பாசிஸ்டுகள் தங்களுக்கு வரும் எதிர்ப்புகளை ஆயுதங்களைக் கொண்டு நசுக்குவதில் விருப்பமுடையவர்கள். அந்த வகையில் தங்கள் பாசிச ஆட்சிக்கு எதிரானவர்களை பழிவாங்குவதக்காகவும், அச்சுறுத்திப் பணிய வைப்பதற்காகவும் பாசிச பாஜகவினர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் புல்டோசர்.
உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாசிச பாஜகவினரின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலங்களில் தங்களுக்கு எதிரானவர்களின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதைக் காரணம் காட்டியும் அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் என்று கூறியும், சட்டத்திற்கு புறம்பாக, ஒரு சில மணி நேரத்தில் வீடுகளை இடித்து தள்ளி விடுவதை கடந்த சில வருடங்களாக பாசிச பாஜகவினர் வெறியுடன் செய்து வருகின்றனர்.
பெரும்பாலும் இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே புல்டோசர்கள் ஏவப்பட்டன என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நவம்பர் 13, புதன்கிழமை அன்று இப்படி வீடுகளை இடிப்பது சட்டவிரோதம் என்றும் தீர்ப்பளித்ததுடன் இது குறித்து கடும் கண்டனங்களையும் இதுகுறித்து வழிகாட்டும் நெறிமுறைகளையும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதற்காகவே அவரின் வீடுகளை இடிப்பது என்பது சட்டவிரோதம்…என்றும்
இப்படிச் செய்வது என்பது குற்றம் சாட்டப்பட்டவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் அனைவரையும் தண்டிப்பதாகும்…. என்றும்
ஒருவரை குற்றவாளியா இல்லையா என்று தீர்மானித்து அவருக்குரிய தண்டனையை கொடுப்பது நீதிமன்றத்தின் வேலை அதிகாரிகளின் வேலை அல்ல….. என்றும்
உரிய சட்ட நடைமுறைகள் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறிக்கொண்டு இப்படிப்பட்ட இடிப்புகளில் ஈடுபடும் அதிகாரிகள் அதற்குரிய இழப்பீட்டை செலுத்த வேண்டி வரும்….. என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஒருவர் மீது குற்றச்சாட்டு உள்ளது என்பதற்காகவே அவரின் வீடுகளை இடிப்பது அயோக்கியத்தனம் என்று மிகமிக குறைந்தபட்ச சட்ட அறிவு உள்ளவர்களுக்கு கூட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பே தெரிந்த விசயம் தான்.
ஆனால், பாசிச பாஜகவினர் புல்டோசர்களைக் கொண்டு மக்களின் வீடுகளை இடித்து அவர்களை அடக்கி ஒடுக்குவதை பெருமையாக கூறிக்கொள்வதுடன் தேர்தல் பிரச்சாரங்களிலும் இதைக் கூறி மக்களிடம் வாக்குகளைக் கேட்டனர் என்பதை உலகமே கண்டது.
சங்கிகள் ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வீடற்றவர்களாக நிற்கதியாக்கப்பட்டுள்ளனர். இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் “புல்டோசர் பாபா” என்றும் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ” புல்டோசர் மாமா” என்றும் சங்கிகளால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
இதை விட கேவலமான முறையில், மனிதப் பண்பு உள்ளவர்களால் காரி உமிழத்தக்க வகையில், “புல்டோசர்களை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடியே தனது பிரச்சார மேடைகளில் பேசியுள்ளார்.
வீடுகளை இடித்த அதிகாரிகளை கண்டித்த உச்ச நீதிமன்றம் அப்படி இடிப்பதற்கு தூண்டுகோலாக இருந்த யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான் போன்ற பாஜக முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய அரசியல்வாதிகளை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கண்டிக்கக்கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இடிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்றம் மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டிருக்குமானால், இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய நிவாரணத் தொகையை எந்தவித நிபந்தனையும் இன்றி மாநில அரசுகள் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுப்பதை உத்தரவாதம் செய்திருக்கும். ஆனால் அப்படிச் செய்யவில்லை என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்றம் செய்யும் மிகப்பெரிய அநீதி என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.
படிக்க: நெருங்குகிறது காவி புல்டோசர்! | மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி
இந்த சட்ட விரோத புல்டோசர் இடிப்பை எதிர்த்து தீர்ப்பு கூறாவிட்டால் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மானம் உலக அளவில் நாறிவிடும் என்பதாலும் உச்ச நீதிமன்றத்தின் மீது அப்பாவி இந்தியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சிறிது சிறிதாக அழிந்து ஒழிந்து விடும் என்பதாலும் தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த அளவிற்காவது வந்துள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதேசமயம் சட்டத்திற்கு புறம்பாக, புல்டோசரை விட்டு வீடுகளை இடிக்கும் அதிகாரிகளை கண்டித்த உச்சநீதிமன்றம் அதற்கு காரணமான பாஜக – ஆர் எஸ் எஸ் வெறியர்களை கண்டிக்கவில்லை. இந்த புல்டோசர் நடவடிக்கைகள் ஏதோ விதிமுறை மீறல் பிரச்சினையாக உச்சநீதிமன்றம் கையாண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆட்சயதிகாரத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடுத்த தாக்குதல் என்பது வெளிப்படையாக தெரிந்த போதும் அதை பற்றி வாய் திறக்கவில்லை.
மேலும், இந்த தீர்ப்பு நீர்நிலைகள், அரசு இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குப் பொருந்தாது எனக் கூறியதன் மூலம் பாசிஸ்டுகளுக்கு மிகப்பெரும் குறுக்குவழியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பாஜகவை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் இடங்கள் அனைத்தும் இனி நீர்நிலை, பொது இட ஆக்கிரமிப்பு என்று குற்றஞ்சாட்டி இடிக்கப்படுவதைக் காணலாம்.
உச்சநீதிமன்றம் கொடுத்த இந்த தீர்ப்பு அரை கிணறு தாண்டிய ஒன்றாகவே உள்ளது. பாசிச பாஜகவின் புல்டோசர் ராஜ்ஜியத்தை நீதிமன்றங்கள் மூலம் முறியடிக்க முடியாது. ஜனநாயக சக்திகள், எதிர்கட்சிகள் என நேரடியாக களத்தில் புல்டோசர் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும், புல்டோசர் ராஜ்ஜியம் நடத்தும் பாசிச பாஜகவை ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறிவதுமே தீர்வாக அமையும்.
— குமரன்






