ருவழியாக’ தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை அரசின் அடியாள் படையினை கொண்டு கலைத்துவிட்டது ஆளும் திமுக அரசு. மக்கள் விரோத செயலுக்கு பக்கபலமாய் இருந்துள்ளது நீதிமன்றம்.

மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் திராவிட மாடல், சமூக நீதி அரசு என்று சொல்கிறார்களே நமது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் 13 நாட்கள் அனைத்து இடர்பாடுகளையும் பொறுத்துக் கொண்டு பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் போராட்டத்தை நடத்திச் சென்றார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

அவர்கள் தங்களது பொருளாதார கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளவும் தற்போதைய போராட்டத்தை வழிநடத்திச் செல்லவும் உழைப்போர் உரிமை இயக்கம் (LTUC) சங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கினாலும் தமிழக மக்களின் பேராதரவும் அவர்களுக்கு கிடைத்தது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தங்களது ஆதரவினை தெரிவித்தன. வழக்கறிஞர்கள் சங்கம், மாணவர்கள் அமைப்பு என கிட்டத்தட்ட இது ஒரு மினி ஜல்லிக்கட்டு போராட்டமாகவே பரிணமித்தது எனலாம்.

இவையெல்லாம் ஆளும் திமுக அரசை அச்சுறுத்தியது. தமிழ்நாட்டின் தலைநகரத்தில், இந்தியாவின் முக்கியமான நகரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடமான சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் அருகிலேயே தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க தொழிலாளர் நலத் துறையின் அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வந்ததாகவே செய்தி இல்லை. முதல்வரும் துணை முதல்வரும் வாய் திறக்கவே இல்லை. அந்தளவுக்கு இப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதுவரை அந்த துறைக்கே சம்பந்தமில்லாத பி.கே.சேகர்பாபுவை பஞ்சாயத்து பேச அனுப்பியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

கார்ப்பரேட் ஆதரவு கொள்கையுடன் “சமூக நீதி” ஆட்சி நடத்த முடியாது!

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் போது, நான் டிவியை தான் பார்த்து தெரிந்துக் கொண்டேன் என அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. இன்றோ தமிழ்நாட்டின் முதல்வருக்கு 13 நாட்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் குறித்து டிவியை கூட பார்த்து தெரிந்துக் கொள்ளாத அளவுக்கு உங்களுடன்(கார்ப்பரேட்டுடன்) ஸ்டாலின், கூலி பட ப்ரமோஷன் என பிஸியாக உள்ளார் தமிழக முதல்வர். இது வெட்ககேடாக தெரியவில்லையா இவர்களுக்கு. ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் எங்களில் பாதி கம்யூனிஸ்ட் என்று  டயலாக் வேறு விட்டுள்ளார். அந்த மீதி பாதி என்னவென்று நேற்றிரவு காட்டிவிட்டார்.இது உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் ஒருகாலத்திலும் கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.

கார்ப்பரேட் சேவையில் சமரசம் செய்துக் கொள்ளாத திமுக அரசு!

சாம்சங் ஆலையில் நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தை இதே அணுகுமுறையில் தான் காவல்துறையை பயன்படுத்தி கலைத்தது திமுக அரசு. தொழிலாளர்களின் குடும்பங்களை பிளாக்மெயில் செய்தது, மிரட்டியது, தொழிலாளர் நலத்துறையை பயன்படுத்திக் கொண்டு சங்கத்தை பதிவுச் செய்யாமல் தாமதித்தது என தனது கார்ப்பரேட் சேவையின் மூலம் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவன முதலாளியை மனங்குளிர செய்தது.

படிக்க: தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில், போராடுகின்ற விவசாயிகள் மீதே குண்டர் சட்டத்தைப் போட்டது. தமிழக மக்களின் பலத்த எதிர்ப்புக்கு பின்னால் பின்வாங்கியது திமுக அரசு.

அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட பாலியப்பட்டு பஞ்சாயத்தை சேர்ந்த கிராம மக்கள் தமிழக அரசு அக்கிராமத்தில் சிப்காட்(SIPCOT) அமைக்கவிருப்பதை எதிர்த்து சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் என்ற பெயரில்  தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலும் தனது கார்ப்பரேட் சேவையை மனதில் வைத்தே செயல்பட்டது திமுக அரசு.

1000 நாட்களுக்கு மேலாக பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகிறார்கள். அதில் துளியளவும் சமரசம் செய்துக் கொள்ளாமல் பரந்தூர் விமானநிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருவதோடு, போராடுகின்ற அமைப்புகள் சமூக செயற்பாட்டாளர்களை ஏகானபுரம் செல்ல அனுமதிக்காமல் காவல்துறை குண்டாந்தடிகளை கொண்டு அடக்குமுறையை செலுத்தி வருகிறது.

இப்படியாக திமுகவின் கார்ப்பரேட் சேவையை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த பிரச்சினைகளில் திமுகவின் ஆதரவாளர்கள் மற்றும் இணைய தொண்டர்கள் பலரும் தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை கம்யூனிஸ்டுகள் சங்கம் அமைப்பதன் மூலம் தடுத்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியதோடு இணையத்திலும் விவாதங்களை நடத்தினார்கள். ஆனால் இன்று வரை இந்த இணையப் போர் முடியவில்லை. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தால் அந்நிய முதலீடும், பொருளாதார வளர்ச்சியும் பின்னடைவை சந்திக்கும் என்று கவலைக் கொண்ட திமுகவினர் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

கார்ப்பரேட் ஆதரவு கொள்கையுடன் “சமூக நீதி” ஆட்சி நடத்த முடியாது!

ராம்கி என்ற தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக கிட்டத்தட்ட 1500 தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. தனியார்மயமாக்கத்திற்கு எதிராக ஆட்சியில் இல்லாதபோது கம்புச்சுற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்பு அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

13 நாள் தொழிலாளர்கள் போராட்டத்தை இடையிலே காவல்துறையை கொண்டு மிரட்டி பணிய வைக்கப் பார்த்தது. ஆனால் போராட்டக் காரர்கள் அசையவில்லை என்றதும் நீதிமன்றத்தின் உத்தரவு என்று ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை முதலே காவல்துறையை நிரப்பி மக்களை விரட்டியடிக்க தயாரானது.

படிக்க: நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்ட “கூலி”கள்: படம் பார்த்து வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

இரவு 11 மணிக்கு மேல் போராட்டக்காரர்களை தவிர்த்து மற்ற அமைப்பு தோழர்களை வெளியேற்றி தனது கோரமுகத்தை காட்ட ஆரம்பித்தது காவல்துறை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆனால் ஆண் காவலர்களை கொண்டு அவர்களை சித்திரவதை செய்து காவல் வாகனத்தில் ஏற்றியது. சிலரின் உடைகளை கிழித்த சம்பவங்களும் நடந்தன.  மயக்கமடைந்தவர்களையும், காவல்துறையால் காயமுற்றவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்காமல் அவர்களை கொடுமை செய்தது.

இன்று இரவுக்குள் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை ஏற்று தான் இத்தனையையும் செய்துள்ளது காவல்துறை. வெறிகொண்டு காத்திருக்கும் நாயை அவிழ்த்துவிட்டால் என்ன நடக்குமோ அது தான் ஆகஸ்ட் 13 இரவு நடந்ததும்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்து கலந்துக் கொண்ட தோழர்கள் வளர்மதி மற்றும் நிலவுமொழியை காவ்ல்நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள்.  போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய தோழர் பாரதியையும் கைது செய்துள்ளது திமுக அரசின் ஏவல்துறை. கைது செய்யப்பட்டவர்களை காலையில் சென்று சந்திக்க முயன்ற LTUC, புஜதொமு, புமாஇமு, மக்கள் அதிகாரம் தோழர்களை சந்திக்க விடாமல் போலீசு தடுத்துள்ளது.

மக்கள் நல அரசு, திராவிட மாடல் அரசு, சமூக நீதி அரசு என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டால் மட்டும் போதாது, உண்மையான மக்கள் நலனில் இருந்து சிந்திக்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை நீதிமன்றத்தின் துணையுடன் அப்புறப்படுத்திய பிறகு சில அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டதை பார்க்க முடிந்தது. அரிவாளால் வெட்டிவிட்டு ஆயின்மென்ட் தடவுகிறது. இந்த திட்டங்களை இப்போது அறிவிப்பதன் மூலம் மக்களின் கோபத்தை தணிக்க முயற்சிக்கிறது திமுக அரசு.

பாஜக எதிர்ப்பு என்பதை  கொண்டே தமிழ்நாட்டில் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அடிமை அதிமுக ஆட்சியிழப்பதற்கான மையக் காரணம் அதன் கார்ப்பரேட்-காவி ஆதரவு கொள்கைகள் தான் என்பதை மறந்துவிடக் கூடாது. மக்கள் மத்தியில் புரட்சிகர அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் நடத்திய கார்ப்பரேட் காவி கும்பலுக்கு எதிரான போராட்டங்களை வாக்க்குகளாக அறுவடை செய்துக் கொண்டது திமுக. முக்கியமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்திய துப்பாக்கிச் சூடு அதிமுகவின் முடிவை எழுதியது என்பதை திமுகவினர் நன்கு அறிவார்கள். இன்றைய தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தையும் திமுக அரசின் காவல்துறை கிட்டத்தட்ட அதே பாணியில் தான் அணுகியது. இரண்டு அடக்குமுறைகளுக்கும் இடையில் ஒரே வித்தியாசம் தான் துப்பாக்கிச் சூடு மட்டும் நடத்தப்படவில்லை.

  • நலன்

1 COMMENT

  1. உண்மையில் சமூக நீதி ஆட்சி என்பது கார்ப்பரேட் முதலாளி நலனுக்கானது என்பதை கடந்த நான்கு ஆண்டு செயல்பாடுகளிலும் தற்போது தூய்மை பணியாளர்கள் போராட்டமும் தனியார் மையத்தை எதிர்த்த போராட்டம் தான் ஆகையால் சமூக நீதி , திராவிட மாடல் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு தானே ஒழிய களமாடும் போராளிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு இல்லை என்பதை நிரூபிக்க கூடிய வகையில் கட்டுரை எனக்கு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here