காட்டுப்பள்ளி:வட மாநில தொழிலாளிகளின் போராட்டமும் காவல்துறையின் அடக்குமுறையும்

0
காட்டுப்பள்ளி:வட மாநில தொழிலாளிகளின் போராட்டமும் காவல்துறையின் அடக்குமுறையும்
ஒரு தொழிலாளியின் மரணம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஏன் போராட்டக் களத்திற்கு இழுத்து வருகிறது என்பதைத்தான் நேர்மையான ஊடகவியலாளர்கள் பரிசீலிக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து முதலீடுகளை ஈர்த்து வரும் நேரத்தில், தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் தொழிலாளிகளை ஈவிரக்கமின்றி சுரண்டி வருகிறது. அதற்கெதிராக போராட்டங்கள் வெடிக்கின்றன. நேற்று நடந்த காட்டுப்பள்ளி கப்பல் கட்டுமான தொழிலாளர்களின் போராட்டமும் அதன் அங்கமே.

‘அடிமை’களிடமிருந்து வரும் எதிர்ப்பு!

வர்க்க பகைமைகள் நீடித்து இணக்கமாக இருக்க முடியாது; அவை வெடித்துக் கொண்டு வெளிவந்தே தீரும்.

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் (35) வேலை பார்த்து வந்தார். 2 நாட்களுக்கு முன் அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் மாடியில் ஏறும்போது அமரேஷ் பிரசாத் தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்தார். காட்டூர் போலீசார் சடலத்தை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் ஒப்பந்த நிறுவனத்திடம் நஷ்டஈடாக ரூ.25 லட்சம் கேட்டுள்ளனர். பேச்சுவார்த்தை முடிவில் ரூ.5 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர்‌ என்று செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எல் & டி யின் சுரண்டலுக்கு எதிராக குமுறிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள், சக தொழிலாளியின் மரணம் தந்த வலியால் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளனர். நவீன சுரண்டலுக்கு எதிரானதாக வர்க்கக் கோபத்துடன்தான் அவர்களிடம் இருந்து போராட்டம் வெடித்து கிளம்பியுள்ளது.

தனது சொந்தத்தை பலி கொடுத்து விட்டு நீதி கேட்டு நின்ற வடமாநில தொழிலாளர்களின் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தது தமிழக அரசின் காவல்துறை. அதில் சுமார் 30 பேருக்கு மேல் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம் நடந்த நேற்றே புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சார்ந்த தோழர்கள் காட்டுப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தனர். அவர்கள் நேரில் விசாரித்த வட மாநில தொழிலாளர்களும் உள்ளூர் தொழிலாளர்களும் சொல்லி வைத்தார் போல் “தங்கும் இடத்தில் தான் தொழிலாளி உயிரிழந்தார். குடிபோதையில் உயிரிழந்தார். நிறுவனத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை” என்பதாகவே பேசி உள்ளனர். சிறு மாற்றம் கூட இல்லாமல் ஒப்பிப்பதை பார்த்தபோது இது நிர்வாகத்தின் மூலம் பரப்பப்படும் செய்தி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை ரிமாண்ட் செய்வதற்காக அழைத்துச் சென்றதாகவும் களத்திற்கு சென்று வந்த தோழர்கள் கூறினர். இது மேலும் வட மாநில தொழிலாளர்களின் கோபத்தை கிளர்த்தி விடும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அவர்கள் அச்சத்துடன் அடங்கினாலும் கூட, உள்ளுக்குள் அழுத்தப்பட்ட கோபம் கனன்று கொண்டே இருந்து மீண்டும் வெடித்து பரவும்.

உண்மையை மூடி மறைக்கும் ஊடகங்கள் !

கார்ப்பரேட் ஆதரவு ஊடகங்களுக்கு வட மாநில தொழிலாளர்களின் நியாயமான கோபமும், இயல்பாகவே காவல்துறையும், அரசும் கார்ப்பரேட் தரப்பில் நிற்கும் அயோக்கியத்தனமும் கண்ணில் படுவதே இல்லை. போலீசார் மீது வட மாநிலத்தொழிலாளர்கள் கற்கள் வீசி தாக்குதல் என்று மட்டுமே செய்திகளை போட்டு முடித்துக் கொள்கின்றனர்.

ஒரு தொழிலாளியின் மரணம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஏன் போராட்டக் களத்திற்கு இழுத்து வருகிறது என்பதைத்தான் நேர்மையான ஊடகவியலாளர்கள் பரிசீலிக்க வேண்டும். குடியிருப்பில் நிகழ்ந்த மரணத்திற்கு, ஆலைக்கு எதிராக ஏன் முழக்கமிட வேண்டும் என்பதை கார்ப்பரேட் அடிமைகளாக மாறிய ஊடகங்களால் பார்க்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாதது ஏன்? அந்த குடியிருப்புகள் வாழத் தகுதி வாய்ந்தவைதானா? அதில் அநியாயமாக தொழிலாளர்களை அடைத்து வைத்து இரத்தத்தை உறிஞ்சுவது என்றாவது செய்தி வெளியிட்டு உள்ளனவா இந்த ஊடகங்கள். இதற்கான பதில் எளிமையானது தான். அவர்கள் ஏற்கனவே கார்ப்பரேட்டுகளின் நலன் விரும்பிகளாக மாறியுள்ள வர்க்கச் சாய்வால்தான் உண்மையைப் பார்க்கவோ, பேசவோ, எழுதவோ தயாராக இல்லை.

அழுத்தப்படும் எதுவும் வெடித்தே எழும்!

கார்ப்பரேட்டுகளின் சுரண்டல் என்பது, சிறுகச் சிறுக தொழிலாளர்களின் மனதில் வெறுப்பையும், வர்க்க கோபத்தையும் கிளறி விட்டுக் கொண்டே வளர்ந்து வருகிறது. ஒரு டயரில் – ட்யூபில் நீங்கள் சிறுகச்சிறுக காற்றை செலுத்திக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் அது வெடித்துக்கொண்டு வெளியேறும் என்பதைத்தான் காட்டுப்பள்ளி நிரூபித்துள்ளது.

தொழிலாளர்களின் போராட்டத்தை நேர்மையாக கையாள வேண்டிய எல்&டி நிர்வாகத்தினரோ எடுத்தவுடன் காவல் துறையை அனுப்பி வைப்பது எதை காட்டுகிறது? தனது கட்டளைக்கு அடிபணியும் அடிமைகளாகத்தான் வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்க வேண்டும். மீறினால், தனது கூலிப்படையை போல் காவல் படையை ஏவி அடக்குவேன் என்று பாடம் புகட்டவே எல்& டி நிர்வாகம் முயற்சிக்கிறது.

தமது தரப்பில் ஒரு உயிர் போய்விட்டது என்ற துயரத்திலும் கோபத்திலும் உள்ள தொழிலாளர்களை லத்தியைக் கொண்டு மிரட்டி விடலாம் என்று அணுகும் போது தான் அது கல்வீச்சு சம்பவமாக மாறுகிறது. கல்விச்சை காரணமாக காட்டி லத்தி சார்ஜூம், கண்ணீர் புகை குண்டு வீச்சுகளும் என காவல்துறையின் அடக்குமுறை அரங்கேறி உள்ளது.

படிக்க: அதானிக்கு காவு கொடுக்கப்பட்ட காட்டுப்பள்ளியின் கதை !

அகதிகளைப் போல, புலம் பெயர்ந்தவர்களை போல, ஒருவித அச்சத்துடன் தான் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் நடமாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இரவு 11 மணிக்கு மேல் நடமாட முடியாதவர்களாகவும் குற்றவாளிகளை போல முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். காட்டுப்பள்ளியில் தற்போது நடக்கும் அடக்குமுறை தாக்குதல்களின் விளைவாக எல் அண்ட் டி யில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்கள் தனது குடியிருப்புக்குச் செல்ல பயந்து, அருகில் உள்ள கிராமங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதில் முதன்மையான பிரச்சினை – காட்டுப்பள்ளியில் போராடிய வட மாநில தொழிலாளர்களின் கோரிக்கையை பிரதிபலிக்க எந்த தொழிற்சங்கமும் அவர்கள் மத்தியில் இல்லை. ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து மொழி தெரியாத இடத்தில் வேலை செய்யும் அவர்களின் குரலாக ஒலிக்க தொழிற்சங்கம் இல்லாததே இந்த அவலங்களுக்கு காரணம்.

தமிழக அரசின், கார்ப்பரேட் நிறுவனங்களின் இத்தகைய செயல்பாடுகள் மொழியைக் கடந்து, உழைக்கும் மக்கள் என்ற வகையில் வட மாநிலத்தவர்களை இதை தொழிற்சங்கங்கள் கணக்கில் எடுத்து வட மாநிலத்தவர்களையும் – ஒப்பந்த தொழிலாளர்களையும் அமைப்பாக்க வேண்டும்.

அதிகரிக்கும் கார்ப்பரேட் முதலீடுகளால் யாருக்கு பலன்?

தமிழக அரசு முதலீடுகளை கவர்ந்து வருவதும், வேலை வாய்ப்புகளை பெருக்குவதும் மட்டும் போதாது. தமிழகத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு என்பது உத்தரவாதம் அற்ற கொத்தடிமை வேலைகளாக இருக்கும் வரை, அதைப் போற்றவோ புகழவோ உழைக்கும் மக்களுக்கு எதுவும் இல்லை.

மாறாக பணி நிரந்தரமும், எட்டு மணி நேர வேலையும், வேலைக்கேற்ற ஊதியமும் கிடைக்கப்பெறும் போது மட்டுமே இத்தகைய முதலீடுகளும், உற்பத்தி பெருக்கமும், ஏற்றுமதி அதிகரிப்பும் மக்கள் கொண்டாடத் தக்கவையாக மாறும்.

இவற்றை உறுதிப்படுத்துகின்ற அரசை, அரசாங்கங்களை மட்டுமே நாட்டு மக்கள் கொண்டாடுவதாக இருக்கும். அதுவே உண்மையான விடியல் ஆட்சியாக இருக்கும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here