மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி என்று விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், ‘ மதச்சார்பற்ற ஆட்சி’ நடந்து கொண்டிருக்கிறது என்று இன்னும் யாராவது கருதினால் அவர்களை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது என்று தெளிவாக கூற முடியும்.

திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பெயரை வில்லன்களுக்கு வைத்து அவர்களை தீவிரவாதிகளாகவும், நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவும் சித்தரிப்பதில் டோலிவுட், பாலிவுட், கோலிவுட் சினிமாக்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல.

இந்தத் திரைப்படங்கள் இன்று நிஜ படங்களாகி இஸ்லாமிய பெயர் தரித்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தாலும் சரி, பாமர வியாபாரியாக இருந்தாலும் சரி அவர்கள் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள். உமர் காலித் போன்றவர்கள் இன்றளவும் சிறையில் வாடுகிறார்கள்.

ஜாட்டுகள், யாதவ்கள், குர்மிக்கள் பெயரை சூட்டிக்கொண்டாலும் பழங்குடிகள் யாராக இருந்தாலும் அவர்களின் பெயரை வைத்து அவர்களுக்கு மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. மாறாக பழங்குடிகள் என்றாலேயே அவர்கள் ‘ தேச விரோதிகள்’, ‘ மாவோயிஸ்டு ஆதரவாளர்கள்’’, தமிழகத்தில் எடுத்துக் கொண்டால் ‘ திருடர்கள்’ என்பது எழுதப்படாத சட்டமாக மாறியுள்ளது.

ஆனால் இதற்கு நேர் மாறாக பார்ப்பன பாசிசத்தை நாடு முழுவதும் அரசியல், பொருளாதார, பண்பாட்டு அதிகார மையமாக மாற்றுவதற்கு ஒரு நூற்றாண்டு காலமாக வெறிகொண்டு அலைந்து வரும் ஆர்எஸ்எஸ் பாஜக சாதாரண தெருச் சண்டைகள் துவங்கி மாலேகான் போன்ற குண்டு வெடிப்பு வரை எதை செய்திருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமல் அல்லது ஏற்கனவே போடப்பட்ட வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை என்ற முகாந்திரத்தில் விடுவிக்கப்படுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறிது காலம் சிறையிலிருந்து பிரக்யா சிங் முதல் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித், வரை அனைவரும் குற்றமற்றவர்கள் என்றும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் ஆதாரமற்றவை என்ற பெயரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சோராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ, அமித் ஷா உள்ளிட்ட 38 பேர் மீது ஜூலை 2010இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில், இந்தக் கொலையின் மூளையாகச் செயல்பட்டவர் இன்றைய உள்துறை அமைச்சரான அமித் ஷா என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கை கடைசியாக விசாரித்த நீதிபதி லோயா திருமண விருந்து ஒன்றுக்கு அவரது சக நீதிபதிகள் இருவரால் அழைத்துச் செல்லப்பட்டு நல்ல திடகாத்திரமான உடல்வாகு கொண்ட லோயா மாரடைப்பினால் மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்படுகிறது.

லோயாவின் வழக்கு பற்றி புலனாய்வு செய்த கேரவான் பத்திரிக்கை இந்த படுகொலைக்கும் தற்போதைய உள்துறை அமைச்சராக உள்ள திருவாளர் அமித்ஷாவுக்கும் தொடர்பு உள்ளது என்பதை அம்பலப்படுத்தியது.

ஆனால் இந்த வழக்கிலிருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார் என்பது மட்டுமின்றி, அவர் மீது எந்த விதமான குற்ற வழக்குகளும் இல்லை அவர் ஒரு, ‘ அப்பழுக்கற்ற நிரபராதி’ என்று ஃபேக்ட் செக் செய்தால் செய்தியாக வருகிறது.

குஜராத்தில் 2000 இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்தது ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார கும்பல். அப்போது முதலமைச்சராக இருந்த பாசிச மோடி எந்தவிதமான வழக்குகளிலும் சிக்கிக் கொள்ளாமல் தற்போது அப்பழுக்கற்றவராக மாறியுள்ளார்.

இதே போல 2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார அமைப்புகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்; கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கிரிமினல் குற்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்குகள் ஆகியவை அனைத்திலிருந்தும் படிப்படியாக ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படை நிரபராதிகள் என்று விடுவிக்கப்படுகின்றனர்.

படிக்க:

♦ பில்கிஸ் பானு வழக்கு: பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி – அப்பட்டமாக அரங்கேறும் மனுநீதி!

♦ மணிப்பூர் கலவரம்: நெருப்பை அணையாமல் பாதுகாக்கிறது பாஜக!

இதனால்தான் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து மன்றங்களும் பாசிசமயமாகிவிட்டது என்று கூறுகின்றோம். ஏற்கனவே போலி ஜனநாயக அரசமைப்பின் கீழ் இருந்தபோது வர்க்க சார்புடன் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் ஆதிக்க சாதிகள், அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் அடங்கிய முக்கூட்டுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நீதிமன்றங்கள் இன்று பாசிச மன்றங்களாக மாறியுள்ளன.

பெரும்பான்மை மக்களுக்கு எதிராக அடக்குமுறை செலுத்துகின்ற கருவியாகவும், பாசிச பயங்கரவாதிகள், கிரிமினல்கள் தேச விரோதிகள், அனைவரையும் விடுவிக்கின்ற ‘ அநீதிமன்றங்களாக’ வும் மாறிவிட்டன என்பதன் எடுத்துக்காட்டு தான் பிராக்யா சிங் விடுதலையாகியுள்ள நிகழ்வாகும்.

சட்டத்தின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து மீண்டும் மேல் முறையீடு செய்ய வேண்டுமே தவிர இவ்வாறு நீதிமன்ற தீர்ப்புகளை பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்று எகிறி குதிக்கின்றார் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை நீதிபதியான ‘ ஸ்மார்த்தர்’ சுவாமிநாதன்.

“நான் எந்த ஒரு நிறுவனத்தையும் குற்றம் சாட்ட மாட்டேன். விசாரணை அமைப்புகள் தவறானவை அல்ல. அதில் உள்ள சில நபர்களே தவறானவர்களாக இருக்கிறார்கள். அமைப்பின் மீது பொதுமக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக நன்றி.” என்கிறார் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையான லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித்.

இனியும் இத்தகைய நீதிமன்றங்களை நம்பி இந்த நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் உயிர் வாழும் உரிமையும் பாதுகாக்கப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிட்டது.

போலி ஜனநாயக அரசு கட்டமைப்பின் கீழ் இருந்த நீதிமன்றங்களே மக்களுக்கு எதிராக இருந்த சூழலில், தற்போது பாசிச அரசு கட்டமைப்பின் கீழ் நீதிமன்றங்கள் மக்களின் வாழ்க்கையை பாதுகாக்குமா? கிரிமினல் குற்றங்கள் புரிகின்ற கொடூரமான கொலை குற்றவாளிகள், குண்டு வெடிப்பு குற்றவாளிகள், பார்ப்பன பாசிஸ்டுகள், சாதி, மத வெறியர்கள், கார்ப்பரேட் கொள்ளையர்கள் போன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கின்ற இழிவான நிலைக்கு மாறிவிட்டது.

இந்த பாசிச அரசு கட்டமைப்பின் கீழான நீதிமன்றங்களை இனியும் அனுமதிக்க கூடாது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நீதிபதிகள் நேர்மையாக இருப்பதை வைத்துக் கொண்டு நீதித்துறையின் மீது விமர்சிக்க கூடாது என்று குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் போதிக்கின்ற போதனைகளில் பாட்டாளி வர்க்கம் பலியாகக் கூடாது.

மருது பாண்டியன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

  1. மதக்கலவரம் இஸ்லாமிய மக்களை படுகொலை செய்தவர்கள் புனிதர்கள்?

    மக்களுக்காக போராடுபவர்கள் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகள் தேசவிரோதிகள் என வர ராவ் உமர் காலித் உள்ளீட்டோர் சிறையில்?

    இது இந்து நாடுதான் என பாசிசம் தீவிரமாகி வருகிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here