ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின்  கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும்

நாட்டை ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் கொள்ளைக்கு திறந்து விடுவதற்கு பொருத்தமான அரசியல், பொருளாதார சூழ்நிலையை உருவாக்குவதற்காக மக்களின் மீது கொடூரமான அடக்குமுறையின் மூலம் திணிக்கப்பட்டதுதான் எமர்ஜென்சி என்று சொல்லப்படுகின்ற அவசர நிலை பாசிசமாகும்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அதில் பாசிச பாஜக திட்டமிட்டபடி 400 இடங்கள் பெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பல்வேறு தகிடுதத்தங்களை செய்த பிறகும் பாஜக தனி ஒரு கட்சியாக அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. எனவே கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக பீகாரின் நிதிஷ்குமார், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு ஆகியோர்களின் தயவில்தான் பாஜகவின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக கார்ப்பரேட் காவி பாசிச அடக்குமுறைகளை தனது ஆட்சியின் மூலம் நிலை நிறுத்திய பாசிச பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்ற பின் முதல் நாளிலேயே தன்னை ஒரு பரிசுத்தவானாக கட்டிக் கொள்வதற்கான முயற்சியில் இறங்கியது.

அதாவது 1975-77 காலக்கட்டத்தில் நாட்டை ஆண்டு வந்த இந்திரா காந்தி அமல்படுத்திய அவசரநிலை (Emergency) அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் என்பதை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மூலமாகவே கொண்டு வந்து, அதனை தனது பெரும்பான்மையின் மூலம் நிறைவேற்றியும் உள்ளது.

பாசிஸ்டுகள் எப்போதும் தன்னை ஜனநாயக விரோத சர்வாதிகாரிகள் என்று அறிவித்துக் கொள்வதில்லை. மாறாக தன்னை தேசியவாதிகளாகவும், சோசலிசவாதிகளாகவும், மக்களின் அடிப்படை அரசியல் உணர்வுகளை மதிக்கின்ற மாபெரும் ஜனநாயகவாதிகளாகவும் சித்தரிக்கின்ற வகையில் அறிவித்துக் கொள்வது மட்டுமின்றி, தனது பாசிச அடக்குமுறைகளை நிகழ்த்திக் கொண்டே தன்னை மிகப்பெரும் ஜனநாயகவாதி போல காட்டிக் கொள்வதற்கு முயற்சிப்பார்கள் என்பதை தான் அவசர நிலை எதிர்ப்பு நாடகம் நமக்கு உணர்த்தியது.

பாசிச பாஜகவின் இந்த நடவடிக்கையானது எமர்ஜென்சி குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது. எமர்ஜென்சி காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை தனது மனம் போன போக்கில் பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும் களத்தில் குதித்துள்ளனர் பலர்.

குறிப்பாக எமர்ஜென்சியின் போது எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல நாடகமாடுகிறார்கள் சிலர் அல்லது பாசிச பாஜக சித்தரிப்பதை போல அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் என்பதைப் போல பிரச்சாரம் செய்கிறார்கள் சிலர். இந்த போக்குகளுக்கு மத்தியில் பாஜகவின் போலி முற்போக்கு-ஜனநாயக வேடத்தை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே எமர்ஜென்சி என்றால் என்ன? அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி புதிய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.

”ஜனநாயகம் என்றால் அது ஒரு சகிப்புத் தன்மை. நமக்கு இணங்கிப் போவோருடன் சகித்துக் கொள்வது மட்டுமல்ல, நம்முடன் ஒத்துப் போகாதவர்களுடன் கூட சகித்துக் கொண்டு போதலே ஜனநாயகம்” என்றார் நேரு. ஆனால் அவரது மகளான இந்திராகாந்தி இதற்கு நேர்மாறாக ஜனநாயகத்துக்கு எதிரான மனநிலையுடன் எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார்.

ஏன் இந்த அவசரநிலை

அறுபதுகளின் மத்தியிலிருந்து நமது நாட்டு பொருளாதாரத்தில் பெரிய நெருக்கடிகள் தோன்ற ஆரம்பித்தன. குறிப்பாக பணவீக்கம், பொருளாதார பின்னடைவு, உற்பத்தி தேக்கம் விலைவாசி ஏற்றம், மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாமல் இதன் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் பெருகியது, விவசாயத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றவை காரணமாக மக்களிடையே பஞ்சம், பசி பட்டினி தலைவிரித்தாடியது. பின் தங்கிய விவசாயப் பொருளாதாரம் நிலப்பிரபுத்துவத்தின் கையில் சிக்குண்டு கிடந்தது, பசுமைப் புரட்சி திட்டத்தின் மூலம் ஏழை, நடுத்தர விவசாயிகள் ஓட்டாண்டியாகினர். கிராமப்புற வேலையற்றோர் தொகை பெருகியது. ஒரு சிலர் கைகளில் நிலங்கள் குவிந்த்தால் கிராமப்புறங்களில் பயங்கர நெருக்கடிகளை தோற்றுவித்தது.

1947 முதலான காங்கிரசின் ஆட்சிக் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் பல்வேறு ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைக்கப்பட்டிருந்ததாலும், 1970-களில் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் தோன்றிய உலக தழுவிய பொதுப்படையான பொருளாதார நெருக்கடியை அந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் மீது சுமத்தியது எமர்ஜென்சிக்கு முதன்மையான காரணம். மேலும் இந்திய ஆளும் வர்க்கங்கள் கடைபிடித்த வங்கதேச போர் மற்றும் சார்க் நாடுகளை பிடிக்கும் விஸ்தரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி அதற்கு தேவையான ராணுவ தயாரிப்பில் இறங்கியதாலும், பணமூலதனம் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடிகள் ஏற்பட்டதாலும் உருவான பொருளாதார நெருக்கடிகளும் எமர்ஜென்சிக்கான பிற காரணங்களாகும்.

இந்த சூழலில் ஆளும் வர்க்கங்களான நிலப்பிரபுத்துவ, தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ கும்பல் தன்னை அழிவிலிருந்து காத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியது. தான் மட்டும் தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் மேற்கொண்ட ஒன்றிரண்டு பொருளாதார நடவடிக்கைக்கள் சிக்கலை தீர்ப்பதற்கு பதிலாக நெருக்கடிகள் மேலும் மேலும் கூர்மையாக பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாத அளவிற்கு நெருக்கடியின் எல்லைக்கே சென்று விட்ட ன்

இத்தகைய சூழலில், 1947 போலி சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை பல்வேறு ஏகாதிபத்தியங்களில் காலடியில் போட்டு தாராளமாக கொள்ளையடிக்க அனுமதித்து வந்த இந்திய ஆளும்வர்க்க கும்பலுக்குள் முரண்பாடு ஏற்பட்டது. இந்த முரண்பாடானது அமெரிக்கா தலைமையிலான ஜெர்மனி, பிரான்சு, பிரிட்டன் போன்ற நாடுகளை ஆதரிக்கின்ற ஒரு முகாமாகவும், அதற்கு எதிராக 1917-ல் சோசலிச நாடாக உருவாகி, தோழர் ஸ்டாலின் மறைவுக்கு பிறகு ”சொல்லில் சோசலிசம், நடைமுறையில் ஏகாதிபத்தியமாக’, மாற்றமடைந்து சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்த ரஷ்யாவை ஆதரிக்கின்ற ஒரு முகாமாகவும் உருவானது.

நாட்டை ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் கொள்ளைக்கு திறந்து விடுவதற்கு பொருத்தமான அரசியல், பொருளாதார சூழ்நிலையை உருவாக்குவதற்காக மக்களின் மீது கொடூரமான அடக்குமுறையின் மூலம் திணிக்கப்பட்டதுதான் எமர்ஜென்சி என்று சொல்லப்படுகின்ற அவசர நிலை பாசிசமாகும்.

இவ்வாறு கொண்டு வந்த அவசரநிலை பாசிசமானது மக்களுக்கு எதிரான தாக்குதலின் தீவிர வடிவத்தை பெற்றது. தொழிலாளர்கள், ஊழியர்கள் போன்ற அனைவருக்கும் அடிப்படை உரிமைகளின் அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டது. முதலாளிகளுக்கு சாதகமாக பல்வேறு தொழிற்சாலைகளில் லே ஆஃப் என்று கூறப்படும் கதவடைப்புகளும், நிரந்தரமான ஆலை மூடல்களும் தலை விரித்தாடியது.

படிக்க: 

 இஸ்ரேலில் அவசர நிலையா?

 ஒற்றை சர்வாதிகார பாசிச ஆட்சி! பறிபோகும் மாநில உரிமைகள்!

ஓய்வு பெறுகின்ற வயதிற்கு முன்னதாகவே கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது, வேலையில் இருந்த தொழிலாளர்களுக்கு வேலைப்பளு அதிகப்படுத்தப்பட்டு கசக்கி பிழியப்பட்டனர். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பள உயர்வு, போனஸ் போன்றவை நிறுத்தப்பட்டது மட்டுமின்றி, தொழிலாளர்களின் சேமிப்பு நிதியிலிருந்து நூறு கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது.

இதற்கு நேர் மாறாக அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கும், இந்தியாவில் இருந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் எமர்ஜென்சி கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டிக் கொடுத்தது. தொழிற்சங்கத்தை கடுமையாக ஒடுக்குவதற்கும், தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதற்கும், கூடுதல் வேலைச்சுமை மூலமாக அவர்களை கசக்கி பிழிவதற்கும் எமர்ஜென்சி அவர்களுக்கு பயன்பட்டது.

நாட்டில் தலைவிரித்தாடிய பொருளாதார நெருக்கடி, இதற்கு எதிராக துவங்கிய போராட்டங்கள் போன்றவற்றை தீர்ப்பதற்கு ஆளும்வர்க்கங்கள் கையில் எடுத்துக் கொண்ட அடக்குமுறை வடிவம்தான், குறிப்பாக அப்போது இந்தியாவை ஆண்ட காங்கிரசின் பிரதமர் இந்திரா காந்தி பாசிச வழிமுறையில் கையாண்ட வடிவம் தான் எமர்ஜென்சி ஆகும்.

எமர்ஜென்சியை பற்றி மார்க்சிய லெனினிய அமைப்புகளும், இடதுசாரிகளும் மதிப்பீடு செய்வதும், கடைந்தெடுத்த பாசிச பயங்கரவாதிகளான ஆர்எஸ்எஸ் பாஜகவினர் மதிப்பீடு செய்வதும் வெவ்வேறானது. இவற்றுள் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்வதற்கு மேலும் பல விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்.)

  • நன்னிலம் சுப்புராயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here