தமிழகத்தின் நீளமான சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக பல்வேறு பேருந்துகள் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அது மட்டுமல்ல ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நாம் செல்வதற்கு பொதுவாகவே பொது போக்குவரத்தான சாலை போக்குவரத்தை தான் பயன்படுத்துகின்றோம்.
அன்றாடம் 1 கோடியே 70 லட்சம் பேர் சாலைப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் அறிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை 1972ல் துவக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகங்கள் இந்த சாலை போக்குவரத்தில் முக்கியமான பங்களிப்பை செலுத்துகின்றன. குறுகிய தொலைவில் உள்ள கிராமப் பகுதிகளுக்கும் சரி, நீண்ட தொலைவில் உள்ள பகுதிகளுக்கும் சரி, அரசு போக்குவரத்தின் மூலம் நாம் பயணத்தை மேற்கொள்ளும் போது அதற்கான செலவினங்கள் குறைவாகவே ஆகின்றது என்பதை நமது பயண அனுபவத்திலிருந்து உணர்ந்து இருக்கலாம்.
வடமாநிலங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மணிக்கணக்காக காத்துக் கொண்டிருக்கும் சூழலில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பொருத்தமான போக்குவரத்து வசதிகளை தமிழகத்தை ஆண்டு வருகின்ற திராவிட கட்சிகள் செய்து வருகின்றன என்றால் அது மிகையில்லை.
இத்தகைய சூழலில் போக்குவரத்து கழகங்கள் அதன் கீழ் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் நலனை அக்கறையுடன் பொறுப்புடன் கவனிக்கிறதா என்று சொன்னால் அதுதான் இல்லை என்பது தான் இன்றுவரை பதிலாகவே நீடிக்கிறது.
நீண்ட காலமாக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் போக்குவரத்து தொழிலாளியாக பணிபுரிந்து, தொழிற்சங்க தலைவராகவும் உயர்ந்துள்ள ஒரு நண்பரை சமீபத்தில் சந்தித்தோம்.
அவர், தோழர்களே, “போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்த திமுக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை நிறைவேற்ற வில்லை என்பதால் திமுக அரசாங்கத்தின் மீது நாங்கள் கடுமையாக அதிருப்தியில் உள்ளோம் என்றும், பிற அரசாங்கங்களைப் போல தான் திமுகவும் போக்குவரத்து தொழிலாளர்களை நடத்துகிறது” என்றும் வேதனை மற்றும் ஆத்திரம் பொங்க கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: “சேவை நோக்கத்தோடு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கப்படும் காரணத்தால் நிதி இழப்பு ஏற்படுகிறது. இதனை ஈடுகட்ட அரசு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டுமென கோரி வருகிறோம். ஆனால், இழப்பை ஈடுகட்ட தொழிலாளர்களின் சேமிப்பு பணம் ரூ.15,000 கோடியை கழகங்கள் செலவு செய்துவிட்டன.
கடந்த 18 மாதங்களாக பணி ஓய்வு பெற்ற 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சுமார் ரூ.3,500 கோடி பணப்பலன் நிலுவை உள்ளது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக 93,000 போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்பும், நீதிமன்ற உத்தரவை அமலாக்குவதற்குப் பதிலாக தேவையற்ற முறையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
படிக்க: அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமையை புறக்கணிக்கும் தமிழக அரசு!
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடும் மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டமும் அமல்படுத்தப்படவில்லை. ஊதிய ஒப்பந்தமும் பேசி முடிக்கப்படவில்லை”. என்று போக்குவரத்து தொழிலாளர்களின் நிலைமையை விவரிக்கின்றார்.
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை வரும்போது போக்குவரத்து தொழிலாளர்களின் தேவை அதிகரிப்பதால் அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதாக நாடகமாடுகின்ற அரசாங்கங்கள் அந்த வேலை முடிந்தவுடன் போக்குவரத்து மூலம் கிடைத்த லாபத்தை பொதுவெளியில் அறிவிக்கிறார்களே ஒழிய அதனை ஈட்டி கொடுத்த தொழிலாளர்களின் உழைப்பு பற்றி பேசுவதே இல்லை.
எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒருபோதும் சாத்தியமே இல்லை. ஒரு நாள் முழுவதும் அதாவது 24 மணி நேரம் கண் விழித்து வேலை செய்துவிட்டு மாற்று தொழிலாளி வரவில்லை என்றால் தொடர்ந்து வாகனத்தை இயக்க வேண்டும் அல்லது நடத்துனர் பணி செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் வேலை நிலைமையாகும்..
தூக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு பாடல்களை கேட்பது என்பது பொதுவானது. ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் பான்பராக் அல்லது குட்கா போன்ற பொருட்களை பயன்படுத்தி தூக்கம் வராமல் கண் விழிக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே உடலும் பொலிவிழந்து மனமும் பாதிக்கப்படுகிறது.
தொழிலாளர்களின் உழைப்பில் விளைந்த தமிழக அரசின் போக்குவரத்து கழகம், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் என்றும், விரைவுப் போக்குவரத்து கழகம் என்றும், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, சேலம் நெல்லை மற்றும் கோவை போன்ற கோட்டங்களின் கீழ் அரசு பேருந்து கழகங்களாகவும் உள்ளது.
தமிழக போக்குவரத்துறையின் கீழ் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினசரி 1.70 கோடி பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்
நமது பயணத்தை மிகவும் பாதுகாப்பாக நடத்திக் கொடுக்கின்ற தொழிலாளர்களின் வாழ்க்கையும் அவர்களது பயணமும் கொடுமையான நெருக்கடியின் கீழ் தள்ளப்பட்டுள்ளது என்பதை உணரும் ஒவ்வொருவரும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தோளோடு தோள் நிற்க வேண்டும் என்பதுதான் இன்றைய தேவையாக மாறியுள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்து மிகப்பெரும் வருவாய் கொதிக்கின்ற துறை என்பதால் தனியார் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாப்பதும், அதன் தொழிலாளர்களை உரிமையுடன் கூடிய பாதுகாப்பான தொழிலாளர்களாக மாற்றுவதற்கு அவர்களுடன் இணைந்து போராட வேண்டும்.
- கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி