திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலியப்பட்டு, வாணியம்பாடி, பழையகாலனி, புதியகாலனி, கொளத்தூர், அருந்ததியர்காலனி, கொல்லக் கொட்டாய், கூலன் கொட்டாய், செங்குட்டுவன் கொட்டாய், செல்வபுரம், அண்ணா நகர், மாரியக்கன் நகர் இன்னும் பல கிராமங்களை மையமாகக் கொண்டு 1500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நான்காவது பெரிய மாவட்டமான திருவண்ணாமலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் பொய்த்துப் போய் இருப்பதால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி திருப்பூருக்கும், சென்னைக்கும், பெங்களூருக்கும் வேலை தேடி அலைந்து கொண்டுள்ளனர்.

இந்த மனித உழைப்பை மலிவான விலையில் சூறையாடுவதற்கு பொருத்தமாக சிப்காட் வளாகத்தை அமைப்பதற்கு 2021-22 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இலட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதி விவசாயத்தையும், அவர்களின் வாழ்க்கையையும் சிதைத்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டதிற்கு எதிராக. பாலியப்பட்டு ஊராட்சி மக்கள் ஒன்று திரண்டு ஒருவார காலமாக காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேலைவாய்ப்பிலும், பொருளாதார ரீதியாகவும் இந்த மாவட்டம் மிகவும் பின்தங்கி காணப்படுகிறது என்பதைக் காரணம் காட்டி. 10க்கும் மேற்பட்ட கிராமங்களை அப்புறப்படுத்தி, அவர்களின் வாழ்க்கைக்கு அடி ஆதாரமாக விளங்கும் விவசாய நிலங்களை கைப்பற்றி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு.

ஒரு ஏக்கர், அரை ஏக்கர் விவசாய நிலங்களை மட்டுமே வைத்துக் கொண்டு நெற்பயிர், கடலை, சிறுதானியங்கள் மற்றும் பூச்செடிகள் பயிரிட்டும், ஆடு மாடுகளை வைத்துக்கொண்டும் இப்பகுதி மக்கள் பல தலைமுறைத் தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை ஒரே நொடியில் அப்புறப்படுத்தவும், அவர்களின் விவசாய நிலங்களை அபகரிக்கவும் கார்ப்பரேட்டுகளும் மத்திய, மாநில அரசுகளும் வெறியுடன் அலைந்து திரிகின்றனர்.

அது மட்டுமின்றி சிப்காட் அமையவிருக்கும் திட்டத்தை அப்பகுதி மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்காமல் இரகசியமாகவும், சதித்தன முறையிலும் அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் சிப்காட் திட்டம் பற்றி விசாரித்தால் எங்களுக்கு எதுவும் தெரியாது அனைத்தும் சென்னையிலேதான் தீர்மானிக்கப்படுகிறது என முடித்துக்கொள்கிறார்கள்.

சொல்லிக் கொள்ளப்படும் எந்த வகையான ஜனநாயக வழிமுறைகளையும் பின்பற்றாமல், விவசாயிகளிடம் எந்த கருத்துக்களையும் கேட்காமல், மக்களுக்கு இருந்த குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையும் பறித்து “அனைத்து அதிகாரங்களும் அரசுக்கே” என்ற கார்ப்பரேட் பாசிச அரசியலை எங்கும் அமுல்படுத்த தயாராகி வருகிறது மத்திய-மாநில அரசுகள்.

ஆகையால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளன.

ஆனால் வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற உளுத்துப்போன வாதங்களை முன்வைத்து விவசாய நிலங்களை பாழ்படுத்தி கொண்டுவரப்படும் சிப்காட் திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும்.

தொழில் வளர்ச்சி வேண்டுமென்றால் விவசாயத்திற்கு பாதிப்பு வராத வனத்துறைக்கு சொந்தமான நிலங்களையும் தரிசு நிலங்களையும் பயன்படுத்தி கொண்டுவர முயற்சிக்கலாம் ஆனால் இவையெல்லாம் முதலாளிகளின் லாபத்தை குறைத்து விடும் என்பதால் நீர் பாங்கான செழிப்பான பிரதேசங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், சிப்காட் வளாகங்கள் அமைப்பதற்கும் வாரி கொடுப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது.

மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி பாசிச ஒன்றிய அரசை பனியவைத்த விவசாயிகளை முன்னுதாரணமாக வரித்துக் கொண்டு, சிப்காட் திட்டத்தால் பாதிக்கப்பட இருக்கும் கிராம மக்களோடு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடுவோம்.

ஆசிரியர் குழு

மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here