்ற முறையில் சமரசமற்ற, ஊக்கம் மிகுந்த, உன்னதமான, அர்ப்பணிப்பு, தியாகம் கொண்ட வாழ்க்கையை உயர்த்தி பிடிப்போம்.
◾ஆல்பர்ட்