இந்திய ஒன்றியத்தை ஆண்டு வரும் ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் பல்வேறு வகையான மோசடிகள் தலைவிரித்தாடி வருகிறது என்பது நாடு தழுவிய நிலைமையாக உள்ளது.
இந்த மோசடிகளில் மிகவும் உச்சகட்டமாக மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் துறையில் நடந்துள்ள மோசடியாகும். பாஜக&என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆள்கின்ற புதுச்சேரியில் மிகப்பெரும் துரோகத்தை மக்களுக்கு இழைத்துள்ளது.
இந்தியாவில் ஃபார்மா உற்பத்தித் துறையானது ஆண்டுக்கு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புமிக்க சந்தையைக் கொண்டது. இதன் மூலமாக உள்நாட்டில் 23.5 பில்லியன் அமெரிக்கடாலர் மருந்துப் பொருட்களும், ஏற்றுமதியாக 26.5 பில்லியன் அமெரிக்க டாலர் மருந்துப் பொருட்களும் தயாராகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் உலக நாடுகள் அனைத்திற்கும் குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது குறிப்பிட்ட சில வகை மருந்துகள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கூட ஏற்றுமதியாகிறது என்பதுதான் ஃபார்மா நிறுவனங்களின் லாப வேட்டைக்கான வழியாக இருந்தது.
இந்திய பார்மா துறையை கட்டுப்படுத்தி வருகின்ற சன் பார்மா மற்றும் சிப்லா படிப்படியாக மருத்துவக் கொள்ளையில் வளர்ந்து வந்த போதிலும் திடீரென்று ஆர்எஸ்எஸ் பாஜக ஆதரவு பெற்ற சைரஸ் பூனவாலாவின் சீரம் இன்ஸ்டிடியூட் கொரோனா காலத்தில் மருந்து தயாரிப்பது என்ற பெயரில் இறங்கி பல்லாயிரம் கோடிகளை கல்லா கட்டியது அனைவருக்கும் நினைவிருக்கும்.
இந்தப் பார்மா துறையில் புதுச்சேரியில் ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டுகின்ற வகையில் உண்மையான மருந்துகளை தோற்கடிக்கின்ற வகையில் போலி மருந்து தயாரிக்கின்ற தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் ’முதலாளிகளின் சொர்க்கமாக’ இது திகழ்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணம் தான் இந்த பார்மா துறையில் புகுந்துள்ள போலி மருந்து கம்பெனிகள். புதுச்சேரியில் மட்டும் சுமார் 57 மருந்து தொழிற்சாலைகள் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது. இந்த மருந்து தொழிற்சாலைகள் சன் பார்மா உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு மருந்துகளை தயாரித்து அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மருந்துகளை சப்ளை செய்த ஏஜென்ட் ஒருவரை திடீரென்று கைது செய்த அந்த மாநில போலீசார் விசாரணை நடத்தியதில் இருந்து அவர் விநியோகித்த மருந்துகள் போலியானது என்பது அம்பலமானது.
அவரைப் பிடித்து விசாரித்த அடிப்படையில் இந்த மருந்துகள் அனைத்தும் புதுச்சேரியில் தயாரிக்கப்படுவதாக ஏற்றுக் கொண்டார். இதனால் விழித்துக் கொண்டதாக நாடகமாடுகின்ற புதுச்சேரி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் மற்றும் சிபிசிஐடி போலீசார் நடத்திய தேடுதலில் புதுச்சேரி குருமாம்பேட், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை மற்றும் திருபுவனை பாளையம் ஆகிய இடங்களில் இயங்கி வந்த, “லார்வா என் ஃபார்மாசூட்டிகல்ஸ்” என்ற போலி மருந்து தொழிற்சாலையை கண்டுபிடித்துள்ளனர். இந்த போலி மருந்து தொழிற்சாலை நடத்துவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 450 கோடி ரூபாய்க்கு ஒரு தொழிற்சாலையை வாங்கி நடத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர்.
இந்த போலி மருந்து கம்பெனியை மதுரையைச் சார்ந்த ராஜா என்பவரும், சீர்காழி பகுதியைச் சார்ந்த ராணா மற்றும் காரைக்குடி மெய்யப்பன் ஆகியோர் நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போலி மருந்துகளை அடைத்து வைப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு திருபுவனை பாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் குருமாம்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள குடோன்களில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தவிர பூரணாங்குப்பம் என்ற பகுதியில் வீட்டிலேயே போலித் தயாரிப்புகளும், புதுவையில் பிரபலமான செட்டித் தெரு என்ற பகுதியில் குடோன்களும் இருந்தது அம்பலமாகியுள்ளது.
போலித்தனத்திலும் மற்றொரு போலித்தனமாக இந்த மருந்து கம்பெனிக்கான லைசென்ஸ் கூட இன்று வரை புதுப்பிக்கப்படவில்லை. இந்த கம்பெனிக்கு 2024 ஆம் ஆண்டு அரசு தடை விதித்துள்ளது என்கிறார்கள். ஆனாலும் மீறி அவர் ரகசியமாக தயாரித்தார் என்றெல்லாம் கள்ளச்சாராயம் தயாரிப்பவர் போல தயாரித்ததாக தற்போது மருத்துவத்துறை அதிகாரிகளும் போலீசும் நாடகமாடுகிறது.
இந்த போலி மருந்து தொழிற்சாலை கடந்த நான்காண்டுகளாக இயங்கி வருவதாகவும் இங்கு சுமார் 2000 கோடி ரூபாய்களுக்கு போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் மிகவும் முக்கியமான இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களுக்கானது என்பதுதான் மிகவும் கொடூரமான செய்தியாகும். 5 மாத்திரைகளில் 4 போலி என்ற விகிதத்தில் கலந்து நாடு முழுவதும் விநியோகித்துள்ளனர்.
இது பற்றி ஏற்கனவே அந்த மாநிலத்தில் இயங்கி வருகின்ற காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாராயணசாமி போன்றவர்கள் அம்பலப்படுத்தி இருந்த போதிலும் தற்போது உத்திரபிரதேசத்தில் அதன் ஏஜென்ட் ஒருவர் மாட்டிக் கொண்டதன் காரணமாகவே தற்போது தேடுதல் வேட்டையில் இறங்கி போலி கம்பெனி என்றெல்லாம் ஊடகங்களில் பரபரப்பு ஊட்டுகின்றனர்.
காங்கிரசு கட்சியின் விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவிக்கின்ற என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் “போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு முந்தைய காங்கிரஸ் முதல்வா்கள் வைத்திலிங்கம், நாராயணசாமி ஆட்சியில் தான் உரிமம் அளிக்கப்பட்டதாக” சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் மூலமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுபோல அம்பலமாகி மாட்டிக்கொள்ளும் போதெல்லாம் பாஜகவினர் செய்கின்ற தந்திரம் என்னவென்றால், இது காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்டது, அனுமதிக்கப்பட்டது என்ற பித்தலாட்டம் தான். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் தான் கொடுக்கப்பட்டது என்றாலும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை தடுத்து இருக்கலாமே என்று கேள்விக்கு நாணயமாக பதில் சொல்வதில்லை.
இது மட்டுமின்றி புதுவை மாநிலத்தில் ஏற்கனவே சில போலி மருந்து தொழிற்சாலைகள் வேறு சில இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த நான்காண்டுகளில் போலி மதுபான ஆலை , கள்ள சந்தன மர ஆலை, கஞ்சா கடத்தல் விற்பனை போன்ற குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது போலி மருந்து தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பாசிச பாஜக என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்தி உள்ளது.
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக எத்தகைய கேடுகெட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற இந்த சதிகார கும்பல் மக்கள் உயிருடனும் விளையாட துவங்கி விட்டது என்பது தான் பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் நடந்துள்ள ஒரே முன்னேற்றம் ஆகும்.
இவை தவிர நாடு முழுவதும் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு வகையான உயிர்காக்கும் மருந்துகளில் 2017 ஆம் ஆண்டில் 1850 வகையான மருந்துகளும், 2023 ஆம் ஆண்டில் 56 வகையான மருந்துகளும், 2025 மே மாத வாக்கில் 136 வகையான மருந்துகளும், 2025 ஜூன் மாதம் 186 வகையான மருந்துகளும் போலியானது என மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவித்தது. இத்தகைய மருந்துகள்தான் மக்களின் உடனடி பாதிப்புகளான சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை துவங்கி இருதயக் கோளாறு, இரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்புகள் வரையிலான நோய்களுக்கு மருந்தாக கொடுக்கப்பட்டு வருகிறது என்பதெல்லாம் அம்பலமாகியுள்ளது.
படிக்க:
♦ காவிகள் ஆளும் குஜராத்தில் போலி மருத்துவக் கல்வி நிறுவனம்!
♦ மருந்து நிறுவனங்களிடம் நிதிப் பெற்ற பாஜக, மக்களே உஷார்!
நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் அன்றாடம் 15 முதல் 18 மணி நேரம் வேலை செய்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற அளவிற்கு பாட்டாளி வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தலைவலி, உடல் வலி, காய்ச்சல் மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு உடனடியாக ஆங்கில மருத்துவத்தில் கிடைக்கின்ற மாத்திரைகளை வாங்கி முழுங்கி விட்டு வேலைக்கு ஓடுகின்ற கொடூரமான வாழ்க்கையில் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கேடுகெட்ட அவலத்தை உருவாக்கிய ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார கும்பல் இதைப் பற்றி எல்லாம் பேசாமல் கோவில் கட்டுவது; மசூதியை இடிப்பது; தீபம் ஏற்றுவது போன்ற செயல்களையே தனது சாதனையாக முன்வைத்து வருகின்றனர்.
பாஜகவின் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினால் உடனே அதன் மீது நேர்மையாக பதில் சொல்வதற்கு பதிலாக அவதூறுகளை கிளப்புவது, இஸ்லாமியர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த கைக்கூலிகளாக சித்தரித்து தப்பித்துக் கொள்வது என்ற கேடுகெட்ட வழிமுறையை கையாளுகின்றனர்.
போலி என்பது அசலாக ஒரு பொருள் செயல்பட்டு கொண்டிருக்கும் போது அதே பெயரில் பல பதிலிகள் நாடகமாடுகின்ற பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துகின்ற ஒரு சொல்லாகும். அரசியலிலேயே போலிகள் தலைவிரித்தாடுகின்ற சூழலில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் போலிகள் தலை விரித்தாடுவதை தடுக்க முடியாத அளவிற்கு அரசு கட்டமைப்பு தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த கட்டமைப்பு பாசிச பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் போது மேலும் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.
◾கணேசன்
புதிய ஜனநாயகம் தினசரி






மக்கள் உயிரைப் பற்றி கிஞ்சித்தும் கவலை படாத கொடூரமான முதலாளிகள்.
இந்த முதலாளிகளை பாதுகாக்கும் அதிகாரிகள் அவர்களை விடவும் மிகவும் மோசமானவர்களாக இருக்கிறார்கள்.
மக்கள் உயிரை காக்க மக்கள் உரிமைக்காக போராடுகின்ற சரியான கட்சிகள் இல்லை என்பதன் விளைவுதான் இது போன்ற ஊழல் கிரிமினல் நடவடிக்கைகளில் இந்த பாசிச கும்பல் செயல்படுகிறது.
ஒருங்கிணைந்த மக்கள் போராட்டங்கள் இது போன்ற கொடூரங்களுக்கு முடிவு கட்டும்.