பிரிவினையை தூண்டும் The Kerala Story-2 திரைப்படம்; ஆரத்தி எடுத்து வரவேற்கும் மத்திய அரசு
திரைப்படத்தை நாங்கள் பார்க்கப்போகிறோம் அதன் பிறகு தடைகோரும் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்போகிறோம் என்று அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். மக்களே நம்புங்கள் இப்போது வரை நீதிபதிகள் படத்தை பார்க்கவும் இல்லை. வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவும் இல்லை.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

என்கிறார் வள்ளுவப்பெருந்தகை

பொருள்

மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

140 கோடி மக்கள் வாழும் இந்த இந்திய திருநாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் 30 கோடி மக்கள் மீது வெறுப்பை உண்டாக்க அப்பட்டமாக உதவி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

The Kerala Story-2 திரைப்படத்தின் டீசரை (17-02-2026) வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான @sunshinepicture இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரியும், தணிக்கை சான்றிதழ் தரக்கூடாது என வலியுறுத்தியும் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இறைவன் நாடினால்..

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும். ஷரியா சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்ற ஆண் பின்னணிக் குரலோடு தொடங்குகிறது திரைப்படத்தின் டீசர்..

அதன்பிறகு,வரும் காட்சிகளெல்லாம் அபத்தத்தின் உச்சம்…

குறித்துவைத்துக்கொள்ளுங்கள் இந்த படத்தை சர்வ நிச்சயமாக மத்திய அரசு அனுமதித்து விடும்..

எப்படி என்பதற்கு உதாரணம் கூறுகிறேன்…

03-11-2022 அன்று The Kerala Story திரைப்படத்தின் டீசர் காட்சியை வெளியிடுகிறது sunshinepicture நிறுவனம் https://www.youtube.com/watch?v=udoCRDjqxv8. 10 ஆண்டுகளில் 32000 பெண்கள் கேரளாவில் இருந்து மட்டும் மத மாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். பிறகு அவர்கள் சிரியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இயங்கிவரும் தீவிரவாத குழுவோடு கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சித்தரிக்கும் வீடியோ அது…

மேலே உள்ள Youtube வீடியோவை திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தற்போது முடங்கியுள்ளது…

என்ன காரணம் தெரியுமா ?

Sunshine picture நிறுவனம் 03-11-2022 அன்று டீசரை வெளியிட்டவுடன் மிகக்கடுமையான விமர்சனங்கள் எழுகிறது..

ஆனாலும் அசரவில்லை தயாரிப்பு நிறுவனம்..

இந்தியாவில் உள்ள அத்தனை வலதுசாரி அமைப்புக்களும் டீசரை கொண்டாடித்தீர்க்கிறது..

நாடு முழுவதும் பேசுபொருளாகிறது The Kerala Story திரைப்படத்தின் டீசர்…

05-11-2022 அன்று திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தரக்கூடாதென நான் முறைப்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மற்றும் துறையின் செயலாளருக்கு புகார் மனு அனுப்புகிறேன்..

05-11-2022 அன்று CBFC -ன் தலைவர் மற்றும் CBFC-ன் 10 மண்டல அலுவலர்களுக்கும் புகார் மனு சமர்ப்பிக்கப்பட்டது

10 வருடத்தில் 32000 பெண்கள் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்றால் நாளொன்றுக்கு 9 பெண்கள் இந்தியாவில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்று அர்த்தம்..

36 மாநிலங்களில், ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் தினந்தோறும் 9 பேர் மதம் மாறி தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கிறார்கள் என திரைப்படம் சித்தரிக்கிறது. கூடவே உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள்.

ஆகையால் திரைப்படத்தில் சொல்லப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டுமென கோரி 12-09-2022 அன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர், செயலாளருக்கு புகார் மனு அனுப்பினேன்..

எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…

ஒரு இம்மி அளவு கூட புகார் மனுவை பொருட்படுத்தவில்லை…

24-04-2023 அன்று திரைப்படத்தின் வெளியீட்டின் தேதியை அறிவிக்கிறது தயாரிப்பு நிறுவனமான சன்ஸைன் ப்ரொடக்ஷன்ஸ். உடனடியாக, 28-04-2025 மீண்டும் உள்துறை செயலாளர்,தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு மனு அனுப்பப்படுகிறது.

லவ் ஜிகாத், ISIS இயக்கத்தில் இணைந்துள்ள இந்தியர்கள் தொடர்பாக மத்திய அரசு வழங்கிய RTI பதில்கள், இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்துறை அமைச்சகம் வழங்கிய பதில்கள் என அனைத்து ஆதாரங்களையும் இணைத்து புகார் அனுப்பப்படுகிறது.

அதாவது திரைப்படத்தில் சொல்லப்படும் தகவல்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் தரவுகளோடு அனுப்பிய மனுவை துளியும் சட்டையே செய்யவில்லை மத்திய அரசு.

இதற்கிடையில், உச்சநீதிமன்றம், கேரளா, மேற்கு வங்கம் உயர்நீதிமன்றத்தில் படத்திற்கு தடைகோரி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தான் பதில் தாக்கல் செய்ததே தவிர உள்துறை அமைச்சகமோ, CBFC-யோ எதுவும் பேசவில்லை நீதிமன்றங்களில்.

சன்ஸைன் நிறுவனமோ திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் காட்சிகள் கற்பனையானவை என்று Disclaimer கூட போட முடியாதென மறுத்துவிட்டது.

ஒரு மனுதாரர் முறைப்படி செய்யவேண்டிய மனுக்களை அனுப்பி, எல்லா வாசல்களையும் தட்டிய பிறகு,எந்த பதிலும் இல்லாத காரணத்தால் அடியேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்திற்கு தடைகோரி வழக்கை தொடுக்கிறேன்.

ஆனால் கடைசி நேரத்தில் வந்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்கிறது சென்னை உயநீதிமன்றம்.

இதற்கிடையில் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் என்னுடைய வழக்கும் ஒன்று.

18-05-2023 அன்று சன்ஸைன் நிறுவனம் மேற்கு வங்கத்தில் திரைப்படத்தை வெளியீட்டிற்கு அனுமதி கோரிய மனு மற்றும் இதர மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனுக்களும் விசாரணைக்கு வருகிறது.

அப்போதைய தலைமை நீதிபதி திரு.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.

திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகிறது. திரைப்படத்தில் சொல்லுப்பட்டுள்ள எண்ணிக்கை குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தரவுகளும் தங்களிடம் இல்லை என..

அதை பதிவு செய்துகொண்ட நீதிமன்றம்… திரைப்படத்தை நாங்கள் பார்க்கப்போகிறோம் அதன் பிறகு தடைகோரும் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்போகிறோம் என்று அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். மக்களே நம்புங்கள் இப்போது வரை நீதிபதிகள் படத்தை பார்க்கவும் இல்லை. வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவும் இல்லை.

இதற்கிடையில் Z 5 OTT தளத்தில் படத்தை வெளியிடுகிறது தயாரிப்பு நிறுவனம்…

அப்போதும் OTT வெளியீட்டை அனுமதிக்ககூடாதென வலியுறுத்தி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட விபரங்கள், ஏற்கனவே அனுப்பிய மனுக்கள் என அனைத்தையும் இணைத்து உள்துறை அமைச்சகம், MIB, CBFC க்கு மனு சமர்ப்பிக்கப்படுகிறது..

என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள் !

அதே தான்… சட்டையே செய்யவில்லை…

அதாவது முழுக்க முழுக்க எந்த ஆதாரங்களும் இன்றி மக்களிடையே வெறுப்பை தூண்டி, பிரிவினையை உண்டாக்கும் திரைப்படத்தை எடுத்து கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்து லாபம் ஈட்டிய பிறகு…சம்பந்தப்பட்ட டீசர் காட்சியை Youtube தளத்தில் Private செய்துவிட்டது தயாரிப்பு நிறுவனமான சன்ஸைன் ப்ரொடக்ஷன்ஸ்..

இதோடு நின்றதா என்றால் அது தான் இல்லை…

இந்தியாவின் பிரச்சார் பாரதி சார்பில் வரலாற்றில் முதல் முறையாக (கேரளா ஸ்டோரி) ஒரு புதிய திரைப்படத்தை வாங்கி நாடு முழுக்க தூர்தர்ஷனில் வெளியிட்டதுமத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்

https://x.com/DDNational/status/1781513667412218168?s=20

மக்களிடையே பிரிவினையை தூண்டும் ஒரு திரைப்படத்திற்கு எந்தளவு ஆதரவு தரவேண்டுமோ அந்தளவு ஆதரவை பூரணமாய் கொடுத்தது மத்திய அரசு.

அந்த படம் குறித்தும், தடை செய்வேண்டுமென கோரியும் அனுப்பப்பட்ட அத்தனை மனுக்களையும் குப்பைத்தொட்டியில் வீசியது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்

ஆனால்…வலது சாரி அமைப்புக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எப்படி மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கும் தெரியுமா ?

கவனியுங்கள்…

Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளர்களுக்கு ஆதரவாக கடவுளே வந்து நடனம் ஆடுவது போல ஒரு கான்செப்ட்…

அந்த எபிசோட் தொலைக்காட்சியில் வெளியாகிவிட்டது…

அவ்வளவு தான்…

தமிழ்நாட்டில் உள்ள இந்து முன்னணி அமைப்பு.. ஹிந்து கடவுள்களை இழிபடுத்திவிட்டார்கள்..ஆகையால் மத்திய அமைச்சர் முருகன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரை Tag செய்து ட்விட்டரில் பதிவிடுகின்றனர்..

https://x.com/hindumunnani_tn/status/1944435838731079690?s=20

நாள்-13-07-2025

நேரம்- 10;06 PM

நண்பர்களே நம்புங்கள் அடுத்த 33 நிமிடங்களில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் Broadcasting பிரிவின் Under Secretary நவநீத் குமார் என்பவர் Zee தொலைக்காட்சி குழுமத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவிட்டார்

அந்த நோட்டீஸை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவிக்கிறது இந்து முன்னணி அமைப்பு

https://x.com/hindumunnani_tn/status/1944445141139300390?s=20

நாள்-13-07-25

நேரம்-10;43 PM

எப்படி இருக்கிறது பாருங்கள்…

ஒரு கேடுகெட்ட திரைப்படம் தொடர்பாக எத்தனை புகார்கள் கொடுத்தாலும் சட்டையே செய்யாத மத்திய அமைச்சகம்..ஒரு வலதுசாரி அமைப்பு ட்விட்டரில் பதிவிட்டவுடன் ஞாயிற்றுக்கிழமை/விடுமுறை தினம் என்று கூட பார்க்காமல் அரை மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கிறது.

ஆனால், கேரளா ஸ்டோரி திரைப்படத்தை அனுமதிக்கக்கூடாதென மாநில முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் தரப்பில் எழுதப்பட்ட அத்தனை கடிதங்களையும் குப்பைத்தொட்டியில் வீசியது மத்திய அரசு.

உலகத்தில் எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பாரபட்சமான அரசாங்கம் செயல்படுமா ?

ஆனால் மத்திய அரசு அப்படி நூறு சதவிகிதம் பாரபட்சத்துடன் மட்டுமே நடந்துகொண்டது. நடந்துகொள்கிறது. இனியும் அப்படியே நடக்கும்.

அதே திரைப்பட தயாரிப்பு நிறுவனம்…இப்போது The Kerala Story-2 என்ற இரண்டாம் பாகத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்…

அதிலும் லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் ‘உண்மைக் கதை’ கூறியுள்ளனர்

கவனியுங்கள்…

20-12-2017-ம் ஆண்டு ராஜ்யசபாவில் உறுப்பினர் விஜிலா சத்யானந்த் ISIS மற்றும் லவ் ஜிகாத் குறித்து எழுப்பிய கேள்விக்கு, உள்துறை அமைச்சகம், ISIS அமைப்புக்கு ஆதரவான மனநிலை கொண்ட 103 நபர்கள் மீது மத்திய/மாநில சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளது

அதில்

  1. உத்தியபிரதேசம்-17
  2. மகாராஷ்ட்ரா-16
  3. தெலுங்கானா-16
  4. கேரளா-14
  5. கர்நாடகா-8
  6. ம.பி-6
  7. தமிழ்நாடு-6
  8. மே.வ -5
  9. உத்தரகாண்ட்-4
  10. ராஜஸ்தான்-4
  11. குஜராத்-4
  12. பீகார் -2
  13. டெல்லி-1
  14. J/K-1

இதில் எந்த இடத்திலும் லவ் ஜிகாத் குறித்த தகவலை மத்திய அரசு பதிவு செய்யவில்லை.

அதேபோல, 04-02-20 அன்று லோக்சபாவில் லவ்ஜிகாத் தொடர்பாக உறுப்பினர் பென்னி பெஹான் கேள்வி எழுப்புகிறார்

அதற்கு உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதில் கொடுத்துள்ளார்..

அதில், லவ் ஜிகாத் தொடர்பாக ஒரே ஒரு வழக்குகூட மத்திய ஏஜென்சிகளால் பதிவு செய்யப்படவில்லை என்றும் 2 மதரீதியான திருமணங்கள் குறித்து @NIA_India விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதிவரை இது தான் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள்.

ஆனால், Sunshine Pictures முதல் பாகம் வெளியிட்ட பிறகு, ரூ.200 கோடி வருவாய் ஈட்டிய பிறகு 18-05-23 அன்று உச்சநீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமான எந்த தரவுகளும் இல்லை என்று கூறினார்.

ஆனாலும் வெறுப்பை பரப்பை கலவரத்தை உண்டாக்கவேண்டுமே..

அதற்காக என்ன செய்தார்கள் என்றால் !

நீதிமன்றத்தில் ஆதாரங்கள் இல்லை என்பதை பதிவு செய்வதற்கு முன்பு 17/05/2023 அன்று மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தியது Sunshine Pictures நிறுவனம்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்ஷ வித்யா சமாஜம் எனும் அமைப்பில் பணியாற்றும் பெண்களை மேடையேற்றி அவர்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று பித்தலாட்டத்தை அரங்கேற்றியது

https://x.com/RealAravind36/status/1658857188910301184?s=20

இப்போதும்..The Kerala Story 2 Goes Beyond திரைப்படத்தை நியாயப்படுத்தும் வகையில் மீண்டும் அதே நாடக கும்பலை மேடையேற்றி மோசடியை அரங்கேற்றியுள்ளனர்

அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன்…

சென்ற ஆண்டு (2025) தி கேரளா ஸ்டோரி என்ற கேடுகெட்ட திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை வேறு வழங்கி அங்கீகரித்தது இந்திய அரசு.

படிக்க: தி கேரள ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது சங்கிகள் கொண்டாட்டம்!

https://x.com/ANI/status/1951316346685497434?s=20

இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு பெண்களை மயக்கி அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்து தீவிரவாதிகளாக மாற்றுகிறார்கள் என்று தொடர்ச்சியாக தயாரிக்கப்படும் திரைப்படத்தை இந்திய அரசு எல்லாவகையிலும் அனுமதிக்கிறது. ஆதரிக்கிறது.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

பொருள்; தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி என்கிறார் வள்ளுவர்

ஆனால் இந்தியாவில் ஆளும் அரசே நீதியை விட்டுவிட்டு சொந்த குடிமக்களுக்கு எதிராக அநீதியை செய்கிறது..அதுவும் தெரிந்தே செய்கிறது

இப்படி ஒரு நேர்மையான ஆட்சி உலகில் எங்காவது நடக்குமா ?

பத்திரிக்கையாளர்: Aravindakshan

X தள பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here