பாசிச பாஜக 2014 ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கார்ப்பரேட் காவி கும்பலின் நலனுக்காக பல்வேறு சட்டங்களை தங்களுக்கு சாதகமான முறையில் மாற்றி வருகிறது. இப்போது 130 வது அரசமைப்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக்கொண்டு மிகப் பெரிய தேர்தல் முறைகேட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது அம்பலமாகி நாறிக் கொண்டிருக்கும் வேளையில் புதிய பிரச்சினையை உருவாக்கி பழைய பிரச்சனையை நீர்த்துப் போக வைக்கும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.
நேற்று ஆகஸ்ட் 20 அன்று மக்களவையில் 130 வது அரசமைப்பு திருத்த மசோதா 2025 மற்றும் மத்திய அரசு பிரதேசங்கள் திருத்த மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025 ஆகியவற்றை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.
இந்த மசோதாக்கள் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் 30 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கு சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பாஜக கூறுகிறது.
அதாவது தாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் ஊழல் செய்பவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஊழலை ஒழிப்பதற்கு தாங்கள் பாடுவதாக சொல்கிறது. ஆனால் இந்தியாவில் பாஜக செய்யும் ஊழல்கள் சட்டமயமாக்கப்பட்டுள்ளன அல்லது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளன.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் நடந்துக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றால் கட்சியே ஊழல் கட்சிதான் என்பதை சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்தியாவில் அதிக நன்கொடை வாங்கும் கட்சி, அதிக சொத்து உள்ள கட்சி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரம் கோடி நன்கொடை வாங்கிய கட்சி, பி எம் கேர் என்ற பெயரில் நிதி வாங்கி மக்கள் தேவைகளுக்கு பயன்படுத்தப்படாமல் ரகசியமாக பணத்தை குவித்து வைத்திருக்கும் கட்சி என இந்தியாவில் கார்ப்பரேட் சேவையின் மூலம் வயிற்றை நிரப்பி கொண்டவர்கள் தங்களை ஊழலுக்கு எதிரானவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்காக அவர்கள் இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.
மாநில கட்சியில் உள்ள முதலமைச்சர் அல்லது செல்வாக்கு மிகுந்த அமைச்சர்களை ED, IT, சிபிஐ உள்ளிட்ட அதிகார மையங்களை பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவைத்து (உண்மையாகவே ஊழல் புரிந்தவர்களாகவே இருக்கலாம்) விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகின்றன. குற்றவாளிகளை தண்டிப்பது சரிதானே என தோன்றலாம். பாஜக அப்படியான எண்ணத்துடன் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. தான் பலவீனமாக உள்ள மாநிலங்களில் தனது பலத்தை உருவாக்க மாநில கட்சிகளை உடைப்பதற்கும் செல்வாக்கு மிகுந்த நபர்களை விலை பேசுவதற்குமே ஊழல் என்ற நாடகத்தை அரங்கேற்றுகிறது.
சில உதாரணங்களை நாம் பார்க்கலாம். டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை வளைக்க பார்த்தது, முடியாமல் போக மதுபான கொள்கை ஊழலில் கைது செய்ததன் மூலம் டெல்லி மக்களிடம் அவநம்பிக்கையை உண்டாக்கி அம்மாநிலத்தை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இது தேர்தல் காலத்தில் நடந்த சம்பவம்.
அதுபோல ஜார்க்கண்ட் முதல்வரான ஹேமந்த் சோரனை கைது செய்து தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட்டது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஹேமந்த் சோரன் வெளிவந்துவிட்டதால் இடைக்காலத்தில் முதல்வராக இருந்த சம்பாய் சோரனை விலை பேசி பாஜகவில் இணைத்து தேர்தலை சந்தித்தது.
மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை உடைத்தது, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்களை தனது கூட்டணியில் இணைத்தது என ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மாநிலக் கட்சிகளை காலி செய்யும் வேலையில் ஈடுபட்டது பாஜக. அதே பாஜக தான் இன்று சட்டத்திருத்த மசோதாவையும் கொண்டு வந்துள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் 30 நாட்கள் காவலில் இருக்கும் நபர்களை பதவியில் இருந்து நீக்கலாம். இந்த ‘ஆயுதத்தை’ பயன்படுத்தி தான்ஆட்சி அமைக்க முடியாத மாநிலங்களில் பாஜக செயல்படுத்த முயற்சிக்கும் மாநில அரசின் கொடுமையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தான் இந்த சட்ட திருத்தத்தினை மேற்கொண்டுள்ளது பாசிச கும்பல்.
படிக்க: மோடி வாஷிங்மெஷினில் ஊழல்கறை நீக்கப்பட்ட புதிய உருப்படி சந்திரபாபு நாயுடு!
சொராபுதீன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 90 நாட்கள் சிறையில் இருந்த கொலை குற்றவாளி தான் இந்த சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இவர்தான் ஊழல் ஒழிப்பு நாடகமாடுகிறார்.
பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு அரசியலமைப்பு சட்டங்களை ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஒரே அடியாக மனுநீதியை சட்டமாக்கினால் தானே எதிர்ப்பு வரும். அதனால்தான் இப்படியான வழிமுறைகளை எதிர்கொள்கிறார்கள். இந்துர்ஷ்டிரத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்கட்சிகளோ வாக்கு அரசியலை மையப்படுத்தி வேலை செய்வதால், ஒற்றுமையின்மையால் எதிர்ப்பை பலமாக காட்டாததன் விளைவு இன்று இந்திய அரசு கட்டமைப்பு பாசிசமயமாகி கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள இடதுசாரி முற்போக்கு அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து உழைக்கும் மக்களை அணிதிரட்டி மக்கள் முன்னணியை உருவாக்குவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்துவதற்கான திட்டம் வகுத்து செயல்படலாம். தற்போதைய நிலைமையில் பாசிசத்தை வீழ்த்துவதை நமது முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும். அதுவரை நாம் ஓய்வின்றி செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- நலன்
130 ஆவது அரசியலமைப்பு சட்டம் திருத்தம் செய்து பலவீனமான மாநில அரசுகளை உடைப்பது விலைக்கு வாங்குவது போன்ற பிற்போக்கான செயல்களில் உள்துறை அமைச்சர் அமிச்ஷா செயல்பட்டு வருகிறார் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்குவது மட்டுமல்லாமல் அங்கு சீர்திருத்தம் கொண்டு வர போவதாக அறிவிக்கிறார் ஆகவே நாடு தீவிரமாக பாசிசமயமாக கொண்டிருக்கிறது எதிர்க்கட்சிகள் தேர்தலில் ஓட்டு அறுவடை செய்வது என்ற நோக்கத்திற்காகவே செயல்பட்டு உள்ளார்கள் பாசிசம் குறித்த எந்த விதமான செயல் திட்டமும் இல்லாமல் இருப்பதற்கு பாசிசத்திற்கு பலம் உள்ளதாக அமைகிறது எதிர்க்கட்சிகள் இதை உணர வேண்டிய தருணம் என குறிப்பிடப்பட்டுள்ளது இந்த கட்டுரை சிறப்பு