கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் நவம்பர் புரட்சியின் அனுபவமும்.

1917 நவம்பர் 7ஆம் தேதி நடந்த ரஷ்ய சோசலிச புரட்சியின் 107 வது ஆண்டு தினத்தை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகள் பல்வேறு நாடுகளில் கொண்டாடி வருகின்றனர்.

நவம்பர் புரட்சியின் நூறாண்டுகள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச இயக்கங்கள் தான் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முதலாளித்துவ சமூக அமைப்புகளை ஒழிக்க முன் வைக்கப்பட்ட தீர்வுகளை பற்றி எந்த அளவிற்கு மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு தன்னுடைய நாட்டில் அமல்படுத்துகிறார்கள் என்பது தான் நாம் விவாதிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

1848 ஆம் ஆண்டு பாட்டாளி வர்க்கத்தின் போது வழிகாட்டி நூலான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கீழ்கண்டவாறு உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டுகிறது.

”பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வது தான்; ஜனநாயகத்திற்கான போரில் வெற்றி ஈட்டுவது தான் தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியின் முதல் படி என்பதை மேலே கண்டோம்.

பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையை பயன்படுத்தி முதலாளி வர்க்கத்திடம் இருந்து படிப்படியாக மூலதனம் முழுவதையும் கைப்பற்றும், உற்பத்தி கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில் அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும் மற்றும் உற்பத்தி சக்தி அல்லது ஒட்டுமொத்த தொகையை சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்.

ஆரம்பத்தில் இந்த பணியினை சொத்துடைமை உரிமைகளிலும் முதலாளித்துவ பொருள் உற்பத்தி உறவுகளிலும் எதேச்சதிகார முறையில் குறிப்பிட்டு செயல்படுவதன் மூலம் தான் நிறைவேற்ற முடியும். அதாவது பொருளாதார வழியில் போதாமலும், வலுகுறைவாகவும் தோன்றும் நடவடிக்கைகளாய் இருப்பினும், இயக்கப் போக்கின் போது தம்மை மிஞ்சி சென்று விடுகிறவையும், பழைய சமூக அமைப்பினுள் மேலும் குறிப்பிடும்படியான அவசியத்தை உண்டாக்குகின்றவையுமாகிய நடவடிக்கைகள் மூலம் தான் பொருள் உற்பத்தி முறையை புரட்சிகரமாய் அடியோடு மாற்றி அமைத்திடும் பாதையில் தவிர்க்க முடியாதவையாகிய இந்த நடவடிக்கைகள் மூலம் தான் இந்த பணியினை நிறைவேற்ற முடியும்.


படிக்க: நூல் அறிமுகம்: சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்


இந்த நடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறானவையாக இருக்கும். ஆயினும் மிகவும் வளர்ந்து முன்னேறிய நாடுகளுக்கு பொதுவாய் பெருமளவு பொருந்தக்கூடிய நடவடிக்கைகள் வருமாறு.

  1. நிலத்தில் சொத்துடமையை ஒழித்தலும், நிலவாடகைகள் அனைத்தையும் பொதுக் காரியங்களுக்காக பயன்படுத்தலும்.
  2. கடுமையான வளர்வீத அல்லது படித்தர வருமான வரி.
  3. பரம்பரை வாரிசுரிமை, சொத்துடமை பெரும் உரிமை அனைத்தையும் ஒழித்தல்
  4. நாட்டை விட்டு வெளியேறி விடுவோர், கலகக்காரர்கள் ஆகியோர் எல்லோரது சொத்தையும் பறிமுதல் செய்தல்.
  5. அரசு மூலதனத்துடன் தனியுரிமையான ஏகபோகம் கொண்ட தேசிய வங்கியின் மூலமாய் கடன் செலாவணியை அரசின் கைகளில் ஒரு சேர மையப்படுத்துதல்.
  6. செய்தி தொடர்பு, போக்குவரத்து சாதனங்களை அரசின் கைகளில் ஒரு சேர மையப்படுத்துதல்.
  7. பொதுத் திட்டத்தின் பிரகாரம் ஆலைகளையும், உற்பத்திக் கருவிகளையும் விரிவாக் குதலும், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதலும், பொதுவாய் மண்வளத்தை உயர்த்துதலும்.
  8. உழைப்பை சரிசமமாய் எல்லோருக்கும் உரிய கடமையாக்குதல், முக்கியமாய் விவசாயத் துறைக்காக தொழில் பட்டாளங்களை நிறுவுதல்
  9. விவசாயத்தை தொழில்துறையுடன் இணைத்தல், தேச மக்களை மேலும் சீரான முறையில் நாடெங்கும் பரவி அமையச் செய்வதன் மூலம் நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான பாகுபாட்டை படிப்படியாக அகற்றுதல்.
  10. எல்லா குழந்தைகளுக்கும் பொதுக் கல்வி பள்ளிக்கூடங்களில் இலவச கல்வி அளித்தல், ஆலைகளில் குழந்தைகளது உழைப்பில் தற்போதைய வடிவங்களை ஒழித்தல், கல்வியை பொருளுற்பத்தியுடன் இணைத்தல். இன்ன பிற.. (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து…)

இந்த பொதுக் கோட்பாடுகளை அந்தந்த நாட்டு வரலாற்றுப் பொருள்முதல்வாத தன்மையிலும், உற்பத்தி முறையின் அடிப்படையிலும் புரிந்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வரலாற்று கட்டத்தில் இருந்து மற்றொரு வரலாற்று கட்டத்திற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கொண்டு செல்கின்ற புரட்சிகரப் பாதையை தீர்மானிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அவ்வாறு புரட்சியை முன்னெடுத்துச் செல்லும்போது குறிப்பிட்ட தருணத்தில் ஏற்படுகின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் புரிந்துக் கொண்டு அதற்கு பொருத்தமான செயல் தந்திரங்களை வகுத்து புரட்சியை முன்னெடுத்துச் செல்வதுதான் சரியான சமூக, விஞ்ஞான கண்ணோட்டமாகும்.

இத்தகைய கண்ணோட்டத்தில் இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிசம் கொடூரமாக தாக்கி வருகின்ற இந்த சூழலில் கூட மாற்று திட்டம் ஒன்றை முன்வைத்து வெகுஜன மக்களை நம்பிக்கையூட்டி புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கு வழி நடத்தாமல், பல ஆண்டுகாலம் ஒரே மார்க்சிய சொல்லாடல்களை ’பஜனைப் பாடல்’ போல ஒப்பிக்கின்ற பல்வேறு விதமான திரிபுவாத, அதிநவீன திரிபுவாத, போலி புரட்சிகர அமைப்புகளை புறந்தள்ளி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வழிகாட்டுதலின் கீழ் நமது நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வோம்.

அதை விரைவுப்படுத்துகின்ற தயாரிப்பு பணியை முடிக்க கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக பொருத்தமான அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றுத் திட்டம் முன் வைத்து ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம். மக்கள் திரள் பாதையில் மகத்தான புரட்சிகர எழுச்சியின் மூலம் செய்து முடிப்போம்.

  • முகம்மது அலி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here