மக்கள்திரள் வழியே (MASS LINE)  நக்சல்பாரி பாதை என்று வழிகாட்டிய தோழர் கே என்கின்ற ருக்மாங்கதனுக்கு நினைவஞ்சலி!

ந்திய புரட்சிகர வானில் வசந்தத்தின் இடிமுழக்கமாக வந்துதித்த நக்சல்பாரி அரசியல் வலது சந்தர்ப்பவாத போக்குகளை முறியடித்து பாட்டாளி வர்க்கத்தின் கலங்கரை விளக்கமாய் எழுந்தது. நிலவுகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற போலி ஜனநாயக ஆட்சிக்கு வெளியில் மக்களை திரட்டுகின்ற மகத்தான அரசியல் இயக்கமாக 60களின் இறுதியில் உருவானதுதான் நக்சல்பாரி இயக்கம்.

1925 முதல் கம்யூனிச இயக்கத்தில் நிலவி வந்த வலது சந்தர்ப்பவாத, திருத்தல்வாத போக்குகளை முறியடித்து எழுந்த நக்சல்பாரி இயக்கம், அதற்கு நேரெதிரான இடது சந்தர்ப்பவாத பாதையில் தனது பயணத்தைத் துவங்கி கடும் அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகியது மட்டுமின்றி, தான் நேசித்த மக்களிடமிருந்தும் தனிமைப்பட்டது.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற சரணடைவு என்ற வலது சந்தர்ப்பவாத போக்கிற்கும், ஆயுத சாகச வழிமுறை என்ற இடது சந்தர்ப்பவாத போக்கிற்கும் இடையில் சிக்கி தவித்து வந்த இடதுசாரி அரசியலில் இந்திய புரட்சி வானில் நம்பிக்கை ஒளிக்கீற்றாய் எழுந்தது மாநில அமைப்பு கமிட்டி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா-லெ), SOC CPI(M-L)

தான் எற்றுக்கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதைக்கு மக்களைத் திரட்டுவதற்கும், மக்களுடன் ஐக்கியப்படுவதற்கும் தடையாக இருந்த அனைத்து அம்சங்களையும் பற்றி சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் அனுபவத்திலிருந்தும், மார்க்சிய ஆசான்களின் புரட்சிகர நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்களில் இருந்தும் சரியான மக்கள் திரள்வழி (MASS LINE) ஒன்றை வகுத்து புரட்சியை முன்னெடுத்துச் சென்றது மாநில அமைப்புக் கமிட்டி.

அத்தகைய மக்கள் திரள்வழி என்ற நக்சல்பாரி இயக்கத்தின் புரட்சிகரமான பாதையை வகுத்துக் கொடுத்த முன்னோடிகளில் ஒருவரான தோழர் கே கடந்த ஆறு மாத காலமாகவே கடுமையான உடல்நிலை பாதிப்பு மற்றும் நினைவிழப்பு போன்ற நோய்களினால் துன்புற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் (17-06-2024) இரவு இயற்கை எய்தினார். அவரது இறப்பு நக்சல்பாரி இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பாகும்.

இந்திய புரட்சியின் அடிப்படை வர்க்கமான விவசாயிகள் மத்தியில் எவ்வாறு வேலை செய்ய வேண்டும்; விவசாயிகளின் உற்ற நண்பனான தொழிலாளர்கள் மத்தியில் எவ்வாறு வேலை செய்ய வேண்டும்; நகர்ப்புறத்தில் உள்ள கலை இலக்கியவாதிகள் மத்தியில் எவ்வாறு வேலை செய்ய வேண்டும்; மாணவர்கள்-இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு வர்க்கத்திற்கும் பொருத்தமான ஊழியர் கொள்கை ஒன்றை வகுத்ததில் தோழர் கே-விற்கு முக்கிய பங்கு உண்டு.

கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து வருகின்ற முன்னணியாளர்கள் முதல் நகர்ப்புறத்தில் உள்ள தொழிலாளிகள், படிப்பாளிகள் உள்ளிட்ட பிரிவினரிடமிருந்து வருகின்ற முன்னணியாளர்கள் வரை அனைவரையும் அவர்களின் சித்தாந்த கண்ணோட்டத்தை, பழைய வர்க்க வாழ்க்கையிலிருந்து மாற்றி பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு வளர்த்துக் கொள்வதற்கு உதவியாக வெளி வந்த உட்கட்சி பத்திரிக்கையான புரட்சிப் புயல் இதழைக் கொண்டு வந்ததில் தோழர் அப்புவிற்கு பிறகு தோழர் கே-வின் பங்கு மகத்தானது.

70-களின் இறுதியில் நக்சல்பாரி இயக்கத்தில் நடந்த சித்தாந்த போராட்டத்தில் சரியான மார்க்சிய – லெனினிய அரசியலை முன்வைத்து தோழர்களை உருவாக்குவதிலும், பல்வேறு சந்தர்ப்பவாத போக்குகள், திசைவிலகல் போக்குகளை முறியடித்து சரியான மார்க்சிய லெனினிய அடித்தளத்தில் ஊன்றி நிற்பதற்கு கற்றுக் கொடுத்தது அவரது படைப்புகள்.

கட்சிக்கு வெளியில் உள்ள பரந்துபட்ட உழைக்கும் மக்களை பாட்டாளி வர்க்க அரசியலுக்கு கொண்டு வருவதற்கு பொருத்தமான மக்கள் திரள் ஏடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 1985 ஆம் ஆண்டு முதல் புதிய ஜனநாயகம் என்ற அரசியல் ஏட்டைக் கொண்டு வந்து, அதில் இந்திய சமூகத்தில் நிலவும் போலி ஜனநாயக அரசு கட்டமைப்பு, அரசு மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள உறவு, இந்தியாவில் நிலவுகின்ற இரட்டை ஆட்சி முறை போன்ற அடிப்படை பிரச்சனைகள் துவங்கி கம்யூனிச இயக்கத்தில் தோன்றும் வலது, இடது சந்தர்ப்பவாத போக்குகள், குறிப்பாக மக்கள் யுத்தக்குழுவினரின் ஆயுத சாகச வழிமுறைகளின் தவறுகள், ஈழத்தில் நடந்த விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் செயல்பட்ட விடுதலைப் புலிகளின் பாசிச போக்கு, இதர இயக்கங்களின் தவறுகள், இட ஒதுக்கீடு என்பதை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் மூன்றாவது நிலைப்பாடு ஒன்றை மா-லெ கண்ணோட்டத்தில் முன் வைத்தது, பெரியார், அம்பேத்கர் இயக்கங்களில் உள்ள சீர்திருத்தவாத போக்குகள், அதில் புரட்சிக்கு சாதகமானது மற்றும் எதிரானது போன்றவற்றைப் பற்றி முன்வைத்தது, தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழின பிழைப்புவாத கும்பல் நடத்திய இனவாத அரசியல் போன்ற ஒவ்வொன்றிலும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அரசியலை ஆணித்தரமாக முன்வைத்து போராடியதில் தோழர் கேவின் பங்கு மகத்தானது.

ஆர் கே என்ற பெயரில் புதிய ஜனநாயகம் இதழில் காத்திரமான பல்வேறு கட்டுரைகளை எழுதி அதனை சிறப்பு வெளியீடுகளாக கொண்டு வந்து ஆயிரக்கணக்கான இளம் தலைமுறை வாசகர்களையும், இளம் கம்யூனிஸ்டுகளையும் சரியான அரசியல் திசை வழியில் பயணிப்பதற்கு வழி வகுத்தவர் தோழர் கே என்றால் அது மிகை இல்லை.

புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் பொதுவாக புதிய ஜனநாயகப் புரட்சி என்ற போர்த்தந்திர அரசியலை மட்டும் முன்வைத்துப் பேசுவது, கிளிப்பிள்ளைகளைப் போல திரும்பத் திரும்ப ஒரே முழக்கத்தை முன் வைத்துப் பேசுவது போன்ற குழப்பவாத, பரவசப் போக்குகளுக்கு எதிராக, அரசியல் செயல்தந்திர வழியை முன்னிறுத்தி அதன் மூலமாகவே மக்களை அணி திரட்ட முடியும் என்ற மார்க்சிய – லெனினிய விஞ்ஞானத்தை கற்றுக் கொடுத்து, அதன் வழியில் 90 கள் முதல் 2010 வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்கு ஊக்கமளித்து வழிகாட்டி நின்றவர்தான் தோழர் கே.

இந்த வகையில் எமது மக்கள் திரள் அமைப்புகளின் மூலம் நடத்தப்பட்ட கருவறை நுழைவுப் போராட்டம் முதல் நெல்லை தாமிரபரணி கோகோ கோலா முற்றுகை வரை பல்வேறு இயக்கங்கள் இந்தியாவிலேயே அரசியல் ரீதியாக மக்களை அணி திரட்டுவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவை. மக்களின் அன்றாட பொருளாதாரக் கோரிக்கைகள், தொழிற்சங்கவாத கோரிக்கைகள் மற்றும் இனப் பிரச்சனைகள் ஆகியவற்றை முன்வைத்து மக்களை திரட்டுகின்ற வழிமுறைகளைத் தாண்டி, அரசியல் செயல் தந்திரத்தின் கீழ் மக்களை அணி திரட்டுவது மார்க்சிய – லெனினிய விஞ்ஞானத்தின் முக்கியமான அம்சமாகும்.

அந்த திசைவழியில் இயக்கத்தைக் கொண்டு செல்வதற்கு வழிகாட்டி அதில் ஏற்படும் தவறுகளையும், விமர்சனமாக சுட்டிக்காட்டி மக்களைத் திரட்டுவதற்கு உரிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர்தான் தோழர் கே.

கம்யூனிச இயக்கத்திற்கு வருகின்ற பல்வேறு தோழர்கள், பல்வேறு வர்க்க வாழ்க்கையில் இருந்து வருகின்றவர்கள், அவர்களிடம் பழைய வாழ்க்கை கண்ணோட்டம் நீடிப்பதற்கான அடிப்படை உள்ளது என்பதால், அதனை மாற்றி பாட்டாளி வர்க்கத்திற்கு உரிய பண்பாட்டு நெறிமுறைகளை வகுத்து, அந்த அடிப்படையில் ஒவ்வொரு தோழரையும் பரிசீலித்து, வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் புடம் போட்டு சிறந்த கம்யூனிஸ்டுகளாக உருவாக்கியதில் தோழர் கே-வின் பங்கு மகத்தானது.

மார்க்சிய லெனினியத்தை உள்வாங்கி செறித்துக்கொண்டு ஒவ்வொரு பிரச்சனையையும் வர்க்க கண்ணோட்டத்தில் அணுகுவதிலும், மக்களின் வாழ்க்கையை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் அணுகி, என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நுட்பமாக உணர்ந்து அவ்வப்போது அதனை தனது எழுத்துக்களின் மூலமாகவும், தோழர்களுக்கு வகுப்புகளின் மூலமாகவும், உரையாடல்களின் மூலமாகவும் கற்றுக் கொடுத்து வளர்த்தவர்தான் தோழர் கே.

நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி, அவரது பயணத்தின் போது அவர் எதிர்கொள்கின்ற அனுபவங்கள், சந்திக்கின்ற மனிதர்களின் வர்க்க வாழ்க்கையை அலசி ஆராய்ந்து அவர்களின் துன்ப துயரங்களுக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, தான் புரிந்து கொள்வது மட்டுமின்றி சக தோழர்களுக்கும் எளிமையான முறையில் கற்றுத் தருவதில் அற்புதமான தோழர் அவர்.

துடிக்கும் இளமைப் பருவத்தில் தனக்குக் கிடைத்த வசதி வாய்ப்புகள் அனைத்தையும் உதவியெறிந்து விட்டு பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து முன்னோடியாக திகழ்ந்த தோழரின் வாழ்க்கையில் 2010 க்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள், குறிப்பாக திருமணத்திற்கு பிறகான அவரது வாழ்க்கை சமரசங்களுடன் பயணிக்க துவங்கியது. இயக்கத்திற்குள் எவ்வாறு பாட்டாளி வர்க்க பண்பாட்டு நெறிமுறைகளை முன்வைத்துப் போராடினாரோ அதற்கு நேர் எதிராக தனது வாழ்க்கையில் சமரசங்களை மேற்கொள்ளத் தொடங்கினார். 2010 –ல் நடந்த அமைப்பின் உயர்ந்த பட்ச கூட்டத்தில், இந்திய சமூக அமைப்பைப் பற்றி மாறியுள்ள சூழலில் ஆய்வு செய்வதாக ஏற்றுக்கொண்டு அதை செய்யத் தவறினார். இந்த தவறை செய்ததன் மூலம் “அரசியல் தற்கொலை” செய்து கொண்டதாக 2019 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் உயர்ந்தபட்ச கூட்டத்தில் மனமுவந்து சுயவிமர்சனம் ஏற்றுக் கொண்டார்.

இந்த வகையில் மார்க்சிய லெனியத்தின் மீதான மாளாத காதலும், உறுதியும் கொண்டு புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட வேன்டும்  என்று முன் வைத்த போதிலும், அதற்குரிய வகையில் ஆய்வு செய்து வழிகாட்டுவதில், அவரது வயது மூப்பு தடையாக மாறியது. அவர் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பணியை உரிய காலத்திற்குள் முடிக்காததால் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தன்னை பணித்துக் கொண்டு செயல்படுவதைக் காட்டிலும் விமர்சனங்களை எதிர் நிலையில் அணுகத் துவங்கினார்.

தனக்கென்று பொது வாழ்க்கையில் ஆர்.கே என்ற அடையாளத்தைத் தவிர வேறு ஒன்றையும் உருவாக்கிக் கொள்ளாமல், லட்சியத்திற்காக வாழ்ந்து கொண்டிருந்த தோழரின் சிந்தனையில் பொறுப்பு, பதவி போன்ற பிற்போக்கு அம்சங்கள் அலைக்கழிக்கத் துவங்கியது. இந்த காலகட்டத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த சுயநலவாதிகள் மற்றும் அரசியலைத் தனது பிழைப்புக்காக பயன்படுத்துகின்ற அரசியல் வியாபாரிகள், இரட்டை வாழ்க்கை பேர்வழிகள் போன்றவர்களின் ஆலோசனைகளுக்கு செவி கொடுத்து செயல்படத் துவங்கினார். தனது இறுதி காலங்களில் பண்பாட்டு நெறிமுறைகளில் ஊசலாடிப் பின்னடைந்தார்.

இந்திய புரட்சிக்கு பங்களிப்பு செலுத்தப் போவதாக முன் வைத்த போதிலும் அத்தகைய பணியில் திட்டவட்டமாக இறங்கி தனது கருத்தை ஆய்வு செய்து வைக்காமல், தான் உருவாக்கி வளர்த்த, செயல்பட்ட அமைப்பின் அரசியல் மீது வசவுகள், அவதூறுகள் பரப்பி அரசியல் ரீதியாகவும் வீழ்ந்து போனார் என்பது விமர்சனத்திற்கும், வருத்தத்திற்கும் உரிய நிகழ்வாகும்.

”ஒரு மனிதன் கம்யூனிஸ்டாக மாறுவது ஒன்றும் அதிசயம் இல்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைவதுதான் அதிசயமானது மற்றும் உன்னதமானது” என்று முன்வைத்தார் தோழர் மாவோ. அந்த வரைவிலக்கணத்தின்படி தோழர் கே-வின் வாழ்க்கையை பரிசீலிக்கும் போது இறுதி காலத்தில் அவர் அரசியல் ரீதியாக செயலற்றும், பின்னடைந்தும், புரட்சிகர அமைப்பின் பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிராகவும் போனார் என்றே மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

அவரது இறப்பிற்குப் பிறகு அவரைப் பற்றி நினைவுக் குறிப்புகளை எழுதுபவர்கள் அவரது பங்களிப்பை பற்றி மட்டும் எழுதுவது, இறுதிக் காலத்திலான அவரது வாழ்க்கையைப் பற்றி மதிப்பீடு செய்யாமல் எழுதுவது போன்றவை அனைத்தும் தவறானவை. அவரது வார்த்தைகளில் சொல்லப்போனால், “செத்தவர்கள் அனைவரும் உத்தமர்கள் அல்ல! அவர்களின் வாழ்க்கையைப் பற்றி இறந்த பிறகு சரி, தவறுகளை நேர்மையாக பரிசீலிக்க வேண்டும். இறந்த பிறகு ஒருவரை விமர்சிக்க கூடாது என்ற பார்ப்பன (இந்து) மத கண்ணோட்டத்தில் அணுகவே கூடாது” என்ற கூற்றையே உமது நினைவஞ்சலிக்கு உதாரணமாக எடுத்துக் கொள்கின்றோம்.

மேற்கண்ட சாதக, பாதக அம்சங்கள் கொண்டிருந்த போதிலும் நக்சல்பாரி இயக்க வரலாற்றில் மக்கள் திரள் வழி என்ற மகத்தான பாதையை உருவாக்கி இந்திய புரட்சிகர வானில் நட்சத்திரமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் தோழர் கே-விற்கு எமது சிவப்பு அஞ்சலியை செலுத்துகின்றோம்.

மாநில அமைப்புக் கமிட்டி,
இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ),
தமிழ்நாடு

4 COMMENTS

  1. சிறப்பு. வாய்ந்த சிவப்பு அஞ்சலி இது !
    நக்சல்பாரி மா-லெ புரட்சிகர வானில் தோழர் ‘கே’ -யின் மகத்தான மக்கள் திரள் வழிப் பங்களிப்பைப் பற்றி மக்கள் அதிகாரம் சிறப்பாக மட்டும் அல்ல; சற்று விரிவாவே விளக்கி சிவப்பு அஞ்சலி செலுத்தியமைக்கு -ஆரம்ப காலம் முதல் அவருடன் ஒன்றித்துப் பயணப் பட்டவன்- என்ற முறையில் நன்றியை உரித்தாக்குகிறேன். தோழர் மறைந்தார் என்ற செய்தியை 18-06-2024 அதிகாலை
    6 மணிக்கு வாட்ஸ்அப்பில் கண்ணுற்ற தும் பெரிதும் அதிர்ந்து போனேன்‌. ஆரம்ப கால நிகழ்வுகள் அனைத்தும் என் மனக்கண் முன் அலை பாய்ந்தன. அப்படிப்பட்ட மகத்தான மாபெரும் தோழர்
    அவர். இறுதிப் பத்திகளில் அவரைப் பற்றிய விமர்சனங்களை நானும் ஏற்கிறேன். துளியும் தகுதியற்ற அப்பட்டமான சில சுயநல பிழைப்புவாதிகளின் பிடியில் சிக்குண்டிருந்ததும் அவரது பெரும்பின்னடைவிற்குக் காரணம் என அறிவேன். எனினும் அவர் மீதான விமர்சனங்களில் ஒருசில விடயங்களில்
    மாறுபடுகிறேன். மொத்தத்தில் சிவப்பஞ்சலியை வரவேற்கிறேன்! பாரதூரமாக இயக்கத்தின் வளர்ச்சியில் மாபெரும் பங்களிப்பையும், மாபெரும் உழைப்பையும் நல்கிய தோழர் ‘கே’ அவர்களின் புகழ் நீடூழி வாழ்க!
    RED SALUTE TO COMRADE ’K’ !!

  2. Hahaa… Your party has மருதையன் to lead u.. why do u need to worry about K..

    Don’t shed முதலை கண்ணீர்.. No.1 and No. 3 well planned and made him the scape goat in the plenary meeting and they escaped from the wrath of the party members.

    Party has given a lot of leverage Not only for No.2 in marriage and family maintanence and also to No.3 who married in his same upper caste and hidden the marriage to the own cadres. But after that filthy marriage, he took action on comrade srinivasan, who is a real ppls leader

    Only upper circle of party known these kind of compromises. In outside it is like Gee, Kay, and M are very strong followers of party rules. But internally they are rotten heads.

    You party is nothing but a landlord party lead by 3 crookes

    • ஆயிரம் குப்பை comments வருவதால் உங்கள் commentsஐ கவனிக்கவில்லை. அதற்கு வருந்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here