இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் காலனியாதிக்கத்திடமிருந்து பெற்றது உண்மையான சுதந்திரம் கிடையாது. அது பெயரளவில் சில மாற்றங்களை மட்டுமே கொண்டு வந்த போலியான சுதந்திரம் என்று கடந்த 50 ஆண்டுகளாக புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
‘சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம்’ என்ற அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து உருவான முதலாளித்துவம் தோன்றிய சிறிது காலத்திற்குள்ளேயே அது முன்வைத்த கோட்பாடுகளுக்கு எதிராக அடக்குமுறைகளை ஏவுவதும், முதலாளிகளுக்கு எதிராக போராடுகின்ற பாட்டாளி வர்க்கத்தின் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்துவதும் ஒரு வழமையான செயலாக மாற்றியது.
முதலாளித்துவ ஜனநாயகத்தை கடைபிடிக்கின்ற நபர்கள் மத்தியில்தான் வேறுபாடு உள்ளது. அவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதில் தான் வேறுபாடு உள்ளதே ஒழிய முதலாளித்துவ ஜனநாயகம் என்பதில் எந்தவிதமான தவறும் இல்லை என்று பேசுபவர்களும் உள்ளனர்.
பன்னெடுங்காலமாக நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையையும், மன்னர் ஆட்சியின் அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி, தான் உருவானபோது, ‘சுதந்திரத்தை’ முன்வைத்த முதலாளித்துவம், படிப்படியாக ஏற்கனவே நிலவிய ஒடுக்குமுறைகளைக் காட்டிலும் கூர்மையான முறையில், நைச்சியமான முறையிலும் ஒடுக்கு முறையை ஏவுவதில் முன்னணியில் நின்றது.
இந்த போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்துவதில் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவில் உள்ள மார்க்சிய – லெனினிய புரட்சியாளர்கள் போலி ஜனநாயகத்திற்கு மாற்றாக புதிய ஜனநாயக சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு போராடும் போது புரட்சிகர அரசியலுக்கு கொண்டுவரும் வகையில் ஒவ்வொரு பிரிவையும் அமைப்பாக்குகின்ற முயற்சியில் தொடர்ந்து செயல்படுகின்றனர். அந்த வகையில் செயல்படுகின்ற புரட்சிகர தொழிற்சங்கம் தான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. அது தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் தொழிற்சங்கப் பணிகளை மேற்கொண்டாலும் அத்துடன் தனது வேலையை முடித்துக் கொள்வது இல்லை.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் வழக்கமான தொழிற்சங்கங்கள் போல தொழிற்சங்க வாதம் பேசுவதில்லை. ஏனென்றால், “தொழிற்சங்க வாதத்துக்குப் பொருள் சித்தாந்தத் துறையில் தொழிலாளிகளை முதலாளி வர்க்கத்துக்கு அடிமைப்படுத்துவதே. எனவே நமது பணி, சமூக-ஜனநாயகவாதிகளின் பணி, தன்னியல்பை எதிர்த்துப் போராடுவதேயாகும். முதலாளி வர்க்கத்தின் அரவணைப்பின் கீழ் செல்லும் இந்தத் தன்னியல்பான, தொழிற்சங்கவாத முயற்சியிலிருந்து பாட்டாளி வர்க்க இயக்கத்தைத் திசை மாற்றி, புரட்சிகரமான சமூக-ஜனநாயகவாதத்தின் அரவணைப்பின் கீழ் கொண்டு வருவதேயாகும்” என்று போதிக்கிறார் தோழர் லெனின்.
எமது அமைப்பு பிளவுபட்ட பிறகு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பெயரை பயன்படுத்திக்கொண்டு போலியான சில முகநூல் பக்கங்களும், ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட குழு என்ற பெயரில் சில, ‘பெயர் போலிகளும்’ செயல்படுவதை தொழிலாளர்கள் நன்றாக அறிவார்கள்.
இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமானது நாட்டின் அடிப்படையான உற்பத்தி சக்திகளான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்க்கையில் கொடூரமான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. அந்த வகையில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு தொழிலாளர்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கு; ஏற்கனவே நிரந்தரமாக பணிபுரிகின்றவர்களின் வேலையைப் பாதுகாப்பதற்கு; புதிதாக படித்து முடித்தவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு என பல்வேறு அம்சங்களில் தொழிற்சங்க உரிமை முக்கியமானது.
தொழிற்சங்கம் என்ற பெயரில் நிர்வாகத்திற்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் கூட்டு பேரம் நடத்தி சில சலுகைகளை வாங்கித் கொடுப்பது என்பதைத் தாண்டி அவர்களுக்கு வர்க்க அரசியலைக் கற்றுக் கொடுப்பதில் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
அந்த வகையில் தனது அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியான கருத்தாக்கங்களை பரந்துபட்ட தொழிலாளர்கள் மத்தியில் கொண்டுச் செல்வதற்கு NDLF என்ற பெயரில் தொழிற்சங்க முகநூல் பக்கம் ஒன்றை நடத்தி வந்தது.
ஏற்கனவே 1990 முதல் புரட்சிகரத் தொழிற்சங்கமாக சில பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் 2010 க்கு பிறகு வீச்சாகவும், பெல், என்எல்சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் துவங்கி கோத்ரேஜ், யூனிலீவர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள், நூற்பாலைகள், எண்ணற்ற சிறு குறு தொழில் நிறுவனங்கள், முருகப்பா குழுமத்தின் டி.ஐ குரூப், அசோக் லேலண்டு போன்ற தமிழக தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் தொழிற்சங்கங்களை நிறுவி செயல்பட்டுவருகிறது பு.ஜ.தொ.மு.
தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தைப் பெற்றுத் தருவது; போனஸ் போன்ற காலங்களில் அதனை பிற தொழிற்சங்கங்களுக்கும், பிற தொழிற்சாலைகளுக்கும் மேலாக சிறப்பான ஒப்பந்தங்களை போட்டுக் கொடுப்பது போன்றவற்றை நடத்தி வருகின்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தொழிலாளர்களை புரட்சிகர அரசியல்படுத்துவதை ஆலைகளின் நிர்வாகமும், ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலும் எப்போதும் அங்கீகரிக்கவில்லை.
படிக்க:
♦ NDLF முகநூல் பக்கம் முடக்கம்! கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்!
♦ NDLF தோழர்கள் விடுதலை | டாஸ்மாக்கை மூடுவோம்!
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முகநூல் பக்கம், வாட்ஸ் அப், இன்ஸ்டா மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக புரட்சிகர அரசியலைக் கொண்டு சேர்க்கும் பணியை பு.ஜ.தொ.மு சங்கமானது முன்னணி செயல்வீரனாக கொண்டுச் சென்றது.

ஏற்கனவே எமது புதிய ஜனநாயகம் தினசரி சுமார் 5000க்கும் மேற்பட்ட வாசகர்களைக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் மீது தாக்குதல் நடத்தி முடக்கியது மெட்டா நிறுவனம். அதேபோல எமது தோழமை அமைப்பான மக்கள் அதிகாரம் ஊடகம் மற்றும் இணையதளம் பலமுறை தடை செய்யப்பட்டு மீண்டும், மீண்டும் போராடியே அதனை நிலைநாட்டி வருகின்றனர்.
தற்போது 19,000 வாசகர்களுடன் மாதத்திற்கு சுமார் 10 லட்சம் பேர் பார்க்கின்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்த புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலோ அல்லது பாசிச மோடிக்கு எதிராக கட்டுரைகள், காணொளிகள், பேட்டிகள் போன்றவை வெளியானாலோ அதனைப் பாசிசக் கும்பலால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால், பாசிஸ்டுகள் எப்போதுமே தொடை நடுங்கிகளாகவும் தனது நிழலைக் கண்டு கூட அஞ்சுகின்ற கோழைகளாகவும் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர் என்பது தான் உலகில் உள்ள பல்வேறு பாசிஸ்டுகளின் அனுபவம்.
இத்தகைய பாசிஸ்டுகள் தனக்கு எதிராக கருத்துகள் தோன்றுவதையும், புரட்சிகர தொழிற்சங்கம் உருவாகி வர்க்க அரசியல் மூலம் பாசிச பயங்கரவாதத்தை வீழ்த்துவதும், அதன் நீட்சியாக புதிய ஜனநாயக சமூகத்தை நோக்கி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் கொண்டுச் செல்வதையும் தடுக்கின்ற கீழ்த்தரமான செயல்களில் ஒன்றுதான் அதன் முகநூல் பக்கத்தை முடக்கியது என்று விமர்சிக்கின்றோம்.
புரட்சிகர தொழிற்சங்கத்தினர் தமது அனுபவத்தில் இந்த முகநூல் பக்கங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வருவதற்கு முன்பாகவே வீடு வீடாக, தெருத்தெருவாகச் சென்று பிரச்சாரம் செய்து அனுபவம் பெற்றவர்கள் என்பது மட்டுமின்றி ஒவ்வொரு ஆலையிலும் வாயிலில் நின்று பிரச்சாரம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க அரசியலைக் கொண்டு சென்ற அனுபவம் கொண்டவர்கள் என்பதால் இத்தகைய அடக்குமுறைகள் மூலம் அவர்களை முடக்கி விட முடியாது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
தொழிற்சங்கம் என்ற பெயரில் ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தை நடத்துவது; ஆபத்தற்ற முறையில் திருமண விழாக்கள், யாராவது போராடினால் அங்கு சென்று நின்று தனது புகைப்படத்தை வெளியிட்டுக் கொண்டு தொழிற்சங்கம் நடத்துவதாக பம்மாத்து காட்டுவது; நிர்வாகத்துடன் எப்போதும் சமரசமாக அணுகுவது போன்ற நடைமுறைகளுடன் செயல்பட்டால் தொழிற்சங்கம் நடத்துவது பாசிசக் காலகட்டத்தில் கூட எந்த சிக்கலும் இல்லாத நடைமுறைதான். எமது தொழிற்சங்கத்தின் பெயர் தாங்கிய போலிகள் இத்தகைய நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருகின்றனர்.
“உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக் கொள்ளும் பேச்சுக்கிடமில்லை. ஆதலால் ஒன்றுதான் தேர்ந்தெடுக்க உண்டு முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோசலிஸ்டு சித்தாந்தம் என்று. நடு வழி ஏதும் கிடையாது. (ஏனெனில் மனிதகுலம் ஒரு “மூன்றாம் சித்தாந்தத்தைப்” படைக்கவில்லை; மேலும், வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத் தன்மையற்ற சித்தாந்தமோ, வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே, சோசலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவச் சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருள். தன்னியல்பு பற்றி நிறையப் பேசப்படுகிறது. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தன்னியல்பான வளர்ச்சி அதை முதலாளித்துவச் சித்தாந்தத்துக்குக் கீழ்ப்படுத்துவதில் கொண்டு போய் விடுகிறது”, என்கிறார் தோழர் லெனின்.
இந்த வழிகாட்டுதலைக் கடைபிடித்துக் கொண்டு போராடுகிற போது பாசிசத்தை வீழ்த்துவது எவ்வாறு மிகப்பெரிய போராட்டமோ, அது போல பாசிசக் காலகட்டத்தில் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதும், குறைந்தபட்ச கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் போன்ற உரிமைகளை தக்க வைப்பதும் மிகப்பெரும் போராட்டம் தான் என்பதை உணர்ந்து தொழிலாளி வர்க்கத்தின் துணையுடன் இத்தகைய தடைகளை பு.ஜ.தொ.மு முறியடிக்கும்.
புதிய ஜனநாயகம் பத்திரிக்கையும், தினசரியும் அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- மருதுபாண்டியன்
புதிய ஜனநாயகம் தினசரி





