திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கில் தகவல் உரிமைச்சட்ட மனுக்களைத் தாக்கல் செய்த விவசாயிகள்!

       திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட பாலியப்பட்டு கிராமத்தில் விவசாய விளைநிலங்களை அபகரித்து சிப்காட்(SIPCOT) அமைப்பதை கைவிடக் கோரி தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் அக்கிராம பஞ்சாயத்து மக்கள்.

அதன் ஒரு நிகழ்வாக 45-வது நாளான இன்று(04-02-2022) பாலியப்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்ன பாலியப்பட்டு, புனல்காடு, சின்ன புனல்காடு, மாரியம்மன் நகர், செல்வபுரம், அண்ணா நகர் பகுதிகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிப்காட் தொடர்பான  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்(RTI) 424 மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாக தாக்கல் செய்தனர்.

சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம்* என்ற அமைப்பின் சார்பில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனித உரிமை செயற்பாட்டாளர் சு.கண்ணன், செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முஸ்தாக் பாஷா, இப்ராஹிம் உள்ளிட்டோர் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள, திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, “இது தகவல் கோரும் நடவடிக்கை மட்டுமல்ல. இத்தனை நாட்கள் போராடியும் மக்களிடம் தங்கள் திட்டம் குறித்துப் பேச முன்வராத அரசாங்கத்துக்கு தங்கள் குரலை உரத்துக் கேட்க வைக்கும் முயற்சியும் ஆகும்,” என்று  தெரிவித்தார்.

படிக்க

 திருவண்ணாமலை சிப்காட்டுக்கு எதிராக போராடும் மக்களை ஆதரிப்போம்! 

என்னவிதமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்று கேட்டபோது, “தமிழ்நாடு அரசு எங்கெங்கே புதிதாக சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கத் திட்டமிட்டுள்ளது? ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டைக்கு என கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளன? என்ன விதமான நிலங்களில் சிப்காட் அமைக்ககூடாது? என்பது உள்ளிட்ட 25 கேள்விகளை, 424 பேர் தங்கள் மனுக்களில் கேட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

 

பத்திரிக்கைச்செய்தி

நாள்: 05-02-2022

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு,
மக்கள் அதிகாரம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஊடக பத்திரிகைத் துறை நண்பர்களே!
வணக்கம்.

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட பாலியப்பட்டு பஞ்சாயத்தை சேர்ந்த கிராம மக்கள் தமிழக அரசு அக்கிராமத்தில் சிப்காட்(SIPCOT) அமைக்கவிருப்பதை எதிர்த்து சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் என்ற பெயரில் கடந்த 45 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பல்வேறு இயக்கத்தினர்,அரசியல் கட்சியினர் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒரு வழிமுறையாக நேற்று (04-02-2022) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 424 மனுக்களை அம்மக்கள் கொடுத்தனர்.

கடந்த 45 நாட்களாக போராடி வரும் மக்களின் போராட்டத்தை அனைத்து ஊடக,பத்திரிக்கை துறை நண்பர்களுக்கு தெரிவித்தும் ஒரு சில ஊடகங்கள் (www.makkalathikaram.com, BBC, அரண்செய், தி இந்து தமிழ்) தவிர்த்து வேறு எந்த ஊடகமும் அந்த மக்களின் போராட்டத்தை வெளி உலகிற்கு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் முதல்முறையாக நேற்றைய போராட்டத்தை அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியிட்டது மகிழ்ச்சியே! என்றாலும் கூட இனிமேலும் அம்மக்களின் போராட்டத்தை வெளியுலகிற்கு கொண்டு செல்லவில்லையென்றால் தாங்கள் மக்களிடம் அம்பலப்பட்டு போய்விடுவோம் என்பதை உணர்ந்து கொண்டதாகவே அறிந்துகொள்ள முடிகிறது.

மக்களின் போராட்டத்தை வெளியிட்ட பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும்,இணையதளம் மற்றும் யூட்யூப் நண்பர்களுக்கும் நன்றிகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.

இவண்,
மக்கள் அதிகாரம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here