சமீபத்தில் பிரிட்டன் சென்ற இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகிய இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் வரிகளற்ற ஒப்பந்தம் போடப்பட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த சில தினங்களாக ஊதி வருகின்றன.
ஏற்கனவே பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் காலத்தில் 2022 இல் இருந்து வரி குறைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கெய்ர் ஸ்டார்மர் காலத்தில் நிறைவேறியுள்ளது.
இந்த ஒப்பந்தம் போடப்பட்டதை ஒட்டி, இந்தியாவில் ‘ பாலாறும் தேனாறும் ஓடும்’ என்பதைப் போல இந்திய ஒன்றியத்தின் பிரதமராக மோடி மற்றும் சங்பரிவார கும்பல்களும் கார்ப்பரேட்டுகளின் எச்சில் காசில் பிழைக்கின்ற மைய நீரோட்ட ஊடகங்களும் ஒரே செய்தியை பல கோணங்களில் வாந்தி எடுக்கின்றன..
இந்த ஒப்பந்தத்தின் படி எந்தெந்த பொருட்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது என்பதின் பட்டியலைப் பாருங்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்போது குறைவான வரி விதிக்கப்படும் பொருட்கள்:
ஆடைகள் மற்றும் காலணிகள்
கார்கள்
உறைந்த இறால்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள்
நகைகள் மற்றும் ரத்தினங்கள்
பிரிட்டன் ஏற்றுமதியில் குறைவான வரி விதிப்பை பெறவுள்ள பொருட்கள்:
ஜின் மற்றும் விஸ்கி
வான்வெளி, மின்னணு மற்றும் மருத்துவ உபகரணங்கள்
அழகு சாதனப் பொருட்கள்
ஆடுகள், சால்மன் மீன் (Salmon), சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட்கள்
உயர்ரக கார்கள்.
இதைத் தவிர பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியை விரிவாக்குவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் பிரிட்டன் அரசு பெருமிதம் கொண்டுள்ளது..
இந்தியாவில் குறைந்த சதவீதமே உள்ள வாங்கும் சக்தி கொண்ட மேட்டுக்குடி கும்பலும், நடுத்தர பணக்கார வர்க்கத்தினரும் பயன்படுத்தக்கூடிய கார்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உயர் வகை மீன்கள், சாக்லேட்டுகள் ஆகியவற்றிற்கு வரி குறைக்கப்பட்டதையே நாட்டின் பொருளாதாரத்தை பல மடங்கு உயர்த்துகின்ற நடவடிக்கை என்பதைப் போல பித்தலாட்டம் புரிகின்றனர்.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு தரப்பு வர்த்தகத்திலும் ஆண்டுக்கு சுமார் 34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொருளாதார ஜோசியத்தில் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் இறங்கி உள்ளனர்.
ஆனால் இதற்கு நேர்மாறாக பிரிட்டன் பொருளாதாரம் 4.8 பில்லியன் யூரோ அளவிற்கு உயரும் என்று அந்த நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர்களும், அரசாங்க அதிகாரிகளும் செய்திகளாக வெளியிட்டு குதூகலம் அடைகின்றனர்.
“பிரிட்டன் உழைப்புச் சந்தையில் மலிவான கூலிக்கு வேலை செய்கின்ற தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்த நாட்டில் நிரந்தரமாக பணியாற்றுகின்ற தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் சம்பளம் பல மடங்கு குறைக்கப்படும் அபாயம் உள்ளது”
என்று பிரிட்டன் தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து உள்ளன.
உள்நாட்டு பொருளாதாரத்தை நிலையான அளவில் வளர்ப்பதற்கு எந்த விதமான பொருளாதாரக் கொள்கைகளும் இல்லாத கார்ப்பரேட் அடிமையான பாசிச மோடி தற்போது அமுல்படுத்தி வரும் கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமின்றி நாட்டை அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்தியங்களின் மறு காலனியாக்கும் திசையில் வேகமாக கொண்டு செல்வதாகும்.
மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மை தான் பாசிசமாக உருவெடுக்கின்றது. அது இந்தியாவில் உள்ள பிற்போக்கு சக்தியான பார்ப்பன மதவெறியர்களுடன் இணைந்து கார்ப்பரேட் – காவி பாசிசமாக உருவெடுத்துள்ளது என்பதை மார்க்சிய லெனினிய அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் இதற்கு நேர் மாறாக இத்தகைய அடிமைத்தனமான ஒப்பந்தங்கள் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவதாக பாசிச மோடி கும்பல் சாமியாட்டம் ஆடுகிறது.
படிக்க: பிரிட்டன் காலடியில் விழுந்து கிடந்த ‘தேசபக்தர்கள்’ திடீர் தேசபக்தி!
ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடிக்குள் இந்தியாவை ஆழமாக தள்ளி விடுகின்ற இந்திய பிரிட்டன் ஒப்பந்தங்கள் கிழித்தெரியப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மையையும், பொருளாதார தற்சார்பு தன்மையையும் பாதிக்காத வகையில் ஒப்பந்தங்களை போடுவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் நாட்டுப்பற்றுடன் இத்தகைய விவாதங்களை நடத்துவதற்கு தற்போதுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்பது மட்டுமின்றி அவர்கள் போடுகின்ற ஒப்பந்தங்களுக்கு எதிராக பேசுபவர்கள், எழுதுபவர்கள் அனைவரும், ‘ தேசத் துரோகிகள்’ நகர்ப்புற நக்சல்கள் என்று ஒரு வரியில் முத்திரை குத்தி அடக்குமுறை ஏவுவதற்குதான் முன்னிலையில் நிற்பார்கள்.
நாட்டையும், மக்களையும் பாதுகாக்கின்ற வகையில் அதற்கு மிகப்பெரும் எதிரியாக உள்ள கார்ப்பரேட் காவி பாசிச சக்திகளை முறியடிப்பதற்கு அனைத்து வகையான போராட்டங்களையும் நடத்த வேண்டியது மிக மிக அவசிய, அவசரக் கடமையாக மாறியுள்ளது.
- கரட்டுப்பட்டியான்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






