ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக உலகை சூறையாடி வரும் அமெரிக்க பயங்கரவாதிகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல்வேறு நாடுகளில் இனக் கலவரங்கள், மதக்கலவரங்கள் முதல் அரசுக்கு எதிராக போராடுகின்ற பயங்கரவாத அமைப்புகள், தீவிரவாத குழுக்கள் ஆகியவை அனைத்துக்கும் ஆயுதங்களை வாரி கொடுத்து பல லட்சம் கோடிகளை சுருட்டிக் கொண்டனர்.
இதற்கு நேர் மாறாக அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் சுரண்டல், கொள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக போராடுகின்ற கம்யூனிச புரட்சியாளர்கள் மீதும், தேசிய விடுதலைப் போராளிகள் மீதும் கடுமையான அடக்குமுறைகளை ஏவுவதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு ராணுவ உதவிகளை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு உலகின் நிரந்தர அமைதிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும், போர் வெறிபிடித்த அமெரிக்க பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து சமாதானத்திற்கான நோபல் பரிசு கேட்கப்படுவது கேலிக்கூத்தான ஒன்றாகும்.
அந்தக் கேலிக்கூத்தான செயலை செய்து கொண்டிருப்பது தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியும், பாசிச கோமாளியுமான டொனால்ட் ட்ரம்ப் என்பது கவனிக்கத்தக்கது.
பல ஆண்டுகளாக, அதாவது ஒரு தசாப்த காலமாக இந்த விருதை பெறுவதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரான் முதல் ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு வரையிலான மோதல்களின் பின்னணியில் சமாதானத்திற்காக தான் பாடுபட்டுக் கொண்டிருப்பதாக கருதிக் கொண்டு தன்னை ஒரு உலகளாவிய அமைதித் தூதராக ஏற்குமாறு சர்வதேச சமூகத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறார்.
“தற்போது தாய்லாந்து மற்றும் கம்போடியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு, இந்தியா மற்றும் பாகிஸ்தான், செர்பியா மற்றும் கொசோவோ, எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகியவற்றுக்கு இடையேயான மோதல்களை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதன் பொருள், ஜனாதிபதி டிரம்ப் தனது ஆறு மாத பதவிக் காலத்தில் சராசரியாக மாதத்திற்கு ஒரு சமாதான ஒப்பந்தம் அல்லது போர்நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்துள்ளார். ஜனாதிபதி டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டிய காலம் கடந்துவிட்டது.” என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஆன லீட் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்கு ஆசைப்படுவதற்கு முக்கியமான காரணம், ஏற்கனவே அமெரிக்காவின் அதிபராக இருந்த பராக் ஒபாமா ஒரு கருப்பு இனத்தவர் என்பதால் அவருக்கே நோபல் பரிசு கொடுக்கப்பட்டது எனும் போது வெள்ளை இனத்தவரான எனக்கு ஏன் தரப்படவில்லை என்பது அவரது மன ஓட்டத்தின் முக்கிய காரணமாகும்..
இதனை வெளிப்படையாகவே முன் வைத்துள்ள டொனால்ட் ட்ரம்ப், “என் பெயர் மட்டும் ஒபாமா என்று இருந்திருந்தால் 10 வினாடிக்குள் நோபல் பரிசு உடனே கிடைத்திருக்கும்” என்றெல்லாம், ‘ பித்து’ பிடித்தவரைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்.
இதைவிட கொடுமையாக உலக நாடுகளில் உள்ள தலைவர்களிடம் சென்று தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு பரிந்துரைக்கும் படி அன்பாக மிரட்டியும், கெஞ்சியும், பத்திரிக்கையாளர்களிடம் நா தழுதழுக்க அழுது புரண்டும், நவரச நடிப்பின் மூலம் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்று விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது இந்த பாசிச ஓநாய்.
ட்ரம்பின் இந்த மோசடி நாடகத்திற்கு பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா போன்ற நாடுகளின் பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆனால் அமெரிக்காவிலேயே டிரம்பின் இத்தகைய கருத்துகளுக்கும், வேண்டுகோள்களுக்கும் எதிரான பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் டிரம்ப் மீது வைத்த விமர்சனம் காரணமாகவே பதவியில் இருந்து வீசி எறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளில் ட்ரம்பினுடைய இந்த கோமாளித்தனத்தை எதிர்த்து பல்வேறு கருத்துக்களை கட்டுரைகளாக எழுதி வருகின்றனர்.
படிக்க: ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.
ஒருபுறம் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு தனது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்கொண்டு உலக அமைதியை கெடுப்பதற்கு ஆயுத ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவும் அதன் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பும் முன்னிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) புதிய தரவுகளின்படி , 2020 மற்றும் 2024 க்கு இடையில் உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா 43% பங்கைக் கொண்டிருந்தது, இது உலகின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளரான பிரான்சின் பங்கை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
படிக்க: பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்! சரியும் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி !
இது 2015 மற்றும் 2019 க்கு இடையில் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட 35% பங்கிலிருந்து அதிகமாகும் என்று திங்க் டேங்க் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு எப்படி உருவானது என்பதே ஒரு கேலிக்கூத்தான கதை. நோபல் அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்று முன்வைத்த ஆல்பிரட் நோபல் டைனமென்ட் என்ற வெடி மருந்து தயாரித்து உலக அளவில் விற்பனை செய்து வந்தார். அவரது சகோதரர் இறந்தபோது, நோபல் இறந்துவிட்டார் என்று கருதிக் கொண்டு, “சாவு வியாபாரியின் மரணம்” என்று தலைப்பட்ட செய்தியை பார்த்ததன் காரணமாகவே தான் இறந்த பிறகு எவ்வாறு நினைவு கூறப்படுவோம் என்ற அச்சத்தில், துக்கத்தை தாங்க முடியாமல் தான் வெடி மருந்து தயாரிப்பதற்கு கிடைத்த பணத்தைக் கொண்டு ஒரு டிரஸ்ட் உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் உயிர் எழுதி வைத்திருந்தார் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.
இது ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் அந்திம காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சொல்லிக் கொள்ளப்படும் விழுமியங்கள், ஒழுக்கங்கள் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகள் ஆகியவை இந்த காலகட்டத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படுவது மட்டுமின்றி அவற்றுக்கு எதிரான கருத்து உருவாக்கமும், தகுதியற்றவர்களுக்கு சமாதான பரிசு வழங்குவது என்ற கேலிக்கூத்தையும் கொண்டதாக நகைக்கத்தக்க முரணுடன் தனது இறுதி ஊர்வலத்தை நடத்திக் கொண்டுள்ளது.
எனினும், டொனால்ட் ட்ரம்பை போன்ற பாசிச கோமாளிகள், நடிகர்கள், பட்டம் பதவி பெறுவதற்கு துடிக்கின்ற வெறியர்கள் போன்ற அனைத்து விதமான மக்கள் விரோத சக்திகளையும் எதிர்த்து முறியடிப்பதன் மூலமே உண்மையான உலக சமாதானத்தையும் நிரந்தரமான அமைதியும் பெற முடியும் என்பது தான் பாட்டாளி வர்க்கத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டிய செய்தியாகும்.
◾ஆல்பர்ட்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி