தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே செல்வது சாதி மறுப்பு, ஜனநாயக உணர்வு கொண்டவர்கள் மத்தியில் வேதனையையும், கடும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
“தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் துர்திருஷ்டவசமாக இத்தகைய குற்றங்களுக்கு எந்த முற்றுப்புள்ளியும் இல்லை. ஆணவக் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதன் பின் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை” என நீதிபதி பி வேல்முருகன் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில், “சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு பாதுகாப்பு கொடு!”, “ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்று!” என்ற என்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அதன் தோழமை அமைப்புகளுடன் இணைந்து மதுரை மற்றும் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போதே மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்த தோழர் வைரமுத்து ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. இதனைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை சுருக்கமாக தருகிறோம்.
“மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி அடியாமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார், ராஜலட்சுமி மகன் வைரமுத்து டிப்ளமோ பட்டத்தாரி(DME) அதே பகுதியில் வசித்து வரும் குமார், விஜயா இவர்களின் மகள் மாலினி MBA பட்டத்தாரி இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
வைரமுத்து மயிலாடுதுறை பெரிய கோயில் கீழ வீதியில் உள்ள இருசக்கர வாகன மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். மாலினி சென்னை தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி மாலினியின் உறவினர் இல்ல விழாவிற்கு வந்துள்ளார் . மாலினியின் பெற்றோர்கள் உடனடியாக திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்து நான் வைரமுத்துவை தான் காதலிக்கிறேன் நான் அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் உறுதியாக தெரிவித்திருக்கிறார். இதனால் மாலினியின் அம்மா மற்றும் அவரது சகோதரர்கள் குகன், குணால் அகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.”
இது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு காவல்துறை விசாரணையில் மாலினியை அழைத்து விசாரித்த போது நான் கடந்த 10 ஆண்டுகளாக வைரமுத்துவை காதலித்து வருகிறேன் அவரும் என்னை காதலிக்கிறார், நான் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்னை அவருடன் திருமணம் செய்து வையுங்கள் என்று தெரிவித்துள்ளார் . மேலும் என் தாய் தந்தை மற்றும் சகோதரர்கள் குணால் குகன் இவர்களுடன் அனுப்பி வைத்தால் என்னை கொன்று விடுவார்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
படிக்க:
♦ தந்தை பெரியார் பிறந்தநாளில் கோவை-மதுரையில் ஆர்ப்பாட்டம்!
பின்னர் கடந்த 12/09/2025 அன்று காவல்துறை விசாரணைக்கு பிறகு வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் மாலினியை அனுப்பி வைத்துள்ளனர். அப்போது மாலினியின் தாய் மற்றும் அவரது சகோதர்கள் இனி எங்களுக்கும் பெண்ணுக்கும் எந்த உறவும் இல்லை . எங்கள் வீட்டில் எந்த நிகழ்வுகளுக்கும் அவர் வரக்கூடாது என்று தெரிவித்து எழுதிக் கொடுக்கும்படி கேட்டதோடு மட்டும் இல்லாமல் நீங்கள் எப்படி உயிரோடு வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறோம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார்கள்.
நேற்றைய தினம் 15/9/2025 அன்று இரவு சுமார் 10:30 மணி அளவில் வைரமுத்து பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது வழிமறித்த மாலினியின் சகோதரர்கள் குகன் , குணால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளார்கள். இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்த போதும் மாலினியின் தாயார் மாற்று சமூகமான செட்டியார் சமூகத்தை சார்ந்தவராக இருப்பதால் தனது மகளை தனது சொந்த சாதியில் திருமணம் செய்து வைப்பதற்கு இடையூறாக வைரமுத்துவை கருதி அவரை தனது மகன்கள் மூலம் கொலை செய்ய தூண்டியுள்ளார் .
தினம் தினம் காதலுக்கு எதிரான சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தேறுகிற நிலை உருவாகி இருக்கிறது. காதல் திருமணங்கள் நடைபெறுகிற போது அதை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் காவல்துறை அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் தொடர்ந்து தவறி வருகிறது.” இதுதான் சுருக்கமான அறிக்கை.
ஆணவப் படுகொலைகள் நடப்பதை தடுப்பதற்கு குறைந்தபட்சம் சட்ட பாதுகாப்பு என்ற வகையில் தனி சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் முன் வைத்திருந்தாலும், இதற்கு நிகராகவே “கிராமம் மற்றும் நகரங்களில் சமூக நல்லிணக்க குழுக்களை அமைப்போம்! சாதிய கட்டமைப்புகளை தவிர்ப்போம்!” என்றும், “சாதி வெறியர்களுக்கு பதிலடி கொடுக்க கிராமம், நகரம் அனைத்திலும் தற்காப்பு குழுக்களை காட்டுவோம்” என்றும் முன் வைத்துள்ளனர்.
சமூக நல்லிணக்க குழுக்கள் என்பது மதங்களாகப் பிரிந்து கிடப்பவர்கள் மத்தியில் உருவாக்கப்படுவது தானே சாதிகளில் நல்லிணக்கம் எவ்வாறு உருவாகும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உண்மைதான் சமூக நல்லிணக்கம் என்றாலே மதங்களுக்கிடையிலானது என்ற கருத்து உருவாக்கம் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் இத்தகைய கேள்விகள் எழும்புகின்றன.
பார்ப்பன (இந்து) மதத்தின் அடித்தளம் சாதிய கட்டமைப்பில் தான் உள்ளது என்பதால் சாதிகளுக்கு அப்பால் நல்லிணக்க குழுக்களை உருவாக்குகின்ற போது, அவை தனது பகுதிகளில் நடக்கின்ற சாதி ரீதியிலான தாக்குதல்கள்; தீண்டாமை குற்றங்கள்; ஆணவப் படுகொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக மக்களை திரட்டி போராடுகின்ற வகையில் செயல்படும்.
இதன் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது மதச் சிறுபான்மையினர் மீதான பார்ப்பன மத ரீதியிலான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும் இந்த நல்லிணக்க குழுக்கள் பாடுபடும் என்ற கண்ணோட்டத்திலேயே இதனை முன் வைக்கிறார்கள்.
அதுபோல சாதி வெறியர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு தற்காப்பு குழுக்களை கட்டுவது என்பது சாதி மறுப்பு ஜனநாயக உணர்வு கொண்டவர்களை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதும், இது போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடுவதற்கு எப்போதும் அரசு கட்டமைப்பையே நம்பிக்கொண்டிருப்பதற்கு பதிலாக தடுப்பதற்கும், பதிலடி கொடுப்பதற்கும் இத்தகைய தற்காப்பு குழுக்கள் அவசியம் என்றே முன் வைக்கிறார்கள்.
இவையெல்லாம் சட்டவிரோதமானது என்று சட்டவாதம் பேசுபவர்கள் மீண்டும் ஒரு முறை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன் வைத்திருக்கும் அறிக்கையை படித்துப் பாருங்கள்.. தனது காதலனுக்கு உயிர் பாதுகாப்பு கொடுங்கள் என்று போலீசில் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்த பின்னரும் இவற்றை போலீசு கண்டுகொள்ளவில்லை. விளைவு சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடுகின்ற அமைப்பைச் சேர்ந்தவரே படுகொலையாகிறார்.
எனில், மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும் வேறு என்ன வழி? ஜனநாயகம் என்பது நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமையையும் பாதுகாக்கின்ற பொறுப்பையும் உள்ளடக்கியதுதான்.
இந்தியாவின் 140 கோடி மக்களின் மீதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்ற கார்ப்பரேட் காவி பாசிசத்தின் இரண்டு கூறுகளில் ஒன்றான காவி பாசிசம் என்று வரையறுக்கப்படும் பார்ப்பன பாசிசத்தின் மீது எதிர் தாக்குதல் தொடுப்பதற்கு, பார்ப்பன கொடுங்கோன்மையால் பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் பெரும்பான்மை மக்கள் சாதிகளுக்கு அப்பால் வர்க்கமாக ஒன்று திரள்வது தான் ஒரே வழி.
◾தமிழ்ச்செல்வன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி