பெரும் பிரச்சாரங்களுக்கு பின்னர் இந்தியாவின் பதினைந்தாவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு கடந்த ஜூலை 25-ம் தேதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டுமே நாட்டு மக்களுக்கு ஒரு வகையிலும் பயன்படாத டம்மி பதவிகள் என்கிற போதிலும் பெரும் தம்பட்டம் அடித்து குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. திரெளபதி முர்மு பெயரை குடியரசுத் தலைவர் பதவிக்கு அறிவித்த நாள் முதற்கொண்டு, அவர் பதவியேற்கும் நாள் வரை, அவரின் மொழி, இனம், மதம், கல்வி, குடும்பம் தொடங்கி பதிவியேற்கும் நாளன்று உடுத்தும் சேலை வரை ஆராய்ந்து வெளியிட்டு அடங்கியிருக்கின்றன ஊடகங்கள்.
முர்மு, இந்திய பழங்குடி மக்களை இரட்சிக்க வந்தவர் போலவும், இனிமேலும் ஒரு பழங்குடியினர் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்பது போலவும் தோற்றம் கட்டியமைக்கப்பட்டது. அப்துல்கலாமையும், ராம்நாத் கோவிந்தையும் குடியரசு தலைவர்களாக்கி அவர்கள் சார்ந்திருந்த சமூக மக்களுக்கு என்ன வளர்ச்சிகளையும் முன்னேற்றங்களையும் அரசு செய்ததோ அதே தான் இப்போது பழங்குடி மக்களுக்கு அரசு செய்யப் போகிறது.
பழங்குடி மக்களின் மேல் பாஜக-வின் பாசம்:
அதானி, அம்பானி மீதும் அவர்களை போன்ற முதலாளிகள் மீதும் மட்டும் அளவுகடந்த பாசம் வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு திடீரென பழங்குடி மக்களின் மீதான் அக்கறை ஏன் வந்தது? ”கோழிக்கு இரண்டு கால்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு பாப்பான் வந்து கோழிக்கு இரண்டு கால்கள் என சொன்னால், மூன்றாவதாக ஒரு கால் எதாவது இருக்கிறதா என தேடுவேன்” என கூறியவர் தந்தை பெரியார். அந்த பகுத்தறிவு பார்வையில் தான் பாஜக-வின் பழங்குடிகள் மீதான பாசத்தை நாம் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: திரௌபதி முர்முவின் வெற்றி சங்பரிவார் கும்பலுக்கு தான், ஆதிவாசி மக்களுக்கு அல்ல!
சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டியிட்ட 28 ரிசர்வ் தொகுதிகளில் இரண்டு இடங்களும், சட்டிஸ்கர் மாநிலத்தில் 29 ரிசர்வ் தொகுதிகளில் மூன்று இடத்திலும், மத்திய பிரதேசத்தில் 47 ரிசர்வ் தொகுதிகளில் 16 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தான் கடந்த நவம்பர் மாதத்தில் பழங்குடி மக்களின் போராளி பிர்சா முண்டா பிறந்த நாளை பழங்குடி மக்களின் கெளரவ நாளாக அறிவித்தது பாஜக அரசு. மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜக-வின் தேர்தல் தோல்விகள், அக்கட்சியை பழங்குடிகள் ஆதரவு நிலைப்பாடு எடுக்க வைத்துள்ளது.
கலாம் – கோவிந் – முர்மு!
காலனிய ஆட்சியில் ஆங்கிலேயர்கள் காடுகளை வளைத்து பழங்குடி மக்களை காடுகளை விட்டு வெளியேற்றிய போது, அவர்களுக்கு எதிராக பிர்சா முண்டா மக்களை திரட்டி முன்வைத்த முழக்கம் ஜல் ஹமாரே, ஜங்கிள் ஹமாரே, (நீர் எமது, நிலம் எமது) என்பதாகும். அதைத்தான் இப்போது கார்ப்பரேட்டுகள் சொல்கிறார்கள். நீரும் நிலமும், காடும், வளமும் அனைத்தும் தனியாருக்கே என்பது தான் பாஜக வின் கொள்கை. நேரெதிரான கொள்களைகள் கொண்ட பழங்குடி மக்களும், பாசிச பாஜகவும் எப்படி ஒன்று சேர முடியும்? அதனால் தான் அவர்களின் பிரதிநிதிக்கு அலங்காரப் பதவி கொடுத்து அவர்களுக்கானவர்கள் போல நடிக்கிறது பாஜக.
அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்த சமகாலத்தில் தான் உலக இழிபுகழ் பெற்ற குஜராத் இசுலாமிய இனப்படுகொலையை நடத்திக் காட்டினார் நரேந்திர மோடி. நாட்டின் முதல் குடிமகன் என சொல்லப்படுகின்ற அதிகாரத்தில் அமர்ந்திருந்த ராம்நாத் கோவிந்த் தாழ்த்தப்பட்டவர் என்பதாலேயே கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டது. நாடு முழுவதும் இசுலாமியர்கள் மீதும், தலித்துகள் மீதும் கட்டற்ற வன்முறை ஏவப்பட்டது. அத்தனை அடக்குமுறைகள் தனது சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போதும், ஐந்து லட்ச ரூபாய் சம்பளமும், ஆடம்பர பங்களா வாசத்திலும் தான் மேற்சொன்னவர்கள் வாழ்ந்தார்கள்.
பழங்குடி மக்கள் வெளியேற்றம்
2001-2011 இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் 50% பழங்குடி மக்கள் தங்கள் வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்கிறது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அறிக்கை. இன்னுமொரு 10 ஆண்டுகளை கடந்திருக்கிறோம். இந்த விவரம் இன்னும் மிக அதிகமாகி இருக்கக் கூடும். பன்னாட்டு கார்ப்பரேட்களுக்கு இந்நாட்டு தரகு முதலாளிகளுக்கு கனிம வளங்களை வாரி கொடுப்பதில் கட்சி பேதமில்லை என்பதை நாடறியும். கடந்த மன்மோகன்சிங் ஆட்சியில் கிழக்கு இந்தியாவின் பழங்குடி மக்கள் மீது ஒரு உள்நாட்டு போரையே நடத்தப்பட்டது.
மலைகளில் குவிந்திருக்கும் பாக்சைட் உள்ளிட்ட வளங்களை கொள்ளையிட சொந்த நாட்டு மக்களை துரத்தியடித்தது காங்கிரசு அரசு. முதலாளிகள் விசுவாசத்தில் காங்கிரசை விஞ்சும் பாரதிய ஜனதா கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கார்ப்பரேட் – காவி பாசிசம்
ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டின் வளங்களை வாரிக் கொடுத்துக் கொண்டே மறுபுறம் அரசியல் அதிகாரம் மிகுந்த பதவிகளில் ஆர். எஸ். எஸ் ஆட்களையும், ரப்பர் ஸ்டாம்ப் டம்மி பதவிகளில் அவர்களின் விசுவாசிகளையும் கொண்டு நிரப்பி, அகண்ட பாரத கனவை நோக்கி நகர்கிறது ஆர்.எஸ்.எஸ். இது முதலாளிகளின் கட்டற்ற சுரண்டலுக்கு நல்வாய்ப்பாக இருப்பதால், அவர்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் தன்னை தக்கவைத்துக் கொள்ள ஏதுவாக இருப்பதால், காவி பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறார்கள். வேகமாக ஒரு பாசிச தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்கள்.
நூற்றுக்கணக்கான வருடங்கள் தனது அறிவை, வீரத்தை தலைமுறை தலைமுறையாக கடத்தி வந்திருக்கும் பழங்குடி மக்களின் குருதியின் வெப்பம் என்றாவது ஒரு நாள் முர்மு-வை சுட்டால், ஒரு கற்பனைக்காக முர்மு மனந்திருந்தி பழங்குடி மக்களுக்கு ஆதரவாக பாஜக-வை எதிர்த்து நிற்பதாக வைத்துக் கொண்டால், அவரையும் உள்வாங்கி செரித்து, தியாகியாக்கி அவரின் படத்துக்கு மாலை போடும் ஒரு பாசிச கும்பல் தான் தற்போது முர்மு-வை குடியரசு தலைவராக்கி தன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது.
- செல்வா









