பட்ஜெட் என்பது என்ன?

நமது குடும்பத்தில் மாதாமாதம் என்னென்ன செலவு செய்கிறோம் என்பதையும் நமது வருவாயில் இருந்து உணவுக்கு  இவ்வளவு, மருத்துவத்துக்கு இவ்வளவு , போக்குவரத்து செலவு  இவ்வளவு, என்று ஒவ்வொன்றுக்கும் ஆகும் செலவுகளை கணக்கிட்டு இந்த மாதத்தில் கடன் வாங்காமல் எப்படி செலவு செய்வது என திட்டமிடுவோம். இந்த வேலையை குடும்பத் தலைவனும், தலைவியும் சேர்த்து திட்டமிடுவார்கள்.

கடன் வாங்காமல் இந்திய நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் அமைவதில்லை சரி. விஷயத்துக்கு வருவோம். அந்த மாதம் முடிந்த பிறகு பட்ஜெட்டுக்குள் செலவாகியுள்ளதா அதற்குமேல் செலவாகியுள்ளதா என ஆராய்வார்கள். இது குடும்பத்தில் மாதம் ஒரு முறை போடப்படும் பட்ஜெட்.

இதே முறையில்தான் நாட்டிற்கும் பட்ஜெட் போடப்படுகிறது. அரசாங்கத்திற்கு பல்வேறு துறைகளின் மூலம் வரும் வரி வருவாயைக் கொண்டு புதிய திட்டங்களுக்கும், மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், மற்றும் இராணுவம் இன்ன பிற என நிதியை பிரித்து ஒதுக்குவார்கள். குறிப்பிட்ட துறைகளுக்கென தனியாகவும் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள். மேலும் எவ்வளவு பற்றாக்குறை  எனவும் கணக்கிடுவார்கள்.

ஆனால் மோடி அரசாங்கம் வந்த பிறகு அதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடனேயே தான் அமெரிக்கா மற்றும் கார்ப்பரேட்டுகளின் அடிமை என்பதை நிலைநாட்டும் விதமாக அன்றைய SBI வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா உடன் அதானியின் விமானத்தில் சென்று ஆஸ்திரேலியாவில் அதானிக்கு நிலக்கரி சுரங்கம் வாங்குவதற்காக உதவினார். அதற்காக 6,200 கோடி கடன் அளிக்கப்பட்டது. அப்படி ஆரம்பித்த மோடியின் கார்ப்பரேட்  சேவை இன்று பரந்து விரிந்து பரவி உள்ளது. அது இந்த 2022 -23 ஆண்டிற்கான இந்த வருட பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பட்ஜெட்டை படித்தால் உங்களுக்கு விளங்கும். குறிப்பான விஷயங்களை மட்டும் பேசுவோம்.

அதானி விமானத்தில் மோடி

ஒரு குடும்பத்தில் ஊதாரியான குடும்பத் தலைவன் என்ன செய்வான், சரியாக சம்பாதிக்க மாட்டான் வீட்டில் உள்ள நகைகளை விற்று தின்பான், கடைசியில் தான் வாழும் வீட்டையும் விற்று விட்டு அவனை நம்பியுள்ள குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி விடுவான்.

அந்தக் குடும்பத் தலைவன் வேறு யாருமில்லை இந்திய பிரதமர் மோடி தான். கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காகவே சபதம் எடுத்துக் கொண்டு வந்த மோடி, விமான நிலையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தகவல் தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் தொடங்கி இன்று ஏர் இந்தியா, எல்ஐசி வரை நீள்கிறது அந்த பட்டியல். நாட்டை விற்று தின்பதற்கு பணமாக்கல் திட்டம் என்று பெயர் வேறு.

மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து பசியாற 100 நாள் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இன்று 100 நாள் திட்டத்திற்கான நிதியில் 25 ஆயிரம் கோடியை வெட்டியுள்ளது  பாசிச மோடி அரசு. அதுமட்டுமில்லாமல் நூறு நாள்  எல்லாம் இனி வேலை கிடையாது. 44 நாட்கள் தானாம். சம்பள பாக்கி மட்டுமே 3,360 கோடி. இது மக்களை பட்டினி சாவிற்கும் தள்ளும் நிலையை உருவாகியுள்ளது.

நூறு நாள் வேலைத்திட்டம்

ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. இந்நிலையில் உணவுக்கான மானியத்தை குறைத்துள்ளது.  உணவுக்கான மானியம் 2,42,836 கோடியில் இருந்து 2,06,831 கோடியாக குறைத்துள்ளது. லட்ட்சம் ரூபாய் மதிப்புள்ள காளான்களை தின்னும் மோடிக்கு, மக்களின் ஊட்டசத்து குறைபாடு குறித்து தெரியவா போகிறது.

கல்விக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளை ஒழித்துக் கட்டி கடைநிலையில் இருந்து படிக்க வரும் குழந்தைகளின் கல்வி உரிமையை பறித்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டு விவசாயிகளின் போராட்டத்தினால் வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றது மோடி அரசு. இன்னும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கப்படவில்லை. பட்ஜெட்டிலும் அது குறித்த அறிவிப்பும் இல்லை. மாறாக உரத்திற்கான மானியங்களை குறைத்துள்ளது. இது மேலும் விவசாயிகளின் தலையில் இடியை இறங்கியுள்ளது.

இப்படி உழைக்கும் மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தாத பட்ஜெட் யாருக்கானது? கடந்த வருடங்களில் போடப்பட்ட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவு செய்யப்பட்டதா என்றால் எந்த விபரமும் இல்லை. கங்கையை தூய்மைப்படுத்த ஒதுக்கப்பட்ட 1000 கோடி என்ன ஆனது? கங்கை தூய்மையானதா? இல்லை. கொரோனாவில் இறந்த மக்கள் பிணங்கள் மிதந்து காட்சிகள் போதாதா. இல்லாத சரஸ்வதியை கண்டுபிடிக்க ஒதுக்கப்பட்ட நிதி, வருடாவருடம் நதிநீர் இணைப்புக்கு ஒதுக்கப்படும் நிதி, என அடுக்கி கொண்டே போகலாம் இவையாவும் மக்களின் வரிப்பணம்.

ஜனவரி மாதம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி 1,40,986 கோடி என பெருமிதம் கொள்கிறார் நிர்மலா சீதாராமன். மக்களிடம் வரி என்ற பெயரில் கொள்ளை அடித்துவிட்டு அதில் பெருமிதம் வேறு.

ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது, இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின்  (LIC) விற்பனை விரைவில் தொடங்கும் என நாட்டின் பொதுத்துறை கார்ர்ப்பரேட்டுகளிடம் விற்றதை பெருமை பொங்க கூறுகிறார்.

பெருநிறுவனங்களின் கூடுதல் வரி (SUR CHARGE)  12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகள் கஷ்டப்படக்கூடாது என்பதில் இருந்து கண்ணும் கருத்துமாக பட்ஜெட் தயாரித்திருக்கிறார்கள்.  மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்திற்கு வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டை போலவே இரண்டரை லட்சம் ரூபாய் வருமான வரி உச்ச வரம்பு தொடர்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்ந்துள்ளது என்ற பொது அறிவு கூடவா இருக்காது.

மொத்தத்தில் ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு வணிகர்கள் இவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இந்த பட்ஜெட் மக்களுக்கானது இல்லை உழைக்கின்ற மக்களிடமிருந்து வரியை பிடிங்கி கார்ப்பரேட்டுகளின் கல்லாவை நிரப்பும் பட்ஜெட்.

பொதுவாக ஒரு நாட்டின் அரசாங்கம் போடுகின்ற பட்ஜெட் என்பது சுயேச்சை தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது பொதுவான புரிதல்.

ஆனால் இந்தியாவின் பட்ஜெட் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கட்டளைகளுக்கும், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கும் உகந்த வகையில் ஐஎம்எப், உலகவங்கி போன்றவற்றின் வழிகாட்டுதலுடன் தான் போடப்படுகிறது. இதனை வழக்கமான ஒரு சடங்கு, நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பிரச்சனை என்று பார்ப்பது பொருளாதார அறிவற்ற பாமரத்தனம் ஆகும்.

பட்ஜெட் அறிவிக்கப்பட்டவுடன் அது அன்றாடம் கூலி வேலைக்கு செல்கின்ற அரை பாட்டாளிகள், நாடு முழுவதும் அலைந்து திரிந்து வேலை செய்கின்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. என்பதால் இதனை அம்பலப்படுத்த வேண்டுமே தவிர எப்போதும் பாடுகின்ற பாட்டை பாடுகிறார்கள் என்று மேல், கீழ் வாயை பொத்திக் கொண்டு இருக்க முடியாது.

  • நந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here