நவம்பர்-14, நீரிழிவு தினம்: லாப வேட்டையில் மருத்துவ கார்ப்பரேட்டுகள்.

இந்த ஆண்டின் புதிய வரவாக சீனாவைச் சேர்ந்த தியான்ஜின் ஃபர்ஸ்ட் சென்ட்ரல் மருத்துவ நிறுவனம் ஸ்டெம்செல் தொழில்நுட்பத்தின் மூலம் சர்க்கரையை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்று ஆய்வு செய்துள்ளது...

லகம் முழுவதும் நீரிழிவு நோய் என்று சொல்லப்படும் சர்க்கரை நோய் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதன் தீவிரத் தன்மையை கண்காணிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு (IDF) ஆகிய இரண்டும் உலகம் முழுவதும் உள்ள நீரிழிவு நோயாளிகளை கண்காணித்து வருகின்றனர்.

இன்றைய தின கணக்கின்படி உலகம் முழுவதும் சுமார் 70 கோடி நீரிழிவு நோயாளிகள் இருப்பதாகவும், அதில் இந்தியாவில் மட்டும் 10 கோடி பேருக்கு மேல் நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

”நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.

அதிக உடல் எடை உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுகிறவர்கள் ஆகியோருக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு, பரம்பரை காரணமாகவும் இது வரக்கூடும்.” என்கிறார் மருத்துவர் கு. கணேசன்.

மன அழுத்தம்.

இந்த நோய்க்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது என்பதையும் அவர் முன் வைக்கிறார்.

”நீரிழிவு நோய்க்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கவலை, கோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படும்போது, நம் உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாகச் சுரந்து, இன்சுலின் செயல்படுவதைத் தடுக்கின்றன.

இதனால் நீரிழிவு நோய் வருகிறது. மன அழுத்தம் காரணமாக, ஒருவருக்கு நீரிழிவு நோய் புதிதாகவும் வரலாம் அல்லது ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்தால் அது அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.” என்பது தான் மருத்துவ அறிவியல் முன் வைத்துள்ள உண்மை. சிலீப் அப்னியா எனப்படும் தூக்கம் கெடுதல் நோயால் பாதிக்கப்படும் நபருக்கு இது வருவதற்கும் மனநோய் காரணமாக உள்ளது.


படிக்க: மனநோய்: ஏகாதிபத்திய முதலாளித்துவம் பெற்றெடுத்துள்ள கொடிய நோய்!


அஎக்ஸ்ட்ரா போலேட் என்ற மருத்துவக் குழுவின் ஆய்வின்படி, உலகளாவிய நீரிழிவு மருந்து சந்தை வருவாய் 2030 ஆம் ஆண்டில் 108.19 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் 2020-2030 ஐ விட CAGR (ஆண்டு வளர்ச்சி விகிதம்) 7.22% இல் விரிவடையும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உலகில் நீரிழிவு தொடர்பான மருந்து, மாத்திரைகளை தயாரிக்கக் கூடிய மருத்துவ கார்ப்பரேட்டுகள் வேகமாக கல்லாகட்டி வளர்ந்து வருகிறது.

உலகிலேயே நோவோ நோர்ஸ்டிக் ஏஎஸ் என்ற டென்மார்க் நிறுவனம் 170 நாடுகளில் தனது கிளையை பரப்பி முன்னணியில் நிற்கின்றது. சனோஃப்பி என்ற பிரான்சை சேர்ந்த நிறுவனம் இரண்டாவது இடத்திலும், மெர்க்கோ அண்ட் கோ என்ற அமெரிக்க நிறுவனம் மூன்றாம் இடத்திலும், எலி லில்லி அண்ட் கோ நான்காவது இடத்திலும், அஸ்ட்ரா செனேகா என்ற பிரிட்டன் கம்பெனி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகள் அதிகரிக்க அதிகரிக்க இவர்கள் கல்லா கட்டுவதற்கு வாய்ப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதால் உலக அளவில் நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கு முன் வைக்கப்படும் ஆலோசனைகளும் இவர்களால் தான் முன் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாக முன்வைக்கப்படும் ஆயுர்வேதா சித்தா மற்றும் நாட்டு மருந்துகள் அனைத்தும் ஒரு சிலவற்றைத் தவிர உள்நாட்டு தரகு முதலாளிகளின் கையினால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உயிர் காக்கும் மருந்துகளின் விலை ஒவ்வொரு ஆண்டும் 14% விலை உயர்ந்துள்ளதால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் பறிக்கும் நோய்கள் முதல் சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் வரை அனைத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நீரிழிவு உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கு பொருத்தமான மருந்துகளை விலை கொடுத்து வாங்குவதற்கு வாய்ப்பு வசதி இல்லாதவர்கள் மரித்துப் போவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

சர்க்கரை நோய் காரணமாக திடீரென்று ஏற்படும் மாரடைப்பு, சிறுநீரகம் பழுதடைவது, கண்கள் மங்கி பார்வை இழப்பு ஏற்படுவது மற்றும் கால்கள் படிப்படியாக முடங்குவது, செயல் இழப்பது போன்ற நோய்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சர்க்கரை நோய்க்கான மருத்துவத்துடன் கூடவே மேற்கண்ட நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகளை வாங்கி விழுங்க வேண்டியுள்ளது.

இதே போன்ற பல்வேறு மருத்துவ கார்ப்பரேட்டுகள் புதுப்புது மருந்துகளை கண்டுபிடித்து சந்தையில் விற்பனைக்கு விட்டு பல்லாயிரம் கோடிகளை சுருட்டி வருகிறது. இதன் விற்பனையாளர்களாக வீதிக்கு இரண்டு மூன்று மெடிக்கல் கடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நீரிழிவு தினம் என்ற அறிவிக்கப்படுவதும், அந்த தினத்தில் ஏதாவது ஒரு முழக்கத்தை முன்வைத்து நீரிழிவை கட்டுப்படுத்துவதாகவும் பம்மாத்து காட்டுகிறார்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவவாதிகள்..

முறையான உடற்பயிற்சி இல்லாதது, தூக்கம் இல்லாதது, சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாதது, உடல் உழைப்பில் ஈடுபடாமல் சோம்பேறித்தனமாக இருப்பது போன்றவை இதற்கான காரணங்கள் என்று முன்வைக்கப்பட்டாலும், முன்பெல்லாம் பணக்காரர்களின் வியாதி என்று சொல்லப்பட்ட சர்க்கரை வியாதி இப்போது நீக்கமற அனைவருக்கும் பரவி மிகப்பெரும் ஆபத்தை உருவாக்கி வருகிறது.

மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கமும், உடலுழைப்பிலிருந்து அன்னியப்பட்டு போயுள்ள மக்களை வெவ்வேறு வகைகளில் முறையாக பயிற்சி கொடுப்பது, உழைப்பில் ஈடுபடுத்துவது போன்ற அறிவியல் பூர்வமான வழிகளை மூலமே சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடியும்.

இந்த ஆண்டின் புதிய வரவாக சீனாவைச் சேர்ந்த தியான்ஜின் ஃபர்ஸ்ட் சென்ட்ரல் மருத்துவ நிறுவனம் ஸ்டெம்செல் தொழில்நுட்பத்தின் மூலம் சர்க்கரையை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்று ஆய்வு செய்துள்ளது என்றாலும், இதன் மூலமும் பல்லாயிரம் கோடி உழைக்கும் மக்களிடமிருந்து பறிக்கப்பட போகிறது என்பதுதான் நாம் மருத்துவ ரீதியாக முன்வைக்க வேண்டிய செய்தியாகும்.

முகம்மது அலி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here