லக மேலாதிக்க வெறிபிடித்தலைகின்ற அமெரிக்க மேல்நிலை வல்லரசை கடந்த அரை நூற்றாண்டுகளாக எதிர்த்து போராடி நின்று வருகிறது மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈரான். ஈரானில் படுபிற்போக்கான பகலவி வம்ச மன்னராட்சி 1979 ஆம் ஆண்டு தூக்கி எறியப்பட்ட பிறகு ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய புரட்சி படை மூலமாக் அதிகாரத்தைக் கைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியக் குடியரசு நிகழ்த்துகின்ற அரசியல் மற்றும் உலக மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை குறித்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

உலகில் அமெரிக்க மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் அடிமைகளாக மாற்றப்பட்டுள்ள காலனி, அரைக்காலனி, நவீன காலனிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் அரசியல், பொருளாதாரமானது ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசின் ஆணைக்கிணங்க செயல்பட்டு வருகிறது. இந்த காலனிய அடிமைத்தனத்திற்கு எதிரான சுயசார்பு பொருளாதாரத்தை கட்டி அமைப்பதற்கு போராடுகின்ற நாடுகளில் ஒன்று தான் ஈரான். ஆனால் அது முதலாளித்துவ ஜனநாயக வழியில் இல்லாமல் இஸ்லாமிய அடிப்படைவாத தன்மையுடன் உள்ளது என்பது கவனிக்கத் தக்கது. இதனையே ஈரான் கம்யூனிஸ்டுக் கட்சியும் மத குருமார்கள் பிடியில் உள்ள ஈரானிய முதலாளித்துவ அரசு என்கின்றனர்.

உலகம் முழுவதும் ஏகாதிபத்திய முதலாளித்துவப் பொருளாதார கட்டமைப்பு உருவாக்கியுள்ள நெருக்கடி மக்களின் மீது சுமத்தப்படுவதால் இயல்பாகவே வறுமை, ஏழ்மை, ஏற்றத்தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பல்வேறு விதமான நெருக்கடிக்கு உள்ளாகின்ற மக்கள் அரசுக்கு எதிராக போராடுகின்ற நிலைமை தொடர்ச்சியாகவே ஈரானிலும் நீடிக்கிறது.

2008 ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு முன்பு 1979 முதல் ஈரானில் பிற்போக்கு ஆட்சி நடத்தி வரும் இஸ்லாமியக் குடியரசானது மக்களின் போராட்டங்களையும், தொழிற்சங்கங்கள் உருவாவதையும், தொழிலாளி வர்க்கங்கள் முகிழ்ந்து எழுவதையும் நசுக்குவதற்கு பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவி விட்டனர் என்பது தான் நிலைமை.

உள்நாட்டில் பிற்போக்கு இஸ்லாமிய மதவாத அரசியலை முன்னிறுத்துகின்ற போதிலும் சர்வதேச ரீதியில் அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு எதிராக சவால் விட்டு செயல்படக்கூடிய இந்த இஸ்லாமியக் குடியரசு அதாவது இஸ்லாமிய புரட்சிப் படை தலைமையிலான அரசாங்கமானது அந்த நாட்டின் மிக உயர் பொறுப்பில் உள்ள இஸ்லாமிய மதக் குருமார்களான கொமெய்னி வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஈரானில் ஆட்சி புரிந்து வரும் இஸ்லாமிய அரசை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா மேல்நிலை வல்லரசு பலமுறை முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனாலும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதால் ஈரானின் மீது நிரந்தரமாக பொருளாதார தடைவிதித்து உள்நாட்டு பொருளாதாரத்தை கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க துவங்குகிறது. அவ்வாறு போராட்டங்கள் எழுகின்ற போது அமெரிக்கா தனது உளவு நிறுவனமான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் உளவுப் படையான மொசாத் போன்ற உளவுப் படைகளை பயன்படுத்தி இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்புக் திட்டமிட்டு நடத்துவதில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.

படிக்க: ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் படுகொலை: அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாதம்!

கடந்த 2019 ஆண்டு கூட இதே போன்ற ஒரு நெருக்கடி நிலையை ஈரான் சந்தித்தது அப்போது புதிய ஜனநாயகம் இதழில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தோம்.

“ஈரானைப் பொருளாதாரரீதியாக முடக்குவதன் மூலம், உள்நாட்டில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியையும் கலகத்தையும் தூண்டிவிடுவது எனும் நோக்கில் இப்பொருளாதாரத் தடையுத்தரவைக் கொண்டு வந்திருக்கும் அமெரிக்கா, இன்னொருபுறம், இரானை இராணுவரீதியாக அச்சுறுத்தும் நோக்கில் போர்விமானக் கப்பல் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்களையும் மேற்காசியப் பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இரானின் இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிப் படையைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருக்கிறது. மேலும், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவச் சிப்பாய்களையும் மேற்காசியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருகிறது.

இசுரேல் பிரச்சினை, இசுரேல் லெபனான் பிரச்சினை, இராக் மீது அமெரிக்கா நடத்திய போரால் அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் சன்னி பிரிவுகளுக்கு இடையேயான மோதல் ஆகியவற்றால் உருக்குலைந்து போயிருக்கும் இராக்கின் பொருளாதார நிலை, சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு அந்நாட்டில் நடந்துவரும் உள்நாட்டுப் போர், இவற்றுக்கு அப்பால் ஐ.எஸ். முசுலீம் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் என மேற்காசியப் பகுதியே நிரந்தரப் பதட்டத்திலும் போர் அபாயத்திலும் இருந்துவரும் நிலையில், இரானைக் குறிவைத்திருக்கிறது, அமெரிக்கா. இம்முடிவு எரியும் வீட்டின் மீது மண்ணெண்ணெயை ஊற்றிவிடும் முட்டாள்தனமும் திமிரும் இரண்டறக் கலந்தது.” (புதிய ஜனநாயகம்- ஜூலை,2019.)

அமெரிக்காவின் மற்றொரு அடிமையான பிராந்திய வல்லரசாக தன்னை நிலை நாட்டிக் கொள்வதற்கான முயற்சியில் அலைந்து வருகின்ற யூத, ஜியோனிச இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசாங்கமானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மக்கள் மீது அதாவது குறிப்பாக காசா மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல்களை உலகம் நன்றாகவே அறியும்.

போர் விதிகளையும், மரபுகளையும் மீறி சிறு குழந்தைகள் முதற்கொண்டு மருத்துவமனைகள் மற்றும் உயிர்காக்கும் பல்வேறு ஆதாரமான நிலையங்களின் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலமாகவே தற்காலிகமாக காசாவை பணிய வைக்க முடிந்துள்ளது. இந்த காசாவை அடக்கி ஒடுக்குவதற்கு இஸ்ரேல் செய்த முயற்சியானது அந்த பிராந்தியத்தில் ஒரு வல்லரசாக தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கு முயற்சித்தது.

படிக்க: இஸ்ரேல்  காசா மோதல்: போர்க்களத்திலிருந்து வந்த WhatsApp செய்திகள்!

இந்த காலகட்டத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலை ஈரான் எதிர்கொண்டது. ஆனால் உலகமே எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் பல்வேறு இராணுவ நிலைகள் மீதும், அவர்கள் தனது நாட்டின் மீதான பாதுகாப்பு என்ற கருதிக் கொண்டிருந்த அயர்ன் டோம் என்ற பாதுகாப்பை மீறி பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்திய காரணமாக முக்கியமாக பேரழிவை உருவாக்கியது.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்க மேல்நிலைவல்லரசு இஸ்ரவேலுக்காக ஈரான் மீது குறிப்பாக அதன் அணு உலை தயாரிப்பு நிறுவனங்களின் மீது குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளும், பாட்டாளி வர்க்கமும் கடுமையாக கண்டித்து பல்வேறு போராட்டங்களை நட்த்தி அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு எதிரான போராட்ட உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன.

ஈரான் தனது எண்ணெய் வளத்தில் முக்கியமாக சீனாவுக்கு முதல் நிலையிலும் அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கும் அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்த எண்ணெய் வளத்தை பயன்படுத்திக்கொண்டு சுய சார்பாக அதாவது அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு கட்டுப்படாமல் செயல்படுகின்ற நடவடிக்கைகள் அனைத்தையும் அமெரிக்கா ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

தற்போது ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடுப்பதற்கு உள்நாட்டில் கலவரங்களை உருவாக்குவது உளவு நிறுவனங்களின் மூலமாக தூண்டப்பட்ட போராட்டங்கள் மற்றும் ஏற்கனவே போராடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஆதரவு தருவதைப் போல கொடுக்கப்பட்ட ஆதரவுகள் ஆகியவையும், ஈரானிய கம்யூனிச இயக்கமும், இஸ்லாமியக் குடியர்சின் பிற்போக்கு மதவாத ஆட்சியை எதிர்த்துப் போராடுகின்ற சக்திகள் நட்த்தும் போராட்டங்கள் அனைத்தையும் உள்நாட்டு கிளர்ச்சி என்ற அடிப்படையில் இஸ்லாமிய குடியரசால் அதாவது இஸ்லாமிய புரட்சிப் படையின் மூலமாக கொடூரமாக ஒடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் கம்யூனிஸ்டுக் கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதனை மிகப் பெரும் செய்தியாக்கி அங்கே நடக்கின்ற கொடூரமான ஆட்சிக்கு எதிராக மக்களை விடுதலை செய்யப் போவதாக அறிவித்துக் கொண்டு அமெரிக்க மேலவை வல்லரசு உலக சமாதானத்தை தனக்குத்தானே எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த வகையிலேயே ஈரான் மீது பொருளாதார முற்றுகை போடுவதைப் போலவே நடைமுறையில் இராணுவ முற்றுகை நடத்துவதற்கு அமெரிக்காவின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஆப்ரஹாம் லிங்கன் முதல் பலவிதமான ஏவுகணைகள், அதிநவீன இராணுவ தளவாடங்கள் உள்ளடக்கிய பெரும் படைக்கலனை குவித்து ஈரானை அடிபணிய வைக்க முயற்சித்து வருகிறது.

படிக்க: கிரீஸ் முதல் இலங்கை வரை: மறுகாலனியாக்கம் கொண்டு வரும் – மரணப் பொருளாதாரம்!

வழக்கம்போல அரேபிய நாடுகளும், பிற நாடுகளும் அமைதி காக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அரேபிய நாடுகளில் சவுதி அரேபியா மற்றும் ஏமன், கத்தார், சிரியா, ஈராக் போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு உதவி செய்ய முடியாது என்று பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டது.

ஆசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தனக்கு அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க அடிவருடிகள் மீது தாங்கள் போர்த் தொடுக்கப் போவதாக அறிவித்தனர். மற்றொருபுறம் வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் ஈரான் மீது தாக்க்குதல் நடத்தினால் அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார்.

இத்தகைய சூழலில் மேலும் அமைதியாக இருக்க முடியாத நிர்பந்தத்துக்கு உள்ளான சீனா மற்றும் ரஷ்யா வாய் திறந்து ஈரான் அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசியுள்ளது மட்டுமின்றி போர் தளவாடங்களையும் ஏவுகணையும், அமெரிக்காவின் தாக்குதலை சமாளிக்கின்ற அளவிற்கு அதிநவீன எந்திரங்களையும் வாரி வழங்கிக் கொண்டுள்ளனர். ஈரானுடன் இணைந்துக் கூட்டு இராணுவப் பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தவிர ஈரான் சொந்த முறையில் தயாரித்துள்ள ஹைப்பர்சோனிக் போன்ற ஏவுகணைகளும், டிஜிட்டல் முறையில் லேசர் தாக்குதல்கள் நடத்தக்கூடிய நவீன எந்திரங்களையும் உருவாக்கி வைத்துள்ளது என்பது அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது.

தென் அமெரிக்கா கண்டத்தின் வெனிசுலா அதிபர் மதுரோவை உள்நாட்டில் புகுந்து தூக்கியது போல ஈரானுக்குள் புகுந்து அலி கொமேனியை தூக்க முடியும் என்று கனவு கண்டு அங்கே முற்றுகையிட தொடங்கி ஏறக்குறைய 15 நாட்களுக்கு மேலாகியும் ஒன்றும் செய்ய முடியாமல் தனது மேலாதிக்கத்தை இழந்து விடுவோம்; உலகில் மிகப்பெரிய இராணுவ வல்லரசு அமெரிக்கா என்ற தகுதியை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் சிறிய தாக்குதலாவது நடத்துகின்றோம் என்று கெஞ்சி கேட்கின்ற அளவிற்கு அமெரிக்க மேல்நிலை வல்லரசு சென்றுள்ளது.

சிரிய மற்றும் பெரிய எந்த தாக்குதலாக இருந்தாலும் அதனை எங்களுக்கு எதிரான போராகவே கருத முடியும் என்றும், அப்படி ஒருவேளை தாக்குதல் நடந்தால் அது பிராந்திய ரீதியிலான போராக மாற்றப்படும். அமெரிக்க அடிவருடிகளுக்கு தக்க பதிலடி தரப்படும். மேலும் அமெரிக்காவுக்கு எதிரான மிகப்பெரிய சேதங்களை உருவாக்குகின்ற வரையில் கடைசி ஈரானிய படை இருக்கின்ற வரை போராட்டம் தொடரும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ள அலி கொமேனி அரசாங்கத்தைக் கண்டு அமெரிக்கா அஞ்சுகிறது.

தனது மேலாதிக்கத்தை நிலை ஆட்டிக் கொள்வதற்காக ஏதாவது ஒரு தாக்குதல் நடத்தி தற்போதைக்கு சில மிரட்டலுடன் ஈரானை பணிய வைத்து விட முடியும் என்று கருதினால் அது ஒருபோதும் நடக்காது என்பதுதான் சர்வதேச அளவில் ஈரானுக்கு ஆதரவாக அணிதிரண்டு வருகின்ற முன்னாள் சோசலிச நாடுகளின் வருகையும், அரேபிய நாடுகளிலேயே ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க மறுக்கின்ற முன்னாள் அமெரிக்க அடிமைகளும், குறிப்பாக இந்தியா போன்ற இரட்டை நிலைப்பாடு இருக்கின்ற கேடுகெட்ட பாசிச அரசாங்கங்களும் ஒன்று சேர்ந்துள்ள சூழலில் ஈரான் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளது என்றாலும் ஏகாதிபத்தியங்கள் நீடிக்கின்ற வரை போர் மற்றும் அமைதியின்மை, சமாதானத்திற்கு எதிரான வெறித்தனங்கள் ஆகியவை தொடரவே ச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

அதே சமயத்தில் போர் மூண்டால் அதனை உள்நாட்டுப் போராக மாற்ற ஈரானிய பாட்டாளி வர்க்கமும், ஈரான் கம்யூனிஸ்டுக் கட்சியும் தயாராக உள்ளன என்பதை சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தங்களின் போது முன் வைக்கப்பட்ட தீர்வுகள் அறிவிக்கின்றன. “இந்தப் போராட்டங்கள் வெறும் ஊதிய உயர்வுக்காக மட்டுமல்ல! ஈரானின் தொழிற்சாலைகளும், இந்த நாடும் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் போராட்டமாகும் என்றும், முதலாளிகள், மத குருமார்களின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது. அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே” என்று முழங்குகிறார்கள்! புரட்சிகரமான இத்தகைய முழக்கத்தின் கீழ் திரண்டு புதிய ஈரானை, பாரம்பரியமிக்க அதன் மரபுகளின் மீது நின்றெழுப்புவார்கள்!

  •  நன்னிலம் சுப்பராயன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here