
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று வாய்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்த மோடி விவசாயிகளின் வாழ்வை சிதைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.
உரங்களுக்கு வழங்கப்பட்ட மானிய ரத்து தொடங்கி விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் மூன்று வேளாண் சட்டத்திருத்தங்கள், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்தம் எனப் பல வழிகளில் விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் வேலையை செய்து வருகிறது ஒன்றிய மோடி அரசு.
தற்போது விவசாயிகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து நடத்த உள்ள இந்த திட்டத்திற்கு மோடி அரசு ரூ.1600 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டமாக பல்வேறு மாநிலங்களில் 22 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்துப் பேசிய ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் C.R. பாட்டீல் “மையமாக தண்ணீரை தேக்கி வைத்து விவசாயிகளுக்குத் தேவையான அளவு நீர் விநியோகிக்கப்படும். அவர்கள் பயன்படுத்தும் நீருக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.” என்று கூறியுள்ளார்.
நிலத்தடி நீர் ஆண்டு அறிக்கையின்படி, ஆண்டுதோறும் அறியப்படும் நிலத்தடி நீரில் விவசாயத்துக்கே 87 சதவீதம் பயன்படுத்துவதாக கூறுகிறது. இது நிலத்தடி நீர் மட்டத்தை கடுமையாக பாதிப்பதாகவும் சொல்கிறது.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தைச் சார்ந்திருக்கும்போது, பெரும்பான்மை நிலங்கள் விவசாய பயன்பாட்டில் இருக்கும் போது, சூழல் மாறுபாட்டால் மழைநீர், ஆற்றுநீர் நம்ப முடியாத நிலை இருக்கும் போது விவசாயத்துக்கு நிலத்தடி நீர் பயன்பாடு அதிகமாக இருப்பது தவிர்க்க முடியாதது.
இதனை காரணம் காட்டி விவசாய பயன்பாட்டுக்கான நீருக்கு விவசாயிகளிடமிருந்து வரிவசூல் செய்யத் திட்டமிடுவது பச்சை அயோக்கியத்தனம். விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் அநீதியான நடவடிக்கையாகும்.
படிக்க:
♦ மின்சார சட்ட திருத்த மசோதாவை அனைத்து மக்களும் ஏன் எதிர்க்க வேண்டும்?
♦ விவசாயிகளின் மீது மீண்டும் பாய்ந்து குதறிய பாஜக அரசு!
இன்னொருபுறம், விவசாயம் மாநில பட்டியலில் இருக்கும் நிலையில் விவசாய நிலம் குறித்து சட்டம் இயற்றுவது, நீருக்கு வரிவிதிக்க முடிவெடுப்பது அரசமைப்புச் சட்டத்திலுள்ள மாநில உரிமைகளையே காலில் போட்டு நசுக்குகிறது பாசிச மோடி அரசு.
ஓராண்டுக்கும் மேலாக வெயில், மழை, குளிர் அனைத்திலும் உறுதியாக நின்று பல நூறு உயிர்களைத் தியாகம் செய்து மோடி அரசைப் பணிய செய்தது டெல்லி விவசாயிகள் போராட்டம். மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களைத் திரும்பப் பெற்றது மோடி அரசு.
அத்தகையதொரு போராட்டம் ஒன்றே விவசாய பயன்பாட்டுக்கான நீருக்கு வரிவிதிப்பை தடுத்து நிறுத்தும். இந்த கார்ப்பரேட்- காவிப் பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்திலிருந்து துரத்துவதற்கும், இத்திட்டங்களுக்கு அடிப்படையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையைத் தூக்கியெறிவதற்குமான போராட்டம் நிரந்தர தீர்வை நோக்கி முன்னேற்றும்.
- திருமுருகன்







ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, மனுசனைக் கடிச்ச கதையாக, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளுக்கு தண்ணீருக்குக் கூட வரி விதித்திருக்கும் மோடி அரசின் கேவலப் புத்தியை அம்பலப்படுத்தி உடனடியாகவே எதிர்வினையாற்றி கட்டுரையாக்கி இருக்கும் தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!