அதானி குழுமம் இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை வணிக நோக்கில் செயல்படுத்தி வருகிறது. அதன் துணை நிறுவனமான PT அதானி குளோபல் மூலம் அந்த நாட்டில் தனது தொழிலை நிலை நிறுத்தியுள்ளது. அதன் நிலக்கரி சுரங்கம் மற்றும் துறைமுகம் வடக்கு கலிமந்தன் மாகாணத்தில் உள்ள சிறிய தீவான புன்யூவில் (Bunyu) அமைந்துள்ளது.
இத்தீவில் அதானியின் நிலக்கரி சுரங்க நடவடிக்கைகள் அங்கு வசிக்கும் டிடுங் சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவுகள் குறித்து இந்தோனேசியாவில் இயங்கும் ஜடம் (JATAM) எனும் அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
அம்பலமானது அதானியின் மோசடி!
சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையில் (OCCRP) கூறப்பட்டுள்ள விபரங்கள் நமக்கு அதிர்ச்சி ஊட்டுகின்றன. ஜனவரி 9, 2014 அன்று இந்தோனேசியாவின் அதானி சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு MV Kalliopi என்ற கப்பல் தமிழ்நாட்டின் எண்ணூர் துறைமுகத்தை வந்தடைந்தது.
அந்தக் கப்பலில் 69,925 மெட்ரிக் டன் நிலக்கரி இருந்தது. இது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (Tangedco) தேவைக்காக இறக்குமதியானது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இந்தோனேசியாவில் இருந்து சென்னை வரும் வழியில் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள அதானி நிறுவனத்திற்கு நிலக்கரி விற்கப்படுவதாகவும், பிறகு அங்கிருந்து தமிழகத்துக்கு அனுப்புவதாகவும் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது.
இதன் மூலம் போக்குவரத்துச் செலவை பெருமளவு குறைத்துள்ளது அதானி நிறுவனம். மேலும் தரம் குறைந்த நிலக்கரியை உயர்தரமானது என்று தமிழகத்தின் தலையில் கட்டியதன் மூலம் மூன்று மடங்குக்கு மேல் அதிக லாபம் பார்த்துள்ளது. அதாவது ஒரு மெட்ரிக் டன்னுக்கு 28 டாலர் மதிப்புள்ள நிலக்கரியை 91 டாலருக்கு விற்பனை செய்துள்ளதும் அம்பலமானது.
ஜனவரி முதல் அக்டோபர் 2014 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 24 கப்பல்களில் தமிழகத்துக்கு நிலக்கரி இறக்குமதியாகி உள்ளது. அதானியின் இலாபத்துக்காக தமிழக அரசுக்கு சுமார் 6000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. இலஞ்சம் பெற்றுக் கொண்டு அதானியின் இத்தகைய மெகா ஊழல் மோசடிக்கு அதிமுக அரசு துணை போயுள்ளது. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்திய அரசின் நிதி அமைச்சக சுங்கப் புலனாய்வு மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் (DRI) விசாரணைகள், அதானியின் இந்தோனேசிய நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கசிந்த ஆவணங்கள், தமிழ்நாட்டு டான்ஜெட்கோ – வின் ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மோசடிகள் அம்பலப்படுத்தப் பட்டுள்ளன.
அதானி வருவார் பின்னே மோடி வருவார் முன்னே!
செப்டம்பர் 7, 2023 அன்று தென்கிழக்காசிய ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மோடி இந்தோனேசியா சென்றார். அடுத்த மாதமே அதானி இந்தோனேசிய அரசாங்கத்துடன் மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அமைந்துள்ள சபாங் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த திட்டத்தில் ஒரு புதிய கொள்கலன் முனையம் உருவாக்குதல் மற்றும் பிற போக்குவரத்து துறைமுக வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
ஆரம்பகட்டமாக ஒரு பில்லியன் டாலர்களை (சுமார் 8400 கோடி ரூபாய்) அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளது. அதானியின் தொழில் சாம்ராஜ்யம் உலக அளவில் விரிவடைய மோடி இப்படித்தான் துணை புரிந்து வருகிறார். யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏற்ப அதானி வரும் பின்னே, மோடி வருவார் முன்னே என்பது பல நாடுகளிலும் நிரூபணமாகி வருகிறது.
நேபாளத்துக்கு நெருக்கடி கொடுத்த பாசிச மோடி!
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாள தேசம் சீனாவுடனும், இந்தியாவுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. நேபாளத்தின்க்ண் விமானங்கள் உயரமான வழித்தடங்களை பயன்படுத்தக் கூடாது என்று பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது. எல்லைக்கு அருகே இந்திய வான்பரப்பில் நேபாள விமானங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அனுமதிக்கப்பட்டன.
நேபாளத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே இந்த விவகாரம் பதட்டத்தை ஏற்படுத்தியது. நேபாளத்தின் பொக்காரா மற்றும் பைரஹவா ஆகிய இடங்களில் சீனாவின் கடன் உதவியுடன் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களிலிருந்து இயக்கப்படும் விமானங்கள் இந்தியாவின் கட்டுப்பாடு காரணமாக பொருளாதார ரீதியாக நட்டத்தை சந்தித்தன.
நேபாளத்தின் ஹிமால் கபார் நாளிதழ், இவ்விரு விமான நிலையங்களோடு லும்பினியில் உள்ள விமான நிலையத்தையும் இயக்குவதற்கு அதானிக்கு ஒப்பந்தங்கள் வழங்கும் வரை பல்வேறு சாக்குப் போக்குகளை சொல்லி மோடி அரசு நேபாள அரசுக்கு நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருந்தது என்று குற்றம் சாட்டியுள்ளது. இது தவிர புதிதாக நிஜ்காத்தில் நிறுவப்பட உள்ள விமான நிலையமும் அதானி வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த விவகாரம் குறித்து நேபாள மற்றும் இந்திய அரசு அதிகாரிகள் ஜூன் 2023 – ல் விவாதித்தனர். ஜனவரி 2024 ல் அதானி குழுமத்தின் அதிகாரிகள் நேபாள தலைநகர் காத்மண்டுவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கான முதலீடுகள் பற்றியும், காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிப்பது குறித்தும் திட்டங்கள் போடப்பட்டன.
இந்த சூழலில், ஜூலையில் சர்மா ஒலி புதிய பிரதமராகப் பொறுப்பேற்று ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததன் காரணமாக இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இருப்பினும் அங்கு மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, அங்கிருந்து இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டங்களை முன்வைத்து அதானி குழுமம் நேபாள அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் இல்லாத வகையில் மின்னுற்பத்தி எனும் இலக்கை அடைவதற்காக, இந்தியாவுக்கு வெளியே 10 ஜிகா வாட் (GW) நீர்மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. நேபாளம் மட்டுமல்லாமல் பூட்டான், கென்யா, தான்சானியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் இது போன்ற நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து 2030 க்குள் 50 GW தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஆஸ்திரேலியாவில் அதானியின் ஆட்டம்!
மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் கார்ப்பரேட் முதலாளி அதானியும், இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) தலைவரான அருந்ததி பட்டாச்சாரியாவும் சென்றிருந்தனர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அதானியின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு ஸ்டேட் வங்கி அதானி குழுமத்திற்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதானியின் இந்த சுரங்கத் திட்டம் கடும் எதிர்ப்பை சந்தித்தது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும், கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பும் மேலும் சட்டப்படியான வழக்குகளும் தொடரப்பட்டன. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் கலிலி படுகையில் ஒரு பெரிய திறந்தவெளி சுரங்கத்தை உருவாக்கவும், அங்கிருந்து நிலக்கரியை அபோட் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல ரயில் பாதை அமைக்கவும் அதானிக் குழுமம் உரிமம் பெற்றது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காலநிலை மாற்றத்துக்கும், சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் திட்டமாக இது இருக்கும் என்று கடும் எச்சரிக்கை விடுத்தனர். அதானியே நிறுத்து (Stop Adani) என்ற முழக்கத்துடன் குழுக்களும் சுரங்கத்துக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டன. விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த சுரங்கப் பணிகளால் நிலத்தடி நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு காட்டினர்.
பல ஆண்டுகளாக வழக்குகள் நடந்த நிலையில், இறுதியாக சிறிய அளவில் திட்டத்தை தொடரலாம் என அதானிக்கு அனுமதி கிடைத்தது. பரவலான எதிர்ப்புகளை மீறி சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டு முதல் நிலக்கரி சரக்கு டிசம்பர் 2021 – ல் ஏற்றுமதி செய்யப்பட்டது. இருப்பினும் திட்டமிடப்பட்ட திறனில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே இயங்குகிறது. ஆண்டுக்கு 60 மில்லியன் டன்களுக்கு பதிலாக 10 மில்லியன் டன்கள் மட்டுமே நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.
படிக்க: ’அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்!’ தேசத்தின் முழக்கமாகட்டும்!
அதானி தனது பெயரில் வரும் விமர்சனங்களை தவிர்க்கும் பொருட்டு நிறுவனத்தின் பெயரை பிராவஸ் மைனிங் என்று மாற்றியுள்ளார். அங்கிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, குஜராத்தின் முந்த்ராவில் உள்ள அதானி குழுமத்திற்கு சொந்தமான ஆலையில் பிவிசி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரமும் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
ஆக, உலகெங்கும் அதானி எனும் தனி ஒரு முதலாளிக்காக மோடி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த நாடுகளை மிரட்டியோ, ஊழல் செய்ய தூண்டியோ முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இப்படி முறைகேடாக தொழில் தொடங்கி அந்த நாடுகளின் சுற்றுச்சூழலை சீர்கெட வைக்கும் போதும், அந்நாட்டு மக்களின் மீது அதீத கட்டணக் கொள்ளையை திணிக்கும் போதும் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு அதானி நிறுவனத்துக்கு எதிராகப் போராடுவதும் பல்வேறு நாடுகளில் நடக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் அதானி எனும் கார்ப்பரேட் கொள்ளையனுக்கு ஆதரவாக செயல்படும் பாசிச மோடியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்தால்தான் பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும். அந்தப் பணியை நிறைவேற்ற பாசிசத்துக்கு எதிரான, கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
- குரு