சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக விழுமியங்களுக்கு மாற்றாக, பாசிச அரசியலுக்குப் பொருத்தமாகப் படுபிற்போக்கு கருத்துக்களைப் பரப்பும் பாஜகவின் பல்வேறு பிரச்சாரகர்களில் ஒருவர்தான் நடிகை கங்கனா ரணாவத். இவர் ஒரு பாசிசப் பிரச்சாரகர் என்பதைத் மூடி மறைத்துவிட்டு, அவரை பொதுவாக வெறும் சர்ச்சைக்குரிய கருத்து சொல்பவர் என கோடி மீடியாக்களால் பாதுகாத்து வந்தது. இந்த ’பஜாரியான’ கங்கனா ரணாவத் கன்னத்தில்தான் சில தினங்களுக்கு முன்பு பொளேரென்று அறை விழுந்துள்ளது.

சென்ற வாரம் வியாழக் கிழமையன்று நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியாற்றி வரும் CISF பெண் போலீஸ் குர்வீந்தர் கவுர், ”2020ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை ரூபாய் 100-க்கும் 200-க்கும் போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகள் அனைவரும் பயங்கரவாதிகள் என நீங்கள் எப்படி பேசலாம். அந்தப் போராட்டத்தில் எனது தாயும் இருந்தார்” எனக் கூறி கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்துள்ளார். அதைத் தொடர்ந்து CISF பெண் போலீசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாசிச குண்டர் படையைச் சேர்ந்த கூலிப்பிரச்சாரகரான கங்கனா ரணாவத்திற்கு கன்னத்தில் அடி விழுந்தவுடன் இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்கள் அதனை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ’ஐயோ பாவம், அவர் ஒரு பெண், அவரை எப்படி அடிக்கலாம்’ என்று சங் பரிவாரக் கும்பலையும், அதன் அடிவருடிகள் சிலரையும் தவிர வேற யாரும் எதிர்ப்பு காட்ட வில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆர்எஸ்எஸ் மோடியின் பாசிச பயங்கரவாத ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிய போதிலும், அதனை முறியடிக்கின்ற வகையில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பிற வர்க்கங்கள், தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். பல்வேறு அச்சுறுத்தல்களையும் மீறி மதச் சிறுபான்மையினர் தங்களது வழிபாட்டுத் தலங்களில் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு அடிப்படையான மத ஒற்றுமை மற்றும் வர்க்கங்களின் ஒற்றுமை கொண்ட சூழல் நிலவுவது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது எனவும், இந்தியா என்றால் இந்துக்கள் என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துகின்ற பார்ப்பன, பனியா கும்பலுக்கு மட்டுமே சொந்தமான இடம் எனவும் சங்பரிவார கும்பல் பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்த பிற்போக்குத்தனமான கருத்தை திணிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தனக்கு தெரிந்த வழிமுறைகளில் எல்லாம் அதை எதிர்க்கின்றனர். அவ்வாறு ஒரு எதிர்ப்பு தமிழகத்தில் பாசிச பாஜகவின் முன்னாள் தமிழ் மாநில தலைவர் தமிழிசைக்கு எதிராக விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட சோபியாவின் தீரமிக்க எதிர்ப்பாகும்/ அந்த வரிசையில் தற்போது சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி கங்கனா ரணாவத் கன்னத்தில் அறைந்த குர்வீந்தர் சிங் இணைந்துள்ளார்.

விமான நிலைய சோதனையில் இருவருக்குமான விவாதம் எப்படி தொடங்கியது எனும் ஜனநாயகப் பூர்வமான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. பெண் போலீசு மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், பாஜக எம்பி கங்கனா ரணாவத்தை நியாயமான முறையில் விசாரணை செய்யக் கோரியும், பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர்கள் சர்வான் சிங் பாந்தர் மற்றும் ஜக்ஜித் சிங் தலேவால் ஆகியோர் பஞ்சாப் காவல்துறை இயக்குநர் ஜெனரலைச் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். விவசாய சங்கத் தலைவர்களின் இந்த கோரிக்கையானது நியாயமானது.

சண்டிகர் விமானநிலையத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து பஞ்சாப்பில் வன்முறைகளும், தீவிரவாதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கங்கனா ரணாவத். அதில் பஞ்சாபியர்களுக்கு எதிரான தேசிய இனவெறி, மற்றும் பார்ப்பன மதவெறி கருத்தை வலுவாகப் பதிவிட்டுள்ளார்.

இந்திய சமூக அமைப்பை பாசிச அரசியல் கருத்திற்குள் கொண்டு வருவதற்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் செயல்பட்டு வந்த கங்கனா ரணாவத்தை ஓங்கி அறைந்த பெண் பொலீசாரை சில இயக்கங்கள் ஆதரித்து பாராட்டியது. உடனே பாசிச பிரச்சாரகரானரணாவத் அதற்கு எதிராக நைச்சியமாக கண்டனம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, ”ஒருவரின் அந்தரங்கப் பகுதிக்குள் நுழைந்து, அவர்களின் அனுமதியின்றி, அவர்களின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம். காரணம், மேற்கண்ட குற்றங்களிலும் அதுதான் நடக்கிறது” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படிக்க:

♦ அறை விழுந்தது நடிகை கங்கனாவிற்கு மட்டுமா?

குஜராத்: 30 உயிர்களைக் கொன்ற பாசிச பாஜக அரசு!

அயோக்கியனை அயோக்கியன் என்று அம்பலப்படுத்தினால், அவன் திண்ணை மீது ஏறி நின்று பிறரை அயோக்கியன் என்று கூச்சலிடுவானாம். அதுபோன்றுதான் உள்ளது, கங்கனா ரணாவத்தின் நடவடிக்கை. அவர் கடந்த காலங்களில் பேசிய பேச்சுக்களில் சிலதை மட்டும் தொகுத்துப் பார்த்தால், மதச்சிறுபான்மையர்களுக்கு எதிராகவும், பாசிச அரசியலை ஏற்றுக்கொள்ளாத பல்வேறு தேசிய இனங்களுக்கு எதிராகவுமே பேசி இருக்கிறார். ஜனநாயகத்தைப் பாதுகாக்க நினைக்கும் எவருக்கும் எரிச்சலூட்டும்படியாகவே பேசி இருக்கிறார். அவரது அபத்தமான பாசிச நச்சுக் கருத்துகளில் சிலவற்றை மட்டும் கோடிட்டு காட்டுகிறோம்.

இந்திய மக்கள் சாதி, மதம், மொழி, இனம் கடந்து திரைப்படக் கலைஞர்களை வெறும் கலைஞர்களாக மட்டுமே பார்க்கும் பண்பாட்டைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த ஜனநாயகப் பழக்க, வழக்கத்தை வெறுப்புணர்ச்சி கொண்டதாக மாற்றி வருகிறார் கங்கனா. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சாரக் கூட்டத்தில், ”அமிதாப் பச்சனுக்கு பிறகு நான் தான், என்னைத் தவிர வேறு யாருக்கு அன்பும், மரியாதையும் கிடைக்கும்? கான்களுக்கா? கபூர்களுக்கா?” என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்து மத வெறிக் கருத்தை கீழ்த்தரமாக பரப்பி இருக்கிறார். இதன் மூலம் திரைக் கலைஞர்களை மத வேறுபாடின்றி ரசிக்கும் கண்ணோட்டத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசிக் கொண்டிருந்தார் கங்கனா ரணாவத்.

பெரும்பான்மை சொற்கள் சமஸ்கிருதத்தையும், உருது மற்றும் வட்டார மொழிகளில் உள்ள சொற்களை இணைத்து வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட, சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டிருக்கும், RSS-ன் கருத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்ய ஒரு நாளும் தயங்கியதில்லை கங்கனா ரணாவத். அதனால்தான் எந்த மொழி தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று கேட்டால், ”சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க வேண்டும்” என்று சொல்வேன் என திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். ஜெர்மன், பிரஞ்சு, மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக சமஸ்கிருதம் இருக்கிறது. சமஸ்கிருத மொழியில் இருந்தே தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் தோன்றியது எனும் பொய் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இதன் மூலம் சமஸ்கிருதத்தை தேவ பாஷை என மக்களை ஏற்க செய்வதை நோக்கியே இவர்களின் பிரச்சாரம் அமைந்திருக்கிறது.

கடந்த 2022 இல் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் எனும் பெயரில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது சங்பரிவார் கும்பல். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களும் இஸ்லாமியர்கள். சிறைப்பட்டவர்களும் இஸ்லாமியர்கள். அப்போது, தாகம்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ராஜஸ்தான் சென்றிருந்த கங்கனா ரணாவத். ”ராஜஸ்தானைப் பொருத்த வரையில், இங்கு கலவரங்கள் நடைபெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் அரசுகளைக் தேர்ந்தெடுங்கள். இல்லையெனில் நாங்கள் புல்டோசர்களை அனுப்புவோம்” எனக் கூறினார். அமெரிக்காவில் செவ்விந்தியர்களை இல்லாமல் இருக்கச் செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என அந்நாட்டு மக்களை உணரச் செய்ததைப் போன்று, மதச்சிறுபான்மை மக்கள் இந்தியாவில் இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்பதையே இந்தியர்களின் கடமை எனும் கருத்தை தீவிரமாகப் பரப்பி வருகிறார் அவர்.

நாகரீக வளர்ச்சியில் ஓரளவு முன்னேறி வரும் இந்திய சமூக அமைப்பை சுமார் 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் அபத்தமான கருத்தொன்றைச் சொல்லி இருக்கிறார் கங்கனா ரணாவத். கடந்த 2019 அக்டோபரில் பிங்க்வில்லா செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த அவர். ”குழந்தைகள் உடலுறவு கொள்வதைப் பார்த்து பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பான உடலுறவு கொள்ள வேண்டும். என்னுடைய சிறுவயது பாலுணர்வு வேகத்தை கண்டு எனது பெற்றோர்கள் அச்சமடைந்தனர்” என இந்திய பெற்றோர்களுக்கு பாலியல் கல்வி பாடம் எடுத்திருக்கிறார். காட்டுமிராண்டி சமூக அமைப்பை போற்றி புகழச் சொல்லி இருக்கிறார்.

2021 மும்பை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனா ரணாவத். ”1947ல் கிடைத்தது உண்மையான சுதந்திரம் இல்லை. அது வெறும் பிச்சைதான். 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது” என பேசினார். இந்தக் கருத்து RSS மற்றும் பாஜக ஆதரவாளர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டது. இதன் உச்சபட்சமாக ராமனின் அவதாரம்தான் மோடி எனும் கருத்து நாடு முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், உண்மை வேறு ஒன்றாக இருக்கிறது. 2014 ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 15 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். BSNL ஊழியர்கள் 94 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். GST வரி 18 முதல் 28% போடப்பட்டதாலும், 500, 1000 செல்லாது என அறிவித்ததாலும், இலட்சக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கிறது. இந்திய பெரு முதலாளிகளில் 63 பேரின் சொத்து மதிப்பு இந்திய மத்திய பட்ஜெட் 2019-ன்படி ரூபாய் 24 லட்சத்தி 42 ஆயிரத்து 200 கோடியை விட அதிகம் என ஆக்ஸ்பார்ம் அறிக்கை தெரிவித்துள்ளது. இதுபோன்று இன்னும் ஏராளமான சம்பவங்களை மூடி மறைத்து இந்தியாவின் தேசத் தந்தை மோடிதான். இந்திய மக்களை ரட்சிக்க வந்த மோடி ராமனின் மறுவுருவம்தான் எனும் கருத்தை வலுவாக பரப்பிவருகிறது பாஜக உள்ளிட்ட ராணாவத் கும்பல்.

இந்தியாவின் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்க கும்பல்களுக்கு சேவை செய்வதற்காகவும், பார்ப்பன பேரரசை உருவாக்குவதற்காகவும் RSS, பாஜக கும்பல்களுக்கு பாசிச அரசியல் தேவைப்படுகிறது. பிற்போக்குத்தனமான இந்த பாசிச அரசியல் கருத்துக்களை இந்திய மக்களின் அரசியலாக மாற்றுவதற்கு கங்கனா ரணாவத் போன்ற பாசிஸ்டுகள் மீண்டும் மீண்டும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

CISF பெண் போலீசான குர்வீந்தர் கவுர் போன்ற போராளிகளின் போர்க்குணமிக்க இந்த நடவடிக்கையை, மார்க்சிய அரசியலுடன் இணைத்து பாசிச எதிர்ப்பு அரசியல் எனும் பேராயுதத்தை கையில் ஏந்தி, அமைப்பாய் திரண்டு, வளர்ந்து வரும் பாசிஸ்டுகளையும், அவர்களால் பரப்பப்படும் கீழ்த்தரமான பண்பாடுகளையும் அழித்தொழிக்க வேண்டும். அதற்கு, சமூகத்தின் மேல் கட்டுமானத்தில் ஐக்கிய முன்னணியையும், அதன் அடித்தளத்தில் மக்கள் முன்னணியையும் கட்டியமைத்து ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதை நோக்கிப் பயணிப்பதே ஒரே தீர்வாகும்.

  • நக்கீரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here