நாடு தற்போது மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது என்பதை துல்லியமாக வெளிக்காட்டியுள்ளது ரிசர்வ் வங்கியின் அறிக்கை. பாசிச பாஜகவின் ஆட்சியில் மக்கள் புதிதாக எந்த பயனடையவில்லை என்ற போதிலும் அவர்கள் கையில் இருக்கின்ற சிறுசேமிப்பிற்கும் ஆப்பு வைக்கின்ற வகையில் அதன் மறுகாலனியாக்க பொருளாதார கொள்கைகள் நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் 2023-ஆம் நிதியாண்டில் இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து அதன் மீது கருத்து தெரிவித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “மக்கள் கார் வாங்குவதிலும் வீடுகள் வாங்குவதிலும் அதிகம் செலவழிப்பதால் தான் இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு குறைந்து இருக்கிறது. இது இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியை சந்திப்பதன் வெளிப்பாடு அல்ல, மாறாக வேலைவாய்ப்பும் வருமானமும் எதிர்காலத்தில் பெருகுவதற்கான வாய்ப்புகளின் அறிகுறி” என்று அப்பட்டமான  பொய்யைக் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோமொபைல் துறை கடும் நெருக்கடியை சந்தித்தது. அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் விற்பனையாகாமல் தேங்கி நின்றன. அப்போது பேசிய நிர்மலா சீதாராமன்  மக்கள் அனைவரும் தற்போது ஊபர், ஓலாவில் பயணிக்கிறார்கள். அதனால் தான் கார்கள் வாங்குவதில்லை என்று கூறி சமாளித்தார். இப்போது கார் வாங்குவதாலும் வீடு வாங்குவதாலும் மக்கள் சேமிப்பு குறைகிறது என தலைகீழாக மாற்றிப் பேசுகிறார்.

மக்கள் சேமிப்பு கரைகிறது!
கடன் ஏறுகிறது!

தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் காரணமாக இந்திய மக்களின் வருமானம் தினந்தினம் குறைந்தே வருகிறது. வருமானம் குறைவதால் மக்கள் தங்களது குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவ செலவு ஆகியவற்றிற்காக சேமிப்பு பணத்தையும் எடுத்து செலவு செய்கின்றனர். இதனால் மக்களின் சேமிப்பு குறைய தொடங்கியுள்ளது. வருமானம் குறைந்து வாழ்வாதாரத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதால் சமீபகாலமாக சேமிப்பு என்பதே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது மக்களின் வாழ்க்கை.

கடந்த 2022-ஆம் ஆண்டில் 22.4 லட்சம் கோடியாக இருந்த இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு 2023-ஆம் ஆண்டில் 15.9 லட்சம் கோடி ஆக குறைந்திருக்கிறது. இது பாசிச மோடியின் 09 ஆண்டுகால ஆட்சியில் இந்தியக் குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீளமுடியாத நிலையில் இருந்து வருகின்றன என்பதைக் காட்டுகின்றன. குடும்பங்களின் சேமிப்பு குறைந்துள்ளது என்பது நாட்டின் ஜி.டி.பி.யிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 2022-ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த ஜி.டி.பி.யில் 7.2 சதவீதமாக இருந்த மக்களின் சேமிப்பு தற்போது வெறும் 5.1 சதவீதமாக குறைந்து உள்ளது.

மறுபுறம், மக்களின் கடன்சுமை அதிகரித்துள்ளது. கடந்த 2022-இல் 115 லட்சம் கோடியாக இருந்த குடும்பங்களின் கடன்கள் 2023-ஆம் நிதியாண்டில் 117 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல், மக்கள் வங்கிகளில் வாங்கும் வணிக கடன் 2021-22 ஆம் ஆண்டை விட 2022-23 ஆம் ஆண்டில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது. இதிலிருந்து மக்கள் தங்களின் சிறு, சிறு தேவைகளை பூர்த்தி செய்யவும் கூட கடன் வாங்குகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா சுதந்திரம் பெற்றதாக சொல்லிக் கொள்ளப்பட்ட பிறகு 2007-ஆம் நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன் அளவு 6.7 சதவீதமாக உயர்ந்தது. அதன் பிறகு இந்திய மக்களின் கடன் வாங்கும் தன்மை சிறிது சிறிதாக குறைந்து 2022-ஆம் நிதியாண்டில் ஜிடிபி-யில் 3.8 சதவீதமாக இருந்த நிலையில், 2023-ஆம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச கடன் வளர்ச்சி விகிதமாகும்.

பாசிச மோடியின் ஆட்சியில் மக்களின் வருமானமும் சேமிப்பும் குறைகிறது; கடன் விகிதம் வரலாறு காணாத அளவில் உயர்கிறது. ஒருவேளை சாப்பிடுபவர்கள் எண்ணிக்கையும், பட்டினியில் தூங்குபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது; வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுகிறது. ஆனால் நிர்மலா சீதாராமன் வேலைவாய்ப்பும் வருமானமும் எதிர்காலத்தில் பெருகுவதற்கான வாய்ப்புகளின் அறிகுறி என கதையளக்கிறார்.

சொத்து குறைகிறது!
பொறுப்புச் செலவுகள் அதிகரிக்கிறது!

2008 ஏற்பட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடியின் போது இந்தியப் பொருளாதாரம் உடனே பாதிக்கப்படாமல், சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழாமல் தாங்கி நின்றதற்கு அடிப்படை இந்திய மக்களிடம் தங்கம் மற்றும் ரொக்கப் பணமாக சேமிப்பு இருந்தது தான் என்பதை அப்போது முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களே ஏற்றுக்கொண்டனர்.

அதன் பிறகான பதினைந்து ஆண்டுகளில் ஏறக்குறைய 9ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள மோடியின் ஆட்சியில் மக்களின் சேமிப்பு அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்டு கார்ப்பரேட்டுகளிடம் சொத்தாக குவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றின் காரணமாக தனது கையில் சேமித்து வைத்துள்ள அற்ப சிறுசேமிப்பையும் இழக்க வேண்டியுள்ளது, தங்களுடைய சொத்துக்களை விற்று அதன் மூலமே வாழ்க்கை நடத்தும் கொடூர நிலைக்குச் சென்றுள்ளனர் என்பதுதான் தற்போதைய பொருளாதார நிலைமையாகும்.

மறுகாலனியாக்கத்தின் போது குறிப்பிட்ட பிரிவினர் செல்வச் செழிப்புடன் சீமான்களாக வளர்வதும் அதற்கு எதிர்திசையில் பெரும்பான்மை மக்கள் இருக்கின்ற அற்ப,சொற்ப உடைமைகளையும் இழந்து போண்டியாவதும் இரு துருவ ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதை மாக்சிய லெனினிய புரட்சியாளர்கள் ஏற்கனவே வரையறுத்து முன் வைத்துள்ளார்கள். அந்த கணிப்பு பொய்க்கவில்லை. நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவிலுள்ள குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திப்பது உண்மைதான் என்பதை இந்தியாவின் முன்னணிப் பொருளாதார நிபுணராக இருக்கும் நிகில் குப்தா ஏற்றுக் கொண்டிருக்கிறார். நிகில் குப்தா கூற்றை நிரூபிக்கிறது, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை. அதாவது, இந்தியக் குடும்பங்களின் சொத்துக்கள் 2021-ஆம் ஆண்டில் 22.8 லட்சம் கோடியாக இருந்தது. 2022-ஆம் ஆண்டில் 16.9 லட்சம் கோடியாக  குறைந்தது. 2023-ஆம் ஆண்டில் மேலும் குறைந்து 13.76 லட்சம் கோடியாக வீழ்ந்து விட்டது. அதாவது, இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும்பாலான குடும்பங்கள் தங்களுடைய சொத்துக்களை விற்று அதன் மூலமே வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பது தான் இதற்குப் பொருள்.

அடிப்படையான தேவைகளுக்கு செலவழிக்க வேண்டிய பொறுப்புகள் என்பது கடந்த ஆண்டில் 11.8 லட்சம் கோடி ஆக இருந்தது. இப்போது 18 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

இதுவரை உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து சம்பாதித்த சேமிப்பு கரைந்து போகின்றன. நிச்சயமற்ற இந்த நிகழ்கால வாழ்க்கை சிறிதும் பாதுகாப்பற்ற எதிர்காலத்தை நம் கண் முன் காட்டுகிறது. இதுதான் பாசிச மோடி இந்திய மக்களுக்கு தந்துள்ள 09 ஆண்டுகால ஆட்சியின் பயன்.

பாசிச மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் அம்பானி, அதானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளை கொழுக்க வைக்கிறது. இதற்காக நாட்டிலுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டும், வேலையின்மையும், விலைவாசி உயர்வும், பசி, பட்டினியும் என படுகுழிக்குள் தள்ளி, சேமிப்பையும் பிடுங்கிக் கொண்டிருக்கிறது. இனியும் பாசிச பாஜக அரசு நீடித்தால் நாம் உயிரையும் பறிக்க தயங்காது. நமது உயிரையும், உடமையும் பாதுகாத்துக்கொள்ள பாசிச மோடி அரசை மோதி வீழ்த்துவதை தவிர வேறு குறுக்கு வழி எதுவும் இல்லை.

  • முனியாண்டி.

புதிய ஜனநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here