
கோவை சுகுணாபுரம் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச் சாலை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், தற்போது கோவை முதல் சத்தியமங்கலம் வரை பசுமைவழிச் சாலை மற்றும் கிழக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை தமிழக திமுக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக 81 கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகளுக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் வேலைகளை தமிழக அரசு துவங்கியுள்ளது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்கள் சுமார் 1400 ஏக்கர் பாதிக்கப்பட போவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த இரண்டு மாவட்டங்களையும் சார்ந்த விவசாயிகள் இந்த புறவழிச் சாலையின் மூலம் பொது மக்களுக்கு எந்த பயன்பாடும் இல்லை. மாறாக புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி போட்டுள்ள ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் லாபமிட்டுவதற்கு இந்த சாலை பயன்படுமே ஒழிய பொது மக்களுக்கு எந்தப் பயனையும் தராது.
எனவே, விவசாய நிலங்களை பாழடித்து பசுமைவழிச் சாலை என்றும் புறவழிச் சாலை என்றும் கொண்டு வருவது தேவையில்லை என்று இப்போதே போராடத் துவங்கி விட்டனர்.
ஆனால் கோவையில் நிரந்தரமாக உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காகவே இந்த புறவழிச் சாலைகள் அமைக்கப்படுவதாக அரசின் தரப்பிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாகவே, ‘ சப்பைக்கட்டு’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புறவழிச் சாலைகள் அமைக்கும் திட்டங்கள் அதிமுக, திமுக கட்சிகளின் சாதனையாகவும் பெருமை பீற்றப்பட்டு வருகிறது.
தற்போது தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்த ஐந்து பெரும் பண்ணையார்களின் நிலங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காகவே இந்த மாவட்டங்களின் சாலைகள் வளைந்து, நெளிந்து இன்று வரை சென்று கொண்டுள்ளது.
இன்று வரை கும்பகோணம்- தஞ்சை இடையில் உள்ள கபிஸ்தலம் மூப்பனார் வீட்டில் மதில் சுவர் வரை சாலை போடப்பட்டுள்ளதே தவிர அந்த வீடு சாலை விரிவாக்கத்திற்கு எதிரான ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படவில்லை. மாறாக பண்ணையாரின் சேவகர்களாக கைகட்டி நிற்கின்ற அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் எந்த பாதிப்பும் இல்லாமல் சாலையை போட்டுள்ளது என்பது கண்ணெதிரே உள்ள சாட்சியமாகும்.
ஆனால், நாட்டின் பெரும்பான்மை மக்களான கூலி, ஏழை விவசாயிகள் அவர்கள் உயிர் வாழ்வதற்கு வைத்துக் கொண்டுள்ள ஒரு சில சென்ட் நிலங்கள் முதல் கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலங்கள் வரை கையகப்படுத்துவதற்கு தனது மிருக பலத்தையும், அதிகார வர்க்கத்தின் துணையையும், போலீசையும் துணை கொண்டு வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடிப்பதற்கு ஒன்றிய அரசும், தமிழக அரசும் ஒருபோதும் தயங்கியது இல்லை.
ஏற்கனவே, ரூ 10,000 கோடி செலவில் 274 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்னை, சேலம் எட்டு வழி சாலை என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட அதிவிரைவு சாலைக்கு காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பெரும்பான்மையாக பாதிக்கப்படும் என்ற சூழலில் அதற்கு எதிராக கடுமையாக மக்கள் போராடினார். இன்று வரை அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே ஒழிய அதனை அமைக்காமல் ஓய மாட்டோம் என்று திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குதித்துக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை விரைவாக நகரமயமாக்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவசாய நிலங்கள் படிப்படியாக ரியல் எஸ்டேட் மாஃபியாக்களால் விழுங்கப்படுகிறது. மறுபுறம் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சிப்காட் வளாகங்கள் மற்றும் புதிய புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், நட்சத்திர விடுதிகள், கல்வி கொள்ளையர்களின் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை கட்டுவதற்கும் விவசாய நிலங்களை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அவர்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது.
படிக்க:
♦ தர்பூசணி குறித்து சமூக வலைத்தள தகவல்கள்: விவசாயிகள் மீதான தாக்குதல்!
♦ விவசாய பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி: விவசாயிகள் மீது மோடி அரசின் மற்றுமொரு தாக்குதல்!
விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை; விலை நிர்ணயிக்கும் உரிமை விவசாயிகளுக்கு இல்லை; விவசாயம் செய்வதே பெரும்பாடாக உள்ள நிலையில், அரசாங்கம் தனது தேவைகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது அனைத்து விதமான அரசு கட்டமைப்பையும் பயன்படுத்தி மிரட்டி பணிய வைப்பது; பொய் வழக்குகள் போட்டு பணிய வைப்பது என்ற வகையில் விவசாய நிலங்களை ஏழை விவசாயிகளிடமிருந்து பிடுங்குவதற்கு அரசியல் கட்சிகள் ஒருபோதும் தயங்குவதில்லை.
விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், நாட்டின் பெரும்பான்மை மக்கள் சார்ந்துள்ள தொழில் அதுதான் என்பதால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற வகையில் உற்பத்தியை மாற்ற வேண்டும் என்ற அடிப்படை மாற்றம் இல்லாமல் இதனை ஒருபோதும் தடுக்க இயலாது.
ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்காக நாட்டின் செல்வ வளங்கள் அனைத்தும் வாரிக் கொடுக்கப்படுகின்ற சூழலில், சூறையாடப்படும் கனிம வளங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான விரைவு சாலைகள், அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கு விவசாய நிலங்களை பாழடிக்காமல் மாற்று வழிமுறைகளை கையாள்வதில் அரசாங்கங்கள் ஒருபோதும் அக்கறை காட்டுவதில்லை.
மாறாக, ஏழை விவசாயிகளின் வயிற்றிலடித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பிடுங்கிக் கொண்டு வீதியில் வீசி எறிவது, அதனை எதிர்த்து போராடுகின்றவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வது, சிறையில் அடைப்பது, சித்திரவதை செய்வது போன்ற அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் விவசாய நிலங்களை கைப்பற்ற துடிக்கின்ற ஓட்டு கட்சி அரசியல்வாதிகளுக்கு விவசாயிகளின் ஒற்றுமையின்மை மிகப் பெரும் மூலதனமாக உள்ளது.
இத்தகைய சூழலில் கோவை மாவட்டத்தில் கொண்டுவரப்படும் இந்த புறவழிச் சாலைகள் கோவை, திருப்பூர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், பெரும் தொழிலதிபர்களின் லாப வேட்டைக்காக கொண்டு வரப்படுவதை எதிர்த்து போராடுகின்ற மக்களுடன் ஒன்றிணைவோம்.
விவசாயத்திற்கு முன்னுரிமை என்ற பொருளாதாரக் கொள்கையை முன்வைக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றை அமைப்பதற்கு விவசாயிகளுடன் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து அவர்களை ஓர் அணியின் கீழ் திரட்டுவோம்.
◾மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






