இந்தியாவின் பெருமான்மை மக்கள் ஈடுபடும் விவசாயத் தொழிலை கார்ப்பரேடுகளின் பிடிக்குள் கொண்டு சென்றுள்ள பாசிச மோடி கும்பல் விவசாயிகளின் மீது அடக்குமுறைகளையும் ஏவி வருகிறது.
வேளாண் கார்ப்பரேட்டுகளின் பிடியில் இந்திய விவசாயம்!
இந்தியா உலகின் நான்காவது பெரிய விவசாய நாடு. நாட்டு மக்களில் 65% மக்கள் விவசாயிகளாக இருக்கின்றனர். நாட்டின் தேசிய தொழிலாக சொல்லப்பட்டு வந்த விவசாயம் இன்று, விவசாயிகளுக்கு பேரிடராக மாற்றப்பட்டுள்ளது. விதை, உரம், பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்டவற்றை இயற்கையாகவே தயாரித்துப் பயன்படுத்தி வந்த, உலகின் ஆற்றங்கரை நாகரிக நாடுகளில் முக்கிய இடம் பெற்றுள்ள விவசாய உற்பத்தியில் சுயசார்பான பாரம்பரியம் கொண்டது இந்திய விவசாயம், இன்றோ மரபணு மாற்ற விதைகளாலும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடுகளாலும் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. பசுமைப்புரட்சித்திட்டம், புதிய விவசாயக் கொள்கை போன்ற ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் வேட்டைக்காக விவசாயத்தில் நமது பாரம்பரியம், மரபுகள் ஒழிக்கப்பட்டு, அனைத்துக்கும் அமெரிக்காவின் கார்கில், கோர்டேவா, ஸ்வீடனின் சின்ஜெண்டா, கனடாவின் நியூட்ரியன் போன்ற வேளாண் வர்த்தக, பகாசுர கார்ப்பரேட்டுகளின் கிடுக்கிப் பிடியில் சிக்கியுள்ளது விவசாயம்.
1990-களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கை, விவசாயத்தில் தனியார் வேளாண் வர்த்தக கழகங்கள் நுழைய அனுமதித்தது. அதன் விளைவாக, அதிக மகசூல் என்ற பெயரில் மரபீணி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உரம், பூச்சிக் கொல்லிகள் இரசாயனமாக்கப்பட்டு அவை பன்னாட்டு தனியார் முதலாளிகளின் ஏகபோகமாக மாற்றப்பட்டன. அரசின் கொள்முதலும், கடனுதவிகள், மானியங்களும் படிப்படியாக நிறுத்தப்பட்டன. அதனால், உலகிற்கே சோறு போட்டு பசியாற்றிய விவசாயி இன்று ஏகாதிபத்திய முதலாளிகளிடம் கையேந்தும் பிச்சைக்காரனாக மாற்றப்பட்டு விட்டான்.
அதிக மகசூல் என்ற மாயைக்குள் இழுத்து விடப்பட்ட விவசாயிகள், விதை, உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கான செலவுக்கு ஏற்ற மகசூல் இல்லாமல் போண்டியாகிறான். ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, விளைபொருளுக்கு உரிய விலை கொடுக்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடிமாட்டு விலைக்கு விற்று நட்டமடைகிறான்.
1995 முதல் 2010 வரையிலான 15 ஆண்டுகளில் மட்டும் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்ந்து அதிகமாகி, பாசிச மோடியின் ஆட்சியில் 2017- நிலவரத்தின் படி 32 விநாடிக்கு ஒரு விவசாயி அதாவது ஆண்டுக்கு 9,85,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் இணை இயக்குநரின் கட்டுரை தெரிவிக்கிறது. (தினமணி இணையம், 30 அக் 2017)
இப்படி தினம் தினம் செத்து மடியும் விவசாயிகளைத் தற்கொலையிலிருந்து காப்பாற்றுவதற்குப் பதிலாக விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளைப் புகுத்தும் வகையில் வேளாண் சட்டங்களைத் திருத்துகிறது மோடி அரசு. லட்சக்கணக்கான விவசாயிகள் செத்தாலும் கவலையில்லை என்கிறது.
இந்த சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறச் செய்வதற்கு ஓராண்டுக்கும் மேலாகப் போராடி, 750-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொடுத்தனர் பஞ்சாப், ஹரியானா, உ.பி விவசாயிகள். கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில் இருந்து பின் வாங்க முடியாது என்று இறுமாப்புடன் இருந்த மோடியை அடித்து உட்கார வைத்தனர் விவசாயிகள். எனினும், விவசாயிகளின் உடனடி கோரிக்கையான குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் (MSP) செய்வதைக் கூட இன்றுவரை நிறைவேற்றவில்லை. பாசிச மோடி அரசைப் பொறுத்தவரை, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடாக, சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு செய்தது என்பதும், அது கொள்கை ரீதியிலான முடிவு அல்ல என்பதும் நிரூபணமானது.
மோடி ஆட்சி செய்த பத்தாண்டு காலத்தில், ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்’ என்ற அவரது வாக்குறுதி எதுவும் நடைமுறையில் நடக்கவில்லை. மாறாக நாடு முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் அதானி, அம்பானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளின் பண்ணை விவசாயத்திற்கும், கார்ப்பரேட் விவசாயத்திற்கும் பிடுங்கப்பட்டதால் விவசாயிகள் தங்களது நிலங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததால் விவசாயத் தொழிலே நட்டத்திற்கான தொழிலாக மாற்றப்பட்டது.
வேலையற்ற விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அதாவது ஒப்பந்த முறையில் ராணுவ வீரர்கள் ’அக்னி வீரன்’ என்ற முறையில் சேர்க்கப்பட்டனர். மற்றொருபுறம் இந்திய விவசாயமும், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறு-நடுத்தர விவசாயிகளும், கூலி ஏழை விவசாயிகளும் போண்டியாகி குறைந்த கூலிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் கூலி அடிமைகளாக மாறியுள்ளனர்.
இது ஒரு வகையில் ’மாற்றம் தான்’ என்று கூறிக் கொள்ளலாம். ஏனென்றால் வெகு நீண்ட காலமாக பண்ணை அடிமைகளாக வாழ்ந்த நிலமுற்ற கூலி விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் குறைந்த கூலிக்கு சுரண்டப்படும் கூலி அடிமைகளாக மாற்றப்பட்டனர் என்பது தான் பாசிசத்தின் விளைவாகும்.
கார்ப்பரேட்டுகளின் நவீன கொத்தடிமைகளாக தொழிலாளர் வர்க்கம்!
இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு போலி சுதந்திரம் பெற்றது முதல் இலட்சக்கணக்கான தொழிலாளிவர்க்கம் பல்வேறு அடக்குமுறைகளையும், தடியடி முதல் துப்பாக்கிச் சூடு வரை அனைத்தையும் தனது நாட்டு மக்களுக்காக முன்னணிப்படையாக நின்று, தனது இரத்த வியர்வையுடன் கூடிய தியாகத்தினால் பெற்ற உரிமைகள் அனைத்தும் பாசிச மோடியினால் பறிக்கப்படுகிறது.
2014 முதல் தொழிலாளி வர்க்கத்தின் மீதான கார்ப்பரேட்டுக்களின் தாக்குதல் தீவிரமாகி இருக்கின்றது. ’முதலாளிகள் காலால் சொல்வதை தலையால் செய்து முடிக்கிறது’ கார்ப்பரேட் கைக்கூலி மோடி கும்பல். கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால், சுமார் 15 கோடி தொழிலாளர்கள் வேலையிழந்து, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து, பசி – பட்டினியாலும், ரயில், லாரிகளிலும் அடிபட்டு செத்த போதும், பசிக்காக ரோட்டில் கிடந்த அழுகிய நாய்க்கறியைத் தின்ற போதும், தொழிலாளர்களுக்காக மனமிறங்காமல், கார்ப்பரேட்டு களுக்காக கவலைப்பட்டு அவர்களின் சொத்து மதிப்பு குறையாமல் பார்த்துக் கொண்டது பாசிச ஆர்.எஸ்.எஸ் மோடிக் கும்பல்.
அதே கொரோனா காலத்தில், தொழிலாளர்களிடமோ தொழிற்சங்கங்களிடமோ கருத்துக் கூட கேட்காமல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டு நிறைவேற்றியது. இந்தப் புதிய தொழிலாளர் குறியீடுகளால், நிரந்தரத் தொழிலாளி என்ற வர்க்கம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே காண்டிராக்ட் முறை புகுத்தி நிரந்தரத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு வரும் நிலையில், 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்று காண்டிராக்ட் சட்டத்தில் பேருக்கு இருக்கும் பிரிவுகளைக் கூட ஒழித்து விட்டது.
தொழிலாளர்களது உயிர்த்தியாகத்தால் பெறப்பட்ட 44 தொழிலாளர் சட்டங்களும், ஊதியத் தொகுப்பு, தொழில் உறவுகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொகுப்பு, பணி பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு ஆகிய 3 தொகுப்புக்களாக மாற்றி விட்டது மோடி அரசு. தொழிலாளர்களை தங்களது விருப்பம் போல் வேலை வாங்குவதற்கும், எந்த வகையிலும், எந்த நிலையிலும் உரிமைகளைப் பற்றிக் கோர முடியாத நிலையையும் உருவாக்கி இருக்கிறது புதிய விதிமுறைகள்.
குறிப்பாக, நீம் (NEEM) என்ற பயிற்சி தொழிலாளர் முறை, எஃப்.டி.இ. (FTE) என்ற குறுகிய கால பணி முறை போன்ற திட்டங்களின் கீழ் தான் இனி தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவர். இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை எந்தக் காலவரையும் இன்றி, பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பயிற்சியாளராகவும், நேரடி உற்பத்தியிலும் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
உதவித் தொகை, பயிற்சி கால ஊதியம் (STIPEND) என்ற பெயரில் ஊதியம் வழங்கப்படுவதால், ESI, PF போன்ற சமூக நலத் திட்டங்கள் அவர்களுக்குப் பொருந்தாது என்பதுடன், சம்பளப் பட்டுவாடா சட்டமும் செல்லுப்டியாகாது. அதனால், கூட்டுப் பேரம் போன்ற எந்த முறையிலும் சம்பள உயர்வைக் கோர முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, சங்கம் அமைக்க மாட்டேன், தொடர் பணியைக் கோர மாட்டேன் என்ற உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பம் பெற்றுத் தான் அவர்களை பணிக்கே அனுமதிக்கின்றனர்.
இப்படி எந்த உரிமைகளும் இல்லாத நிலையில் பணியில் சேரும் தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல் என்பது காண்ட்ராக்ட் தொழிலாளர்களை விட பல மடங்கு கொடுமையானது; மனிதாபிமானமற்றது. படிப்பை முடித்து விட்டு வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும்; முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு 20 வயதில் பணியில் சேரும் அத்தொழிலாளியின் செயல் வேகத்தையும், இளமையின் முழு ஆற்றலையும் உறிஞ்சிக் கொண்டு 35 – 40 வயதில் சக்கையாக்கித் தூக்கிப் போட்டு விடும் வாய்ப்பை முதலாளிகளுக்கு அகலத் திறந்து விட்டுள்ளது மோடி அரசு. அதனால், அவர்கள் மீதான உழைப்புச் சுரண்டல் என்பது காண்ட்ராக்ட் தொழிலாளர்களை விட பல மடங்கு கொடுமையானதும், மனிதாபிமானமற்றதும் ஆகும்.
இந்திய தொழிற்துறை வளர்ச்சியானது 1960_களில் எந்த நிலையில் இருந்ததோ அதைவிட பின்தங்கியே உள்ளது. ஆலைகளில் பணிபுரியும் நிரந்தர தன்மைக் கொண்ட வேலைகள் இல்லை. கட்டுமானத்துறை மட்டுமே அவர்களுக்கு ஓரளவுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. அல்லது சேவைத் துறைகளில் முறைசாரா வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் பெரும்பாலான தொழிலாளர்கள் – சுமார் 93% சதவிகிதம் பேர் எந்தவித பணி உத்திரவாதமும் இல்லாத முறைசாரா வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெறும் 7% பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்களாக உள்ள்னர். தினக்கூலி வேலையில் இருக்கும் பெரும்பாலானோருக்கு பணிவிடுப்பு, ஓய்வூதியம், போனஸ், விபத்து காப்பீடு உள்ளிட்ட எந்தவித அடிப்படை உரிமைகளும் கிடையாது. அவர்கள் அத்துக் கூலிகளாகவோ அல்லது காண்டிராக்ட் கொத்தடிமைகளாகவோதான் மாற்றப்பட்டுள்ளனர். காண்டிராக்ட் என்றால் நீண்ட காலத்திற்கு கூட கிடையாது; 1 வருடத்திற்கும் குறைவான குறுகிய காலத்திற்குதான். அவர்கள் எப்போது வேண்டுமானலும் பணியிடத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் அபாய நிலையிலேயே வேலை செய்து வருகின்றனர்.
மோடியின் பத்தாண்டு கால ஆட்சி, தொழிலாளிகளை உரிமைகளற்ற நவீன கொத்தடிமைகளாக உருவாக்கி அவர்களின் உழைப்பை 12 மணி முதல் 15 மணி நேரம் வரை சுரண்டிக் கொழுக்கும் வகையில் கார்ப்பரேட்டுக்களுக்கு படையல் வைத்திருக்கிறது.
இன்னபிற வர்க்க்கங்களின் வாழ்க்கை அவலத்தை தொடர்ந்து பார்ப்போம்
(தொடரும்…)
- நன்னிலம் சுப்புராயன்.
முந்தைய பதிவுகள்:
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும்
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம்-2
- ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம் 3
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம்-4.






