நவ-7 சூளுரை:
ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக மக்களின் வாழ்வைச் சூறையாடும்
கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!!

 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

வேலையும் வருவாயும் இல்லாத நிலையில் உலகப் பட்டினி குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தைப் பெற்று வறுமையை ஒழிப்பதில் பின் தங்கி உள்ளது இந்தியா. தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆஃப்கானிஸ்தானை விட (109-வது இடம்) நாங்கள் பரவாயில்லை என்று வேண்டுமானால் இந்துத்துவவாதிகள் பெருமை பேசலாம்!

தீபாவளி எனும் பொய்யும் ! நவம்பர் புரட்சி எனும் உண்மையும் !

இந்தப் பட்டினி சூழலில்தான் மக்கள் கடன் வாங்கியேனும் தீபாவளியைக் கொண்டாடி முடித்துள்ளனர். கற்பனைக் கதைகளும், அறிவியலுக்கு ஒவ்வாத நம்பிக்கையும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு காரணமாக சொல்லப்பட்டு நமது முப்பாட்டன் நரகாசுரனைக் கொன்று அழித்த நாளை நம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாட வைக்கிறார்கள். பார்ப்பன கும்பல், தங்கள் கொண்டாட்டத்தையே நமது மக்களின் கொண்டாட்டமாக்கி அறிவிழக்கச் செய்துள்ளனர். ஆனால், உண்மையில் உழைக்கும் மக்கள் தங்களுக்கான பண்டிகையாக உயர்த்திப் பிடிக்க வேண்டியது நவம்பர் புரட்சி நாளைத்தான்.

புரட்சியை இறுக பிடி ! முதலாளித்துவத்தை தூக்கியெறி !

1917, நவம்பர் 7 – உலகின் முதல் தொழிலாளி வர்க்க அரசு அமைந்த நாள். மனித சமூகத்தை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதாக பித்தலாட்டம் செய்து வந்த முதலாளித்துவ வர்க்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றியது மட்டுமல்ல, அது சமூகத்துக்குத் தேவைப்படாத வர்க்கம் என்பதையும், சமூக முன்னேற்றத்துக்கே தடைக்கல் என்பதையும் நடைமுறையில் நிரூபித்தார் நவம்பர் புரட்சியின் நாயகன் தோழர் லெனின்.

சோவியத் ஆட்சியில், தான் உழைக்காமல் அடுத்தவர் உழைப்பைத்திருடி உல்லாசமாக வாழும் அம்பானிகளும் இல்லை; தலைமுறை தலைமுறைகளாக உழைத்தும் ஒண்டக்குடிசை கூட இல்லாத அன்றாடம் காய்ச்சிகளும் இல்லை. அரசாங்கத்துடன் கள்ளக்கூட்டு சேர்ந்து நாட்டின் வளங்களைச்சூறையாடி ஒரு நாளைக்கு 1002 கோடி சம்பாதிக்கும் அதானிகளும் இல்லை; 60 வயதிலும் அன்றாட கூலி ஆயிரத்தைத் தொட முடியாத ‘அதிர்ஷ்டமில்லாத’ உழைப்பாளிகளும் இல்லை!

சோவியத் ரசியாவில் ஆலைகள், சாலைகள் சுரங்கங்கள் என அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனின் உழைப்பும், அதனால் வரும் செல்வமும் அரசின் கஜானாவுக்குச் சென்றது. அங்கிருந்து அனைத்து மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலை, குடியிறுப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பல தேசிய இனங்களின் ஒன்று பட்ட சோவியத் ஒன்றியம் முழுவதும் இந்த நிலையை அடைய கிராமங்கள் வரை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது !

உழைக்கும் மக்களுக்கு சுருக்கு கயிறு ! கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம் !

இந்தியாவில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக மாற்றுவேன் என வாய்ச்சவடால் அடித்த மோடி, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாகிய அடிப்படை ஆதார விலை வழங்குவது குறித்து வாய் திறக்க மறுக்கிறார். மாறாக உலக வங்கியின் கட்டளைக்கு பணிந்து பல்வேறு மானியங்கள் சலுகைகள் ஒழிக்கப்பட்டு வருகிறது. வர்க்க விரோதிக்கும் சேர்த்து உணவளித்து வரும் விவசாயிகள் தினந்தோறும் பட்டினியுடன் படுக்கின்ற நிலைமை சர்வ சாதாரணமாக நடந்தேறுகிறது.

விவசாயத்தில் லாபமில்லாத நிலையில், அது கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்கு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள், விவசாயத்தை விட்டே விரட்டப்பட்டு வருகின்றனர். தான் நேசித்த விவசாயத்தை தன் பிள்ளைகள் செய்து விடக்கூடாது என மனம் நொந்து, தன் பிள்ளைகளையாவது படிக்க வைத்து ஏதோ ஒரு வேலைக்கு அனுப்பி விட வேண்டுமென ஆசைப்படுகிறார் விவசாயி. ஆனால், அந்த மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கின்ற நீட், க்யூட் போன்ற தேர்வு முறைகளைப் புகுத்தி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களின் இட ஒதுக்கீட்டையும் பறித்து, படிக்க விடாமல் தடுத்து அவர்களை வீதிக்கு தள்ளுகிறது பாசிச பா.ஜ.க.

மேற்கண்ட தடைகளைத் தாண்டி ஒருவர் படித்துவிட்டாலும் அரசு வேலை கிடைக்காது. ஏனெனில் இரயில்வே, விமானம், இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, மின்சார உற்பத்தி, LIC மற்றும் சுரங்கங்கள் என இருக்கின்ற அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்துவிட்டதால், அரசு வேலை இல்லை. தனியார் கம்பெனிகளிலும் நிரந்தர வேலை இல்லை. தன் வயிற்றுப் பசிக்காக, பிறருக்கு சோறு சுமக்கும் ஸ்விகி, சொமொட்டோ போன்ற நிரந்தமற்ற வேலை பார்க்கும் அவல நிலையில் இருக்கிறார்கள் படித்த இளைஞர்கள்.

கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் பாசிச பாஜக அரசால் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது. விவசாயத்தில் இருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள், கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள், மீன் பிடி உரிமை மறுக்கப்பட்டவர்கள், படித்து வேலை தேடுவோர் என வேலையில்லா ரிசர்வ் பட்டாளத்தை ஒன்று குவித்து குறைந்த கூலிக்கு சுரண்ட கார்ப்பரேட்டுகளுக்கு ஏவல் வேலை செய்கிறது கார்ப்பரேட் – காவி பாசிச அரசு!

கல்வி – வேலை- மருத்துவம் அனைத்தும் கார்ப்பரேட் மயம் ! நாடேயாகுது காவி மயம் !

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ரோஜ்கர் மேளா என்ற பெயரில் 75,000 பேருக்கு மத்திய அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவார்கள் என படாடோபமாக அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியின் போது கொடுத்த ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறி விட்டு கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 7 இலட்சத்து 22 ஆயிரம் பேருக்குத்தான் வேலையளித்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்குக்கூட வேலை தரவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை என்ற அறிவிப்பு தற்போது ஒன்னரை ஆண்டுக்கு 10 லட்சம் வேலை என்று சுருங்கி விட்டது.

ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவை இலட்சியமாகக்கொண்டு ஓடி ஓடி உழைத்தாலும் – ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைத்தாலும் உரிய பலனில்லை என நொந்து போகிறான் தொழிலாளி. அவனிடமே வரிக்கு மேல் வரி போட்டு ஒட்டச்சுரண்டும் மோடி அரசுதான், கார்ப்பரேட்டுகளுக்கு மான்யம், வரிச்சலுகை, தள்ளுபடி என பல இலட்சம் கோடிகளை சலுகைகளாக வாரி வழங்குகிறது. உழைக்காமல் உண்டு கொழுத்து ஊதாரியாய் ஒரு கும்பலும், உழைத்து ஓடாய்த்தேய்ந்து வறுமையின் பிடியில் ஒரு பெருங்கூட்டமும் என்ற ஏற்றத்தாழ்வினை அரசு தீவிரப்படுத்தி விட்டு, முதலாளிகளின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்றும், கடவுள் செயல் என்றும் நம்பச் சொல்கிறது கார்ப்பரேட் அடிவருடிகளான காவி பாசிச கும்பல். ஊடகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும், கூலிக்கு ஆட்களை அமர்த்தி சமூக வலைதளங்களில் பொய்யான கருத்துகளைப் பரப்பியும், தேசபக்தி, இஸ்லாமிய பயங்கரவாதம் என மக்களை திசை திருப்பி காவி பாசிச நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது!

ஏகாதிபத்தியத்திற்கு தேவை போர் ! மனிதகுலத்திற்கு தேவை சோசலிசம் !

இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் ஏற்றத்தாழ்வும் பெரும்பான்மை மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது. உலகை தன் கொடுங்கரத்திற்குள் அடக்கி வைத்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக வலதுசாரி சிந்தனை கொண்ட அரசுகள் உலகின் பல நாடுகளில் ஆட்சி செய்து வருகின்றன. சர்வதேச அளவில் ஏகாதிபத்தியத்தின் கொள்ளைகளுக்காக நாடுகளுக்கு இடையிலான சண்டைகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் அமெரிக்கா-சீனா இடையிலான பனிப்போர் உலகப்போராக மாறும் அபாயம் அதிகரித்து வருகிறது. முதலாளித்துவ லாப வெறியும் நிதி மூலதன ஆதிக்கமும் இருக்கும் வரை பாசிசமும் போரும் மறையப்போவதில்லை.

கடந்த மார்ச் மாதம் ஐநா வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் போரால் 107 நாடுகள் கடும் பாதிப்பை சந்திக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. அந்த நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும், பெட்ரோல், டீசல் விலை உயரும், நிதி நிலை கடும் பாதிப்பை சந்திக்கும். இதனால் இந்த நாடுகளில் வசிக்கும் 170 கோடி மக்கள், அதாவது, உலக மக்கள் தொகையில் 5ல் ஒரு பங்கு பாதிக்கப்படுவார்கள் என கணிப்பு வெளியிட்டது.

இலங்கையைத் தொடர்ந்து திவாலாகும் அபாயத்தில் உள்ள நாடுகள் வரிசையில், முதலிடத்தில் எகிப்து இருந்தாலும் அடுத்தடுத்து வரிசை கட்டி 107 நாடுகள் நிற்கின்றன. இதில் லெபனான், அர்ஜென்டினா, எல் சல்வடார், பெரு … என்ற வரிசையில் 12 -வது இடத்தில் இந்தியா நிற்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த உண்மைகளைப் பேசுபவர்களைத் தீவிரவாதிகளாக, அரசு விரோதிகளாக ஆளும் வர்க்கம் சித்தரிக்கிறது; சிறைப்படுத்தப்படுத்துகிறது. சாதிய ஒடுக்குமுறையும், இசுலாமிய வெறுப்பும் கொண்ட பாசிச சூழல் இயல்பானதாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கேற்ற வகையில் மக்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

ஆனால், பாசிஸ்டுகள் வெல்ல முடியாதவர்களல்ல. ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகளை கல்லறைக்கு அனுப்பிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் தொழிலாளர் வர்க்கத்தினர். யானை, தன் பலம் உணராமல் பாகனின் அங்குசத்திற்கு கட்டுப்பட்டு கிடப்பதைப் போல முதலாளித்துவ மயக்கத்திலும், மத போதையிலும் கட்டுண்டு கிடப்பதை உடைத்து தொழிலாளி வர்க்கம் வெளியே வரவேண்டும். உபரி மதிப்பையும் பொது மக்களுக்குச் சொந்தமான நாட்டின் வளங்களையும் திருடிக் கொழுக்கும் முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்புவதே தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை என உணர வேண்டும். உலகம் ஒரு புரட்சிக்கு ஏங்குகிறது. தொழிலாள வர்க்கம் கோடிக்கால் பூதமென திரண்டெழுந்தால், ரஷ்யாவில் நடத்திக்காட்டிய நவம்பர் புரட்சியை ஒவ்வொரு நாட்டிலும் படைக்க முடியும்.

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!

நாடு தழுவிய அளவில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

ஊர்தோறும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!! 

கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! 

ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்!

புதிய ஜனநாயகப்புரட்சியின் வழியே சோசலிசம் படைப்போம்!!

தமிழகம் – புதுவை தழுவிய பேரணி – கருத்தரங்கம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
விவசாயிகள் விடுதலை முன்னணி.
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here