வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கெதிராக தமது 12-வயதிலேயே போர்க்களம் புக
திட்டமிட்டவன் பகத்சிங்!
இந்தியன் சுதந்திரமாக ஆளத் தகுதி பெற்று விட்டானா என்பதை ‘அலசி ஆராய’ வெள்ளையன் ‘சைமன்’ என்பவன் தலைமையில் குழு அமைத்து முதன்முதலில் 1929-ல் அக்குழு லாகூர் வந்த போது அக்குழுவினரை எதிர்த்து “சைமனே திரும்பிப் போ”
என்று ஆர்ப்பரித்து முழக்கமிட்டு லாலா லஜபதிராய் தலைமையில் காங்கிரசார் பெரும் பேரணி போராட்டம் நடத்தினார்கள்.
அப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் லாலா லஜபதி ராயை கண்மூடித்தனமாக தாக்கி படுக்கையில் போட்டது. மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னும் அவர் நலம் பெற முடியாமல் சில நாட்களிலேயே மரணத்தை தழுவினார். அப்பொழுது சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான இந்திய ரிபப்ளிக் சோசியலிச முன்னணி அமைப்பில் அங்கம் வகித்த பகத்சிங் ராஜகுரு சுகதேவ் பகவதி சரண் ஜெயகோபால் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு இறந்தவர் – லஜபதி ராய் – காங்கிரஸ்காரர் என்று கூட பார்க்காமல் வெள்ளையனை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று துடித்தனர். லஜபதி ராய் சாவுக்கு மூல காரணமான வெள்ளை காவல் அதிகாரி ஸ்காட் என்பவனை – அவன் பணிபுரிந்த அலுவலக வாயிலிலேயே
சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
திட்டமிட்டபடி அடையாளம் காண்பிக்க நியமிக்கப்பட்ட தோழர் தவறான முறையில் ஸ்காட் வெளியில் இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டார் என அடையாளம் காண்பிக்க சந்திரசேகர ஆசாத், பகத்சிங் போன்றோர் அவனை தெருவிலேயே சுட்டு வீழ்த்தி கொலை செய்கின்றனர். ஆனால் அவன் ஸ்காட் அல்ல. மாறாக சப் இன்ஸ்பெக்டர் சாண்டர்ஸ் தான் கொலை செய்யப்பட்டவன். அவனும்கூட அத் தண்டனையைப் பெற தகுதி படைத்தவன் தான்!
உடனடியாக ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகள் லாகூர் நகர் முழுவதும் “லஜபதிராயை கொலை செய்ய காரணமான போலீஸ் அதிகாரியை சுட்டு வீழ்த்தி கொலை செய்து விட்டோம்”- என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டு மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டது.
அப்பொழுது காவல் துறையினருக்கும் சந்திரசேகர் ஆசாத் குழுவினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சந்திரசேகர ஆசாத் உள்பட சிலர் வெள்ளை நாய்களின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாயினர்.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் முன்னணி வீரனாகத் திகழ்ந்த பகத்சிங்கை மாறுவேடம் அணியச் செய்து தோழர் பகவதி சரணின் துணைவியார் துர்க்கா தேவியை பகத்சிங்கின் துணைவியார் போல் நடிக்கச் செய்து, ஜெயகோபாலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட சில்வர் டிபன் கேரியரைத் தூக்கிக் கொண்டு அவர்களின் வேலையாள் போல் கூடவே பயணித்து அங்கே இருந்து ரயில் மூலம் தப்பு விக்கப் படுகின்றனர்.
அதன் பின் வெள்ளை ஏகாதிபத்தியம் தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்மொழிந்த தருணத்தில் அச்சட்டங்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பாராளுமன்றத்திலேயே உறுப்பினர்கள் மத்தியில் தோழர் பகத்சிங்கும் மற்றொரு தோழரும் விசிரியடித்து
உயிர் சேதம் ஏற்படாத வெறும் புகையை மட்டும் வெளிப்படுத்தும் குண்டுகளை வீசிய பொழுது, ‘வீராதி வீரர்கள்’ ஆன உறுப்பினர்கள் அலறி அடித்துக் கொண்டு கூடத்தில் இருந்து வெளியேறி ஓடுகின்றனர்.
ஆனால் பகத்சிங் கம்பீரமாக நின்று கைது செய்து கொள்ள தன்னை வெள்ளைக்கார போலீஸ் நாய்களிடம் ஒப்புவித்துக் கொள்கிறான்.
அப்பொழுது பகத்சிங் இடையில் செருகி வைக்கப்பட்டிருந்த ரிவால்வாரில் உள்ள துப்பாக்கி ரவைகளும் லாகூரில் கொலை செய்யப்பட்ட காவல் அதிகாரி சாண்டர்ஸ் மீது பாய்ந்திருந்த துப்பாக்கி ரவைகளும் ஒரே ரகத்திலானவை என்பதனைக் கண்டுணர்ந்த வெள்ளை போலீஸ் அதிகார வர்க்கம் பகத்சிங்கை உடனே கைது செய்தது. ஆனால் பகத்சிங்கின் வாயிலிருந்து ஒரு உண்மையையும் போலீசாரால் கிரகிக்க முடியாமல் போயிற்று. ஆனால் போலீஸ் கொடுமை தாங்க மாட்டாமல் பகத்சிங் குழுவில் செயல்பட்ட கைது செய்யப்பட்டிருந்தஜெயகோபால் என்பவரால் அனைத்து திட்டங்களும் அனைத்து தோழர்களும் காண்பித்துக் கொடுக்கப்பட்ட காரணத்தினால் அடுத்தடுத்து ராஜகுரு, சுகதேவ் போன்றோரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரணையையே அரசியல் பிரச்சார மேடையாக்கினான் மாவீரன் பகத்சிங்! இது தொடர்பாக இன்னும் விவரிப்பின் மிக நீண்ட கட்டுரையாக நீளும்!
ஆனால் வஞ்சகர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட மாவீரன் பகத்சிங் அவனது உற்ற தோழர்கள் ராஜகுரு சுகதேவ் முதலான வீர புருஷர்களுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது!-ஆம், அவ்வீர இளைஞர்களை
23-03-1931-ல் லாகூர் சிறையில் தூக்கிலிட்டு மகிழ்ந்தது வெள்ளை ஏகாதிபத்தியம்!
காந்தியார்- இர்வின் பிரபுவின் பேச்சுவார்த்தை நடந்த காலகட்டத்தில் காந்தியும் காங்கிரசும் சற்று முழு அக்கறை செலுத்தி அத்தோழர்களை விடுவிக்க முயற்சித்
திருக்கலாம்! ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை. ஆம், “காந்தி காங்கிரஸ் துரோக வரலாறு” எனத் தனியாக புத்தகமாகவே ம.க.இ.க. போன்ற அமைப்புகளால் வெகு காலத்திற்கு முன்னமே அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.
மார்க்சிய – லெனினியக் கண்ணோட்டத்தில் இந்தியாவில் சுதந்திரமும் சோசியலிசமும் உருவாகிட முனைந்து சிந்தித்துக் கொண்டிருந்த
தோழன் மாவீரன் பகத்சிங், அவனது உற்ற தோழர்கள் ராஜகுரு, சுக தேவ் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று (1931 மார்ச் 23).
மாவீரன் பகத் சிங்கின் மகத்தான புரட்சிகர உணர்வையும், சிந்தனையையும் உள்வாங்கி அவன் வழியில் இன்று இந்தியாவை கவ்வி இருக்கும்
ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ பாசிச காவி கூட்டத்தை அப்புறப்படுத்த – கார்ப்பரேட்- காவிப் பாசசத்தை ஒரு சேர வீழ்த்திட இந்திய நாட்டு மக்கள் ஒன்றுபட்டு களமிறங்கி சமர் புரிய இன்னாளில் (23-3-2025-ல்)சபதம் ஏற்போம்!
- எழில்மாறன்







பகத்சிங் குறித்த வரலாற்று குறிப்புகள் படிக்க மிக சிறப்பாக உள்ளது கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்