நவம்பரில் 7: ரசிய புரட்சி தினத்தை கொண்டாடுவோம்!

அன்பார்ந்த தோழர்களே!
மகத்தான ரசிய சோசலிச புரட்சியின் சாதனைகளை சொல்லிமாளாது.
முதலாளித்துவம் 200 ஆண்டுகளுக்கு மேல் உருவாக்கிய சாதனைகளை வெறும் 30 ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டியது சோவியத் ரசியா.

ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு மரண அடி கொடுக்கும் சோசலிச சமூக அமைப்பை பற்றி அறிந்து கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் முடக்கி விட்டதால் இனியும் சோசலிசம், கம்யூனிசம் துளிர்க்காது என்று பகல் கனவு காண்கின்றனர் ஏகாதிபத்தியவாதிகள்.

ஏகாதிபத்தியவாதிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது. மீண்டும் நவம்பர் கள் தோன்றும் புவி பரப்பிலிருந்து முற்றாக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தைத் துடைத்தெறியும்.

2010 ஆம் ஆண்டு எமது தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை மீள் பதிவு செய்கிறோம். இந்திய ஒன்றிய அரசில் காங்கிரஸ் என்ற தரகு முதலாளித்துவ கட்சி ஆட்சிக்கு பதில் பாரதிய ஜனதா கட்சி என்ற பாசிச பயங்கரவாத கட்சியின் ஆட்சி நடக்கிறது என்பது மட்டுமே இதில் நாம் புதிதாக சேர்க்க வேண்டிய அம்சங்கள்.
மற்றபடி சோவியத் யூனியன் அற்புதங்கள் என்ற இந்த தொடர் புதிய வாசகர்களுக்கு சோசலிசத்தை பற்றி அறிமுகத்தை தரும் என்பதால் இதனை மீள்பதிவு செய்கிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

தொன்னூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது.

இன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் இன்று நடக்கும் ஆலைப் படுகொலைகளே சாட்சி.

இது போன்ற எண்ணற்ற கொலைகளும் தற்கொலைகளும் முதலாளித்துவ லாபவெறியின் காரணமாக ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டேயிருக்கிறது. பாபிலோன் நாகரீகத்தை உருவாக்கிய ஈராக்கின் புதல்வர்கள் நாகரீகமற்ற ஏகாதிபத்தியவாதிகளால் நம் காலத்தில், நம் கண்களுக்கு முன்பாகவே அடிமைகளாக்கப்பட்டு குரூரமாக சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

நமது நாட்டிலுள்ள கனிம வளங்களை எல்லாம் ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்காக மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகளை போல தமது தாய் நிலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்படுகிறார்கள்.

ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கம் காரணமாக இதுவரை இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை முதலாளித்துவத்தின் லாபவெறி பிணங்களாக்கியிருக்கிறது, உயிரோடு உள்ளவர்களை நடை பிணங்களாக்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் கொல்லும் என்பதற்கும்  கம்யூனிசமே வெல்லும் என்பதற்கும் மேற்கூறிய உதாரணங்களும் நேபாளமுமே இன்றைய சான்றுகள்.

லாபத்திற்காக மக்களை கொல்லும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் தான் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று அவதூறு செய்து கொண்டிருக்கிறார்கள். ”கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரம் தான், வீட்டில் துவங்கி ஆடு, மாடு, கோழி என்று அனைத்தையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். நாலு மாடுகளை வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிற ஒரு விவசாயியிடம் இதை சொன்னால் என்ன ஆகும் ?

அதை உண்மை என்று பயந்து போய் முதலாளித்துவ பொய்ப் பிரச்சாரத்தையே அவரும் தனக்கு தெரிந்த நான்கு பேரிடம் சொல்லிக்கொண்டிருப்பார். நம்முடைய நாட்டில் கம்யூனிசம் பற்றிய முதலாளித்துவ அவதூறுகள் இவ்வாறும் இன்னும் பல வழிகளிலும் பரப்பிவிடப்படுகிறது.

உண்மையில் கம்யூனிசம் தோற்றுவிட்டதா ? இல்லை, சோவியத் குடியரசு உடைபட்டு விட்டதாலேயே கம்யூனிசம் தோற்று விட்டது என்று கூறுவது ஒரு பந்தலுக்கு கீழே நின்று கொண்டு சூரியனை காணோம் என்று கூறுவதற்கு சமமானது. எனினும், கம்யூனிசம் எப்படி அறிவியல் பூர்வமானது, சரியானது என்பதை நிறுவுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல, மாறாக கம்யூனிசத்தை பற்றியும், சோசலிச நாடுகளை பற்றியும் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்துள்ள பொய்களையும், அவதூறுகளையும் உண்மை என்று நம்புபவர்களுக்கு திரையை விலக்கி காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சோவியத் நாட்டில் நிலவிய ஆட்சி முறையையும்,மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உள்ளது உள்ளபடி அறிந்து கொண்டால் மட்டுமே கம்யூனிசம் குறித்த முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும். இதற்கு நாம் சோவியத் நாட்டின் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் இருந்து எந்த தரவுகளையும், மேற்கோளையும் இங்கே கொடுக்கப் போவதில்லை. அனைத்தும் இந்த நாட்டிலிருந்து இரசியாவிற்கு சென்று வந்தவர்கள் கூறியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

பிழைப்புவாத சாக்கடைக்குள் முக்குளிக்க்கும் நமது சமூகத்தில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிரச்சனை என்றால் தன் வீட்டுக் கதவை சாத்திக் கொள்ள பயிற்றுவிக்கப்பட்டுள்ள மனிதனின் மனநிலைக்கும், சோவியத்தில் ஒரு கூட்டுப் பண்ணையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் பற்றிக் கொண்ட தீயினால் முழு பண்ணையும் எரிந்து நாசமாகி விடக்கூடாதே என்றெண்ணி அடுத்த நொடியே எரிந்து கொண்டிருந்த டிராக்டரில் ஏறி அதை வயலுக்கு வெளியில் ஓட்டிக் கொண்டு வந்து விட்டு விட்டு தனது உயிரையும் விட்ட, அப்போது தான் புதிதாக திருமணம் ஆன 28 வயது சோசலிச இளைஞனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாமும் அவனும் மனிதன் என்கிற வகையில் நாம் உரசிப் பார்த்துக்கொள்வதற்கும் இந்த உண்மைகள் நமக்கு உதவும்.

இரசியா: ஐரோப்பிய பிற்போக்கின் கோட்டையை பிளந்தது மார்க்சிய லெனினியம்

இரசியா, ஐரோப்பாவில் பாதி ஆசியாவில் பாதியை கொண்டிருந்த நாடு. அங்கே இல்லாத கொடுமையில்லை தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும். ஒருமுறை தொழிலாளர்கள் முதலாளிகளின் கொடுமைகளை தாங்க முடியாமல் ஜார் மன்னனிடம் மனு அளிப்பது என்று முடிவெடுத்து சில இலட்சம் பேர் அணி திரண்டு அரண்மனையை நோக்கிச் சென்றனர். ஜார் மன்னனுக்கு இந்த முதலாளிகள் செய்யும் கொடுமைகள் தெரியவில்லை, எனவே அதை தெரியப்படுத்துவதோடு சில கோரிக்கைகளையும் மனுவாக கொண்டு சென்றிருந்தனர். காலம் 1905.

அரசன் வெளியே வருவான் என்று கூட்டம் வாயிலை நோக்கி நெருங்க, நெருங்க சுற்றி வளைத்தது ஜாரின் குதிரைப்படை. அடுத்த நொடி துப்பாக்கிகள் சரமாரியாக தோட்டாக்களைப் பொழிந்தன. சற்று நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுட்டுப் பொசுக்கப்பட்டனர். அந்த நாளை இன்றும் இரத்த ஞாயிறு என்றே இரசியர்கள் அழைக்கிறார்கள். இது தான் 1917க்கு முன்பு இரசியாவில் இருந்த அரசியல் நிலைமை.

1917 அக்டோபர் 25 (இரஷ்ய காலன்டரின் படி இருந்த இந்த நாள் பின்பு மேற்கத்திய காலன்டர் படி நவம்பர் 7 என மாற்றப்பட்டது.) அன்று தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் கீழ் அணி திரண்ட லட்சக்கணக்கான இரசிய மக்கள் பிற்போக்கு ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு உலகிலேயே முதல் முறையாக உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.

பூவுலகில் ஒரு சொர்க்கத்தை படைத்த இரசிய மக்கள் :

அரசதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ’உழுபவனுக்கே நிலம்’ என்கிற முழக்கத்தின் அடிப்படையில் கொடுங்கோலர்களான நிலப்பிரபுக்களிடமிருந்தும், மத பீடங்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என்கிற சோவியத் அரசின் முதல் அரசாணையை தோழர் லெனின் வெளியிட்டார்.

அடுத்தபடியாக நாட்டின் உற்பத்தியை பெருக்குவதற்கும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்குமான திட்டங்கள் கால இலக்குகளுடன் துரிதமாக தீட்டப்பட்டன. அவை திட்டமிட்டிருந்த காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டன. அதில் முதன்மையானது மொத்த நாட்டையும் மின்சாரமயமாக்குவது! எந்த நாட்டை ? உலகில் ஆறில் ஒரு பங்கான இரசியாவை! எந்த ஆண்டில்? தொன்னூற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் 1917ல்! எவ்வளவு நாட்களில் ? வெறும் ஐந்தே ஆண்டுகளில்!

மன்மோகன் சிங் போன்ற உலகவங்கியின் குமாஸ்தாவின் ஆட்சியின் கீழே வாழும் நமக்கு இவையெல்லாம் அதிசயமாகத் தான் இருக்கும், ஆனால் சோவியத் மக்கள் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார்கள், கால இலக்கான ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே மொத்த இலக்கையும் எட்டினார்கள். உலகின் மிகப்பெரிய நாட்டை மின்சாரமயமாக்கினார்கள்.

அடிப்படையான சில விசயங்கள் சோவியத்தில் கட்டாய சட்டமாக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு சுட்டிக்காட்டலாம். அவை, அனைவருக்கும் இலவச கல்வி, கல்வி கற்று முடித்த பின்னர் அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வீடு (1917 க்கு முன்பு மாஸ்கோவின் மொத்த மக்கள் தொகை பதினெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர். இவர்களில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் மரக் கொட்டடிகளில் அறைக்கு 15 பேர் வீதம் வசித்து வந்தார்கள்)

அனைத்து வகையான இலவச மருத்துவ உதவிகளையும் பெறும் உரிமை (சோவியத் சட்டத்தின்படி சோவியத் குடிமக்கள் மட்டுமின்றி சோவியத்தில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டது) முதியவர்களுக்கான ஓய்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தவற்றுள் ஒரு சில மட்டுமே, இன்னும் பல்வேறு அடிப்படை உரிமைகள் சட்டங்களாக இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும், இந்த உரிமைகளை மக்களிடமிருந்து பிறர் பறிக்க முடியாதவாறும், அப்படி பறிக்க எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனைகளையும் சோவியத் சட்டங்கள் உறுதி செய்தன.

உழைப்பில் ஈடுபடும் நேரமும் அடிப்படை சட்டமாக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் அனைவருக்கும் வேலை நேரம் எட்டு மணி நேரம் மட்டுமே. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை ஒரு நாள் விடுமுறை. இவை எல்லாம் எப்படி சாத்தியமானது ?

அங்கே, மக்களின் உழைப்பையும், நாட்டின் கனிமவளங்களையும் மன்மோகன் சிங், ப.சி கும்பல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தூக்கி கொடுப்பதைப் போல கொடுக்காமல் நாட்டின் உற்பத்தியை பெருக்க மக்களிடம் லெனின் ஒரு கோரிக்கையை வைத்தார். அதாவது, விடுமுறை நாட்களில் நாட்டுக்காக இலவசமாக உழைக்க வேண்டும் என்று கோரினார். இது சட்டமல்ல. “விருப்பம் இருந்தால் வேலை செய்யலாம் இல்லையெனில் வேண்டாம்” என்று அறிவிக்கப்பட்டது.

முதலில் சில ஆயிரக்கணக்கானவர்கள் மட்டும் தான் முன் வந்தார்கள். பின்னர் தொடர்ந்து வந்த மாதங்களில் அவ்வெண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்தது. உபரியாக சேர்க்கப்பட்ட உற்பத்தியில் பெறப்பட்ட செல்வங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்கே பல்வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டது. இந்த உழைப்புக்கு பெயர் ‘சப்போத்னிக்’.

தோழர் லெனினுடைய மறைவிற்கு பின் தோழர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார். புரட்சிக்கு முன்பிருந்த இரசியா என்பது அனைத்து துறைகளிலும் மிக, மிக கீழான நிலையில் இருந்தது. உணவுப்பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடியது. நோய்கள் மற்றொரு பக்கம் மக்களை அள்ளிக் கொண்டு போனது. இந்நிலையில் மந்திரத்தின் மூலமா நாட்டை முன்னேற்ற முடியும்? மக்களின் துணையின்றி வேறு வழி ஏது ?

உழைக்கும் மக்களின் தலைவரான தோழர் ஸ்டாலினுடைய தலைமையின் கீழ் சோவியத் மக்கள் அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்தினார்கள். அப்போது உலகப் பொருளாதாரத்தில் சோவியத் யூனியன் தொடர்ந்து முன்னணியில் இருந்தது. ஆம், தோழர் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ’சர்வாதிகார ஆட்சி’ தான் மாபெரும் சோசலிசத்தின் சாதனைகளை படைத்தது !

கூட்டுப் பண்ணைகள்

புரட்சிக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் சோவியத் உணவு உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருந்தது. பஞ்சம் தலைவிரித்தாடியது. விவசாயத் துறையில் தன்னிறைவு பெற சோவியத் அரசாங்கம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், அணை கட்டுதல், கால்வாய் வெட்டுதல் போன்ற அடிக்கட்டுமான வேலைகளை எல்லாம் மின்னல் வேகத்தில் செய்து முடித்தது. அதன் தொடர்ச்சியாக மக்களே இணைந்து நடத்தும் கூட்டுப் பண்ணைகளை அமைத்தது.

இக்கூட்டுப்பண்ணைகள் மிகப்பிரம்மாண்டமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருக்கும். அவற்றில் பணி புரியும் விவசாயிகளுக்கான வீடுகளையும் அவர்களுக்கு சொந்தமாக சிறு தோட்டங்களையும் கூட்டுப்பண்ணைக்குள்ளேயே தனி ஒரு இடத்தில் அரசாங்கமே அமைத்துக் கொடுக்கும். கூட்டுப்பண்ணை உற்பத்தி என்பது குழு குழுவாக போட்டி போட்டுக் கொண்டு நடக்கும் உற்பத்தியாக இருக்கும். எந்தக் கூட்டுப் பண்ணையில் யார் அதிக மகசூல் எடுக்கிறார்கள் என்கிற போட்டி விவசாயிகளிடமிருக்கும். தமது பண்ணை தான் நாட்டிற்கு அதிகமாக உற்பத்தி செய்து தர வேண்டும் என்று ஒவ்வொரு பண்ணையும் போட்டி போட்டுக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடும். உற்பத்தி இலக்கை தாண்டும் பண்ணைகளை அரசு நாடு முழுவதும் மக்களிடம் அறிவித்து கவுரவிக்கும். அந்த பண்ணையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பரிசுகளளிக்கப்படும்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேர் வானூர்தியை அருகில் நின்று பார்த்திருப்பீர்கள். எத்தனை பேர் அதில் பயணம் செய்திருப்பீர்கள்? சோவியத்தில் ஒவ்வொரு கூட்டுப் பண்ணைக்கும் சொந்தமாக சில பத்து குட்டி விமானங்கள் இருந்தன என்று கூறினால் நம்புவீர்களா ? ஆம், அவர்கள் தமது பண்ணைகளில் விளைந்த தானியங்களை நகரத்திற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்காக அரசு அவர்களுக்கு குட்டி விமானங்களை வழங்கியிருந்தது. ஆனால் இந்திய விவசாயிகளுக்கு மன்மோகன் சிங் பாலிடால் பாட்டில்களை நீட்டுகிறார். அவர்களும் லட்சக்கணக்கில் மரணத்திற்கு பின்னர் வானில் பறக்கிறார்கள்!

எங்காவது பாலைவனத்தில் பருத்தி பயிரிட முடியுமா ?. சோவியத்தில் மக்கள் அதையும் சாதித்திருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் உஸ்பெகிஸ்தான் குடியரசிலுள்ள பாலைவனத்திற்கு அருகில் சில மைல்களுக்கு அப்பால் எதற்கும் பயன்படாமல் சதுப்பு நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும். அங்கேயிருக்கும் தண்ணீரை இந்தப் பாலைவனப்பகுதிக்கு வரவழைத்து பயிரிட திட்டமிட்டார்கள். அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கால்வாய் வெட்டும் பணியில் இறங்கி அதை துரித கதியிலும் முடித்து பாலைவனத்தில் பருத்தி கூட்டுப்பண்ணையையும் சாத்தியமாக்கினார்கள்.

அதே உஸ்பெகிஸ்தான் பகுதியிலுள்ள வேறு ஒரு கூட்டுப்பண்ணைக்கு சென்றிருந்த எழுத்தாளர் அகிலன் அதைப் பற்றி கூறியது.

“பருத்திச் செடிகள் அங்கே ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தன. அளவில் இவ்வளவு பெரிய பருத்தியை இதற்கு முன் நான் கண்டதில்லை. எனவே, உள்ளே புகுந்து ஒன்றை பறிக்க முனைந்தேன். உடனே ஏதோ கத்திக்கொண்டு வேகமாக என்னைத் தடுத்தார் ஒரு உழவர். அவர் என்ன சொல்கிறார் என்று உடன் வந்த சோவியத் எழுத்தாள நண்பரிடம் கேட்டேன்.
‘பருத்திக்காய் இன்னும் முதிரவில்லையாம், பறித்து வீணாக்கிவிடாதீர்கள் என்று சொல்ல வந்தார்’ என்றார்.
நான் திகைத்து போனேன். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெரிய தோட்டம் அது. நான் பறிக்கப்போனதோ ஒரே ஒரு பருத்தி. அதுவோ கூட்டுப்பண்ணையை சேர்ந்தது. கூட்டுப்பண்ணையைத் தம் சொந்தப் பண்ணையாக ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் எப்படி அவ்வாறு பதறி இருக்க முடியும்? நாட்டின் சொத்தை தனது சொந்த சொத்தைப்போல் மதித்து பாதுகாக்கும் பண்பை ஒரு சாதாரண கிராமவாசியிடம் அங்கே கண்டதை என்னால் மறக்க முடியவில்லை” (சோவியத் நாட்டில்: பயண நூல், அகிலன்,பக்கம் 52)
தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here