
இந்தியா ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரான அமித்ஷா அறிவித்தபடி மார்ச் 31 இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் அமைப்பை முழுமையாக துடைத்தெரியும் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
இதன் இறுதி கட்ட தாக்குதல் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ள ஆப்ரேஷன் காகர் 2 பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்கியுள்ளது. இதில் சுமார் 8.30 லட்சம் ராணுவத்தினர் மற்றும் 700 முகாம்கள் அமைக்கப்பட்டு பழங்குடியினர் அதிகமாக உள்ள தண்டகாரண்யா மற்றும் பஸ்தார் பகுதிகளில் குவிக்கப்பட்டு பழங்குடிகள் மத்தியில் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
குறிப்பாக சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லைப் பிரதேசமான கரேகுட்டா மலைப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. மாவோயிஸ்டுகள் ஏறக்குறைய 300 பேர் கொண்ட குழுவினரை சுற்றி வளைத்து முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்கு வெறித்தனமாக இறங்கியுள்ளது ராணுவம்.
பிப்ரவரி மாதம் முடியப் போகிறது. மார்ச் 31, 2026க்குள் நாட்டிலிருந்து மாவோயிஸ்ட் வன்முறையை முற்றிலுமாக ஒழிப்போம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருப்பதாக அவர்களின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் செய்தி வெளியிட்டுள்ளது. திட்டமிட்ட இலக்குப் படி மார்ச் 31 க்கு முன்னதாகவே இந்தியாவிலிருந்து நக்சல் அரசியலை முழுமையாக ஒழித்துக் கட்டப் போவதாகவும் இந்த அரிய செயலை செய்வதற்கு தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டுள்ள இந்திய ராணுவமான CRPF–க்கு நன்றி தெரிவித்து அசாம் மாநிலத்தில் உள்ள கௌஹாத்தியில் அவர் இந்த சி ஆர் பி எப் ராணுவத்தின் நடவடிக்கையை விவரித்த மத்திய உள்துறை அமைச்சர், “நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ‘சிவப்பு பயங்கரவாதத்தை’ ஒழிக்க ‘பிளாக் ஃபாரஸ்ட்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சிஆர்பிஎஃப் வீரர்கள் மிகவும் கடுமையான. வெப்பம் மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு துணிவுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக” அவர்களை பாராட்டியுள்ளார்.
அமித்ஷா முன்வைக்கின்ற கூற்றுப்படி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட் )தற்போதைய காப்பு செயலாளரான தோழர் திப்ரி திருப்பதி என்ற தேவ்ஜி மற்றும் முன்னாள் அகில இந்திய செயலாளர் தோழர் கணபதி மற்றும் ராணுவ கமாண்டரான மிஸ்ரி பெஸ்ரா, மல்லா ராஜு ரெட்டி, பாப்பா ராவ் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர்கள் ஐவரையும் குறிவைத்து இந்த இறுதி கட்ட தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் தெலுங்கானா செயலாளர் தாமோதர், பி.எல்.ஜி.ஏ பட்டாலியன் எண். 1 பொறுப்பாளர் கமாண்டர் கேசா சோதி, தெற்கு பஸ்தர் பிரிவு இராணுவத் தளபதி விஜ்ஜா ஹெம்லா, சி.ஒய்.பி.சி தலைவர் அனில் மட்கம் மற்றும் சுக்கா பூனெம் போன்ற மூத்த தலைவர்கள் உட்பட சுமார் 60-70 மாவோயிஸ்டுகள் தெலுங்கானா-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகிலுள்ள வனப்பகுதிகளில், குறிப்பாக கரேகுட்டாலுவில் முகாம் அமைத்து செயல்படுவதாக உளவுத்துறை தகவல்களை வைத்து இந்த தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர்.
“தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமைச்சர் சீதக்கா, தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மகேஷ் குமார் கவுட் ஆகியோர் இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அமைதியான தீர்வுக்கான அவசியத்தை வலியுறுத்தியதாகவும், ஆனால் இந்திய ஒன்றிய அரசு இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தாக்குதலை தொடர்ந்து வருவதாகவும்” ஆந்திர மாநிலத்தின் சிவில் உரிமை கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஹரகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏராளமான கனிம வளங்கள் குவிந்துள்ள இந்த பகுதியில் இருந்து மாவோயிஸ்ட் அமைப்பை முற்றாக ஒழித்துக் கட்டுவதன் மூலம் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லாத சூழலை உருவாக்குவதற்கு மோடி அமித்ஷா கும்பல் துணிந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கின்ற உயிர் வாழ்கின்ற உரிமை, போராடுபவர்களை கைது செய்து சட்டப்படி நடத்துவது போன்ற அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு கண்டதும் சுடுவது என்ற கொடூரமான தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது மட்டுமின்றி இதனை நியாயப்படுத்தி பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த இரண்டாம் கட்ட ஆப்ரேஷனுக்காக குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினர் உருவாக்குகின்ற வன்முறைகள் மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் நிலவுகின்ற அமைதியின்மை, அச்சம், பதட்டம் ஆகியவை பற்றி சிபிஐ எம் எல் நியூ டெமாக்ரசி, சிபிஐ எம்எல் மாஸ் லைன் போன்ற கம்யூனிச அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இதற்கு எதிராக கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஆப்ரேஷன் காகர் 2 நடவடிக்கையை உடனடியாக நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய இந்திய பகுதியில் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பழங்குடி மக்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களாக போராடிய மாவோயிஸ்டுகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு அஞ்சி குறிப்பிட்ட சதவீதத்தினர் சரணடைந்துள்ளனர்.
படிக்க
♦ தண்டகாரண்யம் – ஆழமான கதைக்களம்! அலைந்து திரியும் திரைக்கதை!
♦ கம்யூனிஸ்டுகளையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளையும் நசுக்கும் உளவுப்படை!
நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் தேசத்தின் சொத்துக்களையும் குறிப்பிட்ட சில தேசங்கடந்த தரவு முதலாளிகள் சூறையாடுவதற்கு முழுமையாக அனுமதிக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத ஆட்சியின் கீழ் மத்திய இந்தியா ரத்தக் களரியாக்கப்படுகிறது.
“ஆபரேஷன் காகர் 2 உள்ளிட்ட. அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிடு!,” “மத்திய இந்தியப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தினரை உடனடியாக திரும்பப் பெறு!” என்று குரல் எழுப்புவோம்.
மருது பாண்டியன்.






