“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே பொன்றுபல ஆயிடினும்

ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே”.

மனோன்மணியம் சுந்தரம் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து மேற்கண்ட வரிகளுடன் முழுமையாக உள்ளது என்ற போதிலும், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஆரியம் போல் வழக்கொழிந்த என்ற வரி நீக்கம் செய்யப்பட்டு பாடப்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் குறித்த வரிகளை நீக்கி தமிழகத்தின் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகின்ற ஆளுநர் ரவியின் முன்னிலையில் பாடப்பட்ட பாடல் பார்ப்பன இந்திய தேசியத்தின், ‘ஒரே நாடு, ஒரே இனம், ஒரே பண்பாடு’ என்ற கருத்தை ஆழமாக பிரதிபலிக்கிறது.

தமிழகத்தின் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் கணிசமான தொகையை தின்று கொழுத்து தமிழர்களுக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வரும் ஆளுநர் ரவி பாசிச பாஜகவின் தேசிய இனங்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கருவிகளில் ஒருவராக மாறியுள்ளார்.

பாஜக நேரடியாக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தனது நாக்பூர் தயாரிப்புகளை கொண்டு அதாவது ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை ஆளுநர்களாக நியமிப்பதன் மூலம் கட்டுப்படுத்தி வருகிறது என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தாலும் அதைப்பற்றி சிறிதும் அச்சம் இல்லாமல் செயல்படுகிறது.

மிருகத்தனமான அதிகாரபலத்துடன் பல்வேறு தேசிய இனங்களுக்கு கடுமையான தாக்குதல்களை தொடுப்பது போலவே தமிழ் தேசிய இனத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதல்களை தொடுத்து வருகிறது ஆர்எஸ்எஸ் பாஜக.

தமிழ் தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தை நீக்கப்பட்டது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற சூழலில் தமிழ் தேசியம் பேசி இளைஞர்களை காயடித்து வரும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஏஜென்டான திருவாளர் சீமான் தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்று திமிர்த்தனமாக பேசியுள்ளார்.

சீமான் ஆட்சிக்கு வருவது எப்போது என்று தெரியவில்லை என்ற போதிலும், தமிழர்களின் மத்தியில் உள்ள தமிழ் தேசிய இன உணர்வை பயன்படுத்திக் கொண்டு தேசிய இனங்களை ஒடுக்குகின்ற பாசிச பாஜகவிற்கு எதிராக களமாடுவதற்கு பதிலாக, பாஜகவுக்கு எதிரான சக்திகளை பிளவுப்படுத்துவதில் சீமான் முன்னிலையில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல! தமிழகத்தில் பாசிச அரசியலை தமிழ் தேசிய இனத்தின் பெயரால் முன்வைத்து நியாயப்படுத்துகின்ற தமிழ் பாசிஸ்டாக சீமான் போன்ற சக்திகள் வளர்ந்து வருகிறார்கள் என்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியா என்பது வரலாற்று ரீதியிலும் சரி, நடைமுறையிலும் சரி, இன்றுவரை பல்வேறு தேசிய இனங்கள் மொழிகள், கலாச்சாரங்களை கொண்ட இந்திய ஒன்றியமாகவே இருக்கின்றது என்பதுதான் உண்மையாகும்.

சங்கி ரவி அவர்களே! மதச்சார்பின்மை வேண்டாம்! சாதி- தீண்டாமைதான் வேண்டுமா? 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போல ஒரே அதிகாரத்தின் கீழ் கட்டுப்படுத்தப் பட்டாலும் அந்தெந்த மாகாணங்களுக்கு தனித்தனியாக கொடி வைத்துக் கொள்வது, வாழ்த்து பாடல்கள், தேசிய கீதங்களை அமைத்துக் கொள்வது போன்ற அனைத்தையும் முதலாளித்துவ ஜனநாயக உரிமையே அங்கீகரிக்கிறது எனும் போது இந்தியாவில் மொழிவாரி அமைந்த மாநிலங்கள் ஏன் தனக்கென்று தனி கொடியையும், தனித்தனியாக வாழ்த்து பாடல், தேசிய கீதத்தை அமைத்துக் கொள்ளக் கூடாது என்பதை நோக்கி நமது கருத்து பிரச்சாரங்களும், தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டங்களும் இருக்க வேண்டும்.

பார்ப்பன பாசிசத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்பினாலே அதனை பிரிவினைவாதம் என்றும், பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தி மக்களை திரட்டுகின்றவர்களை பயங்கரவாதிகள், ஆன்ட்டி இந்தியன்கள், நகர்ப்புற நக்சல்கள் என்றும் பல்வேறு பெயர்களில் முத்திரை குத்தி ஒடுக்குவதை பாஜக ஒரு வழிமுறையாகவே கையாண்டு வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு என்று நீக்கப்பட்ட வார்த்தை வெறும் தற்செயலாக நடந்த தவறு அல்ல, தமிழ் தேசிய இனத்தின் மீதான ஒடுக்கு முறை என்ற முறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மதிக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்று போராடுவோம்.

பார்த்தசாரதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here